Site icon ilakkiyainfo

இலங்கை இனக்கலவரம் ரகசிய திட்டம் இந்தியாவுக்கு ‘ரா’ மூலம் முன்கூட்டியே தெரியுமா? (பாகம்-06)

இலங்கை  ராணுவத்தின் யாழ்ப்பாண பகுதிக்கான ராணுவ உளவுத்துறையின் தலைவர் சரத் முனிசிங்கே, “விடுதலைப் புலிகள் செல்லக்கிளி தலைமையில் ஒரு தாக்குதல் இன்றிரவு இருக்கலாம் என்பது எமக்கு கிடைத்த தகவல். இந்த இன்பார்மர் கொடுக்கும் தகவல்கள் துல்லியமானவை. எச்சரிக்கை தேவை” என்று வாஸ் குணவர்த்தனேவை எச்சரிக்கை செய்ததாக கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அது சும்மா செய்யப்பட்ட எச்சரிக்கை அல்ல.

அந்த நாட்களில் இலங்கை ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் ஒரு அருமையான உளவு வலைப்பின்னலை வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தகவல் கொடுக்கும் இன்பார்மர்கள் பலர் மக்கள் மத்தியில் இருந்தார்கள். இலங்கை பொலீஸூக்கும், ராணுவத்துக்கும் பொதுவாக இருந்த சில இன்பர்மர்களால் தான் அவ்வப்போது அவர்களுக்கு உளவுத் தகவல்கள் கிடைப்பது வழக்கம்.

சரத் முனிசிங்கே கொழும்பில் பணி புரிந்துவிட்டு, பணியில் ட்ரான்ஸ்பர் கிடைத்து யாழ்ப்பாணம் வந்தபின், 1982-ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஒரு சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை ஒருமுறை போலீஸ் கைது செய்தது.

அவரை யாழ்ப்பாணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தபோது, வேறு அலுவல் நிமித்தம் சரத் அங்கே சென்றிருந்தார்.

அந்த இளைஞரை நியூசென்ஸ் கேஸில் ஒரு நாள் உள்ளே வைத்துவிட்டு வெளியே அனுப்பிவிடுவது தான் யாழ்ப்பாணம் போலீஸின் திட்டமாக இருந்தது. ஆனால் போதையில் இருந்த இளைஞரிடம் போலீஸ்காரர்கள் சில கேள்விகளை கேட்டபோது இளைஞரிடமிருந்து கிடைத்த பதில்கள், சரத் முனிசிங்கேவை தூக்கிவாரிப்போட்டன.

அந்த இளைஞர் விடுதலை இயக்கம் ஒன்றில் சிறிது காலம் இருந்தவர். அதன் பின் சில காரணங்களுக்காக இயக்கத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்.

அந்தக் காலத்தில் இயக்கங்களில் இருந்தவர்கள் ஆயிரக்கணக்கான ஆட்கள் அல்ல. மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தார்கள். இதனால் இயக்கத்தில் இருந்த எல்லோருக்கும், இயக்கத்தில் இருந்த மற்ற எல்லோரையும் நன்றாகவே தெரிந்திருந்தது.

அந்த வகையில் இந்த இளைஞருக்கும் விடுதலை இயக்கங்களில் இருந்த முக்கியமானவர்கள் அனைவரையும் நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்களது பழக்க வழக்கங்கள், வீடுகள், மறைவிடங்கள் என்று பல விஷயங்களை தெரிந்த அந்த இளைஞர்தான், சந்தார்ப்பவசமாக போலீஸில் சிக்கியிருந்தார்.

போலீஸ் ஸ்டேஷனில் சிறை வைக்கப்பட்ட அந்த இளைஞரை அன்றிரவே விடுவித்து, யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார் சரத் முனிசிங்கே.

சரத் மறுநாள் காலையிலேயே அந்த இளைஞரை தங்களுக்கு தகவல் கொடுக்கும் இன்பர்மராக மாற்றிவிட்டார். இளைஞருக்கு ‘சேவியர்’ என்ற சங்கேதப் பெயரும் ராணுவ உளவுத்துறையால் சூட்டப்பட்டு, எம்.ஐ. ரிக்கார்ட்களில் பதிவாகியது.

இந்த சேவியர் கொடுக்கும் தகவல்கள் அநேகமாக பொய்ப்பதில்லை என்பது சரத் முனிசிங்கே அனுபவரீதியாக கண்டுகொண்ட உண்மை.

அன்றிரவு விடுதலைப் புலிகளின் உறுப்பினர் செல்லக்கிளி தலைமையில் தாக்குதல் ஒன்று நடைபெறலாம். அதுவும் நள்ளிரவுக்கு அண்மித்த நேரத்தில் அந்தத் தாக்குதல் இருக்கலாம் என்பதை இந்த சேவியர்தான், சரத் முனிசிங்கேவுக்கு வந்து சொன்னார்.

“என்ன மாதிரியான தாக்குதல்?”

“வீதியில் கண்ணிவெடி வைக்கலாம். துப்பாக்கியாலும் சுடலாம். அவர்களிடம் துப்பாக்கிகளும் உள்ளன”

“யாரை தாக்க போகிறார்கள்? போலீஸையா? ராணுவத்தையா?”

“ராணுவத்தைதான். சீலன் (சார்ளஸ் ஆன்டனி) சாவுக்கு ராணுவம் சுற்றி வளைத்ததுதானே காரணம்? அதனால் ராணுவத்தை பழிவாங்க திட்டமிடுகிறார்கள்”

“எங்கே நடக்க போகிறது இந்த தாக்குதல்?”

“இடம் சரியாக தெரியவில்லை. செல்லக்கிளியும், வேறு ஒருவரும் நாலைந்து இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு திரும்பினார்கள். அநேகமாக யாழ்ப்பாண நகர எல்லைக்குள், இன்றிரவு தாக்குதல் செய்யலாம்”

தகவல் தெரிவித்த சேவியரை அனுப்பிவிட்டு, இதை வேறுவிதமாக எதிர்கொள்ள திட்டமிட்டிருந்தார் சரத் முனிசிங்கே.

செல்லக்கிளி தலைமையில் சிலர் யாழ்ப்பாண நகர எல்லைக்குள் எங்கோ தாக்குதல் நடத்த அன்றிரவு வருவார்கள். அவர்களை தாம் ராணுவத்தினர் சிலரை அழைத்துச் சென்று வளைத்துப் பிடித்துவிடலாம் என்பதுதான் சரத் முனிசிங்கேவின் திட்டம். அதற்காக ராணுவ வாகனங்கள், மற்றும் அழைத்துச் செல்ல வேண்டிய ராணுவத்தினரை யாழ்ப்பாணம் குருநகர் ராணுவ முகாமிலேயே ஏற்பாடு செய்திருந்தார்.

இவர்கள் அன்றிரவு யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் நள்ளிரவுக்கு பின் தொடங்கி, இரவு முழுவதும் சுற்றி வருவதாக ஏற்பாடாகியிருந்தது.

அதனால்தான், வேறு எந்த ராணுவ முகாமைச் சேர்ந்த ரோந்துக் குழுவும் யாழ்ப்பாணம் நகர எல்லைக்குள் அந்த நேரத்தில் நடமாடுவதை அவர் விரும்பவில்லை.

வாஸ் குணவர்த்தனேவிடம், “நீங்கள் சீக்கிரம் இரவு உணவை முடித்துக் கொண்டு, நள்ளிரவுக்கு முன்பே யாழ்ப்பாணம் நகர எல்லையை கடந்து சென்று விடுங்கள்” என்று சரத் கூறிய காரணமும் இதுதான்.

கட்டுரையின் இந்த இடத்தில் ஒரு நெருடல்.

ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்த சேவியர் கொடுத்த தகவல் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியான தகவல் இல்லைத்தான். அவர் கூறியது போல யாழ்ப்பாண நகர எல்லைக்குள் தாக்குதல் நடைபெறவில்லை. நகர எல்லைக்கு வெளியே திருநெல்வேலியில் நடைபெற்றது.

ஆனால், அவர் கூறியதிலும் சில உபயோகமான தகவல்கள் இருந்திருந்தது ஆச்சரியமான உண்மை.

ஜூலை மாதம் 23-ம் தேதி இரவு தாக்குதல் நடைபெறலாம் என்று கூறியது நிஜமாகப் பொருந்தியிருக்கிறது. அதுபோல, செல்லக்கிளி தலைமையில் தாக்குதல் நடைபெறும் என்று கூறியிருந்தார். செல்லக்கிளி அந்தத் தாக்குதலுக்கு தலைமையேற்று நடத்தவில்லை. ஆனால் தாக்குதலின் முக்கிய பங்கு செல்லக்கிளியினுடையதுதான்.

அன்றிரவு ராணுவ வாகனம் வீதியில் வந்தபோது, கண்ணிவெடியை வெடிக்க வைத்தது செல்லக்கிளிதான்.

இந்தத் தகவல்கள் சேவியருக்கு எப்படிக் கிடைத்தது என்பது இன்றைய தேதிவரை மர்மமாக இருக்கின்றது. தாக்குதல் திட்டத்தில் தொடர்புடைய யாராவது சொன்னார்களா அல்லது, ஊக அடிப்படையில் செல்லக்கிளியின் நடமாட்டங்களைப் வைத்து சேவியர் ஊகித்தாரா என்பது சரியாக தெரியவில்லை.

எப்படி இருந்தாலும், விடுதலைப் புலிகளின் இந்த ஆரம்பகால தாக்குதல் திட்டம் பற்றிய தகவல், இலங்கை ராணுவ உளவுத்துறை வரை போய், தாக்குதலுக்கு முன்பே ஓரளவுக்கு தெரிந்திருந்தது என்பது நிஜம்.

இதோ மீண்டும் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் உள்ள வீதிக்கு வருகிறோம். இங்கு ராணுவ வாகனம் கண்ணிவெடியில் சிக்கி, மேலே தூக் எறியப்பட்டு வீழ்ந்த கணத்துக்கு, சில நிமிடங்கள் முன்-

மினிபஸ் ஒன்று சிலரை ஏற்றி கொண்டு அந்தப் பகுதிக்கு வந்தது. பலாலி வீதியிலிருந்து செல்லும் சிறிய கிளை வீதி ஒன்றில் மினிபஸ் நிறுத்தப்பட்டது. மினிபஸ்ஸை செலுத்திவந்தவர் செல்லக்கிளி.

உள்ளே இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவருடன், கிட்டு, விக்டர், புலேந்திரன், ஐயர், சந்தோஷம், அப்பையா ஆகியவர்கள் உட்பட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள்.

மினி பஸ்ஸில் இருந்து இறங்கிய யாரும், தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. முன்பே திட்டமிட்டதுபோல இரண்டு பேர், மூன்று பேர் அடங்கிய சிறு சிறு குழுக்களாக பிரிந்து, திருநெல்வேலி வீதி சந்திப்பை நோக்கி நடந்து, அங்கிருந்து யாழ்ப்பாணம் டவுன் இருக்கும் திசையில் திரும்பினார்கள்.

தொடர்ந்து சுமார் 200 மீட்டர்கள் நடந்து, ஓரிடத்தில் சந்தித்தார்கள்.

அவர்கள் சந்தித்த இடத்தில் வீதிக்கு எதிரே சிறிய பில்டிங் ஒன்று இருந்தது. மேலே தட்டையான பிளாட் கூரையுடைய சிறிய பில்டிங். அந்த பில்டிங் அமைந்து இருந்த இடம், அதிலிருந்து வீதி இருக்கும் தூரம் எல்லாமே ஏற்கனவே அவர்களால் பலதடவைகள் நேரடியாக பார்க்கப்பட்டு பரிச்சயமாக இருந்ததால், எந்த தடுமாற்றமும் இருக்கவில்லை.

நேரம் இரவு சுமார் 9 மணி. யாழ்ப்பாணத்தின் அநேக பகுதிகளில் பெரும்பாலும் இரவு 9 மணிக்கே வீதிகள் பெரும்பாலும் வெறிச்சோடி போய்விடும் (இன்றுகூட அப்படித்தான்)

இவர்கள் வீதியில் நடமாடிய நேரத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக சில வீடுகளில் மட்டும் லைட் எரிந்து கொண்டிருந்தது.

வீதியில் ஆள் நடமாடும் ஓசை கேட்டு, அங்கிருந்த வீட்டின் ஜன்னலை திறந்து வெளியே எட்டி பார்த்தார் ஒரு முதியவர். யார் இந்த நேரத்தில் நடமாடுகிறார்கள் என்று பார்ப்பது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.

அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததும், வீதியில் நடந்தவர்கள் ஒரு விநாடி நின்றார்கள். விக்டர் தனது கையில் இருந்த சாக்குப் பையை வீதியில் வைத்தார்.

மௌனம் ஒரு விநாடிதான். மறு விநாடி என்ன செய்யவேண்டும் என்று விக்டருக்கு கண்ஜாடையால் சொல்லப்பட்டது.

திறந்திருந்த ஜன்னலை நோக்கி நடந்த விக்டர், தடித்த குரலில் சிங்களத்தில் சொன்னார் – “ஜன்னலை மூடுங்கள். வீட்டில் லைட்டை அணையுங்கள்”

இதை கேட்டவுடன் வெளியே எட்டிப் பார்த்த தலை உள்ளே இழுக்கப்பட்டு, ஜன்னலும் உடனடியாக மூடப்பட்டது. வீட்டில் இருந்த லைட்டும் அணைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் இலங்கை ராணுவத்தினர் யாழ்ப்பாணம் முழுவதிலும் இயக்க உறுப்பினர்களை தேடி கொண்டிருந்தார்கள். அதற்காக இரவு நேரங்களில் யாழ்ப்பாணம் நகர வீதிகளில் இலங்கை ராணுவத்தினர் ரோந்து செல்வதும், வீதிகளில் நடமாடுவதும் சகஜம். இதனால் விக்டர் சிங்களத்தில் பேசியதும், ராணுவத்தினர்தான் வீதியில் நிற்கிறார்கள் என்ற தோற்றம் ஏற்பட்டது.

வீதியில் இலங்கை தொலைபேசி இலாகா ஊழியர்களால் தரையடியே கேபிள் புதைப்பதற்காக தோண்டப்பட்ட துவாரம் ஒன்று இருந்தது. அதன் அருகே நடந்து சென்றார் பிரபாகரன்.

அந்த துவாரத்துக்குள் கண்ணிவெடி வைத்து கொண்டிருந்தார்கள் செல்லக்கிளியும், விக்டரும். எதுவும் பேசாமல் அவர்கள் கண்ணி வெடியைப் பொருத்துவதை பார்த்துக் கொண்டிருந்தார் பிரபாகரன். பின்னர் திருப்தியுடன் வீதியின் மறுபுறத்துக்கு சென்று, அங்கே நின்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

மற்றவர்கள் கைகளில் கொண்டுவந்த சாக்குப் பைகளை அவிழ்த்தார்கள். உள்ளே ஆயுதங்கள்.

ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தார்கள். வீதியோரமாக சென்று இருளில் மறைந்து கொண்டார்கள். ஒரு குழுவுக்கு பிரபாகரனும் மற்றய குழுவுக்கு கிட்டுவும் தலைமை தாங்கினார்கள்.

இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண பகுதிக்கான ராணுவ உளவுத்துறையின் தலைவர் சரத் முனிசிங்கேவுக்கு ‘சேவியர்’ தகவல் கொடுத்த கண்ணிவெடி, இங்கேதான் வெடிப்பதற்காக காத்திருந்தது… வாஸ் குணவர்த்தனேவின் ராணுவ வாகனத்துக்காக!

( தொடரும்…)

Exit mobile version