ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை செயற்பாடுகளுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாங்கள் தொடர்ச்சியாக நம்புகின்றோம்.
எனினும் அவர்கள் ஒத்துழைக்காவிடினும் ஐக்கிய நாடுகளின் விசாரணை முன்னெடுக்கப்படும், இந்த விசாரணைக் குழுவானது அனுபவம் கொண்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் குழுவொன்றையும் கொண்டுள்ளது.
அவர்கள் சிறப்பான செயற்பாட்டை முன்னெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணை விரிவுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவதானித்துள்ளோம். அத்துடன் மூன்று நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவற்றை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அந்த செயற்பாடு நம்பகரமாகவும் சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் இருந்தால் அதனை நாங்கள் வரவேற்போம். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்.
இலங்கை அரசாங்கமும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டது. நாம் நீண்ட கால ஸ்திரத்தன்மைக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறே கூறுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.