இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். கடந்த 60 ஆண்டுகளில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன.
அமெரிக்க ராணுவத்திடமே சுமார் 25 வேறுபட்ட மாடல்களில் NVGக்கள் இருக்கின்றன. இலங்கை ராணுவம் இவற்றில் எவற்றைத் தேர்ந்தெடுத்தார்கள்?
அமெரிக்காவிடமிருக்கும் NVGக்கள், வேறுவேறு நாடுகளுக்கு, வேறுவேறு போர்முறைகளுக்கு, வேறுவேறு காலநிலைகளுக்கு வேறுவேறு காலப்பகுதிகளில் உபயோகிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டவை.
இவற்றில் இலங்கைக்கு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு, அவர்களது யுத்த ஸ்டைலுக்கும், ஆள்வளத்துக்கும் (manpower), இலங்கையின் காலநிலைக்கும் பொருந்தக்கூடியதாக அவர்கள் கணிப்பிட்டவை, 5 மாடல்கள்.
அதைத்தவிர அமெரிக்கா கொடுத்தால், JHMCS என்று ஒரு சாதனத்தையும் மேலதிகமாக வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தார்கள்..
இந்த ‘ராணுவ உதவி’ விவகாரமே கொஞ்சம் அப்படி-இப்படி குழப்பமானது.
அவர்களும் கொடுப்பார்கள் – இவர்களும் பெற்றுக்கொள்வார்கள்; ஆனால் கொடுப்பவர் நிஜமாக ஏன் கொடுக்கிறார் என்பதற்கு அவரிடம், இவருக்கு சொல்லப்படாத ஒரு காரணம் இருக்கும். அதேபோல வாங்கும் இவர், வாங்கிய பின்னர் கிடைத்தவற்றை என்ன செய்வது என்று கொடுப்பவருக்கு தெரியாமல் தனக்குள் பிளான் ஒன்று வைத்திருப்பார்.
இரு தரப்புமே, வெளிப்படையாக தாம் எதற்காக அதை கொடுக்கிறோம், அல்லது வாங்குகிறோம் என்று சொல்ல மாட்டார்கள்.
இது ராணுவ சம்பந்தமான வெளிநாட்டு உதவி விவகாரங்களில் சகஜம்தான். ஆனால் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இந்த NVG உபகரணங்களை 1990-களின் நடுப்பகுதியில் கேட்டபோது, என்ன காரணத்துக்காக கேட்கிறார்கள் என்பது இரு தரப்புக்கும் தெரியும்.
அர்சுனனின் கண்களுக்கு மரத்தில் இருந்த காய் மட்டும் தெரிந்ததுபோல, இலங்கை அரசின் ஒரேயொரு நோக்கம் விடுதலைப்புலிகளை அழிப்பதுதான் என்பது, அமெரிக்காவுக்கும் நன்றாக தெரிந்திருந்தது.
தெரிந்து கொண்டேதான் கொடுத்தார்கள். ஆனால், 90-களின் நடுப்பகுதியில் பவர்ஃபுல் ரகங்களை கொடுக்கவில்லை. காரணம், அப்போது விடுதலைப் புலிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்பது அமெரிக்க நிலைப்பாடாக இல்லை.
சரி. அப்படி என்ன கொடுத்தார்கள் என்பதுடன், இந்த ராணுவ சாதனத்தின் சில தொழில்நுட்ப அம்சங்களையும் சேர்த்தே சொல்லிவிடலாம்.
Night Vision Devices பற்றி ராணுவ சம்பந்தமான குறிப்புக்கள் வெளியிடப்படும்போது அந்தக் கருவிகளை G-1 ரகம் அல்லது G-2 ரகம் என்று பாடுபடுத்தியிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
அவை எதைக் குறிக்கின்றன என்பதை கூறிவிடுவது இந்த இடத்தில் அவசியமாகிறது. இதில் உள்ள G என்பது Generation – தலைமுறை. G-1 என்றால் முதலாவது தலைமுறை கருவி, G-3 என்றால் மூன்றாவது தலைமுறை கருவி.
சுருக்கமாக சொன்னால், இலக்கம் குறைந்து இருந்தால் அது, பழைய தொழில்நுட்பம்.
இவற்றில் G-1 ரக கருவிகளை இப்போது அமெரிக்கா தயாரிப்பதில்லை. ஆனால் சில ஆசிய, மற்றும் ஆபிரிக்க நாட்டு ராணுவங்களிடம் இந்த பழைய G-1 கருவிகள் இன்னமும் புழக்கத்தில் இருக்கின்றன.
Night Vision கருவிகளின் பாவனைக்காலமும் தலைமுறைகளை பொறுத்து வேறுபடும். உதாரணமாக முதலாவது தலைமுறை Night Vision கருவிகளின் பிக்சர் டியூப்களின் ஆயுட்காலம் வெறும் 2000 மணிநேரம்தான்.
அதாவது G-1 கருவி ஒன்றில் ஊடாக இருளில் பார்ப்பதென்றால் 2000 மணி நேரம்தான் பார்க்கமுடியும். இன்று 1 மணி நேரம், நாளை 1 மணி நேரம் என்று பயன்படுத்தினாலும்கூட, 2000 நாட்களில் கருவி உயிரை விட்டுவிடும் (அதக்பின் பிக்சர் டியூப்பை மாற்றி பயன்படுத்தலாம்)
ஆனால் G-1 கருவிகளின் பிக்சர் டியூப் 2500 முதல் 4000 மணி நேரம் வரையும் G-3 கருவிகள் 10,000 மணி நேரமும் பயன்படுத்தப்படக் கூடியவை.
இதில் G-1 ரக கருவிகளின் தொழில்நுட்பம் 1960-களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். பயன்படுத்த சிறிதளவாவது வெளிச்சம் தேவை. சந்திரன் அல்லது நட்சத்திரங்களில் இருந்து வரும் வெளிச்சத்தை சுமார் 1000 மடங்கு அதிகரித்துக் காட்டக்கூடியவை.
அதேநேரத்தில் கருவி கொஞ்சம் பெரிய சைஸ்!
ஆரம்பகால மாடல்கள், பள்கியாக, சிறிய ட்ரம்போல இருக்கும். பௌர்ணமி தினங்களில் அல்லது அதற்கு ஒரு தினம் முன்னரோ பின்னரோ, வானில் மழைமேகங்கள் இல்லாத தினங்களில், இரவுநேர ராணுவ நகர்வுகளுக்கு இவை பயன்படுத்தப்படலாம். பெளர்ணமிக்கு 4, 5 நாட்களுக்கு முன்போ, பின்போ என்றால் தாக்குதல் இலக்கு கொஞ்சம் அப்படி-இப்படி தெளிவில்லாமல் தெரியும்.
எதிரியின் சிறிய சைஸ் கவச வாகனத்துக்கும், பெரிய சைஸ் பசு மாட்டுக்கும் பெரியதாக வித்தியாசம் தெரியாது – இரவில் பசு மாடு சத்தம் போடாதவரை!
G-2 ரக கருவிகள் அதைவிட பரவாயில்லை. இரவு வெளிச்சத்தை சுமார் 20,000 மடங்கு அதிகமாக்கி காட்டக்கூடியவை. இதன் visibilityயை (பார்வைத்திறன்) கால்பங்கு சந்திர ஒளி பார்வைத்திறனை (1/4 moonlight visibility) என்று சொல்வார்கள். அதாவது பெளர்ணமி தினத்திற்கு 7 நாட்கள் முன்பும் 7 நாட்கள் பின்பும் துல்லியமாக தாக்குதல் இலக்குகளை காட்டக்கூடியவை. (28 நாட்களின் கால்பங்கு 7 நாட்கள் என்ற கணக்கு)
இவற்றின் தொழில்நுட்பம் G-1 தொழில்நுட்பத்தைவிட துல்லியமாக இருப்பதன் காரணம் MCP எனப்படும் Microchannel plates இதில் உபயோகிக்கப்படுவதுதான்.
இருளில் உள்ள உருவம் MCPயில் படிந்து ஒரு 18 mm பிக்சர் டியூப் ஊடாக அனுப்பப்படும் தொழில்நுட்பம் என்பதால் கருவியின் சைஸ் சிறியது. போர்ட்டபிள் ஆக எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். இவை இன்னமும் அமெரிக்காவால் தயாரிக்கப்படுகின்றன.
கொஞ்சம் பணவசதி குறைந்த ஏழை நாடுகள் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய அளவில், விலை குறைவானவை.
Generation III கருவிகள் விலை அதிகம். இன்றைய தேதியில் அமெரிக்கா வெளியே விற்கும் கருவிகளில் டாப்-ஆஃப்-தி-லைன். (அமெரிக்க ராணுவத்திடம் GEN III+ அல்லது Omnibus-VI – VII கருவிகள் உள்ளன. ஆனால், அவற்றை வெளியே விற்பதில்லை)
G-3 தொழில்நுட்பம், மனிதக் கண்ணுக்கு இருளாக இருக்கும் பகுதியிலுள்ள தெறிக்கும் அல்லது ஒளிரும் மிகச்சிறிய வெளிச்சத்தை 30,000 இலிருந்து 50,000 மடங்குவரை பெரிதுபடுத்தி விடுவதால் இருளில் தாக்கவேண்டிய இலக்குகள் தெளிவாகவும் துல்லியமாகவும் தெரியும். அமெரிக்காவிடம் இலங்கை கேட்டது, இந்த ரக கருவிகளைத்தான்.
G-3 கருவிகள் தயாரிக்கப்படும்போது சுமார் 450 தயாரிப்பு கட்டங்களை – Manufacturing Stages – கடந்துதான் கருவிகள் தயாரிக்கப்படுவதால் துல்லியத்தன்மை உத்தரவாதம்.
இவை இயங்குவது Gallium Arsenide Photocathode கதிர்களை ஒரு உலோக ஆர்கானிக் தகட்டில் (MOVPE அல்லது Metal organic vapor-phase epitaxy) படியவிடுவதால் ஏற்படும் பிம்ப மாற்றம் என்ற ரிதியில் பௌதீக ரிதியாக விளக்கலாம் – நீங்கள் பசி வேளையில் இருந்தால் கம்ப்யூட்டரை அடித்து உடைத்து விடுவீர்கள் என்பதால்; தொழில்நுட்ப விளக்கத்தை வெட்டிவிட்டு ஒரே வார்த்தையில் சொன்னால்- G-3 கருவிகள் சூப்பர்!
சரி. இப்போது Night Vision கருவிகள் பற்றிய ஒரு அடிப்படை விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லது ஏதோ புரிவதுபோல ஒரு பிரமையாவது ஏற்பட்டிருக்கும். அது போதும். அதை அப்படியே வைத்துக் கொண்டு, அடுத்த விஷயத்துக்கு தாவலாம்.
இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்?
(தொடரும்)
-ரிஷி-