சென்னையில் அழகிரி முகாமிட்டுள்ள நிலையில், ஸ்டாலினால் அவசர அவசரமாக நடத்தப்படும் ‘தொண்டர்களுடன் தளபதி’ என்ற கருத்துக் கேட்பு நிகழ்ச்சிக்கு கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர் என்கிறது தி.மு.க. உள்வட்ட தகவல்.

இந்த நிகழ்ச்சியை திசை திருப்பும் விதமாக முரசொலியில் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டம் பற்றிய செய்திகள் ஏதுமின்றி, ஸ்டாலினின் படங்கள் மட்டும் வெளியிடப்பட்டு, இரட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதனால், திமுகவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் இரண்டாம் கட்டத் தலைவர்கள் புலம்புகின்றனர்.

தமிழகம் முழுவதும் தொண்டர்களிடம் ஸ்டாலின் கருத்து கேட்கும் நிகழ்ச்சிக்கு, ‘தொண்டர்களுடன் தளபதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல்கூட்டமாக காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கட்சியின் 35 நிர்வாக மாவட்டங்களுக்கும் சென்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களைச் சந்திக்க உள்ளார். இந்தப் பயணம் தொடர்ச்சியாக 2 மாதம் நடைபெற உள்ளது. சந்திப்பின்போது, குழு விவாதங்கள், தொண்டர்களுடன் கலந்துரையாடல்கள் இடம் பெறும். தொண்டர்கள், தலைமை இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் ஸ்டாலின் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்டாலினின் இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியோ, அன்பழகனோ ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது.

பத்திரிகைகளுக்கு திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை என்றுதான் வந்துள்ளது. பொதுச் செயலாளர் சார்பிலோ அல்லது தலைவர் சார்பிலோ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

சில நேரங்களில் திமுக சார்பில் அறிக்கைகள் வெளியாவது வழமைதான் என்றாலும், ஸ்டாலினின் ‘தொண்டர்களுடன் தளபதி’ நிகழ்ச்சி கருணாநிதி, அன்பழகனுக்குப் பிடிக்காமலேயே நடத்தப்படுவதால் திமுக சார்பில் வெளியான அறிக்கை என்று பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் இந்தத் திடீர் கூட்டம் தி.மு.க.-வுக்குள் பரபரப்பையும், அதேயளவுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘தொண்டர்களுடன் தளபதி’ நிகழ்ச்சியின் பின்னணி என்ன?

திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டபோதிலும், அவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஸ்டாலினுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ அழகிரியை கட்சியில் சேர்ப்பதற்கு கொஞ்சம்கூட விரும்பவில்லை.

தனது பேச்சை மீறி ஒரு வேளை அழகிரியை கட்சியில் சேர்த்தால் என்ன செய்வது என்ற அடுத்த பிளானுக்கு ஸ்டாலின் சென்றுவிட்டார். இதனால், ‘தொண்டர்களுடன் தளபதி’ என்ற நிகழ்ச்சி மூலம் முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வகையில் ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார்.

அமெரிக்காவிலிருந்து வந்துள்ள அழகிரியின் மகள், தனது தந்தையை எப்படியும் கட்சிக்குள் மீண்டும் சேர்த்துவிட வேண்டும் என்பதில் முழுமூச்சாக இருந்து நெருங்கிய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காய்களை நகர்த்தி வருகிறார். அதை முறியடிக்கும் திட்டத்துடன்தான், தமிழகம் முழுவதும் தொண்டர்களை திரட்ட ஸ்டாலின், தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.

மேலும், கட்சியில் அழகிரிக்கு ஆதரவாக உள்ளவர்களை, தன் பக்கம் இழுப்பதில், ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்டாலினின் இந்த திடீர் சுற்றுப்பயணத்தால் கருணாநிதி கடும் அதிருப்தியடைந்துள்ளார். கட்சிப் பத்திரிகையான முரசொலியில், சென்னையில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசிய முழு பேச்சு விவரம் வெளியாகியுள்ளது. ஆனால், காஞ்சிபுரத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின் செய்தி முரசொலியில் வெளியிடப்படவில்லை.

மாறாக ‘காஞ்சிபுரம் கழகத் தோழர்களுடன் கழகப் பொருளாளர் தளபதி ஆய்வு’ என்று மட்டுமே தலைப்பிட்டு முழு பக்கத்துக்கு படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஸ்டாலின் தொண்டர்களைச் சந்தித்துப் பேசிய செய்திகளோ, மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு விவரமே முரசொலியில் இடம்பெறவில்லை.

திமுகவில் தலைமையுடன் நெருக்கமான சிலரிடம் விசாரித்தால், கட்சிக்குள் நடக்கும் ஸ்டாலின் – அழகிரி பனிப்போருக்கு இடையே கருணாநிதியின் சிக்குண்டு யாருக்கு ஆதரவு அளிப்பது என்று தெரியாமல் நெருக்கடியில் தவிக்கிறார் என்கிறார்கள்.

கட்சிக்குள் நடக்கும் இந்தக் கூத்துகளைப் பார்த்து இரண்டாம் கட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று புலம்புவதோடு என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கின்றனர்.

Share.
Leave A Reply