ஆட்சி நிர்வாகத்திலும், ஆட்சி மாற்றங்களிலும், எப்போதுமே, சிவில் சமூகம், ஊடகங்கள், வெளிநாடுகளின் உதவி என்பன முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
போருக்காயினும், அமைதிக்காயினும், தேர்தலுக்காயினும் இவை அத்தியாவசியமானவை. இந்த மூன்றையும் வசப்படுத்திக் கொண்டால், தேர்தலை எதிர்கொள்பவராயினும், ஆட்சியில் இருப்பவராயினும் எப்போதுமே அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால், இந்த மூன்றையும் பகைத்துக் கொள்பவரால் தேர்தலை எதிர்கொள்வதும் சரி, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதும் சரி கடினமான காரியமே. இந்தநிலைமைக்குத் தான், இலங்கை அரசாங்கம் சென்றிருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த போது, வெளிநாடுகளின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது.
அதுபோலவே, கொழும்பை மையமாகக் கொண்ட சிவில் சமூகமும், அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்தத் தவறவில்லை.
தமிழ் ஊடகங்கள் தவிர்ந்த, சிங்கள, ஆங்கில ஊடகங்களும் கூட போரின் போது அரசாங்கத்துடனேயே நின்றன. இதனால், போரில் வெற்றியீட்டுவது அரசாங்கத்துக்கு சுலபமாக இருந்தது.
இவற்றுக்கு முன்பாக, தமிழ் சிவில் சமூகத்தின் குரலோ, தமிழ் ஊடகங்களின் கருத்துக்களோ எடுபடவில்லை.
அவ்வாறு எடுபட்டிருந்தால், பெரும் அவலங்கள், அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும் என்று கூறமுடியாவிடினும், குறைக்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்.
ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர், மெல்ல மெல்ல அரசாங்கத்தின் போக்கு மாறத் தொடங்கியது. அதன் விளைவாக, ஊடகங்களையும், சிவில் சமூகத்தையும், வெளிநாடுகளையும் பகைத்துக் கொண்டது.
இப்போது நிலவும் சூழல், இதன் உச்சக்கட்டம் எனலாம்.
இதன் காரணமாக, ஊடகங்கள், சிவில் சமூகம், வெளிநாடுகளுடன், குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் முரண்பாட்டை வளர்த்துக் கொண்டு, கடுமையாக மோதத் தொடங்கியிருக்கிறது கொழும்பு.
இந்த நிலையானது, அரசாங்கத்தை, எதேச்சாதிகாரப் போக்கு கொண்டதாக விமர்சிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
எதேச்சாதிகாரத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் நகர்வதாக, சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னர், 2013 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் வைத்துக் கூறியிருந்தார், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.
அதன் பின்னர், இந்த ஆண்டு ஆரம்பத்தில், கொழும்பு வந்திருந்த, அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலும், அதே சாரப்படக் கருத்து வெளியிட்டிருந்தார். இப்போது எதிர்க்கட்சிகள் எல்லாமே, அரசாங்கம் எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதாக கடுமையாக விமர்சிக்கின்றன.
இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மேற்குலகிற்கு எதிராக அரசாங்கம் நடத்துகின்ற பனிப்போர் தான்.
இதனை பனிப்போர் அல்லது நிழல் போர் என்று கூறுவதை விட, வெளிப்படையான போர் என்று கூடத் தயக்கமின்றிக் குறிப்பிடலாம். ஏனென்றால், இந்த மூன்று தரப்புகளுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற போரில் எந்த ரகசியமும் பேணப்படவில்லை.
ஆனால், இதில் கையாளப்படும் அரசாங்கத்தின் உத்திகள் தான் மாறியுள்ளன.
முன்னர், அரசாங்கத்தை எதிர்த்து நின்ற ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக் கும் நேர்ந்த கதி தெரிந்ததே.
அவ்வாறான சம்பவங்கள் எப்படி நிகழ்ந்தன, யாரால் நிகழ்த்தப்பட்டன என்ற எந்த விபரங்களும் இன்று வரை கண்டறியப்படவில்லை. இப்போது, அந்த உத்தியில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, அவ்வளவு தான்.
அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும், அதற்கெதிராக குரல் கொடுக்கும், ஊடகங்களைச் சார்ந்தவர்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும், நேரடியாக தாக்கப்படும் நிலை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. ஆனால், அவர்கள் மீதான தாக்குதல்களும், கொலை மிரட்டல்களும் தாராளமாகவே இடம்பெறுகின்றன.
அதைவிடப் புதிதாக, ஏதேனும் ஒரு குழுவை வைத்து, பின்புலத்தில் இருந்து கொண்டு நிகழ்வுகளைக் குழப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உத்தியும் கையாளப்படுகிறது.
சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான போராட்டங்கள், வன்முறைகளுக்கு காவி உடையணிந்த பிக்குகளும், பௌத்த அடிப்படைவாதிகளும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றனரோ, அதுபோலவே, சிவில் சமூகத்தையும், ஊடகங்களையும், மேற்கு நாடுகளையும் முடக்குவதற்கும் அதுபோன்ற குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம், யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்காக, நடத்தப்படவிருந்த பயிற்சிச் செயலமர்வு, ஒன்றுக்கு மூன்று தடவைகள் தடைப்படுத்தப்பட்டமையாகும்.
முதலில் பொலனறுவையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்த போது, பௌத்த பிக்குகள் அடங்கிய ஒரு குழுவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிறுத்தச் செய்தனர்.
பின்னர், அந்தக் கருத்தரங்கு நீர்கொழும்பில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போதும், அதேபோன்று, குழப்பப்பட்டது.
மீண்டும், அந்தக் கருத்தரங்கை கொழும் பில் நடத்த முயன்ற போது தான், ஊடகவியலாளர்களின் வாகனம் ஓமந்தையில் மறிக்கப்பட்டு, கஞ்சா வழக்கில் சிக்க வைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி, அதையும் தாண்டி கொழும்பு வந்து சேர்ந்த ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் விளைவாக, அந்தப் பயிற்சிச் செயலமர்வு நிறுத்தப்பட்டதாக, அதற்கான நிதியுதவியை வழங்கிய அமெரிக்கா அறிவித்தது.
ஒன்றுக்கு மூன்று சந்தர்ப்பங்களில், வடக்கு ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி மட்டும், வெவ்வேறு குழுக்களினால், குழப்பப்பட்ட நிகழ்வை சாதாரணமாக கருத முடியாது.
இதிலிருந்து, அந்தப் பயிற்சியைக் குழப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்து, மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையே அது என்பது உறுதியாகியுள்ளது.
இதனை அரசாங்க ஆதரவு சக்திகள் தவிர வேறெவராலும் செய்ய முடியாது.
இது ஊடகவியலாளர்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயல் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை, அரசாங்கத்தை விசனம் கொள்ள வைத்திருக்கிறது.
அமெரிக்கத் தூதரகத்தின் கருத்துக்கு உடனடியாகவே பாதுகாப்பு அமைச்சு பதிலடி கொடுத்தது மிகப் பெரிய இராஜதந்திரத் தவறாக கருதப்படுகிறது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, இதுபோன்ற குற்றச்சாட்டுகள், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் என்று விடுத்த எச்சரிக்கை, அசாதாரணமானது.
ஏனென்றால், பொதுவாக இராணுவ அதிகாரி ஒருவர், வெளிநாட்டு விவகாரங்கள் குறித்து இவ்வாறு கருத்து வெளியிட முடியாது. அவ்வாறு அரசாங்கத்துக்கு பிடிக்காத ஒரு விடயத்தை, மறுக்கும் அல்லது விமர்சிக்கும் நடவடிக்கையை, வெளிவிவகார அமைச்சே மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், பாதுகாப்பு அமைச்சு நேரடியாகவே அமெரிக்காவுடன் முண்டியது.
இது இன்னொரு வகையில், இந்தச் செயலமர்வு குழப்பப்பட்டதன் பின்னணி குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியது.
இதற்குப் பின்னர், வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில், அமெரிக்கா எதற்காக, குறிப்பிட்ட இனத்தவர்களுக்காக, குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்காக இந்தப் பயிற்சியை நடத்துகிறது, நிதியை ஒதுக்குகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இவற்றின் மூலம், அரசாங்கம், தொப்பியைத் தனது தலைக்குத் தானே மாட்டிக் கொண்டது.
வெளிநாடுகள், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், மேற்கொள்ளும் எல்லா நிதி உதவிகள், திட்டங்களும் இப்போது அரசாங்கத்தின் சந்தேகத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
காரணம், அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த நிதி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் தான்.
இந்த சந்தேகம் தான், அரசாங்கத்தை மெல்ல மெல்ல அரித்து தின்னத் தொடங்கியுள்ளது. தவறுக்கு மேல் தவறுகளைச் செய்யத் தூண்டுகிறது.
ஊடகங்கள் மீது மட்டுமல்ல, சிவில் சமூகமும், இதே நெருக்கடியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் முன்னிற்கும், மாதுளுவாவே சோபித தேரர், சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜயசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜெயசூரிய என்று கொலை மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பட்டியலும் நீளத் தொடங்கியுள்ளது.
இவையெல்லாம், நாட்டில் அதிகரித்து வரும் எதேச்சாதிகாரப் போக்கின் அறிகுறிகளே. இதன் விளைவு, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதிலும், தேர்தல்களிலும், விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
ஊடகங்கள், சிவில் சமூகம், வெளிநாடுகள்- இந்த மூன்றினதும் பகையைச் சமாளித்துக் கொண்டு, ஒரு அரசாங்கத்தினால் நெடுநாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியாது.
அந்த உண்மை, விரைவிலேயே தற் போதைய அரசாங்கத்துக்கு உணர்த்தப்படக் கூடும்.