இலங்­கையில் போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணைகள் முறைப்­படி ஆரம்­ப­மாகி விட்­டன.

ஆகஸ்ட் முதலாம் திக­தி­யிட்டு, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத் தின் இணையத்தளத்தில் வெளி­யி­டப்­பட்ட அறி­விப்பு ஒன்று இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஐ.நா. விசா­ரணைக் குழுவின், விசா­ரணை முறை மற்றும் அதற்கு சாட்­சி­யங்­களை அளிக்கும் முறை குறித்து விப­ரிக்கும் வகையில் அந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த அறி­விப்பில், இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்த எழுத்து மூல­மான முறைப்­பா­டு­களை மின்­னஞ்­சலில் அல்­லது, அஞ்­சலில் அனுப்­பு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அறி­விப்பில், பல சூட்­சு­மங்கள் மறைந்­துள்­ளன.

அதில் முக்­கி­ய­மா­னது, இந்த விசா­ர­ணைகள் இறுதிப் போரை மட்டும் மையப்­ப­டுத்­தி­ய­தாக அமை­ய­வில்லை, கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு­காலச் சம்­ப­வங்கள் குறித்து ஆராயப் போகி­றது என்­பது முக்­கி­ய­மான ஒரு விடயம்.

முன்­ன­தாக, போரின் முழுக் கால­கட்­டத்­திலும் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்கும் பொறி­முறை ஒன்றை உரு­வாக்கும் முயற்­சி­களே மேற்­கு­ல­கினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கடந்த மார்ச் மாதக் கூட்டத் தொடரின் ஆரம்­பத்தில், முன்­வைக்­கப்­பட்ட தீர்­மான வரைவில், போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்­கவே வலி­யு­றுத்­தப்­பட்­டது.

அது, 1980களின் தொடக்­கத்தில் இருந்து நடந்த மீறல்­களை விசா­ரிக்க வலி­யு­றுத்­தி­யது.

இலங்கை அர­சாங்­கமும் கூட, போரின் இறு­தி­நாட்­களில் நடந்த சம்­ப­வங்­களை மட்டும் எதற்கு விசா­ரிக்க வேண்டும், முழுப் போர் குறித்தும் விசா­ரிக்க வேண்டும் என்றே கூறி­யது.

ஆனால், அத்­த­கைய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போது, அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தது அர­சாங்கம். அது­மட்­டு­மன்றி, போரின் முழுக்­கா­ல­கட்­டத்­திலும் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்க, இந்­தி­யாவின் தரப்­பிலும் எதிர்ப்­புகள் கிளம்­பின.

ஏனென்றால், இலங்­கையில் நடந்த மூன்று தசாப்தப் போரில் இந்­தி­யாவும் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தது. 1980களின் தொடக்­கத்தில் இந்­தி­யாவின் மறை­மு­க­மான தலை­யீ­டுகள் இருந்­தன.

1980களின் இறு­தியில் 1987 தொடக்கம், 1990 வரை­யான காலப்­ப­கு­தியில். நேர­டி­யாகப் போரில் தொடர்­பு­பட்­டி­ருந்­தது இந்­தியா. இந்தக் கால­கட்­டத்தில், இந்­தியப் படை­யினர் இலங்­கையில் அமைதி காப்புப் பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

அவர்கள் விடு­தலைப் புலி­க­ளுடன், போரை நடத்­தி­யி­ருந்­தனர்.  அந்தக் கால­கட்­டத்­திலும், ஏரா­ள­மான மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றன.

எனவே, சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்டால், அதில் இந்­தி­யாவும் குற்­றங்­க­ளுக்குப் பொறுப்­பேற்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இதனால், ஜெனீ­வாவில் தீர்­மா­னத்தை வாக்­கெ­டுப்­புக்கு விடும்­போது இந்­தி­யா­வி­னது ஆத­ரவை இழக்க நேரி­டலாம் என்­ப­தா­லேயே, விசா­ர­ணைக்­கான கால எல்­லையை வரை­ய­றுத்து இறுதித் தீர்­மான வரைவைத் தயா­ரித்­தது அமெ­ரிக்கா.

அதா­வது, நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியை உள்­ள­டக்­கி­ய­தாக, இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விரி­வான விசா­ர­ணையை நடத்தி, அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு தீர்­மா­னத்தில் கேட்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன்­படி, பார்த்தால், விடு­தலைப் புலி­க­ளுக்கும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சாங்­கத்­துக்கும் இடையில் போர் நிறுத்தம் நடை­மு­றைக்கு கொண்டு வரப்­பட்ட 2002 பெப்­ர­வரி 22ஆம் திகதி தொடக்கம், போர் முடி­வுக்கு வந்த 2009 மே 19ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பா­கவே நல்­லி­ணக்க ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தது.

இவ்­வாறு கால­வ­ரை­ய­றையை வகுத்த போதும், ஜெனீ­வாவில் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இந்­தியா ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­காமல் இருந்­த­துடன், ஐ.நா. விசா­ரணை கோரும், தீர் ­மா­னத்தின் 10ஆவது பந்தி நீக்­கப்­பட வேண்டும் என்­பதை ஆத­ரித்தும் வாக்­க­ளித்­தி­ருந்­தது. இந்­த­நி­லையில், ஐ.நா. தீர் ­மா­னத்­துக்கு அமைய, அமைக்­கப்­பட்­டுள்ள, விசா­ரணைக் குழு, 2002ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் நடந்த சம்­ப­வங்கள் குறித்தே விசா­ர­ணையை மேற் ­கொள்ளும் என்றே முதலில் நம்­பப்­பட் ­டது.

அதா­வது ஏழு ஆண்­டு­க­ளுக்குள் அந்த விசா­ரணை சுருக்­கப்­படும் போது, போருக்குப் பிந்­திய பல மீறல்கள் கண்­டு­ கொள்­ளப்­ப­டாமல் போகும் வாய்ப்­புகள் இருப்­பதை, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் உணர்ந்து கொண்­டது.

குறிப்­பாக, போரின் முடி வில் சர­ண­டைந்து, கைது செய்­யப்­பட்டு காணா­மற்­போ­ன­வர்­களின் விவ­காரம், போர் முடி­வுக்கு வந்த பின்­னரே தீவி­ர­ம­டைந்­தது.

அது இந்த விசா­ர­ணையின் முக்­கி­ய­மான பகு­தி­யாகும்.

அதனைக் கவ­னத்தில் கொண்டே, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை, நல்­லி­ணக்க ஆணைக்­குழு அறிக்கை சமர்ப்­பித்த காலப்­ப­கு­தியை உள்­ள­டக்கி – 2011 நவம்பர் 15ஆம் திகதி வரை விசா­ரணை இலக்கை நிர்­ண­யித்­துள்­ளது.

இது அர­சாங்­கத்­துக்கு அதிர்ச்­சியைத் தரத்­தக்­க­தொரு விடயம் தான்.

அது­மட்­டு­மன்றி முறைப்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள், குறித்த காலத்­துக்கு முன்­னரோ, பின்­னரே இடம்­பெற்­றி­ருந்­தாலும் கூட, அவை குறித்தும் கருத்தில் எடுத்துக் கொள்­ளப்­படும் என்று ஐ.நா. அறி­வித்­துள்­ளது.

இது, அண்­மைய. மனித உரிமை மீறல்கள் குறித்த பதி­வுகள் விசா­ர­ணைகள் பற்­றிய விட­யங்­களும், அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­படும் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதன் மூலம், இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணை­களின் பரப்பு விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தை மேலோட்­ட­மாகப் பார்க்கப் போனால், இந்­த­ள­வுக்கு வலி­மை­யா­ன­தொரு விசா­ர­ணைக்கு வாய்ப்­பி­ருக்­கி­றதா என்றே எண்ணத் தோன்றும்.

ஆரம்­பத்தில், இந்த தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்ட போது, இதனை ஒரு சர்­வ­தேச விசா­ர­ணை­யல்ல என்றும், இது தமி­ழர்­களின் எதிர்­பார்ப்பின் மீது மண் அள்ளிப் போட்டு விட்­ட­தா­கவும், அவ­ச­ரப்­பட்டு பலர் அறிக்­கை­களை வெளி­யிட்­டதை மறக்க முடி­யாது.

ஆனால், சர்­வ­தேச சட்­டங்­க­ளுக்குள் மறைந்­தி­ருக்கும், பல சூட்­சு­மங்­க­ளையும், அவற்றைப் பயன்­ப­டுத்தி காத்­தி­ர­மா­ன­தொரு விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கலாம் என்­ப­தையும், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் தனது நட­வ­டிக்­கை­களின் மூலம் உறு­திப்­ப­டுத்தி வரு­கி­றது.

அதே­வேளை, தமிழர் தரப்பின் எதிர்­பார்ப்­புகள் அனைத்­தையும் அது ஈடேற்றும் என்று மிகை­யான நம்­பிக்கை கொள்ள முடி­யாது.

தனது வரை­ய­றைக்குள் நின்று கொண்டு, இந்த விசா­ர­ணை­களை உச்சப் பயன்­பா­டு­டை­ய­தாக மேற்­கொள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் முனை­கி­றது என்­பதை மட்டும் உணர முடி­கி­றது.

இது இலங்கை அர­சாங்­கத்­துக்கு கடு­மை­யான எரிச்­ச­லையும், சீற்­றத்­தையும் ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அதனால் தான், இந்த விசா­ர­ணை­க­ளுக்குப் போட்­டி­யாக, தானும் ஒரு உள்­ளக விசா­ர­ணையை மேற்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், சர்­வ­தேச விசா­ர­ணை­களின் முக்­கி­யத்­து­வத்­தையும், அதன் விளை­வையும் அர­சாங்­கத்­தினால் உதறித் தள்ள முடி­யாது.

முன்னர், ஐ.நா. தீர்­மானம் உள்­நாட்டு விசா­ர­ணையைக் கோரிய போதெல்லாம், அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது அர­சாங்கம்.

கடை­சி­யாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தையும் அர­சாங்கம் நிராகரித்திருந்தது.

ஆனால் இப்போது, அதில் கூறப்பட்டுள்ள உள்நாட்டு விசாரணையை தாம் நிராகரிக்கவில்லை என்கிறது.

இப்படி அரசாங்கம் பல்வேறு குத்துக்கரணங்களை அடித்துக் கொண்டிருக்க, ஐ.நாவின் விசாரணைகள் ஜெனீவாவில் தீவிரமடையத் தொடங்கியுள்ளன.

ஆனால் இந்த விசாரணையில் சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதாக ஐ.நா. கூறியுள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசுக்கும் சமஅளவு என்பதைவிட கூடியளவு பங்கும் பொறுப்பும் இருக்கிறது என்றே கூறலாம்.

அண்மைய சில சம்பவங்கள், அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்கிறது.

ஐ.நா. விசாரணை மீதுள்ள தனது வெறுப்பை சாட்சிகளின் மீது திருப்பி விட அரசாங்கம் முனைந்தால், அதன் விளைவுகளும் மோசமானதாகவே அமையும்.

சுபத்ரா

Share.
Leave A Reply