தென்னாபிரிக்க பிரதி  ஜனாதிபதி சிறில் ரமபோச எந்தச் சிக்கலுமின்றி இலங்கையில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இவரது வருகையுடன் சிங்கள, பௌத்த கடும் கோட்பாட்டாளர்கள் புதிய எதிர்ப்பு போராட்டமொன்றில் குதிக்கலாமென்று எதிர்பார்க்கப்பட்டபோதும்,  அதற்கு முரணான வகையில் அவரது பயணம் சுமுகமாக முடிந்திருக்கிறது.

தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோசவின் பயணம் சுமுகமானதாக இருக்காது என்பதுடன், சர்ச்சையை கிளப்புவதாக அமையலாமென்ற எதிர்பார்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தவர்கள் மூவர்.

அவர்களில் இருவர் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கின்றனர். அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரே அவர்கள்.

அடுத்தவர் தேசப்பற்றுத் தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர.

அமைச்சர்களான  விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் உள்நாட்டு விவகாரத்தில் மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீடு தேவையற்றது என்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலாநிதி குணதாச அமரசேகரவும் அதுபோலவே தெரிவித்ததுடன், ரமபோசவின் வருகைக்கு எதிராக கொழும்பில் திங்கள் அல்லது செவ்வாயன்று பெரியளவிலான போராட்டமொன்றை நடத்தப் போவதாகக் கூறியிருந்தார்.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியோ ஒரு படி மேலே சென்று, ரமபோச நாட்டுக்குள் வந்தால் தாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என்று கூறியது.

ஆங்கில நாளிதழ் ஒன்று, ரமபோச உள்ளே தேசிய சுதந்திர முன்னணி வெளியே என்று தலைப்பிட்டது. ஆனால், இவை எல்லாமே புஸ்வாணமாகிப் போயின.

எந்த எதிர்ப்பு போராட்டங்களும் இல்லாமல் மிக அமைதியாக, எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமின்றி தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்றிருக்கிறார் சிறில் ரமபோச.

tna1இது எப்படிச் சாத்தியமாயிற்று?

ரமபோச வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகக் கூட அவர் எதற்காக வருகிறார்?  அவருக்கு இங்கு என்ன வேலை?  என்று கேள்வி எழுப்பிய சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் அடங்கிப்போனது எப்படி?

கொழும்பில் பெரிய எதிர்ப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக மிரட்டிய குணதாச அமரசேகர எதுவும் செய்யாமல் முடங்கியது எப்படி? எல்லாம் வியப்பானவையாகத்தான் இருக்கின்றன.

அரசாங்கத்தை விட்டு வெளியே போகப் போவதாக மிரட்டிய அமைச்சர் விமல் வீரவன்ச, கடைசியில் அவர் சுற்றுலாப் பயணியாகத்தான் வந்திருக்கிறார் என்று கூறிச் சமாளித்துக்கொண்டது மிகப் பெரிய நகைச்சுவைதான்.

தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோச சுற்றுலாப் பயணியாகத்தான் வருகிறார் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவும் தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் அதனால், அவரது வருகைக்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

Wimal_11-10-24இதற்காக தாம் அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை என்றும் அவர் குத்துக்கரணம் அடித்தார். விமல் வீரவன்சவின் அரசியல் கோமாளித்தனம் இதன் மூலம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது.

தென்னாபிரிக்க பிரதி  ஜனாதிபதி பிரான்சிலிருந்து தனி விமானத்தில் கடந்த 07ஆம் திகதி நண்பகல் கொழும்பு வந்து சேர்ந்தார். தொடர்ந்து மாலை 05 மணியளவில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான அரச தரப்புக் குழுவைச் சந்தித்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்தார்.

மறுநாள் காலை 7.15 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துவிட்டு, யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சர்; சி.வி.விக்னேஸ்வரனையும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும் சந்தித்துப் பேசினார்.

அங்கிருந்து கொழும்பு திரும்பிய கையோடு மாலை தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். மிகவும் குறுகிய காலத்துக்குள் இறுக்கமான நிகழ்ச்சிநிரலுடன் பயணத்தை மேற்கொண்ட தென்னாபிரிக்க பிரதி  ஜனாதிபதி  ரமபோச, சுற்றுலாப் பயணியாகவே வந்தார் என்று சக அமைச்சர்கள் கூறியதை விமல் வீரவன்ச நம்பியுள்ளாராம்.

rama1-600x425அந்தளவுக்கு விபரம் புரியாதவராக  சக அமைச்சர்களால் இலகுவாக ஏமாற்றப்படக்கூடியவராக விமல் வீரவன்ச இருக்கிறாரா? அவ்வாறு இருந்திருந்தால் அவருக்காக பரிதாபப்படத்தான் வேண்டும்.

தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோசவின் இந்தப் பயணம் உயர் நிகழ்ச்சிநிரலுடன் கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அது ஒரு முக்கியமான அமைச்சரான விமல் வீரவன்சவுக்கு தெரியாமல் போயிருக்காது.

ஆனாலும், அவர் அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதற்காக தன்னைத்தானே நியாயப்படுத்திக்கொள்ளப் போய், பரிதாபத்துக்குரிய அரசியல் கோமாளியாக மாறியிருக்கிறார்.

அவர் கூறுவது போல சிறில் ரமபோச சுற்றுலா வந்ததாகவே வைத்துக்கொண்டால், ஏன் எந்தவொரு சுற்றுலாத் தலத்துக்கும் அவர் செல்லவில்லை?

வழக்கமாக சுற்றுலாப் பயணிகளைப் போன்று ஆறுதலாக ஓய்வெடுக்காமல் அவசர அவசரமாக அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காக எதற்காக ஓடித் திரிந்திருக்க வேண்டும்?

இவற்றையெல்லாம்  அமைச்சரான விமல் வீரவன்ச ஏன் அரசாங்கத்தை பார்த்துக் கேட்கவில்லை?

இனி பிரதான விடயமான சிறில் ரமபோச எதற்காக இலங்கை வந்தார் என்ற கேள்விக்கு வருவோம்.

ஏனென்றால் இது தான் முக்கியமானது. இதனைச் சுற்றியே எல்லா நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.

South affrika2_CIரமபோசவின் வருகைக்கு முன்னதாக அவரது நிகழ்ச்சிநிரல் என்ன என்று இலங்கை அரசாங்கத்தை கேட்டபோது, தமது அரசாங்கத்துக்கு தெரியாது என்று கைவிரித்திருந்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.

அதுபோலவே ரமபோசவின் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இப்ராகிமிடமும் இது பற்றிக் கேள்வி எழுப்பியபோது, அவரும் தமக்கு ஏதும் தெரியாது என்று கூறியிருந்தார்.

அவ்வாறாயின், யாருடைய நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் ரமபோச இங்கு வந்தார் – அதனை திட்டமிட்டு, ஒழுங்கமைத்து நெறிப்படுத்தியது யார் என்று கேள்விகள் எழுகின்றன.  ஒரு நாட்டின் தூதுவர் என்றால் கூட இவ்வாறு கூறிவிடலாம்.

ஆனால், ஆபிரிக்காவின் மிக முக்கியமானதொரு நாட்டின் பிரதி ஜனாதிபதியின் நிகழ்ச்சிநிரல் என்னவென்று இரு நாடுகளின் அரசாங்கங்களுக்குமே தெரியாது என்பது வேடிக்கையான விடயம்.

தான் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பின் பேரிலுமே இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக ரமபோச பின்னர் கூறியிருந்தார்.

சிறில் ரமபோசவின் இந்தப் பயணத்தின் நோக்கம் பேச்சுக்கான பேச்சுக்களை நடத்துவதே என்பது தெளிவான விடயம்.

அதாவது, இலங்கையில் நிலையான அமைதியை உருவாக்குவதற்கான ஓர் அமைதி முயற்சியை ஆரம்பித்தல் என்று கூறலாம்.
அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரதும் கருத்துகளை அறிந்து நிலைமையை நேரில் அவதானிப்பதே சிறில் ரமபோசவின் பயண நோக்கம்.

அவரது இந்த நோக்கம் பெரும்பாலும் எந்த இடையூறுகளுமின்றி நிறைவேறிவிட்டது. இனிமேல் அவரது அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

அது என்னவென்றால், இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு எத்தகைய பங்களிப்பை தென்னாபிரிக்காவினால் வழங்கமுடியும் என்பதைக் கண்டறிந்து, அதற்கான உதவியை வழங்குவது. இது ஒன்றும் சாதாரணமான விடயமாக இருக்காது.

ஏனென்றால், சிறில் ரமபோசவின் பயணத்தை சுற்றுலாப் பயணம் என்று அமைச்சர் ரம்புக்வெல்லவும் பிரதி அமைச்சர்  நியோமல் பெரேராவும் கூறியதை நம்புவதாக அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் கூறியது நம்புவதற்கு கடினமான விடயம்.

அவர்கள் ரமபோசவின் வருகையின் நோக்கத்தை நன்றாகவே அறிந்து வைத்திருந்தனர். ஆனால், அடக்கி வாசிக்க வேண்டியதொரு சூழல் – நெருக்கடி அவர்களுக்கு இருந்தது.

RAMAPOSHA3-600x337அதாவது, அரசாங்கத்தை பாதுகாக்க தென்னாபிரிக்காவின் இந்த முயற்சி அவசியமானது.

ரமபோசவின் வருகையை அரசாங்கம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் சர்வதேச நெருக்கடிகளைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று இராஜதந்திரிகள் பலரும் அரசாங்கத்துக்கு அறிவுரை கூறியிருந்ததை எவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

சர்வதேச அரங்கில் அரசாங்கம் பல்வேறு முனைகளில் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவரும் நிலையில், அவற்றிலிருந்து தப்பிக்க ரமபோசவின் வருகையை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமானது என்ற கருத்து வலுவாகியுள்ளது.

இத்தகைய நிலைமையை கடும்போக்குவாத அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் தெளிவாக உணர்ந்துகொள்ளக் கூடியவர்கள் தான்.

அதாவது தமது கொள்கைக்கு முரணான ஒரு செயலில் அரசாங்கம் இறங்கினாலும், சிங்கள பௌத்த தேசியவாத நலன்களுக்கு அதனால் ஆதாயம் கிடைக்கும் என்றால் அதற்காக விட்டுக்கொடுத்துப் போகும் இயல்பு இவர்களிடம் உள்ளது.

அதேவேளை, ரமபோசவின் இந்தப் பயணம் கள நிலைமைகளை அறிந்துகொள்வது மட்டும்தான் என்பதை புரிந்துகொண்டதாலும் கூட விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அமைதி காத்திருக்கலாம்.

Rama mahinda_CIஏற்கெனவே ஒரு பக்கத்தில் ஐக்கிய நாடுகள் விசாரணையும் இன்னொரு பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தென்னாபிரிக்காவின் இந்த முயற்சிக்கு ஆரம்பத்திலேயே குழப்பம் விளைவிப்பதால் இலாபமடையப் போவது தமிழர்களாகவே இருக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டிருக்கக் கூடும்.

அதை விட இன்றைய நிலையில், சிங்களத் தேசியவாதத்தை ஊட்டி வளர்க்கவும் பாதுகாக்கவும் இவர்களுக்கு ஏற்ற ஒரே தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே இருக்கிறார்.

எனவே, இந்த ஆட்சியை பாதுகாக்கும் பொறுப்பையும் அவர்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.  எனவேதான், ரமபோசவின் வருகையை அவர்களால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடிந்தது.

ஆனால், இதேபோன்று ரமபோச முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அவர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அத்தகைய எதிர்பார்ப்பை அரசாங்கம் கொண்டிருந்தால் அது தப்புக்கணக்காகவே அமையும்.

அண்மையில், அரசாங்கத்திடம் விமல் வீரவன்ச முன்வைத்த 12 அம்சத் திட்டத்தில் உள்நாட்டு விவகாரங்களைத் தீர்க்க மூன்றாவது தரப்பு எதையும் அனுமதிக்கக்கூடாது என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அந்த 12 அம்சத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டும் இருந்தது.

ஆனால், அந்த இணக்கப்பாட்டுக்கு எதிரான வகையில் அரசாங்கம் தென்னாபிரிக்காவின் தலையீட்டுக்கு இடமளிக்குமானால், அது சிங்களத் தேசியவாத சக்திகளின் பொறுமையைச் சோதிக்கும் விடயமாகவே இருக்கும்.

அத்தகையதொரு கட்டத்தில் அரசாங்கத்துக்குள் இருக்கும் சிங்களத் தேசியவாத சக்திகளே அமைதி முயற்சிகளுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முற்படும்

அத்தகைய நிலையொன்றைத் தவிர்ப்பதோ அல்லது தடுப்பதோ அரசாங்கத்தினால் அவ்வளவு இலகுவாக முடியாது.

ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவிடம் இந்த முயற்சியில் உதவுமாறு  அழைப்பு விடுத்திருந்தார்.

திடீரென அரசாங்கம் தென்னாபிரிக்காவின் அமைதி முயற்சியை கை கழுவி விட்டால், தற்போது இறுக்கமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள அரசாங்கம் இன்னமும் மோசமான நிலைக்குள் தள்ளப்படும்.

அதை விட தற்போது சர்வதேச அளவில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான ஒரு கருவியாகவே தென்னாபிரிக்காவை கையாள முற்பட்ட அரசாங்கம், அதை அவ்வளவு இலகுவாக கைவிட்டு விடவும் முடியாது.

அப்போது அரசாங்கம் சட்டிக்குள் இருப்பதா – அடுப்புக்குள் விழுவதா என்று தீர்மானிக்க முடியாததொரு கட்டம் உருவாகும்.

அரசாங்கத்தின் அந்த திரிசங்கு நிலையை சிங்களத் தேசியவாத சக்திகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் என்று கருத முடியாது. எனவே, அவர்கள் நோர்வேக்கு எவ்வாறு தலையிடி கொடுத்தார்களோ, அதுபோலவே தென்னாபிரிக்காவுக்கும் தலையிடி கொடுப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

கே.சஞ்சயன்

Share.
Leave A Reply