ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் நடந்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி சாட்சியங்களுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அத்துடன், போர்க்குற்ற விசாரணை சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கையை ஆமோதிப்பதாக கூறிய அமெரிக்க பிரதிநிதி இலங்கை மீதான அமெரிக்காவின் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார். அவ்வறிக்கையில் சர்வதேச விசாரணைக்கான முன்மொழிவு இல்லை.

இந்தப் பிரேரணை தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாக பிரிட்டிஷ் தமிழர் ஒன்றியம் அதனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக  தலைவர்களும் இலங்கையின் சில அரசியல்வாதிகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க பிரேரணையில் தமிழ் மக்களுக்கான தீர்வு அனைத்தையும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை கொண்டிருந்த, நம்பிக்கையை வளர்த்து வந்தவர்கள் தற்போது  சுவரிலிருந்து விழுந்த பல்லி போன்று  இருந்துவிட்டு  எழுந்து சர்வதேசம்  தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே சிலர் அவரவர் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு ஜெனீவா பிரேரணை தேவையற்ற ஒன்றென்றோ, அல்லது அதனால் எவ்வித பயனும் ஏற்படாது என்றோ தமிழ் மக்களை மேலும் விரக்திக்கு தள்ளும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அவ்வாறு கருத்துக்களை தெரிவித்தவர்கள் எல்லோருமே தமிழ் மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள் அல்லர்.

ஆனால், அவர்களின் கருத்து வெளிப்பாட்டு முறை தமிழ் மக்களை மேலும் விரக்திக்குள் தள்ளுவதாக இருந்ததுடன், தற்போதைய சூழ்நிலையில் ஜெனீவா நடவடிக்கைகள் தந்திரோபாய ரீதியாக தமிழ் மக்களுக்கு ஏற்புடையன என்பதை நிராகரிப்பதாகவும் இருந்தது.

அவர்கள் “தற்போது நாம் முன்பே சொன்னோம் தானே. ஜெனீவாவில் எதுவும் நடக்காதென்று’ என்று எக்காளமாக கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

ஜெனீவா உட்பட சர்வதேச நடவடிக்கைகளின் ஆழ, அகலங்கள் வரையறைகள் பற்றி நிறையவே கலந்துரையாடப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகளை எடுக்கவல்ல நாடுகளின் நிலைப்பாடுகளும், நோக்கங்களும், நிகழ்ச்சி நிரல்களும் இலக்கு வைக்கப்படும் நாடுகளின் சர்வதேச அரசியல் நிலைப்பாடும் கவனத்தில் எடுக்கப்பட்டே ஒவ்வொரு நிகழ்வுகளும் கணிக்கப்படவேண்டும்.

ஒரு நாட்டெல்லையில் பாதிக்கப்படும் ஒருவர் அந்நாட்டு சட்டதிட்டங்களுக்குட்பட்டு பொலிஸ் நிலையங்களையும், நீதிமன்றங்களையும் நாடவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.

இவ்வாறு நாடுவது நம்பிக்கையின் அடிப்படையிலோ விருப்பதின் அடிப்படையிலோ நடப்பதன்று. மாறாக, நிர்ப்பந்தம். சர்வதேச சூழ்நிலையிலும் சர்வதேச சட்டங்கள், ஐ.நா. மற்றும் அதன் முகவரமைப்புகள், சர்வதேச நீதிமன்ற, நியாய சபைகள் போன்றன இருக்கின்றன.

இவற்றை நாடுவதும் நிர்ப்பந்தமே. நிர்ப்பந்தங்கள் இருப்பதனால் அவற்றால் எவ்வித பெறுமதியும் இல்லை என்பதாகாது. உள்ளக சட்ட திட்டங்களுக்கமைவாக  அரசொன்றுக்கு எதிராக உள்ளக நீதிமன்றங்களை நாடுவது பெரும் நம்பிக்கைக்குரியதல்ல.

ஆனால், அவை செய்யப்படவேண்டியவை. இவ்வாறுதான் சர்வதேச அமைப்புகளையும், நீதிமன்றத்தையும் நாடும் நடவடிக்கைகளும்.

ஆனால், இவ்வாறு நாடுகின்றபோது அவற்றுக்கு சார்பான சக்திகளும் கருத்துகளும் இருக்கும். அதேபோன்றே எதிரான சக்திகளும்  கருத்துகளும் இருக்கும். சார்பான சக்திகள் கருத்துகள் எல்லாமே. எப்போதுமே மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இராது.

அதேபோன்று எதிரான சக்திகளுக்கு கருத்துக்கள் எல்லாமே எப்போதுமே அநீதிகளுக்கு சப்பை கட்டுவதாக இராது. இதனை பிரித்தறிய வேண்டும். அந்நடவடிக்கைகளின் தாக்கம் பற்றியும் தெளிவாக இருக்கவேண்டும்.

இன்று ஜெனீவாவில் என்ன நடக்கிறது? இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்ற மனோநிலையில் இருப்பவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தாக்கமாக இல்லை. அதாவது,  போர்க்குற்றம்  மீதான  சர்வதேச விசாரணையை கோரவில்லை.

இலங்கைக்கு இன்னும் ஒரு வருடகால அவகாசம் கொடுக்கப்படவிருக்கிறது. எனவே, இது ஒரு வழமையான செயற்பாடு என்று அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இது வழமையான செயற்பாடல்ல. இலங்கைக்கு எதிரான நடவடிக்கையின் வளர்ச்சிப் போக்கு என்பதே சரியானதாகும். இது மூன்றாவது பிரேரணை. இப்பிரேரணை இலங்கை அரசிற்கு மேலும் அழுத்தங்களை கொடுக்கக்கூடியது.

இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் பீரிஸ் ஆற்றிய உரையிலிருந்து இலங்கை அரசு எவ்வளவு தூரத்திற்கு அசௌகரியத்திற்கு உள்ளாகி திக்குமுக்காடிப்போயுள்ளது என்பது தெளிவாக வேண்டும்.

எனினும், இம்முறை ஜெனீவா நடவடிக்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அவ்வளவாக சந்தைப்படுத்தும் வாய்ப்பிருக்காது. அதாவது அதனது அரசியல் இருப்பிற்கு அல்லது மக்களின் வாக்குகளை திரட்ட ஜெனீவா விடயத்தை முன்வைக்க வாய்ப்பு இராது.

அதேபோன்று மறுபுறத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஜெனீவா விடயத்தை வைத்து தமிழ்த் தேசிய அரசியலுக்காக மேலும் வலுச் சேர்ப்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தேசியவாதிகள் இழக்கின்றனர்.

அதாவது  இனி சர்வதேசமே தமிழ் மக்களுக்கு நீதியையும், உரிமைகளையும் உறுதிசெய்யும் என்ற மாயைக் கட்டி வளர்த்த தமிழ்த் தேசியவாதிகளுக்கு ஜெனீவா தற்போது சவாலாகி விட்டது.

வடமாகாண சபை சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. ஜெனீவா அமர்வின்போது யுத்தத்தின் பாதிப்புகள் பற்றி பரப்புரை செய்ய வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை அனுப்புவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

அதன்படி அவர் அங்கு சென்றார். ஆனால் அவரால் எதனையும் பேசமுடியவில்லை என்று அவர் தற்போது கூறுகிறார். தன்னை பேச விடாது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடுத்துவிட்டதாக கூறிய அவர் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றியோ இனப்படுகொலை பற்றியோ எதையும் சுமந்திரனும் பேசவில்லை என்றும் அனந்தி தெரிவித்துள்ளார்.

அனந்தி தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் போராளியின் மனைவி என்பதால் அவர் போர்க்குற்றம் பற்றி பேசுவது சரி இல்லை என்று சுமந்திரன் தடுத்ததாக அனந்தி கூறியுள்ளார்.

இந்த முரண்பாட்டின் வெளிப்பாடு எதனை எடுத்துக் காட்டுகிறது? ஜெனீவா பற்றி அதிகம் பேசியது த.தே.கூட்டமைப்பின் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி ஆகும். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் சர்வதேச விசாரணை பற்றி சற்று அதிகமாகவே பேசினர்.

Sudar-News2021134112
வடமாகாண சபை தெரிவு செய்து அனுப்பிய அனந்தியை பேசவிடாது தடுத்து, தானும் பேசாமல் இருந்ததற்கு சுமந்திரன் என்ன காரணம் சொல்வார்? தமிழரசுக் கட்சி மிகவும் சார்ந்து நிற்கும் அமெரிக்காவும், இந்தியாவும் சுமந்திரனுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனவா? அல்லது இலங்கை அரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் சுய கட்டுப்பாடுகளை கொண்டுள்ளரா?

அவ்வாறெனின் த.தே.கூட்டமைப்பினதும் வடமாகாண சபையினதும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டுமென்ற தீர்மானங்களுக்கும் என்ன நடந்தது? அவை பற்றி பரப்புரை செய்ய வடமாகாணசபை அனந்தியை அனுப்பியது ஏன்?

அனந்தி போன்றவர்கள் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், அவர்கள் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை நேரில் அனுபவித்தவர்கள்.

அவர்களை விட “சனல்4’ சரியாக விடயங்களை சமர்ப்பிக்கவல்லதாக கொள்ளமுடியாது. அவர்கள் சாதாரண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியானவர்கள். அவர்களுக்கு பேச தடை விதிப்பது சாதாரண தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் நிலைப்பாடாகும். இம்முறை ஜெனீவா அமர்வை சம்பந்தன் பாரதூரமானதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.
sumanthiran-

தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி ஒரு திடலுக்கு போக முன்னர் போகிறவர்களுக்கு பொது இணக்கப்பாட்டுடனான தந்திரோபாயங்கள் அவசியமாகும். தனிநபர்கள் அவற்றை தீர்மானிக்கமுடியாது. த.தே.கூட்டமைப்பு பொதுவான நிலைப்பாட்டை எடுத்ததாகத் தெரியவில்லை.

ஜெனீவா  அமர்வை த.தே.கூட்டமைப்பில் மேலாண்மை செலுத்தும் தலைவர்கள் தங்களுக்கும் பேரினவாத தலைவர்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கலுக்கான பேரப்பேச்சாக கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இது அவர்களின் சாதாரணை மக்கள் சார்பற்ற அரசியல் நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

சாதாரண தமிழ் மக்களும் தமிழ் மக்களின் சார்பானவர்களும் சர்வதேச நடவடிக்கைகளின் கனதியை அறிந்து கொண்டு தொடர்ந்து அவற்றை முன்னெடுக்கும் பொறுப்பை கொண்டுள்ளனர்.

சர்வதேச நடவடிக்கைகள் என்பது நீதிக்கான போராட்டங்களில் ஒரு வழிமுறை. ஒரு சர்வதேச நடவடிக்கையில் ஏற்படும் பின்னடைவு அல்லது தோல்வி இன்னொன்றிற்கான வாய்ப்பை மறுப்பதாக கொள்ளமுடியாது.

இந்த ஜெனீவா அமர்வு தமிழ் மக்களுக்கு பல படிப்பினைகளை வழங்கும். அவை பற்றி தற்போது கருத்து தெரிவிப்பது முறையானதாக இராது. எதிர்வரும் 27 ஆம்  திகதி வரை கால அவகாசம் இருக்கிறது.

ஜெனீவாவை ஒரு> தந்திரோபாய நடவடிக்கையாக கொள்வோர் இன்னும் அவர்களின் இவ்வருட அஞ்சலோட்டம் முடிவடையவில்லை என்று நம்பி செயற்படவேண்டும். ஆரம்பத்திலேயே ஓட்டத்திலிருந்து திரும்பி விட வேண்டியதில்லை. சாதகமான விளைவுகளுக்காக தொடர்ந்து செயற்படவேண்டும்.
navaneethampillai_CI
நவநீதம்பிள்ளையின் இலங்கை மீதான அறிக்கை காத்திமானது அதனை ஐ.நா.மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகளில் இலங்கையை தவிர வேறெந்த நாடும் நிராகரிக்கவில்லை. இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்கும் நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவில்லை.

அவை தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முன் நடவடிக்கையாகவும், அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாடாகவுமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்கவில்லை.
பல நாடுகளிலும் போர்க்குற்ற விசாரணைகள் சில தசாப்தங்களுக்கு பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு பிறகே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட அம்மக்கள் சாட்சியங்களை தேடிக்கொள்வதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும், தொடர்ச்சியாக நீதி கேட்டு போராடுவதையும் கைவிட்டிருக்கவில்லை. அதனாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்தது. (ஒப்பீட்டு அளவாவது) அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கை தமிழ் மக்களும் தொடர்ச்சியாக செயற்படவேண்டியவர்களாகின்றனர்.

palstin

வட அயர்லாந்து, பாலஸ்தீனம், காஷ்மீர் மக்களுக்கு அரசியல் தன்னதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், அப்போராட்டங்களுக்கு பல வருடங்களை கடந்துவிட்டனர். பல பரம்பரைகளை கடந்துவிட்டன.

இலங்கை தமிழ் மக்களின் போராட்டங்களும் பல வருடங்களை கடந்துவிட்டன. பல முனைகளையும் சந்தித்துவிட்டன. சர்வதேச ரீதியாகவும் சரி பிழைகளுக்கு அப்பால் மசாசூசெற்ஸ் தீர்மானம் ஐ.நா.வில் வைகுந்தவாசனின் உரை தொடக்கம் திம்பு, டெல்லி, ஒஸ்லோ நடவடிக்கைகள் தற்போது ஜெனீவா நடவடிக்கைகள் போன்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் படிப்பினைகள் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு உதவும். சர்வதேச நடவடிக்கைகளின் படிப்பினைகளும் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும்.

தமிழ் மக்கள் சார்பான செயற்பாட்டாளர்களிடையே பொதுவான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்தவும், இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டங்களை வகுத்துக்கொள்ளவும் தொடர்ச்சியான கருத்தாடல்கள் அவசியமாகின்றன. அவற்றில் பிரதானமாக எமது நட்பு நிலைப்பாடுகளும், நட்பு நடவடிக்கைகளும், நட்பு சக்திகளும் சரியாக இனங்காணப்படவேண்டும்.

எந்தவொரு விடயத்திலும் விஞ்ஞானபூர்வமற்ற ஆதாரமற்ற முன்முடிவுகளும், முற்கற்பிதங்களும் தவிர்க்கப்படவேண்டும். அதற்காக குருட்டுத்தனமான பரிசோதனைகளும், அனுபவ வாத தவறுகளையும் அணுகுமுறையாகக் கொள்ளலாகாது.

-இளயதம்பி தம்பையா-

Share.
Leave A Reply