ஈராக்கின் மதச் சிறுபான்மையினரான யாஸிதி இனத்தவரை வேட்டையாடி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் இதுவரை 500 பேரைக் கொன்றுள்ளதாகவும், பலரை உயிரோடு புதைத்து விட்டதாகவும் ஈராக் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈராக்கின் மனித உரிமைகள் துறை அமைச்சர் முகம்மது ஷியா அல் சுடானி கூறுகையில், சன்னி தீவிரவாதிகள் இதுவரை 500 பேர் வரை கொன்றுள்ளனர். பலரை உயிருடன் புதைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கொல்லப்பட்டவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 500 யாஸிதி சிறுபான்மையினரைக் கொன்று குவித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 300க்கும் மேற்பட்ட பெண்களை அவர்கள் அடிமைகளாக கடத்திக் கொண்டு போயுள்ளனர்.
சிஞ்சார் பகுதியில் உள்ள மலையில் தற்போது யாஸிதி இனத்தவர் அடைக்கலம் புகுந்துள்ளனர். அங்கிருந்து சிலர் தீவிரவாதிகளிடம் சிக்காமல் உயிர் பிழைத்து அரசுத் தரப்பு வசம் உள்ள பகுதிகளுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் யாஸிதி இனத்தவர் சந்தித்து வரும் அபாயங்களை விளக்கிக் கூறியுள்ளனர். சிஞ்சார் தற்போது முழுமையாக தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. தீவிரவாதிகள் யாஸிதி இனத்தவர்களில் பலரை உயிருடன் புதைத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர்.
சிஞ்சார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உடல்களாக கிடக்கின்றன என்றார் அவர். யாஸிதி இனத்தவரின் நகரம்தான் இந்த சிஞ்சார். இந்த நகரை தீவிரவாதிகள் பிடித்து விட்டதால் இங்கிருந்து பல ஆயிரம் மக்கள், கிறிஸ்தவ மக்கள், இடம் பெயர்ந்து அருகில் உள்ள மலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களைக் காக்க அமெரிக்க விமானப்படையினர் தீவிரவாதிகள் மீது குண்டு மழை பொழிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்க விமானப்படையினர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது நடத்தி வரும் தாக்குதலால் குர்து இனப்படையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
அவர்களும் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் நடத்திய கடும் சண்டையின் இறுதியில் அவர்கள் வசம் இருந்த இரண்டு குர்து நகரங்களை மீட்டுள்ளனர்.
இதற்கிடையே யாஸிதி சிறுபான்மையினரைக் காக்க அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் விமானத் தாக்குதல் தொடர்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு குர்து படையினரும், தீவிரவாதிகளைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக அவர்கள் வசம் இருந்த மக்மூர் மற்றும் குவெர் என்ற இரு நகரங்களை குர்து படையினர் மீட்டுள்ளனர்.
இது குர்து படையின் செய்தித் தொடர்பாளர் ஹல்கோர்ட் ஹெக்மாத் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க விமானப்படைத் தாக்குதல் தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இரு நகரங்களும் குர்து பகுதியின் தலைநகரமான அர்பில் நகருக்கு அருகே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.