தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அரசாங்கமே பொறுப்பு.
மூன்று தினங்கள் பேச்சுவார்த்தைக்காக சென்று நாம் காத்திருந்த போதும் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையை தவிர்த்திருந்தது என பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அரசாங்கம் தெளிவுத் தன்மையுடனும் இதயசுத்தியுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு முன்வந்தால் நாம் அதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் எந்த விதமான குந்தகமும் ஏற்படாது நியாயமான நிரந்தரமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை முன்வைத்தால். அதனை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமென ஜனாதிபதி முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
2011 ஜனவரி மாதத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதன்போது எப்படியான தீர்வுகள் எதிர் பார்க்கப்படுகின்றன என்பது குறித்து நாம் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறினோம். அது மாத்திரமின்றி அரசியல் தீர்வு தொடர்பிலான எமது நிலைப்பாடுகளை எழுத்து வடிவிலும் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்திருந்தோம்.
எமது எழுத்து வடிவக் கோரிக்கைக்கு பதிலொன்றை பெற்று தருவதாக அரசாங்கம் கூறியிருந்த போதும் அதனை தரவில்லை.
இதன்பின்னர் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்துவிட்டதையும் இதன்போது 7 தடவைகள் கூடி பேசப்பட்டு விட்டதாகவும் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டிய நாம் எமது எழுத்து வடிவிலான கோரிக்கைக்கு இன்றைய பேச்சின் போது பதில் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அடுத்த பேச்சுவார்த்தை குறித்து திகதியை தீர்மானிக்க முடியாது என்றும் கூறினோம்.
எனினும் அரசாங்கத்திடம் இருந்து பதில் கிடைக்கப்பெறாததனால் அன்றைய தினம் திகதி குறிப்பிடப்படாத வகையில் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்னர் 2011 செப்டெம்பர் 02 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என்னை அழைத்திருந்தார்.அதன் போது எமக்கிடையில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது எமது நிலைப்பாடுகளை மீண்டும் வலியுறுத்தினோம் .
முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ , சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரது ஆட்சி காலங்களின் போதும் உங்களது (ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ ) காலத்திலும் இனப்பிரச்சினை தீர்வுக்கான முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை பேச்சுவார்த்தை மேசையில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பேசுவதற்கு தயார் என்பதை தெரிவித்தோம்.
இதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 திகதி பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அன்றைய தினம் அடுத்த பேச்சுவார்த்தையை ஜனவரி மாதம் 17 , 18 , 19 ஆகிய தினங்களில் முன்னெடுப்பதாகவும் இணங்கப்பட்டது. எனினும் மேற்படி தினங்களில் நாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தோம்.ஆனாலும் இந்த மூன்று தினங்களிலும் அரச தரப்பினர் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவில்லை.
இதுவே பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு காரணமானது. இதன்பின்னர் 2012 மே மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டது. அதுவும் அரசாங்கத்தினாலேயே மீறப்பட்டுவிட்டது . ஆகவே பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அரசாங்கமே பொறுப்பு.
மேலும் 13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் என சகலரும் வெவ்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளனர்.
இவ்வாறான நிலைப்பாடுகளுடைய அரசாங்கத்தின் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் நம்பிக்கை கொள்ள முடியாது. மேற்படி தெரிவுக்குழுவில் 31 அங்கத்தவர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் அதில் எமது தரப்பில் மூன்று முதல் நான்கு உறுப்பினர்களே பங்கேற்க முடியும் .
எம்மை பொறுத்த வரையில் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கின்றோம். ஆனால் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். தெளிவு இருந்தால் மாத்திரமே அதனை எம்மால்ஏற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று அரசாங்கத்திடம் நியாயமும் நேர்மையும் இருப்பதுடன் வார்த்தை ஒன்றாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை நாட்டிற்குள் எந்த வித குந்தகமும் ஏற்படாமல் நியாயமான நிரந்தரமான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வொன்றையே நாம் கேட்கின்றோம். எமது நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி நன்றாகவே அறிந்திருக்கின்றார். ஆகவே அரசாங்கத்திடமிருந்து திருப்பம் வரவேண்டும்.
மேலும் எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் மூன்று மொழிகளிலுமே கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.அண்மையில் பாராளுமன்றத்தில் கூட என்னால் ஆங்கிலத்தில் ஆற்றப்பட்ட உரை அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. ஆகவே தமிழ் மொழியில் மாத்திரம் நாம் அறிக்கையிட்டு வருவதாக கூறுவதை ஏற்கமாட்டோம் என்றார்.