இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மன்னார் மாவட்டத்திற்கான விசாரணைகள் ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆணைக்குழுவின் முன் தோன்றி, அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை இல்லையென்ற போதிலும், காணாமல்போனவர்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய தமது ஆதங்கத்தைத் தெரிவிப்பதற்காக சாட்சியம் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
காணாமல்போனவர்கள் பற்றிய விடயங்கள் மட்டுமல்லாமல், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தனது சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் நல்லிணக்கம், அமைதி ஏற்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அநேகமான சிபாரிசுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறி வருவதை அவர் இந்த ஆணைக்குழுவின் முன்னால் மறுத்துரைத்தார்.
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகளில் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கம் தன்னிடம் கேட்டிருந்தபோது, அது தொடர்பில் 14 விடயங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து, அதுபற்றி அரச உயர் மட்டத்தில் மூன்று கூட்டங்கள் நடைபெற்று,
அவைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் ஆணைக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
பலவிதமாகக் காணாமல் போயிருப்பவர்கள். உழைப்பாளிகளின்றி தனிமையில் வாடுகின்ற காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், உரிய விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள், வவுனியா சிறைச்சாலையில் கலகம் மூண்டதாகக் கூறி தமிழ் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி இரு தமிழ் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்கள், மதங்களுக்கிடையில் குரோதங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படாமை உள்ளிட்ட 14 விடயங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் மன்னார் ஆயர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலான தமது சாட்சியத்தின்போது வலியுறுத்தினார்.
அவருடைய சாட்சியம் குறித்து பதிலளித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, இந்த ஆணைக்குழுவிற்கு குறித்தொதுக்கப்பட்ட கடமைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி ஆணைக்குழு செயற்பட்டு வருவதாகவும், அதேநேரம் ஆயரின் சாட்சியத்தில் குறிப்பிடப்பட்ட தமது கடமை எல்லைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்து ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் கூறினார்.
வெள்ளிக்கிழமை முதல் நான்கு தினங்களுக்கு நடைபெறுகின்ற மன்னார் மாவட்டத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நாளை திங்கட்கிழமை இறுதி நாளன்று மடு பிரதேச செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.