திருமணத்திற்காக நோர்வேயிலிருந்து வருகை தந்த குடும்பம் தங்கியிருந்த வெள்ளவத்தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியுடைய பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் வெள்ளவத்தை பீற்றர்சன் ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் இடம்பெறவுள்ளமையினால் நோர்வேயில் உள்ள மாப்பிள்ளையும் குடும்பத்தினருமாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்துள்ளனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணம் சென்ற நிலை யில் மாப்பிள்ளையின் சகோதரனும் அவரது மனைவியும் பிள்ளையும் குறித்த வீட்டில் தங்கியிருந்த சமயமே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருமணத்திற்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் நோர்வே நாணயமாக வைக்கப்பட்டிருந்த 30 இலட்சம் வரையான பணமுமே கொள்ளையிடப்பட்டுள்ளன. மிக சூட்சுமமான முறையில் நான்கு மாடிகள் ஏறிவந்து வீட்டின் குளியலறை ஜன்னல் ஊடாக உள்நுழைந்து இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பீற்றர்சன் லேனில் 70/18 என்ற இலக்கத்தில் ஆறு மாடிகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதி உள்ளது. குறித்த தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியின் நான்காம் மாடியில் உள்ள ஒரு வீட்டில் நோர்வேயிலிருந்து வருகை தந்திருந்த தமிழ் தம்பதியினர் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிலிருந்த மூவரும் வீட்டின் வலது புறமுள்ள தமது அறையில் நித்திரைக்கு சென்றுள்ளனர். குறித்த அறை குளிரூட்டப்பட்டிருந்ததால் அறைக் கதவு இலேசாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நித்திரையிலிருந்த எழுந்த மனைவிக்கு சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து விழித்துக் கொண்டுள்ள அவர் வெளியே மழை பெய்வதாக நினைத்து மீண்டும் நித்திரைக்கு செல்ல முற்பட்ட போது மூடப்பட்டிருந்த அறைக் கதவு மெல்ல திறக்கப்பட்டு டோர்ச் ஒன்றினூடாக ஒளி பாய்ச்சப்பட்டது.
நபர் ஒருவர் தமது அறைக்குள் டோர்ச் ஊடாக ஒளி பாய்ச்சுவதை அவதானித்துள்ள குறித்த யுவதி திருடன் திருடன் என சத்தமிட்டதை அடுத்து குறித்த நபர் வீட்டின் இடது புற அறையின் ஜன்னல் வழியாக குதித்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்துக்கு சென்று தடயங்களை சேகரித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நான்காம் மாடியின் பின்பக்கமாக வந்துள்ள திருடன் அந்த வீட்டின் குளியலறை ஜன்னலை திறந்து துவாய் ஒன்றை அதன் கட்டுக்களில் விரித்து உடல் காயங்கள் ஏற்படா வண்ணம் உள்நுழைந்துள்ளான்.
குளியலறையின் வலப்பக்கமாக உள்ள அறையினுள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த அலுமாரியை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டுள்ளான். எனினும் அந்த அறையிலிருந்து புதிய கையடக்க தொலைபேசி, மடிக் கணனி, வீட்டின் பிரதான அறையிலிருந்த இலத்திரனியல் பொருட்கள் என்பவை கொள்ளையிடப்படவில்லை.
சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான தங்க நகை பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டுரிமையாளர்கள் கேசரியிடம் குறிப்பிட்டனர்.
ஸ்தலத்துக்கு பொலிஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கை ரேகை தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்று மாலை வரை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லர் குறிப்பிட்டார்.
விசாரணைகள் தொடரும் நிலையில் மிக விரைவில் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அப் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.