அடுத்த ஜனாதிபதி தேர்தல் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில், பலரும் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்க்க முனைகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதி பதி தேர்தல், கத்தோலிக்க மக்களின் திருத்தந்தையான பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தால், அடுத்த ஆண்டு மார்ச், ஏப் ரல் வரை பிற்போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், விரைவில் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள நாடு தயாராகி வருகிறது.
இதற்கென பல்வேறு தரப்புகளும், பல்வேறு முன்னாயத்தங்களை மேற்கொள் ளத் தொடங்கியுள்ளனர்.
அரசதரப்பு ஒருபக்கம் தனது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளத் தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சி யான ஐ.தே.கவும் ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கான பேச்சுக்களை இரகசியமாக மேற்கொண்டு வருகிறது.
அதற்கு வெளியே பொதுவேட்பாள ரைத் தெரிவு செய்யும் முயற்சிகளும் நட க்கின்றன.
இந்தச் சூழலில், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, தான் அப்போது அதிகாரத்துக்கு வந்திருந்தால், போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவ தற்கு பல்வேறு வழிகள் இருந்ததாகவும், சந்திரிகா குமாரதுங்கவிடமும் சில வழி கள் இருந்திருக்கலாம் என்றும் அவர் குறி ப்பிட்டுள்ளார்.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இறுதிக்கட்டப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது, சில உளவியல் காரணிகளையும் அரசியல் காரணிகளை யும் கருத்திற் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டது போன்று போரை முடிவுக் குக் கொண்டு வருவதற்கு அப்போது, இரண்டேயிரண்டு தெரிவுகள் தான் இருந்தன.
1.முதலாவது, அமைதியான வழியில் தீர் ப்பது.
2. இரண்டாவது, போரின் மூலம் தீர்ப்பது.
ரணில் விக்கிரமசிங்க அமைதியாக – போரின்றிப் பிரச்சினையைத் தீர்க்கவே திட்டமிட்டிருந்தார் என்பதும், அதன் காரணமாகவே அவர் ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார் என்பதும் உண் மை.
அதேவேளை, பிரச்சினையை போர் மூலம் தீர்க்க முடிவு செய்திருந்தார் மஹிந்த ராஜபக் ஷ.
அவர் திட்டமிட்டபடி, அவர் எதிர்பார் த்தபடியே, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
ஆனால், அவரால் நிலையான அமைதி யைக் கொண்டு வரமுடியவில்லை.
விடுதலைப் புலிகளும், கூட மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியானால், போரை யே தெரிவு செய்வார் என்று எதிர்பார்த்த னர்.
அவர்களின் அந்தக் கணிப்பு மட்டும் தான் சரியாகிப் போனது.
கடும் கோட்பாட்டாளரான அவருடன் போர் செய்வது, அமைதிப் பேச்சுக்களை நடத்துவதை விட இலகுவானது என்று புலிகள் கணக்குப் போட்டனர்.
ஆனால், அந்தக் கணக்குத் தவறாகிப் போனது.
அதன் விளைவு, புலிகளையும் இல்லா மல் செய்ததோடு, போரை முடிவுக்குக் கொண்டு வரும் வாய்ப்பையும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கியது.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் கணக்கு வேறு விதமானதாக இருந்தது.
அவர், பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதுமே, விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்பாட்டைச் செய்து கொண் டார்.
புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டே, அவரும் கூட, இன் னொரு போருக்கான முன்னாயத்தங்க ளைச் செய்யத் தவறவில்லை.
அந்த முன்னாயத்தங்கள் எல்லாமே வெளிப்படையாக இடம்பெறவில்லை.
சில மறைவாகவும் இடம்பெற்றன. சில வெளிப்படையாகவும் இடம்பெற்றன.
அப்போதைய சூழலில் எல்லாவற்றுக்குமே ரணில் பொறுப்பேற்க வேண்டிய சூழல் இருக்கவில்லை.
அதாவது, ஜனாதிபதியாக சந்திரிகா இருந்த வேளையில், படைகள் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்று காரணம் கூறுகின்ற வசதி அவருக்கு மிக வும் சாதகமாகவும் வாய்த்திருந்தது.
உயர்பாதுகாப்பு வலய விவகாரம், கடல் வழிப் பயண விவகாரம் போன்றவற்றில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்ட போது அவர் இதனை வைத்தே சமாளித் துக் கொண்டார்.
அதுபோலவே, விடுதலைப் புலிகளை உடைப்பதற்கான இரகசிய முயற்சிகளி லும், அரசதரப்பு அப்போது ஈடுபட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டபோது, புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பிய கருணாவை, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அலிசாகிர் மௌலானா தான் காப்பாற்றி கொழும்புக்கு கொண்டு சென்றார்.
புலிகளைத் தாமே அழித்ததாக, அரசாங்கம் மார்தட்டிய போது, விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தியது தாங்களே என்றும், அவர்களின் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது தாமே என்றும் ஐ.தே.க. தலைவர்கள் பிற்காலத்தில் கூறியதை மறந்து விட முடியாது.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில், அதிகாரத்துக்கு வந்தால், போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வரவே திட்டமிட்டிருந்தார்.
அதாவது விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி, சர்வதேச அளவில் அழுத்தங்களைப் பிரயோகித்து, அவர்களைப் போரிடவோ, பேசவோ வழியற்றவர்களாக்கி – வழிக்குக் கொண்டு வர முனைந்திருந்தார்.
அதற்காக அவர் அமெரிக்கா உள்ளி ட்ட நாடுகளுடன் கைகோர்த்திருந்தார்.
விடுதலைப் புலிகள் மீது கொண்டு வரப்பட்ட தடைகள், அவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சர்வதேச வலைப்பின்னல்கள், எல்லாமே புலிகளைச் செயலற்றவர்களாக்கும் வகையிலானவையே.
விடுதலைப் புலிகளைப் பேச்சு மேசையிலும், அதிகாரத்தைப் பேண முடியாமல், போரையும் தொடங்க முடியாத கட்டத்துக்குள் கொண்டு வந்து, அவர்களின் கதையை முடிப்பதே ரணிலின் திட்டம்.
அத்தகைய திட்டம் பெரும் ஆபத்தான தாகப் புலிகளால் அப்போது நோக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானால், குறைந்தபட்ச தீர்வு ஒன்றுக்கு இணங்கிப் போக வேண்டிய நிலைக்குத் தாம் அழுத்தம் கொடுக்கப்படுவோம் என்றும், தமது படைவலு மெதுவாக கரைக்கப்பட்டு விடும் என்றும் புலிகள் கணக்குப் போட்டனர்.
அந்த வகையில் புலிகளின் கணக்கு சரியானதாகவே இருந்தது.
புலிகளை இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வலுவற்றவர்களாக மாற்றுவதும், சர்வதேச ஆதரவுடன், அவ ர்கள் மீது ஒரு தீர்வைத்திணிப்பதும் தான் ரணிலின் திட்டம்.
அதற்கு இடம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவே புலிகள், 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜ பக் ஷவும், ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்தனர்.
தமிழ் மக்கள் சார்பில், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க, விடுதலைப் புலிகள் எடுத்த முடிவு, நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பாதகமானது. மஹிந்த ராஜ பக் ஷவுக்கு சார்பானது என்பது அனைவருக்கும் தெரிந்தேயிருந்தது.
தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்க அழுத்தம் கொடுத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாக, இன்றும் கூட குற்றச்சாட்டுகள் உள்ளன.
விடுதலைப் புலிகள், தமது இராணுவ பலத்தை மட்டும் நம்பிக் கொண்டு அந்த முடிவை எடுத்திருந்தனர்.
அன்றைய நிலையில், ரணில் விக்கிரம சிங்கவின் அரசாங்கம், சர்வதேச சக்திக ளின் ஆதரவுடன் தமக்கெதிராக வகுத்த வலைப்பின்னலை விடுதலைப் புலிகள் அறிந்திருந்தனர்.
எனவே, ரணில் விக்கிரமசிங்க ஜனாதி பதியானாலும் கூட, அவரால் ஏற்படக் கூடிய பாதகத் தன்மையை விட, ராஜபக் ஷ ஜனாதிபதியானால், ஏற்படக் கூடிய பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கணக்கிட்டனர்.
கடும்போக்குவாதம் எப்போதுமே போருக்குச் சாதகமான நிலையை உருவாக்கும் என்று கருதியதால் புலிகள், அப்போது மஹிந்த ராஜபக் ஷவுக்குச் சார்பான நிலையை எடுத்தனர்.
ஆனால், விடுதலைப் புலிகளின் அந் தக் கணிப்புத் தப்பாகிப் போனது.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தால் கூட, ஒரு கட்டத்தில் அவரும் கூடப் புலிகளை ஏதோ ஒரு விதத்தில் அழித்திருப்பார்.
அல்லது அதற்கு அண்மைய நிலை வரைக்குமாவது கொண்டு சென்றிருப் பார்.
ஏனென்றால், இப்போது அவர் கூறுவது போல, தானும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வழியொன்றைக் கொண்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
அது அமைதி வழி என்று மட்டும் அவர் கூறவில்லை.
அவரது வழி, சர்வதேச பின்புல ஆதர வுடன் புலிகளைப் போரிட முடியாத உறை நிலைக்குக் கொண்டு வருவதேயா கும்.
அதற்கு அமெரிக்கா தாராளமாக உதவியிருக்கும்.
புலிகளின் ஆயுத விநியோக வழித் தட யங்களை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்குக் காட்டிக் கொடுத்தது அமெரிக்கா தான்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந் திருந்தால், இன்னும் அதிகமாகவே அமெரிக்கா பங்களித்திருக்கும்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க எந்த வழிமுறையைப் பின்பற்றிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தி ருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசா ங்கத்தைப் போல, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்க மாட்டார்.
ஏனென்றால், ரணில் விக்கிரமசிங்கவின் வியூகம் சர்வதேச வலைப்பின்னலின் ஊடாகப் புலிகளை வீழ்த்துவதாகும்.
அதனால் தான், அவர், இறுதிக் கட்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சில உளவியல் காரணிகளையும் அரசியல் கார ணிகளையும் கருத்திற் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் என்பது, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி யின் தொடக்கமாக இருந்தது.
அதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வீழ்ச்சி தடுக்கப்பட முடியாத ஒன்றாகவே மாறியிருந்தது என்பதே உண்மை.
-கபில்-