அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவாவில் கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தமிழ்க் கட்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் அதேவேளையில், அரசாங்கமும் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு எதனையும் வழங்குவதாக இந்தப் பிரேரணை அமைந்திருக்கவில்லை என தமிழ்த் தரப்பினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும், நாட்டின் இறைமையைப் பாதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது எனக் கூறி இலங்கை அரசாங்கம் இந்தப் பிரேரணையை நிராகரித்திருக்கின்றது.
இருந்தபோதிலும் சர்வதேச விசாரணை கேறப்படாதது இலங்கை அரசாங்கத்துக்கு திருப்தியளிக்கக் கூடிய ஒன்றாகும்.
ஜெனீவாவில் தற்போது முன்வைக்கப்பட்டிருப்பது இலங்கைக்கு எதிரான மூன்றாவது பிரேரணை. கடந்த இரண்டு வருடங்களையும் போலவே இம்முறையும் ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கால அவகாசம் வழங்கப்பட்ட ஒன்றே அதற்குப் போதுமானது.
பிரேரணையில் தமிழ் என்று ஒரு வார்த்தையையும் காணவில்லை. பதிலாக தென்னிலங்கையின் பக்கம் அது பெருமளவு கவனத்தைச் செலுத்தியிருக்கின்றது.
வெலிவேரியா விவகாரம், ஊடக சுதந்திரம் மற்றும் தென்பகுதியிலுள்ள சிறுபான்மையினரின் மத வழிபாட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றுக்கு மேலாக ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்கு வைத்ததாக இந்தப் பிரேரணை உள்ளதா எனச் சந்தேகம் ஏற்பட இது காரணமாக உள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான ஒரு பிரேரணையாக இதனைக் கொள்ள முடியும்.
வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டமையை வரவேற்றுள்ள பிரேரணை, 13 ஆவது திருத்தச் சட்டமூலம் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றது.
அதற்கு மேல் எதுவும் இல்லை. போருக்குப் பின்னர் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கான பதில் எதனையும் தருவதாகவோ, அவர்களுடைய அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகவோ இந்தப் பிரேரணை இல்லை எனத் தமிழர் தரப்பினர் குற்றஞ்சாட்டுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தப் பிரேரணை உள்ளடக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல தமிழ்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இரண்டு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முன்வைத்துள்ள பிரேரணையில் இந்த இரு விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது கூட்டமைப்பின் நிலைப்பாடு.
அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் சர்வதேச மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது கூட்டமைப்பின் முதலாவது கோரிக்கை.
அரசாங்கத்துடன் ஒரு வருடகாலமாக தாம் நடத்திய பேச்சுக்களை திடீரென அரசாங்கம் நிறுத்திக்கொண்டது என்பதன் பின்னணியிலேயே சர்வதேச மத்தியஸ்தத்துடன் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கின்றது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர்களின் காணிகள் பறிக்கப்படுவது குறித்தும் பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.
இப்போதும் தொடர்ந்து இடம்பெறும் காணிப் பறிப்பு நிறுத்தப்பட வேண்டும், இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதும் பிரேரணையில் உள்ளடக்கப்படவேண்டும் என்பதுதான் கூட்டமைப்பின் கோரிக்கை. இ
ந்த இரு விடயங்களையும் கூட்டமைப்பு முதன்மைப்படுத்திக் கொண்டு செல்வதற்கு காரணம் உள்ளது. இவை இரண்டும் முக்கியமானவை என்பது முதலாவது. இந்தக் கோரிக்கைகள் யாராலும் நிராகரித்துவிட முடியாதவை என்பது இரண்டாவது காரணம்.
புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் என்னதான் கோரிக்கைகளை முன்வைத்திருந்தாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சர்வதேச ரீதியாக அங்கீகாரம் உள்ளது.
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில்தான் கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
அந்தவகையில் கூட்டமைப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு சர்வதேசம் செவிசாய்க்கும் என்பது உண்மைதான். ஆனால், ஜெனீவா விவகாரத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் உள்ளன. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக கடந்த செப்டெம்பரில் சந்தித்த இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் அதன் பின்னர் இன்று வரையில் சந்தித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்ததாக தகவல் இல்லை.
ஜெனீவா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் வரும்போது அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் இவர்கள் சந்தித்து தந்திரோபாயம் ஒன்றை வகுத்துக்கொள்ளத் தவறியது ஏன்? ஆள் ஆளுக்கு தனித்தனியாக உணர்வு பூர்வமான அறிக்கைகள் வெளிவந்தன.
தீர்மானம் கடுமையானதாக இருக்கும் எனவும், இம்முறை அரசாங்கம் தப்பமுடியாது எனவும் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை விட்டவர்கள் இப்போது மௌனமாகிவிட்டனர்.
ஒவ்வொருவரும் தனித்தனியாக விமானம் ஏறி ஜெனீவா சென்று வந்தார்களே தவிர, கூட்டமைப்புக்கென திட்டம் ஒன்று இருந்ததா? அவ்வாறான ஒரு தந்திரோபாயத்தை வகுத்து செயற்படுவதற்கு அவர்கள் தவறியது ஏன்? அவ்வாறு செயற்பட்டிருந்தால் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மீது அனந்தி சசிதரன் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நிலை வந்திருக்காது.
போருக்குப் பின்னர் அவலங்களுடன் வாழ்ந்துவரும் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஜெனீவா தீர்மானம் ஏமாற்றம்தான். ஆனால், அதனைவிட ஏமாற்றம் இவ்விடயத்தைக் கையாள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொண்ட முறை.
அவலங்களுடன் தமது இருப்பே கேள்விக்குறியாகியிருக்கும் ஒரு இனத்தின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் நடந்துகொண்டார்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.
சாதகமாகவுள்ள சர்வதேச நிலைமைகளைக் கூட சரியாகக் கையாளத் தவறிவிட்ட நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. வரலாறு திரும்பிவருவதில்லை.
உரிய தருணத்தில் செய்ய வேண்டியதை தவறவிட்டுவிட்டு பிரேரணை ஏமாற்றமளிப்பதாக அறிக்கை வெளியிடுவதை ரசிக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை!
அதேவேளை, ஜெனீவாவை நம்பியே இனிமேலும் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்து, சொந்தக் காலில் அரசியல் செய்யும் வகையில் தமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இப்போதாவது கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும்!