காணாமல் போனோர் பிரச்சினை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட அரசு கமிஷன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட முடியும் என்று நம்புவதாக, இந்தக் கமிஷனில் செயல்பட இலங்கை அரசால் கூடுதலாக நியமிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வல்லுநர்களில் ஒருவரான, இந்திய மனித உரிமை ஆர்வலர், அவ்தாஷ் கௌஷல் கூறியிருக்கிறார்.

இந்த நியமனம் குறித்து தன்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுமார் 15 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், பின்னர் இந்திய அரசின் உளவுத்துறையும் தன்னிடம் தொடர்பு கொண்டு இந்த செய்தியை அறிவித்ததாகவும், இந்த நியமனத்துக்கு தான் சம்மதம் தந்துவிட்டதாகவும் கௌஷல் பிபிசியிடம் தெரிவித்தார்.

தான் 1970லிருந்து நிறுவி நடத்திவரும் ´கிராமப்புற வழக்குகள் மற்றும் உரிமைகள் மையம்´ என்ற அமைப்பின் சார்பாக 1999ல் நடத்திய மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றில் அப்போது இலங்கையின் தொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டதாகவும் தெரிவித்த கௌஷல், இலங்கைப் பிரச்சினை குறித்து தனக்குப்புரிதல் உண்டு என்று கூறினார்.

இலங்கை மனித உரிமைகள் கமிஷனை வலுப்படுத்தவேண்டுமென்று பல முறை இலங்கை அரசை வற்புறுத்திவந்த போதிலும் அதில் இதுவரை தான் பெரிய வெற்றி பெறவில்லை என்று கூறிய கௌஷல் , ஆனால் இந்த கமிஷன் இந்த காணாமல் போனோர் பிரச்சினை குறித்துத் தீர்வொன்றைத் தரும் என்ற நம்பிக்கை தனக்கு நூறு சதவீதம் இருப்பதாகத் தெரிவித்தார்.

மஹிந்த அவர்களுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் நிலையில், அவரால் இந்த விஷயத்தில், ஒரு முரண்பட்ட அக்கறை இருக்கும், பாரபட்சமின்றி செயல்படமுடியாது என்று அச்சம் எழலாம் அல்லவா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், தான் மஹிந்தவுக்கு மட்டும் நெருக்கமானவன் இல்லை, பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் பலருக்கும் நெருக்கமானவன் என்றார்.

Share.
Leave A Reply