காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறும் நடவடிக்கைகள் இன்று மன்னாரில் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் 11ம் திகதி வரை மன்னாரின் மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும், 45 கிராம சேவையாளர் பிரிவுகளில் 230 பேர் தமது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை (08) மாந்தை மேற்கு பிரதேச செயலகக் கட்டிடத்தில், காலை 09.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை இவ் அமர்வுகள் இடம்பெற்றன.

மூன்று பேர் கொண்ட குறித்த ஆணைக்குழுவில் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையில் மனோ இராமநாதன், எஸ்.வித்தியாரத்தின ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சியங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ் நிகழ்வின் போது மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பனி இம்மானுவேல் செபமாலை அடிகளார், மன்னார் மறைமாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அருட்பனி எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம், அரச சட்டத்தரணி பத்மல் வீரசிங்க டி சில்வா, மன்னார் சட்ட ஆணைக்குழுவின் சட்டத்தரணி டினேஸ் குமார் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

நாளை தொடர்ந்தும் இதே இடமாகிய மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாள் அமர்வு இடம்பெறும்.

இன்றைய அமர்வில் 65 பேரின் முறைப்பாடுகளையும் நாளை (09) 60 பேரின் முறைப்பாடுகளும் மேற்றகொள்ளுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply