யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயச் சுற்றாடலில் தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை ஆலயத்துக்குச் சென்றவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன் பின்னர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:- தந்தையால் கண்டிக்கப்பட்ட இந்தச் சிறுவன் விரக்தியடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டார் எனவும் அன்று இரவும் அவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே சிறுவன் தற்கொலைக்கு முயன்றபோது ஆலயத்துக்கு வந்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஏற்படவிருந்த விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், அவரை யாழ். சிறுவர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
விசாரணை மேற்கொண்ட நீதிவான், சிறுவனை சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.