கடலூரைச் சேர்ந்த 54 வயதான அரசுப் பொறியாளர் ஒருவர் 16 வயதான சிறுமியை ரூ. 1.3 லட்சத்திற்கு வாங்கி கடந்த 7 மாதமாக கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்புசாமி என்ற அந்த 54 வயது மனிதர், பொதுப்பணித்துறையில் வேலைபார்த்து வருகின்றார்.
இவர் மீது குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புகார் பதிவானவுடனேயே இவர் தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரான சின்னதுரை மற்றும் மல்லிகாவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு ஏஜெண்ட்டாக செயல்பட்ட வேல்முருகன் என்பவரும், ஆறுமுகம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி அன்று கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரியான ராஜேஷ் கண்ணனை சந்தித்த பூதப்பாடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அதில், இந்த விவகாரம் குறித்தும், அச்சிறுமி தற்கொலைக்கு முயன்றது குறித்து தெரிவித்திருந்தனர். உடனடியாக சமூக சேவகியான புவனேஸ்வரி என்பவருடன் அந்த கிராமத்திற்குச் சென்ற ராஜேஷ் கண்ணன் விசாரணையில் ஈடுபட்டார். இவர்களுடைய விசாரணையில் புகார் உண்மைதான் என்று தெரிய வந்ததை அடுத்து அச்சிறுமி உடனடியாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை சிறுவர்கள் காப்பகத்திடம் ஒப்படைத்தனர்.
கடந்த வருடம் 10 ஆம் வகுப்பு முடித்த அச்சிறுமி, இவ்விளைவால் தன்னுடைய படிப்பை தொடர முடியாமல் கைவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் வேல்முருகனும், ஆறுமுகமும் சிறுமியின் பெற்றோரை அணுகி அந்த பொறியாளாருக்கு மகளை திருமணம் செய்து கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
முதலில் மறுத்த அந்த ஏழைப் பெற்றோர் அந்த இருவரும் காட்டிய ஆசையில் சம்மதம் தெரிவித்துள்ளனர். முதலில் 30,000 ரூபாய் கொடுத்த குப்புசாமி, மேலும் 1 லட்ச ரூபாயை திருமணம் முடிந்த பின்னர் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும், அவர் ஆறுமுகத்திற்கு 50,000 ரூபாயும், வேல்முருகனுக்கு 30,000 ரூபாயும் அளித்துள்ளார்.
விருத்தாசலம் அருகில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அச்சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்பு, சிறுமியை பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்னை சென்ற குப்புசாமி ஒவ்வொரு வார இறுதியிலும் வந்து சிறுமியை சேத்தியாதோப்பில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடுமை செய்துள்ளார்.
3 மாதங்களுக்குப் பின்னர் அப்பெண்ணின் பெற்றோருக்கு மீதி 1 லட்சத்தை அவர் அளித்துள்ளார். “சிறுமியை, குப்புசாமி போதை மருந்துகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுத்தால் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரியில் இருந்து இக்கொடுமைகளை சிறுமி அனுபவித்துள்ளார். ஜூலை 18 ஆம் தேதி அன்று தற்கொலை செய்துகொள்ள முயன்ற சிறுமியை அவரது சகோதரிதான் காப்பாற்றியுள்ளார்” என்று கண்ணன் தெரிவித்தார்.
குற்றம்சாட்டபட்ட 5 பேரும் குழந்தைத் திருமணச் சட்டம், பாலியல் வன்முறை ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரான மல்லிகா, சின்னதுரைக்கு மூன்றாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோரே பெண்ணை ஒரு வயதான கொடுமைக்கார பொறியாளருக்கு விற்ற சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.