“அறிவாலயத்தைச் சுற்றிப் பின்னியிருந்த சகுனியான சிலந்தி (கல்யாணசுந்தரம்) தற்போது நீக்கப்பட்டுள்ளது; கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்பட வேண்டிய ஒரே ஒருவர் (ஸ்டாலின்) மட்டும்தான். அவர் மீது கட்சித் தலைமை உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தால் கட்சி தானாகவே நிமிர்ந்து விடும்” எனத் தெரிகிவித்துள்ளார் மு.க. அழகிரி.

திமுகவின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியின் தலைவர் கருணாநிதி, செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ஸ்டாலினை 2016 சட்டசபைத் தேர்தலின் முதல்வராக அறிவிக்க வேண்டும், கனிமொழி, ராஜா, தயாநிதி மாறன் ஆகியோரை கட்சிப்பணியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும், நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ளவர்கள் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்பது உள்பட 5 கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக கல்யாணசுந்தரம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார். கல்யாண சுந்தரத்தின் இந்தக் கடிதம் திமுகவில் பெரும் கலகத்தை உருவாக்கியுள்ளது.

கல்யாணசுந்தரத்தின் நீக்கத்தால் முதலில் மகிழ்ச்சியடைந்துள்ளவர் முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரிதான். கல்யாணசுந்தரத்தின் மீதுதான் அழகிரி கருணாநிதியிடம் பலமுறை புகார் தெரிவித்திருந்தார். உள்கட்சித் தேர்தலின்போது மாவட்டச்செயலாளர்கள் மீதான புகார்களை தலைமைக்குத் தெரிவிக்காமல் எடுத்து மறைத்துவிட்டார் என்பது உள்பட பல்வேறு புகார்கள்.

இந்நிலையில், கல்யாண சுந்தரத்தின் நீக்கம் குறித்து மு.க.அழகிரி கூறுகையில், “கல்யாணசுந்தரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆரம்பத்தில், இருந்தே இவரின் செயல்பாடுகள் குறித்து, நான் தலைவரிடம் சொன்னபோது, அவரேகூட அதை நம்பவில்லை. அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு, சகுனி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சிலந்தியை, அங்கிருந்து அப்புறப்படுத்தினால்தான், கட்சி உருப்படும் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருந்தேன்.

அந்த சகுனியான சிலந்தி யார் என்பதை இப்போது, கட்சித் தலைமை தாமதமாக உணர்ந்து கொண்டுள்ளது.

ஸ்டாலின் கட்சியின், அதிகார மையமாகிடத் துடிக்கிறார். ஸ்டாலின்தான், இப்படிப்பட்டவர்களின் பின்னணியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் கட்சித் தலைமை உணர்ந்து கொண்டு விட்டது. எனவே, கட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒரே ஒருவர் (ஸ்டாலின்) மட்டும் தான். அவர் மீது, தலைமை உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தால்போதும். கட்சி தானாவே நிமிர்ந்து விடும்.

நான் மீண்டும் கட்சிக்குள் திரும்பக் கூடும் என்று தகவல் பரவியதுமே அது நடந்து விடக்கூடாது என்று திட்டம்போட்டு, சிலர் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ‘டிராமா’ போடுகின்றனர். அவர்களின் பகல் வேஷம் கலைந்து விட்டது.

நான் அடுத்து என்ன செய்வேன் என்பது குறித்தெல்லாம் யாருக்கும் இப்போதைக்கு விளக்கமாகக் கூற வேண்டியது இல்லை. எனது ஆதரவாளர்கள் என்ன ஆவார்கள் என்கிற கவலையும் யாருக்கும் தேவையில்லை. என் ஆதரவாளர்களை, நான் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை; இனியும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் உயிரையும் கொடுத்து, அவர்களை காப்பாற்றுவேன். அதனால்தான், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னாலும், என் பின்னால் உறுதியாக (எத்தனை பேர்?) நிற்கின்றனர். அவர்களுக்கு விரைவில் நல்லது நடக்கும்.

கல்யாணசுந்தரம், கட்சியில் இருக்கும் சிலரை (கனிமொழி, தயாநிதி மாறன், ராஜா) ஊழல்வாதிகள் என்கிறார். அவர்களைக் கட்சியை விட்டு அப்புறப்படுத்தவும், கட்சித் தலைமைக்கு யோசனை சொல்கிறார்.

இவர் குறிப்பிடும் நபர்களை வைத்து, கல்யாணசுந்தரம் எந்தப் பலனையும் அனுபவிக்கவில்லையா?

இவர் கட்சியில் செய்த ஊழல்கள், யாருக்கும் தெரியாது என்கிற நினைப்பில் இருக்கிறார். இவர் யார் பின்னணியில், எந்த தைரியத்தில் இதையெல்லாம் சொல்கிறார் என்பதை எல்லோரும் அறிவர்.

கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்குத் துரோகம் செய்பவர்களை, வரிசையாக அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது. இனி யாரும் கட்சித் தலைமையை ஏமாற்ற முடியாது.

கட்சிக்குள்ளும், வெளியேயும் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை, நான் வெளிப்படையாகவே சொல்லி விட்டேன். அதையெல்லாம் ஆரம்பத்தில் புறக்கணித்தவர்கள் (கருணாநிதி), இப்போது, நான் சொல்லும் விஷயத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றனர். இனி நடப்பது, எல்லாமே நல்லதுக்காகவே நடக்கும்” என்றார்.

அழகிரியின் இந்தப் பேட்டி மூலம் திமுக தலைவர் கருணாநிதி அழகிரியின் பக்கம் சாய்ந்துள்ளது போல தெரிகிறது.

தி.மு.க. வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே ஒரு பனித்திரை தோன்றியிருப்பதை உறுதி செய்கிறார்கள். இதில் அழகிரிக்கும் ‘ஏதோ’ கனெக்ஷன் உள்ளதாகதான் சொல்கிறார்கள்.

அழகிரியின் #1 பிரையோரிடி, ஸ்டாலினை ஒதுக்குவது என்பது நிஜம்தான். ‘சிலந்தி’ விஷயத்தில் அழகிரி வைத்திருப்பது ஒரு ‘செக்’ என்பதும் உண்மைதான். ஆனால், இவர்களால் அசைக்க முடியாத அளவுக்கு ஸ்டாலின் வளர்ந்து விட்டார் என்பது, அதைவிட பெரிய நிஜம்!!

Share.
Leave A Reply