தமது வயது, பருவம் என்பவற்றின் தன்மைகளையே அறியாத, உணர்ந்தறிய முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் மீது திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக 11 தினங்கள் பாலியல் குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரோ, இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மீதோ குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
பருவமடைந்த 15, 16 வயதுடைய இளம்பெண்களுடன் அவர்களுடைய விருப்பத்துடன் உடலுறவு கொண்டால்கூட, அது சம்பந்தப்பட்ட ஆண் செய்கின்ற ஒரு பாரதூரமான குற்றம் என்று இந்த நாட்டின் சட்டம் சொல்கின்றது.
ஆனால் 11 வயதும் 9 வயதுமுடைய பாலகிகள் மீது புரியப்பட்டுள்ள குற்றம் என்பது உலகின் பல நாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண சம்பவத்தைப் போன்ற ஒன்றே. இதில் என்ன இருக்கின்றது. இது ஒரு சாதாரண விடயம். இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் ஏன் வீணாக்குகின்றீர்கள் என்ற தொனியில் பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றார்.
இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கைத் தீவை அழைப்பார்கள். ஆழ் கடல் மத்தியில் அமைந்துள்ள இந்த நாடு சிறிய நாடாக இருந்த போதிலும், இந்தப் பிராந்தியத்தில் அது கேந்திர முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது. அத்துடன் அது ஓர் அழகிய நிலப்பரப்பைக் கொண்டது. நீர் வளம் நில வளம் என்று இயற்கை வளங்கள் நிறைந்தது. இதன் காரணமாகவே இந்து சமுத்திரத்தின் முத்து என்று இந்தத் தீவு பெயர் பெற்றதாகக் கூறுவார்கள்.
இந்தத் தீவின் அமைவிடம் காரணமாக தெற்காசிய பிராந்தியத்தின் கடல் வணிகம், அரசியல், பிராந்திய மட்டத்திலான சமூகம், பாதுகாப்பு என்று பல வகைகளிலும் இது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
அதேநேரம், இந்தத் தீவின் வரலாறு, பாரம்பரியம், கலை கலாசாரம் முக்கியமாக அரசியல் என்பன அயல் நாடுகளாகிய இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாகவும், இது பிராந்திய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைப் பயிர் உற்பத்தியின் மூலம் தேயிலையின் அடையாளமாகப் பெயர் பெற்றிருந்த இலங்கை, அதற்கு முன்னதாக அதன் கறுவா, மிளகு போன்ற வாசனைத் திரவிய வளம் காரணமாக வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன் பின்னர் தேயிலையுடன் இறப்பர் உற்பத்தியின் மூலமாகவும், இரத்தினக் கல் வளம் காரணமாகவும் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்திருந்தது.
அத்தகைய பிரபல்யம் மிக்க இலங்கை இப்போது சர்வதேச அரங்கில் அசிங்கப்பட்டு நிற்கும் நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றதா என்று சந்தேகிக்க நேர்ந்துள்ளது. இத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டில் இப்போது காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் இரண்டு சம்பவங்கள் உள்ளூரை மட்டுமல்லாமல் சர்வதேசத்தையும் அதிரச் செய்திருக்கின்றன.
முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இன முரண்பாடுகளுக்கு, – இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று பொதுவாக நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதனால் யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
யுத்தம் காரணமாக நாட்டில் சீரழிந்திருந்த ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும், மக்கள் சுதந்திரமாகத் தேர்தல்களில் வாக்களிக்கக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறி வருகின்றது. ஆயினும் நடைமுறையில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதையும், ஜனநாயகப் பண்புகள் பகிரங்கமாகவே சிதைக்கப்படுவதையும் காணமுடிகின்றது.
பொறுப்பானவர்கள் பொறுப்புடனா செயற்படுகின்றனர்….?
ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமானது, மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க வேண்டும். பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்த நம்பிக்கையில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம்.
ஆயினும் அரசாங்கம் அடிப்படையான விடயங்களில் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்கின்றது, எங்களுடைய உணர்வுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்துச் செயற்படுகின்றது என்ற நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் காரியங்களை முன்னெடுத்தல் வேண்டும்.அப்போதுதான் மக்கள் அரசு மீது மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருப்பார்கள். இந்தநிலைமையை இலங்கையில் காண முடிய வில்லை.
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் பதவிகளை அலங்கரிப்பவர்கள், அந்தப் பதவிகளுக்குரிய பொறுப்புக்களை மறந்து அல்லது வேண்டுமென்றே உதாசீனம் செய்யும் வகையில் நடந்து கொள்வதை சாதாரணமாக இங்கு காண முடிகின்றது. சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள்கூட, எள்ளி நகையாடும் வகையில் இத்தகைய பொறுப்புக்களில் உள்ளவர்கள் நடந்து கொள்வது ஜனநாயகத்தின் மீதும், இந்த நாட்டின் வளமான எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டிருப்பவர்களைக் கவலையடையச் செய்திருக்கின்றது.
நாட்டின் அரசியல் போக்கு நாட்டையும் மக்களையும் எங்கு கொண்டு தள்ளிவிடப் போகின்றதோ இன்று மோசமான ஒரு யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்த நிலையில் – அச்சமடையச் செய்திருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற போதிலும், யுத்த மோதல்கள் இடம்பெற்றவடக்கு – கிழக்கு பிரதேசங்களில் குறிப்பாக வடபகுதியில் இன்னும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்ற வகையில் அரசாங்கம் அங்கு பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரை நிலை கொள்ளச் செய்திருக்கின்றது.
இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சிவில் நடவடிக்கைகள் அனைத்திலும், இராணுவத்தின் கை மேலோங்கியிருக்க வேண்டும் என்ற நியதி எழுதாத நிலையில் இறுக்கமான சட்டமாக அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சிவில் நடவடிக்கைகளிலும், பொதுமக்களின் வாழ்க்கையிலும் தாரளமாகத் தலையீடு செய்து வருகின்ற இராணுவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அந்தக் குற்றச் செயல்களுக்காக தண்டனை பெறுவதில் இருந்து தப்பிச் செல்கின்ற போக்கு ஒரு சாதாரண நடைமுறையாக அவர்களுக்கும் அதிகாரங்களில் உள்ளவர்களுக்கும் உரிய ஒரு பதவி கலாசாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஜனநாயகப் பண்புகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாராளுமன்றம் போன்ற ஜனநாயகத்தின் புனிதமான அரங்குகளில் அவர்களுடைய செயற்பாடுகள் நியாயப்படுத்தப்படுகின்றன.
நாட்டு மக்களின் அபிமானத்தையும், கௌரவமான மரியாதையையும் பெற்றிருக்க வேண்டிய நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவரே குற்றவாளிகள் தண்டனை பெறுவதிலிருந்து தப்பிச் செல்லும் போக்கிற்கு குரல் கொடுக்கின்ற விபரீதமான போக்கைக் காண முடிகின்றது.
காரைநகரில் மிகவும் பின்தங்கிய கிராமமாகிய ஊரி கிராமத்தைச் சேர்ந்த 11 மற்றும் 9 வயது பாலகிகள் இருவரைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் யாரோ 11 தினங்கள் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.
அந்தப் பெண்குழந்தைகள் கடற்படையினரின் முகாம் வழியாகக் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது: அவர்களுக்கு இனிப்புப் பண்டங்களையும் தின்பண்டங்களையும் வழங்கி கூட்டிச் சென்று அவர்கள் மீது குற்றம் புரிந்துவிட்டு, பிற்பகலில் பாடசாலை முடிந்து பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் வேளையில், குற்றவாளிகள் அவர்களை சாதாரணமாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த சிறுமிகள் பாடசாலைக்குத் தொடர்ச்சியாக வருகை தராதிருந்ததை அவதானித்த பாடசாலை நிர்வாகம் அது குறித்து பெற்றோரினதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்தக் குழந்தைகள் மீதான படு மோசமான பாலியல் குற்றம் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
மோசமாகப் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி தனக்கு நேர்ந்ததை விலாவாரியாக தனது வாக்குமூலத்தில் விபரித்திருந்தது. மற்றைய சிறுமியும், தனது வயது, அதன் குடும்பப் பின்னணியின் அடிப்படையிலான தெளிவின் மூலம் தனக்கு நடந்ததை விசாரணைகளின்போது விபரித்திருக்கின்றது.
விசாரணைகளின் ஒரு கட்டத்தில் குற்றச் செயல் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற இடத்தையும் பாலகிகள் இருவரும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்துச் சென்று காட்டியிருக்கின்றார்கள்.
எதற்காகப் படையினர்இருக்கின்றார்கள்?
அதிகார பலம் கொண்ட கடற்படையினரின் ஆதிக்கத்தில் உள்ள இடத்தில், அதேபோன்று அரசியல் அதிகாரம் மேலோங்கியுள்ள ஒரு பிரதேசத்தில், வாய் திறப்பதற்கே அச்சமடைந்துள்ள சமூகத்தைச் சேர்ந்த அந்தக்குழந்தைகள் இருவரும் தங்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கூறியிருந்தார்கள்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தைகள் அப்பாவிகள். சூது வஞ்சகம் அறியாதவர்கள். நேர்மையாகவே நடப்பார்கள். உண்மையையே பேசுவார்கள். அப்படியிருந்தும், இந்தக் குழந்தைகள் தமது வாக்குமூலங்களின் மூலமாக செய்திருந்த முறைப்பாட்டிற்கு, ஒரு வகையில் முரண்பட்ட விதத்தில், பாராளுமன்றத்தில் இந்த நாட்டின் பிரதமர் விபரங்களை வெளியிட்டிருக்கின்றார்.
தேசிய பாதுகாப்புக்காகத்தான் காரைநகரிலும் வேறு இடங்களிலும் கடற்படையினரும், இராணுவத்தினரும் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். முகாம் வாசலிலும், காவலர்களின் முன்னாலும் வீதியில் கடந்து செல்கின்ற பெண்களையும் சிறுமிகளையும் குழந்தைகளையும் பாலியல் ரீதியாகப் பதம் பார்ப்பதற்காக அவர்களை அங்கு அரசு அனுப்பவில்லை.
சீரிய ஒழுக்கத்தையும், கண்ணியமான கட்டுப்பாடான நடத்தையையும் கொண்டிருக்க வேண்டிய நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எவராவது முறைதவறி நடப்பார்களேயானால், எந்த ஒரு ஜனநாயக அரசாங்கமும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டாது, அவர்களுக்காக எந்த ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமரும் வக்காளத்து வாங்க முன்வரமாட்டார்.
ஆனால் அது இந்த நாட்டில் நடைபெற்றிருக்கின்றது. தமது வயது, பருவம் என்பவற்றின் தன்மைகளையே அறியாத, உணர்ந்தறிய முடியாத நிலையில் உள்ள குழந்தைகள் மீது திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக 11 தினங்கள் பாலியல் குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரோ, இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மீதோ குற்றம்சுமத்தப்பட்டிருக்கின்றது.
பருவமடைந்த 15, 16 வயதுடைய இளம்பெண்களுடன் அவர்களுடைய விருப்பத்துடன் உடலுறவு கொண்டால்கூட, அது சம்பந்தப்பட்ட ஆண் செய்கின்ற ஒரு பாரதூரமான குற்றம் என்று இந்த நாட்டின் சட்டம் சொல்கின்றது.
ஆனால் 11 வயதும் 9 வயதுமுடைய பாலகிகள் மீது புரியப்பட்டுள்ள குற்றம் என்பது உலகின் பல நாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண சம்பவத்தைப் போன்ற ஒன்றே. இதில் என்ன இருக்கின்றது. இது ஒரு சாதாரண விடயம். இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் ஏன் வீணாக்குகின்றீர்கள் என்ற தொனியில் பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது. அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவே வடக்கில் கடற்படையினரும் இராணுவத்தினரும் இன்னும் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகளிடமிருந்தே அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது என்பது உலகறிந்த இரகசியம்.
அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பின்பும், அந்த அச்சுறுத்தல் தொடர்கின்றது என்று கதைவிட்டு பாதுகாப்புக்கான காரியங்களை முன்னெடுத்திருக்கின்றது என்றே பலரும் கூறுகின்றார்கள்.
இந்த நிலையில் காரைநகர் சம்பவத்தில் முருகன் கோவிலருகில் விடுதலைப்புலிகளின் சீருடையையொத்த ஆடை அணிந்திருந்த ஒருவரே அந்த சிறுமியைத் தூக்கிச் சென்றதைக் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கண்டதாகப் பிரதமர் கூறியிருக்கின்றார்.
அது உண்மையானால், தேசிய பாதுகாப்புக்காக அங்கு அனுப்பப்பட்டிருந்த அந்த சிப்பாய் ஏன் அந்த நபரைத் துரத்திச் சென்று அவரிடமிருந்து அந்தச் சிறுமியை மீட்கவில்லை? சிறுமியைத் தூக்கிச் சென்ற அந்த விடுதலைப்புலி சீருடையைப் போன்ற உடையணிந்த நபரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக ஏன் அங்கிருந்த கடற்படையினர் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை? இது போன்ற எத்தனையோ கேள்விகளை பிரதமருடைய பாராளுமன்ற உரை எழுப்பியிருக்கின்றது.
காரைநகர் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இந்த சம்பவத்தில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 7 கடற்படையினரை நீதிமன்றம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியிருந்தது. எனினும் அவர்களில் குற்றவாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. இந்த அடையாள அணிவகுப்பையடுத்தே, சம்பவம் நடைபெற்ற இடத்தை அடையாளம் காட்டுவதற்காகப் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இராணுவ முகாம்களும், கடற்படை முகாம்களும் பலத்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பவையாகும். அங்கு சிவிலியன்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. சிவில் விவகாரங்களைக் கையாள்கின்ற இராணுவ அலுவலங்கள் இருக்குமிடத்திற்கு சிவிலியன்கள் சென்று வருவார்கள்.
அந்த இடங்கள் அவர்களுக்குப் பரிச்சயமாகவும் இருக்கும். ஆனால் இயல்பாகச் சென்று சம்பவம் நடைபெற்றதாகக் கருதப்படுகின்ற காட்டுப்பாங்கான இடத்தை அடையாளம் காட்டியிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு நிலைமையில்தான் கடற்படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் உள்ள காரைநகர் சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளித்திருக்கின்றார்.
அதேநேரம் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ்துறை பேச்சாளர், அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பெயர்குறிப்பிட்டு சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.
பதினொருவயது சிறுமியே தொடர்ச்சியாகப் பாலியல்; வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக மருத்துவ பரிசோதனையில் நிரூபணமாகியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பொலிஸ்துறை பேச்சாளர் அந்தச் சிறுமி சந்தேக நபரை பெயர் குறிப்பிட்டு அடையாளப்படுத்தவில்லை என கூறியிருக்கின்றார்.
பாலகி ஒருவர் தன்மீது குற்றம் புரிந்த ஒருவரை பெயர் குறிப்பிட்டு அடையாளப்படுத்த முடியும் என்று பொலிஸார் எந்த அடிப்படையில் எதிர்பார்க்கின்றார்களோ தெரியவில்லை.
தடுக்கப்பட்ட தமிழ்ஊடகவியலாளர்கள் ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகிய ஊடக சுதந்திரத்தை அடக்கியொடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்டலாம் என்று இந்த அரசாங்கம் கருதுகின்றது போல தெரிகின்றது. ஊடகங்கள் மீதான நேரடி அழுத்தங்கள், அடக்குமுறைகளும், மறைமுகமான அச்சுறுத்தல்களும் நாட்டின் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருக்கின்றன.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் யுத்தமுனைச் செய்திகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பேணிய அரசாங்கம், போர்முனைகளிலும், அவற்றைச் சார்ந்த பகுதிகளிலும் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மை வெளியில் தெரியாதவாறு மிகவும் சாதுரியமாகப் பார்த்துக் கொண்டது.
அரச ஊடகங்களைச் சார்ந்த, தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரமே விசேடமாக போர்முனைகளுக்குக் கூட்டிச் செல்லப்பட்டார்கள். அவர்கள் மூலமாக அரசாங்கம் தனது தேவைக்கு ஏற்ற வகையில் யுத்தமுனைச் செய்திகளை ஊடகங்களில் பிரசார பாணியில் வெளிவரச் செய்திருந்தது.
யுத்த முனைகளில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் இராணுவ பேச்சாளர் மற்றும் அரசாங்க பேச்சாளரின் ஊடாக மட்டுமே வெளிப்படுத்தப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தன என்றே சொல்ல வேண்டும்.
யுத்த முனைகளுக்குக் கிட்டவாக அமைந்திருந்த வவுனியா வைத்தியசாலைக்குள் செல்ல முடியாதவாறு ஊடகவியலாளர்கள் தடை செய்யப்பட்டிருந்தார்கள். இதேபோன்று இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மற்றும் இந்திய அரசாங்கத்தினால் செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட வைத்தியசாலை என்பவற்றுக்கும் ஊடகவியலாளர்கள் செல்ல முடியாதவாறு தடை செய்யப்பட்டிருந்தார்கள்.
யுத்தம் முடிந்த பின்பும் வேறு வேறு வழிகளின் மூலமாக ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில்; வடபகுதி ஊடகவியலாளர்கள் ஊடகப் பயிற்சிகளைக்கூட பெறக்கூடாது என்பதற்காக போடப்பட்டுள்ள தடை நடவடிக்கைகள் முக்கியமாகும்.
அண்மைய காலமாக இந்த நடவடிக்கை பகிரங்கமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் ஊடகவியலாளர்களின் தொழில் வாண்மை விருத்திக்காக ட்ரான்ஸ்பெயரன்சி இன்டநஷனல் என்ற நிறுனத்தினால் பொலன்னறுவையிலும், நீர்கொழும்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு பயிற்சிக் கருத்தரங்குகளை தீவிரவாத கும்பல்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தி நடக்கவிடாமல் அரசாங்கம் தடுத்திருந்தது.
இது குறித்து பலத்த கண்டனங்களும் எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்தியாளர்களுக்கு பயிற்சியளிக்க முடியாது. ஊடக சந்திப்புக்களைக்கூட நடத்த முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளரின் ஊடாகத் தடை விதிக்கப்பட்டது, இது, அரச சார்பற்ற நிறுவனங்களுக்குக் குறித்தொதுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று இதற்கு காரணம் கூறப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்குக் குந்தகமானது என்ற நிலைப்பாடும் கூட முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் தான், ஊடகவியலாளர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்புச் செயற்பாடு குறித்த பயிற்சிக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கஞ்சா கடத்திச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆயினும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தில் சிகரட் பெட்டியொன்றில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி வாகன சாரதியை ஓமந்தை பொலிசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டது.
கஞ்சா இருந்ததாகக் கூறப்படுகின்ற சிகரட் பெட்டியை, வாகனத்தின் டேஸ்போட் பகுதியில் சோதனை மேற்கொள்வதைப் போன்று பாசாங்கு செய்த இராணுவச் சிப்பாய் ஒருவரே நழுவ விட்டிருந்தார் என்றும், அவ்வாறு செய்த அந்த சிப்பாய், வெளியில் நின்றிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சோதனையிடுமாறு கூறியதையடுத்து, அந்த கான்ஸ்டபின் நேராகச் சென்று அந்தப்பெட்டியை எடுத்து
க்காட்டி, கஞ்சா கடத்தப்படுகின்றது எனக்கூறி ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நாடகத்தை நேரில் பார்த்திருந்த ஊடகவியலாளர்கள் உண்மையைஎடுத்துக்கூறி. இராணுவம் மற்றும் பொலிசாரின் கபட நாடகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.இதற்கு உடனடியாகவே மறுப்பு தெரிவித்து அந்த சம்பவம் பற்றி இராணுவ பேச்சாளர் கொழும்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார்.
பெருமளவு ஹெரோயின் போதைப்பொருள் வான் ஒன்றில் கடத்தப்படுவதாக ஒமந்தை இராணுவத்தினருக்கும் பொலிசாருக்கும் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, பல வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அப்போது, குறிப்பிட்ட வேன் ஒன்றில் சிறிய அளவில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார் அதனைக் கண்டுபிடித்தபின்னர் நடத்திய விசாரணைகளிலேயே அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் ஊடகவியலாளர்கள் என தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இராணுவமே கஞ்சாவை வைத்தது. பொலிஸார் கைது செய்தனர் என்று ஊடகவியலாளர்கள் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை அவர் அடியோடு மறுத்திருந்தார்.
ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினரோ பொலிசாரோ இடைஞ்சல் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், அந்த ஊடகவியலாளர்கள் பயணம் செய்த வாகனம் அன்று மாலை யாழ்ப்பாணத்தில் புறப்பட்டதில் இருந்து மாங்குளம் வரையில் அடையாளம் தெரியாதவர்களினால் பின் தொடரப்பட்டிருந்தது.
அவ்வாறு பின்தொடர்ந்த நபர் ஒருவர் மாங்குளத்தில் அந்த வாகனத்தை முந்திச் சென்ற பின்னர் மாங்குளத்தில் அதனை இராணுவத்தினர் மறித்து சோதனையிட்டதுடன். அந்த ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதன் பின்னர் ஓர் அரை மணித்தியாலம் அல்லது அதற்குச் சற்று கூடிய நேரத்தின் பின்னர் அந்த வாகனத்தை மாத்திரம் ஓமந்தை சோதனைச்சாவடியில் வழக்கத்திற்கு மாறாக முழுமையாகச் சோதனையிட்டு, சிகரட் பெட்டியொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று கண்டுபிடித்ததாகக் கூறியிருந்தார்கள்.
ஓமந்தையில் ஆறு மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த ஊடகவியலாளர்கள் கொழும்பைச் சென்றடைந்து, அவர்களுக்கான ஊடகப் பயிற்சியில் பங்கு பற்ற முடியாத வகையில் கும்பல் ஒன்று இதழியல் பயிற்சி மண்டபத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தி அதனைத் தடுத்திருந்தது.
ஓமந்தை சம்பவமானது நன்கு திட்டமிட்ட வகையில் சங்கிலித் தொடர்போன்ற சம்பவங்கள் மூலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியில் நடத்தப்படவிருந்த இந்த ஊடகச் செயலமர்வு தடுத்து நிறுத்தப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலையும் கரிசனையும் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தின் மேம்பாட்டிற்கான அமெரிக்காவின் உதவியைத் தடுத்து நிறுத்தி, அமெரிக்காவையே கவலையடையச் செய்யும் வகையில் அரசாங்கத்தின் பாதுகாப்பு இயந்திரம் செயற்பட்டிருக்கின்றது.
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான இந்த அடக்குமுறையும் அச்சுறுத்தல் நடவடிக்கையும் நாட்டில் ஜனநாயகத்திற்குக் குழிபறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.
யுத்தம் முடிவடைந்த பின்னரும், அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கையானது இந்த நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளை மட்டுமல்ல, சிறுபான்மையின மக்கள் இன்னும் என்னென்ன வழிகளில் ஒடுக்கப்படப் போகின்றார்களோ என்ற சந்தேகத்தையும் அச்சத்தையுமே தோற்றுவித்திருக்கின்றது.
மொத்தத்தில் இந்து சமுத்திரத்தின் அழகிய முத்தாகக் கருதப்பட்ட இலங்கை சர்வதேச ரீதியில் ஏதேச்சதிகாரம் கொண்டதாகவும், ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளினால் அழகும் கௌரவமும் இழந்து செல்கின்றஓர் இடமாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றேசொல்ல வேண்டியிருக்கின்றது.
செல்வரட்னம் சிறிதரன்