போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடிச் சம்பவம் மீண்டும் உலக அரங்கில் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது.
போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள, 13 பேர் கொண்ட ஐ.நா. விசாரணைக் குழு, தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், தான் இந்த விவகாரம் மீண்டும் ஊடகங்களில் முன்னிலைக்கு வந்திருக்கிறது.
போரின் இறுதிநாளான, 2009 மே 18ஆம் திகதி அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில், வெள்ளைக்கொடியுடன் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை அல்லது காணாமற்போன விவகாரம், கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசாங்கத்துக்குப் பெருந்தலைவலியை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
அவ்வப்போது இந்த விவகாரத்துடன் தொடர்புடைய, ஒளிப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்துள்ளன.
அதுபோலவே, இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான விசாரணை அறிக்கைகள் மற்றும் முன்னுக்குப் பின் முரணாக வெளியிடப்பட்ட அரசதரப்பு அறிக்கைகள் எல்லாமே இந்த விவகாரத்தின் பின்னால் உள்ள கேள்விகளை வலுப்படுத்தி வந்துள்ளன.
அதிலும், இந்தச் சம்பவத்துடன், அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் தொடர்புபட்டுள்ளது பற்றிய குற்றச்சாட்டுகள் தான், இந்த விவகாரத்தை இன்னும் தீவிரமான கட்டத்துக்கு கொண்டு சென்றிருப்பதுடன், அரசாங்கத்துக்குத் தலைவலியாகவும் அமைந்து விடுகிறது.
கடந்த வாரம், சர்வதேச விசாரணையால் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரிப்பது குறித்து ஏ.பி. எனப்படும் அசோசியேட்டட் பி ரஸ் வெளியிட்ட ஒரு கட்டுரை உலகின் பெருமளவு ஊடகங்க ளால் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
அந்தச் செய்திக் கட்டுரையில், சர்வதேச விசாரணை குறித்த அழுத்தங்கள் பற்றி ஆராயப்பட்டதை விட, வெள்ளைக் கொடி விவகாரம் குறித்தே கூடுதல் அக்கறை காட்டப்பட்டிருந்தது.
அதுபற்றி விலாவாரியாக விபரிக்கப்பட்டிருந்தது. இது, வெளியுலகினால், இந்த விவகாரம் எவ்வாறு பார்க்கப்படுகிறது எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணம்.
அந்தக் கட்டுரையை எழுதிய மத்யூ பென்னிங்டன், ஏ.பி.யின் கொழும்பு செய்தியாளராக இருந்திருந்தால், இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்து அவ்வளவாக கரிசனை கொள்ள வேண்டியதில்லை.
அவர் வொஷிங்டனில் இருக்கும் ஒரு ஆய்வாளர் என்பதால், இதன் பெறுமானம் அதிகரித்துள்ளது. சர்வதேச விசாரணை என்று வரும் போது, வெள்ளைக்கொடிச் சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை இதுபோன்று வெளியில் இருந்து, கவனிப்பவர்கள் காட்டும் முக்கியத்துவத்தைக் கொண்டே கணிப்பிட முடிகிறது.
அதேவேளை, சர்வதேச விசாரணை குறித்து குசும்புச் செய்திகளை வெளியி டும் சிங்கள ஊடகங்களும் கூட, முதலா வதாக, வெள்ளைக்கொடிச் சம்பவம் குறித்தே, ஐ.நா. விசாரணைக்குழு ஆராயவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
போரின் இறுதி ஏழு ஆண்டுகளில் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தாலும், இறுதி நாளன்று அரங்கேறிய வெள்ளைக்கொடிச் சம்பவம் அதில் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. இது தான் அரசாங்கத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் சுதந்திரமான உள்நாட்டு விசாரணை ஒன்றையோ, சர்வதேச விசாரணை ஒன்றையோ நிராகரித்து வருவதற்கு, இந்த வெள்ளைக்கொடிச் சம்பவமும் ஒரு காரணம்.
இந்தச் சம்பவம் ஒன்று நிகழ்ந்திராது போயிருந்தால், அல்லது இந்தச் சம்பவத்துடன் அரசாங்க உயர்மட்டத்தினர் தொடர்புபடாது போயிருந்தால், அல்லது இதுபற்றிய தகவல்கள் வெளிவராமல் போயிருந்தால், ஒரு வேளை, அரசாங்கம் சர்வதேச விசாரணையை நிராகரித்திருந்தாலும் கூட, நம்பகமான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணைக்கு இணங்கியிருக்கக் கூடும்.
அதேவேளை, வெள்ளைக்கொடிச் சம்பவம் ஐ.நா. விசாரணையில் முக்கியமானதொரு கட்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், இது ஒன்றும், சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத ஒன்று அல்ல.
அதைவிட, இதனுடன் தொடர்புடைய நபர்கள், முக்கிய பிரமுகர்களாகவும் இருப்பதால், இந்த விவகாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர், சரணடைந்த பின்னர், சடலங்களாக காட்டப்பட்டதும், அரசாங்கத்தின் பொதுமன்னிப்பு அழைப்பின் பேரில், சரணடைந்த 100இற்கும் அதிகமான புலிகளின் முக்கியஸ்தர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் காணாமற்போனதும், இறுதிப் போரின் மர்மங்கள் சூழ்ந்த விவகாரங்களாகவே இருந்து வருகின்றன.
இவ்வாறு சரணடைந்தவர்கள், சிலர் உயிருடன் பிடித்து வைக்கப்பட்டுள்ள வீடியோ, ஒளிப்பட ஆதாரங்கள் வெளியான நிலையிலும், சரணடைந்ததற்கு சாட்சியான அவர்களின் குடும்பத்தினர் பலரும் உள்ள நிலையிலும், இது அரசாங்கத்துக்கு சிக்கலையே ஏற்படுத்தும்.
தாம் படையினரிடம், ஒப்படைத்த தமது பிள்ளைகள், கணவனுக்கு என்ன நடந்தது? என்று அவர்களின் பெற்றோர் அல்லது மனைவி, பிள்ளைகள், நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் முன்பாக, சாட்சியங்களை அளித்துள்ளனர்.
எனவே, வெள்ளைக்கொடிச் சம்பவம் என்பது தனியே நடேசன். புலித்தேவன் ஆகியோருடன் மட்டும் தொடர்புடைய ஒரு விவகாரமாக மட்டும் மட்டுப்படுத்தப்படப் போவதில்லை.
அது போரின் இறுதி நாட்களில் காணாமற்போன, அல்லது மர்மமான முறையில் கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் பற்றிய ஒட்டுமொத்த விசாரணைகளையும் உள்ளடக்கியதாகவே அமையப் போகிறது.
தென்னாபிரிக்க சட்ட நிபுணரும், பான் கீ மூன் நியமித்த ஐ.நா. நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான யஸ்மின் சூகா அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தச் சம்பவம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், காணாமற்போன, அல்லது கொல்லப்பட்ட சுமார் 143 பேரின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த ஆவணமும் கூட, ஐ.நா. விசாரணைக் குழுவின் முக்கியமான விசாரணைச் சான்றாக அமையவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த வெள்ளைக்கொடிச் சம்பவத்தை அரசாங்கம் ஒருபோதும் நடக்கவில்லை என்றே மறுத்து வந்துள்ளது.
ஆனால், அதன் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளும், ஆளாளுக்கு கூறிய வெவ்வேறு தகவல்களும், அவ்வப்போது வெளியான ஆதாரங்களும் இந்த விவகாரத்தை அவ்வளவு சுலபமாக மறைப்பதற்கு இடமளிக்கவில்லை.
வெள்ளைக்கொடிச் சம்பவம் உள்ளிட்ட இறுதிப் போர்க்காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள், ஒளிப்படங்களை ஆராய்வதற்காகவே – ஐ.நா. விசாரணைக்குழுவில் தடயவியல் நிபுணர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே, சனல் 4 உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான காட்சிகள், உண்மையானவை தானா என்று அரசாங்கத்தினால், எழுப்பப்பட்ட சந்தேகங்கள் அனைத்துக்கும், ஐ.நாவின் இந்த விசாரணை அறிக்கை தெளிவான முடிவு ஒன்றைத் தரும் என்று உறுதியாக நம்பலாம்.
அதற்குப் பின்னரும், இலங்கை அரசாங்கத்தினால், அவை பொய்யானவை போலியானவை திரிபுபடுத்தப்பட்டவை என்று கூறவும் முடியாது.
அவ்வாறு கூறினால் அதனை உலகம் ஏற்கப் போவதும் இல்லை.
இந்த வெள்ளைக்கொடிச் சம்பவம் பற்றி வெளியான ஒளிப்பட, வீடியோ ஆதாரங்கள் அனைத்துமே, உண்மையானவை என்று விசாரணையில் நிரூபிக்கப்படுமானால், போரின் இறுதிக்கட்டத்தில், சரணடைந்த பின்னர், பலரும் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமாகும்.
ஏனென்றால், பின்னர், சடலமாக காணப்பட்ட இசைப்பிரியா, கேணல் ரமேஸ், புலிகளின் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த உதயன் உள்ளிட்ட பலரும், உயிரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த காட்சிகளும் வெளியாகியுள்ளன.
அதுபோலவே, புலிகளின் முக்கியஸ்தர் பாலகுமாரனும் அவரது மகனும் மரம் ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட காட்சிகளும் வெளிவந்திருந்தன.
ஆனால், இவர்கள் போரில் கொல்லப்பட்டதாகவே அரசாங்கம் கூறி வந்துள்ளது.
அதுபோலவே, நடேசன், புலித்தேவன் போன்றவர்கள், சரணடைய வந்த போது, பின்புறமாக இருந்து புலிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னர் கூறியிருந்தார், அப்போதைய வெளிவிவகாரச் செயலாளர்.
இப்போது ஐ.நாவில் தூதுவராக இருக்கும் அவர், கடந்தவாரம் ஏபிக்கு அளித்த பேட்டியின் போது, என்ன நடந்தது என்று தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.
ஆனால், எவ்வாறு சரணடைவது என்று ஐரோப்பிய இடைத்தரகர் மூலம் தாம் புலிகளுக்கு குறுந்தகவல் அனுப்பியதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அதனை அவரால் நிராகரிக்க முடியாது – ஏனென்றால், அதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே, இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயற்பட்டவர்களில் ஒருவரும், சிரியாவில் கொல்லப்பட்டவருமான ஊடகவியலாளர் மேரி கொல்வின் உள்ளிட்டவர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.
எனினும், சரணடைதல் தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு பற்றித் தனக்குத் தெரியாது என்று சாதிக்க முனைகிறார் அவர்.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தால், அது அரச உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.நாவின் இந்த விசாரணையில் முக்கிய இடம் வகிக்கப்போகும், வெள்ளைக்கொடிச் சம்பவம் பற்றிய உண்மைகள் வெளிவரும் போது, அது அரசாங்கத்துக்கு வெளியுலகில் இன்னும் பல புதிய சிக்கல்களை உருவாக்கலாம் என்பதை ஏபி வெளியிட்ட கட்டுரையில் குறிப்புணர்த்தப்பட்டுள்ளதை அலட்சியம் செய்ய முடியாது.
– சுபத்ரா