ஸ்டாலினின் ஆதரவாளர் (என்று கூறப்படும்) கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் தி.மு.க.-வுக்குள் சூடேற்றிக் கொண்டுள்ள நிலையில், மற்றொரு கடிதம் வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
“2016 சட்டசபைத் தேர்தலை உங்கள் (கருணாநிதி) தலைமையில் சந்திக்காவிட்டால் கட்சி படுதோல்வி அடைவதோடு ஜெயலலிதா எளிதில் வெற்றிபெறுவார்” என அறிவாலயத்துக்கு வந்த ஒரு கடிதம் திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.
திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே தற்போதைய தலைவர் கருணாநிதிக்கு ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்றாலும் தான் இருக்கும் வரை இப்போதைய நிலையே தொடர வேண்டும் என கருணாநிதி விரும்புகிறார். காரணம், ஸ்டாலினை, முக. அழகிரி தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிப்படையாக அறிவித்ததோடு, கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர்தான் தலைவராகத் தொடர வேண்டும் என உறுதியாகக் கூறிவிட்டார்.
அண்ணன், தம்பிகளின் இந்த மோதல் கட்சியைப் பிளவுபடுத்திவிடுமோ என்று தினம் தினம் அஞ்சி அஞ்சி காலத்தைக் கழிக்கும் தந்தையான கருணாநிதி, அவர்களது எதிகாலம் குறித்தும் கவலைப்படுகிறார்.
கட்சியிலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தபோது அதிமுகவினரைவிட அதிகம் மகிழ்ச்சியடைந்தவர் அழகிரிதான். காரணம், தன்னை நீக்கிவிட்டு உங்களால் வெற்றிபெற முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
அதிமுகவின் வெற்றிக்கு ஜெயலலிதாவின் செயல்பாடு ஒரு பக்கம் என்றாலும், திமுகவின் தோல்விக்கு கட்சிக்குள் நடந்த உள்குத்து வேலை என்று பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திமுகவின் தோல்வியை ஆராயக் குழுக்கள் அமைத்து சிலரை கட்சியை விட்டு நீக்கினாலும், அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 6 பேர் குழு அளித்த பரிந்துரையைக்கூட முழுமையாக அமல்படுத்தப்படுத்த முடியாத நிலைக்குக் காரணம் கட்சியில் ஏதாவது ஒருவகையில் கிளம்பும் எதிர்ப்புதான்.
இதற்கிடையே, அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கருணாநிதிக்கு ஒருபுறம் குடும்பத்தினர் நெருக்கடி கொடுக்கத் தொடங்கிய அதேவேளையில், ஸ்டாலினை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
கட்சிக்குள் நிலவும் இந்த குழப்பமான, நெருக்கடியான சூழ்நிலை தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அறிவாலயத்துக்கு ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்து குவிந்தன. அதேபோல, இப்போதும் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு வந்த ஒரு கடிதம் திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.
அந்த கடிதத்தில் உள்ள விஷயம் என்ன?
“2014 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தோல்வி அடையும் என்பது முன்கூட்டியே அறிந்ததுதான். என்றாலும், இப்படியொரு படுதோல்வியை சந்திக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறைந்தது 12 தொகுதிகளிலாவது வெற்றி கிடைக்கும் என நினைத்திருந்தோம். அதையே பல இடங்களில் மற்ற கட்சியினரிடம் நாங்கள் பேசி வந்தோம்.
ஆனால், கட்சி படுதோல்வியை சந்தித்தது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னின்று நடத்திய ஸ்டாலினிடம், ஜெயலலிதாவை வீழ்த்த எந்த அஸ்திரமும் இல்லை. போர்க்களத்தில் நிராயுதபாணியாக நின்ற வீரனைப்போல, தேர்தல் களத்தில் திமுக தரப்பில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏதும் இன்றி நிராயுதபாணியாகவே வலம் வந்தார்.
முதல் முறையாக, திமுக தன் ஓட்டு வங்கியில், 8 சதவீதத்தை இழந்திருக்கிறது. தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோதிலும் அதன் முடிவை கட்சியில் அமல்படுத்தவில்லை.ஆனால், அடுத்த தேர்தலுக்கும் தலைமையேற்க தயாராகி வருகிறார் ஸ்டாலின்.
இப்போதாவது திமுக விழித்துக்கொள்ள வேண்டும். உங்கள் (கருணாநிதி) தலைமையில்தான், கட்சி தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான், தேமுதிக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் உங்களோடு, கூட்டணி அமைக்க வரும். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்றால், கூட்டணி அமைக்க, யாரும் வர மாட்டார்கள். அழகிரியும் திமுகவுக்கு எதிரான நிலையையே எடுக்கக்கூடும்.
எனவே, நெருக்கடியான இந்த காலகட்டத்தில், உங்கள் மதிநுட்பத்தை பயன்படுத்தி, யாருடைய அழுத்தத்துக்கும் பணியாமல் சிறந்த முடிவை எடுங்கள். இல்லையென்றால், 2016 சட்டசபை தேர்தலிலும், ஜெயலலிதாவே எந்தச் சிரமும் இல்லாமல் எளிதில் வெற்றி அடைவார்”
இந்தக் கடிதம், திமுகவில் மிகவும் முக்கியமான சில ரியாலிட்டிகளை வலியுறுத்தியுள்ளது. கட்சியைக் காப்பாற்ற வேண்டிய அதேநேரத்தில், 2016 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் கருணாநிதியை தலைமையேற்று தேர்தலைச் சந்திக்க வேண்டும். அதற்கு முன்னதாக அழகிரியை கட்சிக்குள் சேர்க்க வேண்டும், திமுகவுடன் கூட்டணி சேர விருப்பமுள்ள கட்சிகளை இப்போதிருந்தே ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான்.
திமுக தலைவர் கருணாநிதியும் இந்தக் கடிதத்தில் கூறியுள்ள விஷயங்கள் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அறிவாலயத்திலிருந்து வரும் தகவல் கூறுகின்றன.
இந்த ஆலோசனைகளுக்குப் பின் ஸ்டாலினிடம் இந்த கடித விஷயம் குறித்து கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என்றும் தெரிகிறது.
ஆனால், அழகிரியை கட்சிக்குள் சேர்ப்பது, 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான் என்ற இரண்டு விஷயங்களை ஸ்டாலின் ஏற்றுக் கொள்வாரா என்றுதான் தெரியவில்லை. எப்படியோ, இந்த கடிதத்தில் உள்ள மறுக்க முடியாத விஷயங்களை காட்டி ஸ்டாலினை சமாதானப்படுத்தும் படலம் தொடங்கும் எனத் தெரிகிறது.