கல்கமுவ மீகலேவ பிரதேசத்தில் கடந்த 27 ஆம் திகதி கடத்தப்பட்ட நாலரை வயது சிறுவனான யசின் லங்காநாத் குமார ஏக்கநாயக்க கல்கமுவ எம்போகம பிரதேச வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவுமீட்கப்பட்டுள்ளான்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த பிரதேசத்திற்கு கொழும்பில் இருந்து சென்றிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினரே விசாரணைகளை நடத்தி நேற்று இரவு 10.30 மணியளவில் எந்தவித ஆபத்துமின்றியும் வெளிக்காயங்கள் ஏதுமின்றிய நிலையிலும் சிறுவனை மீ்ட்டிருப்பதாக மாகோ பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் திஸாநாயக்க தெரிவித்தார்.
எனினும் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவன் மீட்கப்பட்ட சமயத்தில் குறித்த வீட்டில் வேறு எவரும் இருக்கவில்லையென்றும் தெரியவருகின்றது. புலனாய்வு பிரிவினரின் வருகையை அறிந்தே சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் பொலிஸாரால் சந்தேகிக்கப்படுவதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
கடந்த 27 ஆம் திகதி கடத்தப்பட்ட மேற்படி சிறுவன் தொடர்பில் நேற்று மாலை வரை எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் பொலிஸாரும் புலனாய்வு பிரிவினரும் கடுமையான தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையிலேயே பொலிஸ் மா அதிபரின் விஷேட பணிப்புரைக்கமைய கொழும்பில் இருந்து குற்றப்புலனாய்வு பிரிவினர் கல்கமுவ மீகலேவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனையடுத்து சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
இதேவேளை சிறுவன் மீட்கப்படுவதற்கு முன்பதாக சிறுவனின் வீட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள கிணறு ஒன்றினை நேற்று முன்தினம் நிகவரட்டிய பொலிஸார் நீரை இறைத்து சோதனை செய்தனர். குறித்த கிணற்று சுவரில் இரத்தக் கறையை ஒத்த அடையாளங்கள் சில காணப்பட்டதை அடுத்தே அவர்கள் இவ்வாறு இரு நீர் பம்பிகளை உபயோகித்து இந்த சோதனையினை மேற்கொண்டனர்.
அத்துடன் மாஹோ பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சரின் கையடக்க தொலைபேசிக்கு சிறுவன் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் சிலர் தகவல் கொடுத்துள்ளனர். எனினும் அந்த தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை எனவும் பலர் தேவாலயங்களில் சிறுவன் இருக்கலாம் என்ற ஊகங்களை தன்னிடம் தெரிவித்ததாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்க கேசரியிடம் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறுவனின் தந்தையான வர்த்தகர் மகிந்த குமாரவை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள கடத்தல்காரர்கள் பல இலட்சம் ரூபா கப்பம் கோரியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும் அது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ள நிலையில் அவ்வாறானதொரு கப்பம் கோரல் தொடர்பில் வர்த்தகர் மகிந்த குமார பொலிஸாருக்கு எவ்வித தகவல்களையும் வழங்கவில்லையென விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தன நிகவரட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்க தலைமையிலான 5 பொலிஸ் குழுக்களும் சுமார் 15 பேரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளன.
இந்நிலையிலேயே குறித்த சிறுவன் நேற்று இரவு வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.