ஆயுதங்களை ஒப்படைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், எல்லா ஈழ விடுதலை இயக்கத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப் போவதாக இந்திய ராணுவம் அறிவித்திருந்தது. அதன்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்த்த மற்ற இயக்கத்தினரும் யாழ்ப்பாணத்தில் அலுவலகங்களைத் திறக்கலாம். அதற்கு தாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்ற அறிவிப்பை அனைத்து இயக்கங்களின் தலைமைகளுக்கும் அனுப்பி வைத்தது இந்திய ராணுவம்.
ராஜன் தலைமையிலான ENDLF இயக்கத்தினர் இந்திய ராணுவத்தினரின் பாதுகாப்புடன் சென்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஒரு கூட்டம் நடத்திவிட்டுச் சென்றனர். (யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள்தான் விடுதலைப்புலிகளின் அலுவலகமும் இருந்தது)
இதையடுத்து பீச் ரோட்டில் தங்களது கட்சி அலுவலகம் ஒன்றை அமைப்பதற்காக ENDLF இயக்கத்தினர் இந்திய ராணுவத்தினரின் பாதுகாப்புடன் சென்றபோது, அலுவலகம் அமையவிருந்த வீட்டுக்கு முன்னால் பொதுமக்கள் சிலர் (பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்) கூடி, அலுவலகம் அங்கே அமைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு பகுதியினருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்று, ஒரு கட்டத்தில் கை கலப்பு வரை போய், ENDLF உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு விட்டார்.
பாதுகாப்புக்குச் சென்றிருந்த இந்திய ராணுவத்தினருக்கு பாஷை புரியாத பிரச்சனை. யார், யாரை, எதற்கு அடிக்கிறார்கள் என்று அவர்கள் புரியாமல் நிற்க, தங்களைத் தாக்கும் ஆட்களைத் தடுக்கும்படி ENDLF ஆட்கள் சொல்ல…. எதுவுமே நடக்கவில்லை.
இறுதியில் ENDLF போராளி ஒருவர் தம்முடன் பாதுகாப்புக்கு வந்திருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்து, வானத்தை நோக்கிச் சுட்டார். உடனே கூட்டம் சிதறி ஓடியது.
இப்படியான சிறுசிறு சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கத் தொடங்கிய நேரத்தில், யாழ்ப்பாணத்தில் திடீரென சில துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
‘மக்கள் உரிமை இயக்கம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்தத் துண்டுப் பிரசுரங்கள் இந்திய அமைதிப்படை உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டிருந்தது. இந்த ‘மக்கள் உரிமை இயக்கத்தின்’ பின்னணியில் இருந்தது, யார் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை (பின்னாட்களில், அது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினரின் வேலை என்று தெரியவந்தது)
இலங்கை ஜனாதிபதி ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜெயவர்தனேவிடம் ‘ரா’ அதிகாரியொருவர், இலங்கையில் ராணுவப் புரட்சி ஒன்றுக்கான திட்டமிடலை பிரதமர் பிரேமதாச வெளிநாடு ஒன்றில் நடத்தினார் என்று கூறிய தகவல் ஜே.ஆரை கடுமையாக யோசிக்கவைத்திருக்க வேண்டும்.
காரணம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அதற்கு முன்னரே எதிர்த்துக் கொண்டிருந்த பிரேமதாச, நாடாளுமன்றத்தைக் கலைப்பேன் என்று மிரட்டல் விடப்பட்டவுடன் வாய்திறக்காமல் சில நாட்கள் இருந்திருந்தார்.
அதன் பின்னர் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைப் பற்றிப் பொதுக்கூட்டங்களில் காரசாரமாகப் பேசத் தொடங்கியிருந்தார்.
இதனால், இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு ‘ஏதோ ஒரு தைரியம்’ வந்திருக்கலாம் என்பதை ஜனாதிபதி ஜெயவர்த்தனே புரிந்து கொண்டார்.
அதன் ‘ஏதோ ஒரு தைரியம்’ ஜெயவர்த்தனேவுக்கு எதிரான ராணுவப் புரட்சி என்பதை இந்திய உளவுத்துறை கூறியபோது அவர் நம்பித்தான் இருக்கவேண்டும். காரணம், அவருடைய அடுத்த நடவடிக்கைகள் அவர் நம்பியிருக்கலாம் என்பதையே காட்டுகின்றன.
ஒரு வேளை இலங்கைக்குள் ராணுவப் புரட்சி ஒன்று நடைபெற்றால், அது இலங்கை ராணுவத்தினரை வைத்துத்தான் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது இலங்கைக்குள் இந்திய ராணுவமும் இருந்தால், ராணுவப் புரட்சி செய்யப்போகும் ஆட்கள், ஒரு தடவைக்கு பல தடவைகளாக யோசிப்பார்கள்.
அதுவும், இந்திய ராணுவம் சும்மா பேருக்கு கொஞ்சப் பேராக இருக்காமல், பலமாகவும் இருந்து, இந்திய ராணுவம் ஜெயவர்த்தனேவுடன் சுமுகமாகவும் இருந்தால் ராணுவப் புரட்சி ஒன்று ஏற்பட்டால் அதை இந்திய ராணுவமே தடுத்து நிறுத்திவிடும். இந்த திசையில் யோசித்துக் கொண்டிருந்தார் ஜெயவர்த்தனே.
ஜெயவர்த்தனேவுக்கு இந்திய உளவுத்துறை ‘ரா’வினால் கூறப்பட்ட ராணுவப் புரட்சி கடைசிவரை நடைபெறவில்லை. ஒருவேளை அப்படியொரு திட்டம் இருந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஜெயவர்த்தனேவை மிரட்டி வைக்க ‘ரா’ கூறிய பொய்யாகவும் இருந்திருக்கலாம்.