ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில், பர்காகனா என்கிற நகரில் உள்ள சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் பொதுத்துறை நிறுவனத்தில், தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார் 55 வயதான கிருஷ்ணா ராம்.

இவரது மூத்த மகனுக்கு வயது 35. இவர் வேலைவாய்ப்பு இல்லாதவர். எனவே, தந்தையின் வேலையைப் பெற, ராமின் மூத்த மகன், தந்தையையே பர்காகனா குடியிருப்பில் வைத்து, புதன்கிழமை இரவு, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்தக் கொலையை, நேற்று (21 நவம்பர் 2020) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவல் துறையினர் உறுதி செய்து இருக்கிறார்கள்.

ராமை கொலை செய்ய, அவரது மகன் பயன்படுத்திய ஒரு சிறிய ஹம்மர் கத்தியைக் காவல் துறையினர் கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதோடு ராமின் செல்ஃபோனையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

ராமின் மகன், காவல் துறையினரின் விசாரணையின் போது, சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் நிறுவனத்தில், கருணை அடிப்படையில் ஒரு வேலையைப் பெற, தன் தந்தையை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் என்கிறது பிடிஐ செய்தி.

சென்ட்ரல் கோல்ட் ஃபீல்ட் நிறுவனத்தில், ஊழியர் ஒருவர், பணியில் இருக்கும் காலத்தில் இறந்தால், அந்த ஊழியரைச் சட்டபூர்வமாகச் சார்ந்து இருக்கும் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்கப்படும்.

Share.
Leave A Reply