மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண நிர்­வா­கத்திற்கும் இடையில் எத்­த­னையோ முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இணைந்து போக முடி­யாத வகையில் இந்த முரண்­பா­டுகள் வலு­வான­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன. அரசியல் ரீதி­யிலும், அதி­கார பலத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற ரீதி­யிலும் வட­மா­காண சபை­யுடன் அர­சாங்கம் மோதிக் கொண்­டி­ருக்­கின்­றது.

வட­மா­காண சபை இயங்க வேண்டும். ஆனால், அது அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி காரி­யங்­களை ஆற்றக் கூடிய வல்­லமை உள்­ள­தாகத் திகழக் கூடாது. வெறும் ஜன­நா­யகப் பொம்­மை­யாக, தான் சொல்­ப­வற்றை ஏற்று, அதற்­கேற்ப ஆடக் கூடி­ய­தாக, ஆட்­டு­விக்கக் கூடி­ய­தாக வட­மா­காண சபை செயற்­பட வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். அதுவே அதன் நிலைப்­பா­டும்­கூட.

யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சத்தில் செய­லற்றுப் போயி­ருந்த ஜன­நா­யக உரி­மை­களை, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர், நாங்கள் இப்­போது நிலை­நாட்­டி­யி­ருக்­கின்றோம் என்று உல­கத்­திற்குக் காட்ட வேண்டும் என்­பதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும்.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற மண்ணில், உண்­மை­யான ஜன­நா­யகம் நில­வக்­கூ­டாது. அதற்கு இட­ம­ளிக்­கவும் கூடாது. ஆனால் அங்கு ஜன­நா­யகம் நில­வு­வ­தாக வெளியில் தெரிந்தால் போதும். அதற்­காக எத­னையும் செய்­யலாம் என்ற போக்­கி­லேயே அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்­கின்­றன.

உண்­மை­யான ஜன­நா­யகம் நில­வு­கின்ற ஒரு பிர­தே­சத்தில், மக்கள் தங்­க­ளு­டைய கைகளில் அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருப்­பார்கள். அதா­வது மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் அதி­கார பல­முள்­ள­வர்­க­ளாக, அந்தப் பிர­தே­சத்தின் சிவில் நிர்­வாகச் செயற்­பா­டு­களை ஜன­நா­யக வழி­மு­றையில் முன்­னெ­டுத்துச் செல்லக் கூடி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள்.

ஆனால் இந்த நிலை­மையை, வட­மா­கா­ணத்தில் காண முடி­ய­வில்லை. ஜன­நா­யகக் கட்­ட­மைப்­புக்கள் அங்கு இருக்­கின்­றன. ஆனால் அவைகள், அதி­கார பல­மற்ற வெறும் கோது­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய ஒரு பரி­தா­ப­க­ர­மான நிலை­மை­யில்தான், தேர்­தலின் மூலம், பொது­மக்­களின் ஏகோ­பித்த பெரும்­பான்மை பலத்தைப் பெற்று, ஆட்­சி­ய­ம­மைத்­துள்ள வட­மா­காண சபை இயங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.

வட­மா­கா­ணத்தின் முத­லா­வது முத­ல­மைச்­ச­ராகப் பொது­மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள விக்கி­னேஸ்­வ­ரனின் தலை­மையில் செயற்­பட்டு வரு­கின்ற வட­மா­காண சபையில் இரட்டை நிர்­வாகம் நடை­பெ­று­வ­தாக முத­ல­மைச்­சரே கூறி­யி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யாக நிறை­வேற்று அதி­கார பலம் கொண்­ட­வ­ராக அங்கு வீற்­றி­ருக்­கின்ற முன்னாள் பிராந்­திய இரா­ணுவ தள­ப­தி­யா­கிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்­தி­ர­சி­றியின் நிர்­வாகம் ஒன்று. மற்­றது தேர்­தலின் மூலம் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள முத­ல­மைச்­சரின் நிர்­வாகம் என இரண்டு நிர்­வா­கங்கள் அங்கு செயற்­பட்டு வரு­வ­தாக முத­ல­மைச்சர் விளக்­க­மாகத் தெரி­வித்­துள்ளார்.

ஆளு­னரின் உத்­த­ர­வு­களை அதி­கா­ரிகள் அப்­ப­டியே செயற்­ப­டுத்­து­வார்கள். ஆனால் முத­ல­மைச்­சரின் உத்­த­ர­வு­களை அவர்கள் முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தில்லை.

கார­ணங்­களைக் காட்­டியும், ஆளு­னரின் அனு­ம­தியைப் பெற வேண்டும் எனக் கூறியும் பல செயற்­பா­டு­களை, வேலைத்­திட்­டங்­களை அதி­கா­ரிகள் புறந்­தள்­ளு­வ­துடன், அவற்றை முன்­னெ­டுப்­ப­தற்குத் தடை­போட்டு வரு­வ­தா­கவும் முத­ல­மைச்சர் பகி­ரங்­க­மா­கவே குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இது ஒரு புற­மி­ருக்க, மக்­க­ளுக்­காகச் செயற்­ப­டு­கின்ற மாகாண சபையும் மத்­திய அரசாங்­கமும், தத்­த­மது அதி­கா­ரங்­களைப் பிர­யோ­கிக்கும் போது, இயல்­பா­கவே இரண்டு நிர்­வா­கங்கள் நடை­பெ­று­வதைக் காணக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

மத்­திய அரசாங்கம் தனது அமைச்­சுக்கள் ஊடாக, முழு நாட்­டுக்­கு­மான பொது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கும்­போது, மாகாண சபையின் நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட எல்­லைப்­ப­ரப்­புக்குள் அது பிர­வே­சிக்க நேரி­டு­கின்­றது. அவ்­வாறு பிர­வே­சிக்­கும்­போது சட்ட வரை­ய­றை­களை மீறி மத்­திய அரசு செயற்­ப­டு­மே­யானால், அதனைத் தட்டிக் கேட்­கின்ற அதி­காரம் மாகாண சபைக்கு சட்ட ரீதி­யாக வழங்­கப்­பட்­டி­ருக்­கின்றது.

ஆனால் இன்­றைய நாட்டின் அர­சியல் சூழ்­நி­லையில், மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களைப் பங்­கீடு செய்­வதில் நில­வு­கின்ற முரண்­பா­டான சூழலில் மத்­திய அர­சாங்­கத்தைத் தட்டிக் கேட்க முடி­யாத கையறு நிலை­மை­யி­லேயே, வட­மா­கா­ண­சபை செயற்­பட்டு வரு­கின்­றது.

எனவே, உண்­மை­யான நிலை­மை­க­ளின்­படி பார்த்தால் வட­ப­கு­தியில் இப்­போது மும்­முனை நிர்வாகச் செயற்­பா­டு­களே இடம்­பெற்று வரு­கின்­றன என்றே கூற­வேண்­டி­யுள்­ளது.

சபையின் முதல்வர் என்ற வகையில் முத­ல­மைச்சர் நடத்­து­கின்ற ஒரு நிர்­வாகம், அர­சாங்­கத்தின் செல்­லப்­பிள்­ளை­யாக, பத­வியில் உள்ள அர­சாங்­கத்தின் அர­சியல் அபி­லா­சை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆளு­னரின் நிர்­வாகம், முழு நாட்­டையும் ஆட்சி புரி­கின்ற மத்­திய அர­சாங்­கத்தின் நிர்­வாகம் என மூன்று நிர்­வா­கங்கள் வட­ப­கு­தியில் செயற்­பட்டு வரு­கின்­றன.

இந்த மூன்று நிர்­வா­கங்­களும் இணைந்து மக்­க­ளுக்­காகச் செயற்­பட வேண்டும். அப்­போ­துதான் இந்த நிர்­வா­கங்­க­ளினால் மக்­க­ளுக்கு முழு­மை­யான நன்­மைகள் கிடைக்கும்.

மூன்று தரப்பும் முரண்­பட்ட வகை­களில் செயற்­ப­டு­மானால், அங்கு மக்­க­ளுக்­கான சேவைகள் நடை­பெற மாட்­டாது. குழப்­பங்­களே மேலோங்­கி­யி­ருக்கும். இத்­த­கைய ஒரு நிலை­மைதான், வட­மா­கா­ணத்தில் நில­வு­கின்­றது. குழப்­ப­க­ர­மான ஒரு நிர்­வா­கமே அங்கு இப்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கின்றது.

முரண்­பா­டு­க­ளுக்­குள்­ளேயும் இணைந்து செயற்­பட முடி­யுமா?

அர­சாங்கத் தரப்­பினர் சொல்­வார்கள். ஆனால் அதன்­படி செய்­ய­மாட்­டார்கள். ஒரு விட­யத்தைச் சரி என ஏற்றுக் கொள்­வார்கள். பின்னர் அது­பற்றி முரண்­ப­டு­வார்கள். எல்­லாமே நன்­றாக இருக்­கின்­றன என்று ஆதா­ரங்­க­ளைக்­காட்டி நம்ப வைப்­பார்கள். ஆனால் நடை­பெ­று­கின்ற காரி­யங்­களைப் பார்த்தால் நிலை­மை­களை மோச­மாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளா­கவே அவைகள் அமைந்­தி­ருப்­பதைக் காண முடியும்.

இணைந்து செயற்­ப­டுவோம் என்­பார்கள். ஆனால் காரி­யத்தில் இறங்­கு­கின்ற போது இர­க­சி­ய­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து, அந்தக் காரி­யத்தை அர்த்­த­மற்­ற­தாக்­கி­யி­ருப்­பார்கள்.

இத்­த­கைய ஒரு நிலை­மை­யில்தான் இன்று வட­மா­காண சபையின் செயற்­பா­டு­களும் பிர­தேச சபைகள், உள்­ளூ­ராட்சி சபை­களின் செயற்பா­டுகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­டுள்ள சபை­களில் இந்த நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

ஆனால், அரச ஆத­ரவு சக்­திகள் நிர்­வாக பலத்தைக் கொண்­டுள்ள சபை­களில், எதிர்த்­த­ரப்­பினர் அந்த நிர்­வா­கத்தின் செயற்­பா­டு­களைத் தடுக்­கவோ வலு­வோடு எதிர்க்­கவோ முடி­யாத கார­ணத்­தினால் அங்கு அந்த நிர்­வா­கத்­தி­ன­ரு­டைய விருப்­பத்­திற்கு ஏற்ற வகை­யி­லேயே திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­த­கைய இடங்­களில் பல ஊழல்கள், முறை­கே­டான நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வ­தாகப் பர­வ­லாக முறைப்­பா­டு­களும் செய்­யப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அரச தரப்­பி­ன­ருக்கு வாக்­க­ளிக்­காத மக்கள் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நடத்­தப்­ப­டு­வ­தாக குற்றஞ் சுமத்­தப்­ப­டு­கின்­றது. தமக்கு எதி­ரான முறைப்­பா­டு­க­ளையும், குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் அந்த நிர்­வா­கத்­தினர் மறுத்து வருகின்றார்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­த­கைய ஒரு நிலை­மையில் மத்­திய அரசின் செயற்­பா­டு­களும், மாகாண அரசின் செயற்­பா­டு­களும் சங்­க­மிக்­கின்ற மாவட்டம் மற்றும் பிர­தேச ஒருங்­கி­ணைப்பு குழுக் கூட்­டங்­களில் முரண்­பா­டு­க­ளுக்­கி­டையில் இணைந்து செயற்­பட முடி­யுமா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­திற்கும் இடை­யி­லான அர­சியல் கொள்கை ரீதி­யான முரண்­பா­டுகள், அர­சியல் ரீதி­யாக ஒத்துப் போக முடி­யா­துள்ள நிலை­மைகள், அர­சியல் செயற்­பா­டு­களில் மட்­டு­மல்­லாமல், அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளிலும், மக்­களின் அடிப்­படைத் தேவை­களைப் பூர்த்தி செய்­கின்ற வேலைத்­திட்­டங்­க­ளி­லும்­கூட, ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்­கின்­றன.

இதன் கார­ண­மா­கத்தான் இந்த ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டங்க­ளுக்கு தமிழ்த்­தே­சிய கூட்ட­மைப்பின் பாராளு­மன்ற பிர­தி­நி­திகள் மற்றும் பிர­தேச சபைத் தலை­வர்கள், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் ஆகிய மக்கள் பிர­தி­நி­தி­களை, அரச தரப்­பினர் அழைப்­ப­தில்லை.

தாங்களே கூடு­வார்கள். தங்­க­ளுக்­குள்­ளேயும், அதி­கா­ரி­க­ளு­டனும் கூடிப் பேசு­வார்கள். அந்தப் பேச்­சுக்கள் தீர்­மா­னங்­க­ளுக்கு அமை­வாகச் செயற்­ப­டு­வார்கள்.மக்­க­ளுக்­கான வேலைத்திட்டங்­களில் மக்கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய தங்­க­ளு­டைய ஆலோச­னை­களை ஏற்­ப­தற்கும், அந்த வேலைத்­திட்­டங்­களில் தாங்­களும் பங்­க­ளிப்பு செய்­வ­தற்கும் அவர்கள் வாய்ப்­ப­ளிப்­பதில்லை என அரச தரப்­பி­னர்­மீது குறை கூறி­யி­ருந்­தனர்.குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால்,வட­மா­காண சபைக்­கான தேர்தல் நடத்­தப்­பட்டு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அந்தச்சபையின் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­ய­தை­ய­டுத்து, படிப்­ப­டி­யாக இந்த நிலைமையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்கின்றன.

மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டங்­களின் இணைத் தலை­வ­ராக வட­மா­காண முத­ல­மைச்­ச­ரையும் அர­சாங்கம் ஏற்று கூட்­டங்­களில் கலந்து கொண்டு செயற்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, அமைச்­சர்­க­ளான டக்ளஸ் தேவா­னந்தா மற்றும் ரிசாட் பதி­யுதீன் ஆகி­யோ­ருடன் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தேர்தல் தொகு­தி­க­ளி­லான மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டங்­களில் இணைத் தலை­வ­ராக முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் பங்கு பற்றி வரு­கின்றார்.

வவு­னியா மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில் இணைத் தலை­வ­ராக முதன் முறை­யாகக் கலந்து கொண்ட முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன், மத்­திய அர­சுக்கும் மாகாண அர­சுக்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் பற்றி எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

சட்­டத்­திற்கு முர­ணான வகை­யி­லேயே அர­சாங்கம் செயற்­பட்டு வந்த சூழலில் வட­மா­காண சபைத் தேர்­தலை நடத்தி, அதில் தோல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு மாகாண ஆட்­சியை நடத்தத் தொடங்­கி­ய­போது, மாகாண மக்கள் நலம் கரு­தாது ஆளும் கட்சி நலன் கரு­தியே நட­வ­டிக்­கைகள் எடுத்துச் செல்­லப்­ப­டு­வது எம்மால் புரிந்து கொள்­ளப்­பட்­டது.

மத்­திய அர­சாங்க ஆளும் கட்சி தாம் தரு­வதை மாகாண மக்கள் ஏற்றே தீர­வேண்டும் என்ற பாணி­யில்தான் நட­வ­டிக்­கைகள் எடுத்துச் செல்­லப்­ப­டு­வதை அவ­தா­னித்தோம் என குறிப்­பிட்டார்.

அர­சாங்­கத்தின் நலன்­க­ளுக்கு முர­ணற்ற முறையில் ஆனால் மக்­க­ளுக்கு பய­னுள்ள விதத்தில் இணைந்து முன் செல்­வ­தற்கு, அபி­வி­ருத்­தியின் போது, அனை­வ­ரையும் உள்­ள­டக்கக் கூடிய அர்ப்­ப­ணிப்பு நிறைந்த ஓர் அணு­கு­முறை, பொது மக்­களின் விசேட தேவைகள், சுதந்­திரம் மற்றும் பாது­காப்புத் தேவை­க­ளி­டையே ஒரு சம நிலையைப் பேணிப் பாது­காக்க வேண்­டி­யமை போன்­றவை இன்­றி­ய­மை­யா­தன என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டலாம் என்ற எண்­ணத்தில் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து நடத்­திய பேச்­சுக்­க­ளின்­போது ஜனா­தி­பதி அளித்த உறு­தி­மொ­ழிகள் எது­வுமே கடைப்பிடிக்­கப்­ப­ட­வில்லை. நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

அதற்குப் பதி­லாக மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களை மதி­யாமல் தொடர்ந்து மத்­திய அர­சாங்கக் கட்­ட­மைப்­புக்­களே வட­மா­காண நிர்­வாகப் பரி­பா­ல­னத்தைக் கொண்டு நடத்தி வரு­கின்­றன என கூறிய அவர் முரண்­பா­டான நிலை­மை­யிலும் இணைந்து செயற்­பட வேண்­டிய நிர்ப்­பந்தம் சட்ட ரீதி­யாக இருக்­கின்­றது என்­ப­தையும் அவர் எடுத்துக் காட்­டி­யி­ருந்தார்.

‘அர­சியல் யாப்பில் மாகாண சபை­க­ளுக்­கென சில விட­யங்­களும், மத்­திய அர­சாங்­கத்­திற்­கென சில விட­யங்­களும், இரு­வற்­றிற்கும் பொது­வான சில விட­யங்­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இதன் கார­ணத்­தினால் தான் ஒருங்­கி­ணைப்புக் கூட்­டங்கள் கூட்­டப்­ப­டு­வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்­டி­யுள்­ளது.

ஆனால் ஒருங்­கி­ணைப்புக் கூட்­டங்­களின் ஊடாக சட்­டத்தால் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்குந் தனி­யான அதி­கா­ரங்­களை மத்­திய அர­சாங்கம் தன் வசப்­ப­டுத்த இட­ம­ளிக்க முடி­யாது. அந்த அதி­கா­ரங்கள் ஊடாக அந்­தந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக கொள்­கைகள் வகுப்­பதும் அவற்றை நெறிப்­ப­டுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும் மாகாண சபை­க­ளையே சாரும்.

ஆனால் எதேச்­சை­யாக அர­சாங்­கமும் அர­சாங்க அமைச்­சர்­களும் நடக்கத் தலைப்­பட்டால் மக்­களால் புறந்­தள்­ளப்­பட்­ட­வர்கள் மக்­களின் அமோக ஆத­ரவைப் பெற்­ற­வர்­களின் தோளில் ஏறிச் சவாரி செய்­ப­வர்­களாய் ஆகி விடுவர். இது ஜன­நா­ய­கத்­தையே பாதிக்கும். தொடர்ந்தும் எம்­மக்கள் எதேச்­சா­தி­கா­ரத்தின் கோரப்­பி­டிக்குள் சிக்கித் தவிக்க வேண்டும் என்று எண்­ணு­வது மனி­தா­பி­மா­ன­மற்­றது மட்­டு­மல்­லாமல் மட­மை­யு­மாகும்’ என்று முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் ஆணித்­த­ர­மாக அங்கு கூறி­யி­ருந்தார்.

போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் விடி­வுக்­கா­கவே 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் மாகாண சபை முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆனால் அதனை நாடு முழு­வதும் நடை­மு­றைப்­ப­டுத்தப் போய் எமக்குத் தந்­து­தவப் போன சமச்­சீர்­மை­யற்ற அதி­காரப் பகிர்­வா­னது கவ­னத்­திற்கு எடுக்­கப்­ப­டாமல் போயுள்­ளது என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இப்­போ­தும்­கூட, மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் சகல அதி­கா­ரங்­க­ளையும் உள்­ளி­ழுக்­கவே நட­வ­டிக்­கைகள் மத்­திய அர­சாங்­கத்தால் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இதற்கு திவி­நெ­கும சட்டம் ஒரு உதா­ரணம். மாகாண சபை­களின் சுதந்­தி­ரத்­திலும் அதி­கா­ரங்­க­ளிலும் கை வைப்­ப­தா­கவே மேற்­படி சட்டம் அமைந்­துள்­ளது என்றும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் குற்றஞ் சுமத்­தி­யி­ருக்­கின்றார்.

வவு­னியா ஒருங்­கி­ணைப்புகுழு கூட்டம் முன்­மா­தி­ரி­யா­னதா?

வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் மற்றும் அமைச்சர் ரிசாட் பதி­யுதீன் ஆகிய இருவ­ரு­டைய இணைத்­த­லை­மையில் முதன் முறை­யாக நடை­பெற்ற வவு­னியா மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழு கூட்­டத்தில், அரச தரப்­பி­னரும், எதிர்த்­த­ரப்­பி­ன­ரா­கிய தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

பல விட­யங்கள் ஆரா­யப்­பட்ட இந்தக் கூட்­டத்தில் முக்­கிய விட­யங்கள் தொடர்பில் முடி­வுகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அது வர­வேற்­கத்­தக்கது.

வடக்கின் வசந்தம் திட்­டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கும் நட­வ­டிக்­கைகள் பற்­றிய விடயம் ஆரா­யப்­பட்­ட­போது, 4000 சிங்­களக் குடும்­பங்கள், மீள்­கு­டி­யேற்றம் என்ற போர்­வையில் இந்த மாவட்­டத்தைச் சேரா­த­வர்கள் இங்கு குடி­யேற்­றப்­பட்­டுள்ள விடயம் வெளிச்­சத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டது.

இது குறித்து பாராளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் கேள்வி எழுப்­பினார். இதற்குப் பதி­ல­ளித்த வட­மா­காண சபை உறுப்­பினர் தர்­ம­பால சென­வி­ரத்ன, கடந்த 1983 ஆம் ஆண்டு இங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்த சிங்­களக் குடும்­பங்­களே மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்று விளக்­க­ம­ளித்தார்.

ஆனால் அவ்­வா­றான ஒரு சம்பவம் அப்­போது நடை­பெ­ற­வில்லை என்ற கார­ணத்­தினால் கூட்­டத்தில் எதிர்ப்பு குரல்கள் எழுந்­தி­ருந்­தன.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் இது குறித்து கேள்விக் கணை­களைத் தொடுத்தார். சிங்­கள மொழியில் அவர் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்த அரச தரப்­பினர் வேண்­டு­மென்றால் அவர்­களைக் கூட்டி வந்து காட்­டலாம் என கூறினர். அது அவ­சி­ய­மற்­றது என்று இடித்­து­ரைத்த முத­ல­மைச்சர், அவர்கள், இந்த மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­ப­தற்கு என்ன ஆதாரம் என்று மீண்டும் கேள்வி எழுப்­பினார்.

உள்­ளூரில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் சொந்தக் காணி­க­ளிலோ அல்­லது வேறி­டங்­க­ளிலோ குடி­யேற முடி­யாமல் தவித்துக் கொண்­டி­ருக்­கும்­போது, வெளி­மாட்­டங்­களில் இருப்­ப­வர்­களை மீள்குடி­யேற்றம் என்ற போர்­வையில் இங்கு மீள்­கு­டி­யேற்­று­வதை அனு­ம­திக்க முடி­யாது என திட்­ட­வட்­ட­மாகத் தெரி­வித்­த­துடன், அது­பற்றிய விப­ரங்கள் சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும் என அறி­வு­றுத்­தினார்.

இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்­யும்­போது, அப்­போது அவர்கள் வசிக்­கின்ற கிரா­ம­சேவை பிரிவைச் சேர்ந்த கிராம சேவை அதி­காரி அல்­லது வேறு மாவட்­ட­மாக இருந்தால் சம்­பந்­தப்­பட்ட செய­லாளர் பிரிவில் அவர்கள் இடம்­பெ­யர்ந்­துதான் வசித்­தார்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்தியும், அவர்­களின் பதி­வுகள் நீக்­கப்­ப­டு­கின்­றன என தெரி­வித்தும் உரிய கடிதம் கொண்டு வந்தால் மட்­டுமே அந்தக் குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­டு­வார்கள்.

அத்­த­கைய கடிதம் இல்­லையேல் அவர்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­ப­ட­மாட்­டார்கள். இந்த நடை­முறை வவு­னி­யாவில் சிங்­களக் குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­ட­போது கடைப்­பி­டிக்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. ஆனால் இந்தக் கூட்­டத்தில் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைக்கு அமை­வா­கவே அவர்கள் குடி­யேற்­றப்­பட்­டார்கள் என்று வவு­னியா அரச அதிபர் பந்­துல ஹரிச்­சந்­திர கூறினார்.

ஆனாலும் அவ­ரு­டைய கூற்று அப்­போது கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்குத் திருப்­தி­க­ர­மான பதி­லாக அமைந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

யுத்த மோதல்கள் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து இந்­தி­யா­வுக்குச் சென்று சுமார் 20 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தாயகம் திரும்­பி­ய­போது யு.எ.ன்­எச்­.சி.ஆர். நிறு­வ­னத்­தினால் வவு­னியா பூந்­தோட்டம் மற்றும் சிதம்­ப­ர­புரம் ஆகிய இடங்­களில் அமைக்­கப்­பட்­டி­ருந்த நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் தற்போது எஞ்சியுள்ள 300 குடும்பங்களுக்குக் காணிகள் வழங்கிக்குடியேற்றுவது தொடர்பில் இந்தக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிதம்­ப­ர­பு­ரத்தில் வசிக்­கின்ற 187 குடும்­பங்­களை அவர்கள் வசிக்­கின்ற அதே காணிகளில் குடி­யேற்­று­வது என்றும், பூந்­தோட்டத்தில் உள்ள 104 குடும்­பங்­க­ளையும் நெடுங்­கேணி பிர­தேச செய­லகப் பிரி­வுக்குள் ஏற்­க­னவே தெரிவு செய்­யப்­பட்ட இடத்தில் அரச காணி­களில் குடி­யேற்­று­வது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பூந்­தோட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்­காகத் தெரிவு செய்­யப்­பட்ட இடத்தில் பொது­மக்­களின் காணி­களும் இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த முறைப்­பாடு கவ­னத்தில் எடுக்­கப்­பட்­ட­போது, வாக்­கு­வா­தங்களும் ஏற்­பட்­டி­ருந்­தன.

பொது­மக்­களின் காணி­யாக இருந்தால் அதற்­கு­ரிய காணி அனு­ம­திப்­பத்­திரம் இல்­லா­விட்டால், அதனை பொது­மக்­களின் காணிகள் என ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அவர்கள் அரச காணி­களில் அத்­து­மீ­றி­யி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்­காக அவர்கள் அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று அர­சாங்க அதிபர் தெரிவித்த கருத்து கூட்­டத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

வவு­னியா மாவட்­டத்தில் பெரும்­பான்மை­யான குடும்­பங்கள் காணி­க­ளுக்கு உறு­திப்­பத்­திரம் இல்­லா­ம­லேயே வரு­டக்­க­ணக்கில் வசித்து வரு­கின்­றன என்­பது எடுத்துக் கூறப்­பட்­ட­தை­ய­டுத்து, பூந்­தோட்­டத்தில் உள்ள குடும்­பங்கள் அருகில் உள்ள அரச காணி­க­ளி­லேயே குடி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­போன்று, காணிகள் தொடர்­பான வேறு சில பிரச்­சி­னை­க­ளுக்கும் வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் முடி­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் விட­யங்கள் தொடர்­பாக வாதிட்டு முடி­வு­களை மேற்­கொண்ட வவு­னியா ஒருங்­கி­ணைப்பு குழு கூட்டம், இது­கால வரை­யிலும் நடை­பெற்ற இதுபோன்ற கூட்­டங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யா­ன­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

முரண்­பா­டு­க­ளுக்­கி­டை­யிலும் பொதுமக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற இந்தப் போக்கு ஆரோக்கியமான ஒரு நல்ல அறிகுறியாகும்.

தொடர்ந்து இதனைசம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுக்கவேண்டும்.முன்னெடுப்பார்களா?

Share.
Leave A Reply