அளுத்கம வன்முறைகளுக்கு வெளிநாட்டுச் சதியே காரணம் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த அரசாங்கத்துக்கு, இது அரசாங்கப் புலனாய்வுப் பிரிவுகளின் சதியே என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.
பொதுபலசேனாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நிதி உதவி அளிக்கப்படுவதாகவும், அளுத்கம வன்முறைகளின் பின்னால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளே இருப்பதாகவும், மங்கள சமரவீர தெரிவித்த குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்த வன்முறைகளுடன் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரிகளின் விபரங்களை வெளியிடப் போவதாக மங்கள சமரவீர அறிவித்தது, அரசாங்கத்துக்கு- குறிப்பாக பாதுகாப்பு அமைச்சுக்குப் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
அவர் சொன்னது போலவே, கடந்தவாரம், செய்தியாளர் சந்திப்பில் அந்தப் பெயர்களை வெளியிட்டிருந்தார்.
உடனடியாகவே அரசாங்கம் மங்கள சமரவீரவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அரச புலனாய்வு அதிகாரிகளைக் காட்டிக் கொடுத்து விட்டதாக முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர், மங்கள சமரவீரவுக்கு எதிராக முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த விசாரணைகள் சூடு பிடித்துள்ளன.
ஏனென்றால், அரச புலனாய்வுத்துறையினர் பற்றிய விபரங்கள் வெளியானது அரசாங்க உயர் மட்டத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுவும், பாதுகாப்புச் செயலர் அரசியலில் இறங்குவதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டுள்ள சூழலில், இப்படியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருப்பதை அரசதரப்பு கடும் விசனத்துடன் பார்க்கிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அழைப்பு விடுத்தால், தாம் அரசியலில் நுழையத் தயார் என்று சில வாரங்களுக்கு முன்னரே, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
தான் அம்பாந்தோட்டையில் இருந்து அரசியலில் நுழைய மாட்டேன் என்றும் கொழும்பில் இருந்தே களமிறங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பு மாவட்டத்தில், தேர்தலில் போட்டியிடுவதனால், முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியமானவை.
கொழும்பில் கணிசமான முஸ்லிம்கள் வசிக்கின்ற நிலையில், அவர்களின் நம்பிக்கையை கோத்தாபய ராஜபக் ஷ பெற்றுக் கொள்வதற்கு, மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டு பெருந்தடையாக மாறியுள்ளது.
ஏற்கனவே, பொது பல சேனாவுக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் தொடர்புகள் இருப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தான், பாதுகாப்பு அமைச்சினால், பொதுபல சேனாவுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில், புலனாய்வு அதிகாரிகளாலேயே அளுத்கம வன்முறைகள் தூண்டிவிடப்பட்டதாகவும், மங்கள சமரவீர கூறியிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனை அடியோடு நிராகரித்தார்.
அதுமட்டுமன்றி, நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி புலனாய்வு அதிகாரிகள் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது இராணுவப் புலனாய்வுத் துறையை அழிப்பதற்கான மிகப்பெரிய சதி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
2001ஆம் ஆண்டு ஐ.தே.க ஆட்சிக்கு வந்த பின்னர், அத்துருகிரிய, மிலேனியம், சிற்றியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் மறைவிடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.
அந்த இரகசிய மறைவிடம் வெளிச்சத்துக்கு வந்ததன் விளைவாக, இராணுவப் புலனாய்வுத்துறையை சேர்ந்த 21 பேரை இழந்து போனதாகவும், அதுபோன்றதொரு காட்டிக்கொடுப்பே இது என்றும் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டிருந்தார்.
மிலேனியம் சிற்றி சுற்றிவளைப்பின் போது, தான், முதல் முறையாக இராணுவப் புலனாய்வுத்துறையின் வழிகாட்டலில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான, ஆழ ஊடுருவும் அணியொன்று இரகசியமாக இயக்கி வருகிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருந்தது.
அதற்கு முன்னரே, புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து சில கிளைமோர் தாக்குதல்கள், வன்னியிலும், கிழக்கிலும் நடத்தப்பட்டிருந்தன.
ஆனால், அதைச் செய்தது யார்-? – அதனை இயக்குவது யார்? என்ற விபரம் மட்டும் அறியப்படாமல் இருந்தது.
மிலேனியம் சிற்றி சம்பவத்தை அடுத்து, அதனுடன் தொடர்புடையவர்களின் விபரங்கள் வெளியாகின.
அதனை வைத்து, ஆழ ஊடுருவும் அணியுடன் இணைந்து செயற்பட்ட பல இராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும், உதவியாளர்களையும் புலிகள் சுட்டுக் கொன்றிருந்தனர்.
அது ஐ.தே.க. அரசாங்கத்தின் மிகப்பெரிய துரோகமாக கூறப்பட்டு வந்தது.
எனினும் ஐ.தே.க. அரசாங்கம் அதனை திட்டமிட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கவில்லை.
இப்போது, அதனை நினைவுபடுத்தி, புலனாய்வுப் பிரிவுகளை அழிக்க சதி செய்யப்படுவதாக பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குற்றம்சாட்டுவது போன்று இலங்கையின் புலனாய்வுப் பிரிவுகளை அழிப்பது ஒன்றும் சுலபமான காரியமில்லை.
அது மிகப் பெரியதும், நன்கு கட்டியமைக்கப்பட்டதுமான ஒரு புலனாய்வுக் கட்டமைப்பாக – வலைப்பின்னலாக மாறிவிட்டது.
இராணுவ புலனாய்வுப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு, அரச புலனாய்வுச் சேவை என்று ஒரு பரந்துபட்ட, பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளின் கீழ் இது வியாபித்திருக்கிறது.
அண்மையில், இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயாரத்நாயக்க, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள் நிலை கொண்டுள்ளனர் என்றும், எவரேனும், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் சவால் விட்டிருந்தார்.
இராணுவப் புலனாய்வுத்துறை அந்தளவுக்கு வலிமையாக கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில், மங்கள சமரவீர வெளியிட்ட ஒரு சிலரின் பெயர்களால், ஒட்டுமொத்த அரச புலனாய்வுப் பிரிவுகளும் அழிக்கப்பட்டு விடும் என்று காண்பிக்கப்படும் விம்பம் மிகையானது.
ஆனால் அரசாங்கம் அத்தகையதொரு விம்பத்தை, சிங்கள மக்களுக்குக் காட்ட முனைந்திருக்கிறது.
எப்போதுமே ஒரு பொருளை மறைப்பதற்கு, இன்னொரு பெரிய பொருளை அதனருகே வைப்பது வழக்கம்,
அதுபோலத் தான், மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டுகளை மறைக்க, அதனைப் பெரிய தேசத்துரோகமாக – காட்டிக் கொடுப்பாக காண்பிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம்.
மங்கள சமரவீரவின் குற்றச்சாட்டு, கோத்தாபய ராஜபக் ஷவின் அரசியல் பிரவேசத்துக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அவரை முஸ்லிம்கள் நிராகரிக்கும் நிலை ஏற்படும் ஆபத்து உள்ளதால், அவசரமாக அரசாங்கம் மாற்று வியூகங்களை அமைத்திருக்கிறது.
அளுத்கம வன்முறைகளின் போது, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் முன்பாகவே தாம் தாக்கப்பட்டதாக, தமது உடைமைகள் அழிக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.
இப்போது, வன்முறையில் சேதமுற்ற கட்டடங்களைப் புனரமைக்கும் பணியை பாதுகாப்பு அமைச்சே மேற்கொள்ளவுள்ளது. அதுவும், படையினரே புனரமைப்பு வேலைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
வடக்கில், போரை நடத்திய படையினரைக் கொண்டே, சில புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டு, தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற அரசாங்கம் முயன்றது. அதே உத்தியை முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் பயன்படுத்துகிறது அரசாங்கம்.
இங்கு புனரமைப்பு வேலைகளை மேற்கொள்வதால், இராணுவத்தின் மதிப்பு உயரப் போவதில்லை, அப்படி உயர்ந்தாலும் அதனால் இராணுவத்துக்கு எந்த நன்மையும் கிட்டாது.
ஆனால், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கழுவப்பட்டு விடும்.
அதேவேளை, வடக்கில் புனரமைப்பு வேலைகளைக் காரணம் காட்டி, இராணுவம் நிலை நிறுத்தப்பட்டது போலவே, தெற்கிலும், அதே காரணத் தைக் கூறி, முஸ்லிம் பிரதேசங்களில் படையினர் நிறுத்தப்படவுள்ளனர்.
அளுத்கம வன்முறைகளும், அதற்குப் பிந்திய சூழலும், அரசியல் ஆதாயத் துக்கு தாராளமாகவே பயன்படுத்தப்படு கின்றன என்பது தெளிவான உண்மை.
அதேவேளை, அரசியல் நலன்க ளுக்காக அரச புலனாய்வுச் சேவைகள் பயன்படுத்தப்படுவதான குற்றச்சாட்டு கள் ஒன்றும் ஆச்சரியமளிக்கத்தக்கவை அல்ல.
ஏனென்றால், அரச புலனாய்வுத்துறை கள் எப்போதுமே அரசாங்கத்தின் நல னுக்காகவே செயற்படுபவை. அதனைப் பாதுகாப்பதற்கே உயர் முன்னுரிமை கொடுப்பவை ஏனென்றால் அவற்றை இயக்குவது அரசாங்கம் தான். அதன் விருப்பு வெறுப்புக்கேற்பவே அரச புல னாய்வுச் சேவைகள் செயற்படும்.
அளுத்கம விவகாரத்திலும், அரச புல னாய்வுச் சேவைகள் அவ்வாறே செயற் பட்டிருந்தாலும் கூட, அது ஆச்சரிய மான விடயமல்ல.
– சுபத்ரா