தமிழ் மக்கள் தங்கள் அரசியல் போராட்ட வரலாற்றில் தவறிய சந்தர்ப்பங்கள், இழக்கப்பட்ட வாய்ப்புக்கள் அதிகமானவை. தீர்க்கமற்ற கொள்கைகள் யதார்த்தமற்ற நடத்தைகள் தூரநோக்கற்ற முடிவுகள் என்பவையே இவ்வகையான இழப்புக்களுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படையான காரணங்களாக இருந்தன என்பது சில விமர்சன ரீதியான அபிப்பிராயங்களாகும்.
அவ்வகையான ஒரு நல்ல சந்தர்ப்பத்தையே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இழந்துள்ளார் என்று கடுமையாக விமர்சிப்பதை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்த விமர்சனங்களும் கண்டனங்களும் எதை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிய முடியாத ஒரு சிதம்பர இரகசியமல்ல.
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு இலங்கை சார்பில் தனது தலைமையில் செல்லும் குழுவுடன் இணைந்து கொள்ளும்படி ஜனாதிபதி விடுத்த அழைப்பை வடமாகாண முதல மைச்சர் நிராகரித்தமை தவறு.
கிடைக்கப்பெற்ற வாய்ப்பை வட மாகாண முதலமைச்சர் தவறவிட்டு விட்டார் என பல திசைகளிலிருந்தும் விமர்சனக் கணைகள் வீசப்படுகின்றன.
தான் ஏன்? ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தேன் என்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பின்வருமாறு பதில் அளித்திருந்தார்.
தங்கள் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசுக்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக இது எடுத்துக்காட்டும் இந்த நிலை உண்மை நிலையை மறைப்பதாக அமைந்துவிடும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்புப் பற்றி கருத்துத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பின்வருமாறு கூறியிருந்தார்.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் போல் அரசாங்கம் இதுவரை நடத்தவில்லை. அவரை தொடர்ந்தும் உதாசீனம் செய்தே வருகிறது.
இந்த நிலையில் தமது குழுவில் இணைந்து இந்தியாவுக்கு வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ எந்தவித உரிமையோ அருகதையோ இல்லையென்று வெட்டொன்று துண்டு இரண்டாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார்.
இதேவேளை விக்னேஸ்வரன் அழைப்பை நிராகரித்தமை தொடர்பாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்திருந்தார் நரேந்திரமோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதியின் அழைப்பை வடமாகாண முதலமைச்சர் நிராகரித்ததன் ஊடாக கூட்டமைப்பின் உண்மையான குணத்தை இந்தியா புரிந்து கொண்டிருக்குமென மறைமுகமாக சாடியிருந்தார்.
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் போராட்டமென்பது ஆறு தசாப்தங்களைக் கடந்து பல்வேறு பரிமாணங்களைப் பெற்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவிதமான முரண்பாடுகளுடன் இணைந்து வளர்ச்சி கண்ட விவகாரமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இலங்கையின் அரசியல் வரலாற்றுப் போக்கில் தேசிய முரண்பாடு என்ற வகையில் சிறுபான்மை சமூகமான தமிழ் மக்களுக்கும் பெரும்பான்மைச் சமூகமென்று அதிகாரத்தால் அடையாளப்படுத்தப்படுகின்ற சிங்கள மக்களுக்குமிடையிலான அரசியல் பொருளாதார சமூக முரண்பாடுகள் உடைப்பெடுத்து ஓடத் தொடங்கிய 1956ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நோக்குவோமாயின்…….
இந்த இரு சமூகங்களுக்கிடையிலான விரிசல்களும் அரசியல் சார்ந்த பரிணாமம் பெறுவதற்கு அடிப்படையாக இருந்தவை சமூக வள பங்கீட்டுப் பிரச்சினையென பொருளாதார அறிஞர்களாலும் அரசியல் விற்பன்னர்களாலும் சுட்டிக் காட்டப்படுவது வழக்கம்.
இலங்கையின் சுதந்திரத்துக்குப்பின் வட கிழக்கு நோக்கிய திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் தொழில் வாய்ப்பில் சமமின்மை மொழி ரீதியான திணிப்புக்கள் கல்வி உயர்கல்வி ஆகியவற்றில் ஓரங்கட்டியமை மதம் சார்ந்த மேலாதிக்கம் போன்ற இன்னோரன்ன (மூல) காரணிகள் தமிழ் மக்களுக்கும் பேரின சமூகத்துக்கும் அரசியல் தலைமைத்துவங்களுக்குமிடையில் முரண்பாடுகளை ஊட்டி விட்டன.
இதன் காரணமாகவே தமிழ்ச் சமூகம் தேசியப் போக்குடன் ஒட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவாகவும் சில வேளைகளில் இல்லாமலும் இருந்திருக்கிறது.
ஒரு சில காலங்களில் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தேசிய அரசியலோடு கைகோர்த்துக் கொண்டு போக எத்தனித்த போதும் அவையெல்லாம் ஏமாற்றப்பதிவுகளாகவே இருந்துள்ளன.
காரணம் தேசிய அரசியலுக்கோ கட்சிக்கோ தலைமை தாங்கிக் கொண்ட பேரின அரசியல் தலைவர்கள் பருவ காலத்துக்கு ஏற்ற முறையில் தமிழ் சமூகத்தையும் அது சார்ந்த தலைமைத்துவத்தையும் இணைத்துக் கொள்வோமென போக்குக்காட்டி தமது ஆட்சியை தக்க வைத்தோ அல்லது அலங்கரித்தார்களே தவிர தமிழ் மக்களின் அபிலாஷைகளையோ சுயநிர்ணய உரிமைகளையோ தமிழ்த் தேசியத்தையோ ஏற்றுக்கொண்டவர்களாகவோ அங்கீகரித்தவர்களாகவோ காணப்படவில்லை.
Sir Ponnambalam Ramanathan
சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திரத்தைக் கூடிப் பெற சேர் பொன் இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் என்ற மூத்த தலைவர்கள் உடன்பாட்டுப் போக்குக் கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.
இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து (19.11.1919) மறுசீரமைப்புக்கான தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து முன்வைத்தனர்.
இத்தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்கு முன்னமே சிங்கள தமிழ் உறுப்பினர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக 1921 ஆம் ஆண்டில் சேர் பொன் அருணாசலமும் பல தமிழ்த்தலைவர்களும் அதிலிருந்து வெளியேறினார்கள்.
இவ்வாறு ஆரம்ப காலமிருக்க இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் அமைச்சரவையில் தமிழர்களின் சார்பில் வவுனியா சி.சுந்தரலிங்கம் மன்னார் சி.சிற்றம்பலம் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து செயற்பட ஆரம்பித்த போதும் தேசிய அரசியலில் உடன்பாடு காணமுடியாத சந்தர்ப்பங்களும் இந்திய பாகிஸ்தானிய பிரஜா உரிமைச் சட்டம் 10.12.1948 நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது….
தேசிய அரசியலுடன் உடன்பட்டுப்போக வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக ஜி.ஜி.பொன்னம்பலம் ராமலிங்கம் மற்றும் கனகரத்தினம் ஆகிய மூவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக வாங்கிய வசை மொழிகளெல்லாம் தோற்றுப் போன சந்தர்ப்பங்களையே சுட்டிக் காட்டுவனவாக அமைகின்றன.
இது போலவே ஈழத்தமிழர்களின் இரண் டாம் கட்ட அரசியலான 1956 ஆம் ஆண்டுக்குப் பின்னைய அரசியலில் பண்டா– செல்வா உடன்படிக்கை 27.7.1957 டட்லி– செல்வா உடன்படிக்கை (24.03.1965) வெற்றி காணப்படாத ஒப்பந்தங்களாகவும்…,
1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தமிழ் அரசுக்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டு உடன்பட்டுப் போனவையெல்லாம் இழக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக பார்க்கப்படுகிறதா அல்லது ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்களாக கணிக்கப்படுகிறதா என்பதெல்லாம் வாசகர்களே தீர்மானிக்க வேண்டும்.
அகிம்சை வாத அரசியல் போக்கிலிருந்து ஆயுதப் போராட்ட வரலாற்றுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை மாறிகொண்ட இரண்டாம் கால கட்டமான 1983 ஆம் ஆண்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முடிவு வரை திம்பு பேச்சுவார்த்தை (08.07.1985) இலங்கை – இந்திய ஒப்பந்தம் (29.07.1987) மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற வட்டத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் (27.01.2002) உடன்படிக்கை கைச்சாத்து.
(22.02.2002) பிரபாகரன் – ஹக்கீம் உடன்படிக்கை (13.04.2002) தாய்லாந்து பேச்சுவார்த்தை (31.10.2002) (02.11.2002) நோர்வே பேச்சுவார்த்தை (24.11.2002) ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை ஜேர்மன் (07.02.2003) ஆறாம் சுற்று (18.03.2003) ஜப்பான் இடைக்கால அரசு பற்றி ஆலோசனை பிரான்ஸ் (20.08.2003) இடைக்கால நிர்வாக யோசனை நோர்வே ஊடாக அரசுக்கு கையளிப்பு (31.10.2003) என…….
நீண்ட மெகாத்தொடர் போன்ற எல்லாச்சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக கருத முடியுமா என்பது விமர்சன பூர்வமாக நோக்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் பதிவுகளும் தற்பொழுது ஒரு பள்ளிக் கூடச் சிறுவனைப் போல மூன்றாம் கால பருவச் சோதனைக்காக தமிழ் மக்கள் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டிய கால வட்டத்துக்குள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சார்ந்த போராட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வருவது போல் ராஜதந்திரப் போராட்ட குருஷேத்திரத்துக்குள் அணிவகுத்து நிற்கும் படைகளாக நாம் ஆக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த போராட்டத்தில் யார் வெல்லப் போகிறார்கள் என்ன வியூகம் வகுக்கப்படுகிறது என்பதெல்லாம் பரம இரகசியங்களாக இருக்கப்போவதில்லை. கடந்த காலங்களில் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களை நிகழ் காலத்தில் நிரப்பிக் கொள்ள கூடிய வாய்ப்பிருக்கின்றதா? என ஆராய்ந்து பார்ப்போமானால் அதுவும் பூஜ்ஜியமாகவே தெரிகிறது.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதற்குப்பின் இலங்கையரசாங்கமானது பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததாக எடுத்துக் காட்டப்படுகிறது.
இந்த வாக்குறுதிகளை அளிக்கப்பட்ட தரப்பினராக சர்வதேசத்தையும் குறிப்பாக இந்தியாவையும் சுட்டிக் காட்டப்படுகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பிரதானமாகச் சொல்லப்பட்டவை அரசியல் தீர்வு என்ற விடயமாகும்.
ஏனையவை அதற்குள் உள்ளடங்கியவையே. ஆனால் யுத்தம் முடிந்து ஐந்தாவது வெற்றி விழாவையும் கொண்டாடிக்களித்து விட்டோம். ஆனால் எதுவுமே நடந்த பாடுமில்லை நகர்ந்த பாடுமில்லை.
வாக்குறுதிகளை நம்பிக் கொண்ட சர்வதேசமாயினும் சரி இந்தியாவாக இருப்பினும் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டுவிட்டு அந்த விவகாரங்களை மறந்து போனவர்களாகவே காணப்படுகிறார்கள்.
இப்பொழுது நாம் விட்ட தவறுகளை ஒப்புக் கொள்கிறோமென பாவவிமோசன பரிகாரங்கள் பேசுகின்றார்கள்.
தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என அரசாங்கமும் தெரிவுக்குழுவுக்கு போங்கள் என சர்வதேசமும் ???????? வந்து விடும் என்ற தோரணையில் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.
கூட்டமைப்பினர் 14 தடவைகளுக்கு மேலாக சென்றும் வந்து விட்டார்கள். எதுவும் ஈடேறிய பாட்டைக் காணவில்லையென்பதே அவர்களின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது.
மீண்டும் மீண்டும் ஒரு புள்ளியைத் தொடுவதைப் போன்றே கடந்த 60 வருடங்கள் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் தீர்வுப் பொதி அரசியல் தீர்வு என்னும் விடயங்கள் செக்குவட்டம் போல் சுழன்று கொண்டிருக்கிறதே தவிர நேர்க்கோட்டுப் பாதையில் சிறிதுகூட முன்னேறியதைக் காண முடியவில்லை.
இதன் மத்தியில் தான் வெற்றிவிழாக்கொண்டாட்டத்தில் பேசிய ஜனாதிபதியவர்கள் தெரிவுக் குழுவுக்கு வரவில்லையாயின் தீர்வு பற்றி யோசிக்க முடியாது என அடித்துக் கூறியிருக்கிறார்.
அதே வேளை தெரிவுக்குழுவுக்கு செல்வதனால் எவ்வித பயனையும் நாம் அடையப் போவதில்லை. அடிப்படையற்றதும் அடைய முடியாதது பற்றியும் பேச வருகிறோமென அரசாங்கம் உதாசீனம் செய்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர்.
அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கப்பட வேண்டுமாயின் சர்வதேச நாடுகளின் அனுசரணை அல்லது மேற்பார்வையின் கீழே அது நடத்தப்பட வேண்டும்.
இதில் அனுபவம் வாய்ந்த தென்னாபிரிக்காவின் உதவி பெறப்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனை கொண்டிருப்பதும் கவனப்பாடுடைய விடயங்கள் தான்.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை மனந்திறந்தவகையில் தீர்வைத்தரும் இதயசுத்தியோடு அவர்கள் தமிழ்த் தரப்பினரை அழைக்க வேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிக்க வேண்டுமென்ற பக்க ஞாயமும் வலியுறுத்திக் காட்டப்படுகிறது.
இன்றைய மூன்றாம் கட்ட நிலையில் தமிழ் மக்களால் எதிர்பார்க்கப்படுகிற இறுதி வியூகம் ????? இரண்டு.
ஒன்று இந்தியாவின் புதிய ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கின்ற நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் வலுவான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்துவதன் மூலம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அமுல் படுத்தப்பட வேண்டிய 13 ஆவது திருத்த சட்டத்தினை பூரணமாக நிறைவேற்றுவதன் மூலம் நீறுபூத்த நிலையிலுள்ள இலங்கை இனப்பிரச்சினைக்கு சாசுவதமற்ற ஒரு தீர்வையாவது பெற்று விடலாமென்பது.
மற்றது ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உட்குடைவாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் இழப்புக்களுக்கும் சர்வதேசம் சார்ந்த ஒரு பரிகாரத்தை கண்டு விட முடியுமென்ற நம்பிக்கையிலேயே தமிழ்த் தரப்பினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் ஒரு ஒளிக்கீற்றாகவே அண்மையில் பதவியேற்பு வைபவத்துக்கு சென்ற இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் 13 ஆவது திருத்த சட்டத்தினை அமுல் படுத்தி உரிய தீர்வு காணப்பட வேண்டும் வட கிழக்குப் பகுதிகளில் புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்தி தெரிவித்திருப்பதையும் நாம் அறிவோம். இதேவேளை மோடியின் வேண்டுகோளை இலங்கை ஜனாதிபதி எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்ற கவலையை எதிர்க்கட்சி தெரிவித்திருக்கிறது. அத்துடன் இலங்கை அரசாங்கம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அக்கட்சி எச்சரித்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதல் அமைச்சர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றிருந்தால் அது தீர்வுக்கான ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்க உதவியிருக்காதென்பதும் இலங்கையின் இனவாத அமைப்புக்களும் கட்சிகளும் கண்கொத்திப் பாம்புகள் போல் தமிழர்களுக்கு எதையுமே கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனம் காட்டி வரும் போது….
அது சார்ந்த நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்பட்டுவரும் நிலையில் மேற்படி இந்தியா சென்ற குழுவில் சேர்ந்து சென்றிருந்தால் நல்லதொரு சூழ்நிலை உருவாகியிருக்குமென்பது எவ்வளவு பொய்மைத்தனமான வாதம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 60 வருட கால பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் போராட்டங்கள் மகாநாடுகள் உடன்படிக்கைகள் தராத சந்தர்ப்பத்தையும் தீர்வையும் விக்னேஸ்வரன் இந்தியா சென்ற குழுவுடன் இணைந்திருந்தால் தந்திருக்குமென்பது எவ்வளவு கற்பனை நிறைந்தது என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
திருமலை நவம்