ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் இலக்கை நோக்கி வான் வழியே தாக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட சிலமணி நேரத்தில் அமெரிக்காவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களின் படங்களை பதிவு செய்து இந்த மிரட்டலை அவர்கள் விடுத்துள்ளனர்.

ஈராக்கின் வடபகுதியில் ஈராக் அரசை எதிர்த்து போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அமைப்பின் இருப்பிடம் நோக்கி வான்வழித்தாக்குதல் நடத்த நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். ஈராக் அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த தாக்குதல் மேற்கொள்வதாக அவர் கூறியிருந்தார்.

இதன்படி முதல் தாக்குதல் நேற்று மாலையே தொடங்கிவிட்டது. முதல் தாக்குதலிலேயே நிலைகுலைந்த தீவிரவாதிகள் ஈராக்கின் முக்கிய நகரங்களை நோக்கி முன்னேறி செல்லும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.

ஒபாமாவின் உத்தரவு வெளியான சில நிமிடங்களில் அபுசுல்தான் என்பவரது பெயரில் உள்ள டுவிட்டர் கணக்கில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஈராக்கின் மீது தாக்குதல் புரியும் அமெரிக்கா அதன் பலனை நிச்சயம் அனுபவிக்கும்.

இதற்கு பழிவாங்காமல் விடமாட்டோம் என அவர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்கீழே இதற்கு முன்னர் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் புகைப்படங்களையும் அவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரங்களும் ஒன்றாகும்.

ஒருசில வார்த்தைகள் அரபு மொழியிலும், சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் விடப்பட்டிருந்த அந்த மிரட்டல்களில் அமெரிக்கர்களின் தலையை வெட்ட விரைவில் வருவோம் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மிரட்டலுக்கு தாங்கள் பயப்படப்போவதில்லை என்றும், ஈராக்கில் தீவிரவாதிகளை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்க அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

Share.
Leave A Reply