ஒருவர் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது தற்கொலை எனப்படும். இவ்வுலகில் வாழ முடியாது என்று கருதும் பட்சத்திலேயே மனிதன் தற்கொலை செய்து கொள்கின்றான்.
தற்கொலையில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
* குடும்ப மற்றும் கணவன் மனைவி உறவுகளில் ஏற்படும் விரிசல் நிலை.
* பொருளாதார மற்றும் கடன் தொல்லை (ஏமாற்றம், நஷ்டமடைதல்)
* பரீட்சையில் தோல்வி அடைதல்.
* காதலில் தோல்வி அடைதல் (தனி நபர் காதல், பெற்றோர் எதிர்ப்பு)
* சமூக பிரச்சினைகள் (பசி, பட்டினி, பஞ்சம், வறுமை மற்றும் பாதுகாப்பற்ற சூழல்)
* முதுமை, நம்பிக்கையிழத்தல், அதிக உடல் வலி, பகிடிவதை மற்றும் தங்களது மொடல்களாக கருதப்படும் நடிகர்கள், நடிகைகள், மதத் தலைவர்களின் மரணம் போன்ற இதர காரணிகளும் தற்கொலையை தூண்டும் காரணிகளாகும்.
அல்லாஹ்வையும் மறுமை வாழ்வையும் ஏற்றுக்கொண்ட ஓர் மனிதன் தனக்கு எவ்வாறான துன்பங்கள் நேர்ந்தாலும் அதனை விதி (கழா) மேல் சுமத்திவிட்டுத் தனது எதிர்காலப் பணிகளை முன்னெடுப்பான். இச் செயலையே இஸ்லாம் வரவேற்கின்றது. இதற்கு எதிர்மாறாக செயற்படும் போது அவன் ஈருலகிலும் கைசேதப்படுகின்றான் என்று இஸ்லாம் கூறுகின்றது.
தற்கொலை நரகம் கொண்டு செல்லும்
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதை தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ் என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்கு சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புஹாரி 1364)
ஜனாஸா தொழுகை தடை
அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.
(நூல்: முஸ்லிம் 1779)
மறுமை வாழ்வு
யார் தனது கழுத்தை நெரித்து தற்கொலை செய்கின்றாரோ அவர் நரகத்திலும் தனது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார்.
யார் ஆயுதத்தால் தன்னை குத்தி கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்திலும் அவ்வாறே செய்து கொண்டிருப்பார்.
யார் மலை மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்கின்றாரோ அவரும் நரகத்தில் அவ்வாறான செயலையே செய்து கொண்டு இருப்பார்.
யார் விஷத்தை குடித்து தற்கொலை செய்கின்றாரோ அவரும் நரகத்தில் அச் செயலலையே செய்து கொண்டிருப்பார்.
(நூல்: புஹாரி 1365)
குர்ஆன், ஹதீஸ் கூறும் உளவி யல் அறிவுரைகள்
ஒரு மனிதனுக்கு வாழ்வில் துன்பங்கள் ஏற்படும் போது அதனை அவன் எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உளவியல் ரீதியாக குர்ஆன் ஹதீஸ்கள் கூறுகின்றன.
யாருக்கு அல்லாஹ் நலனை நாடுகின்றானோ அவர்களை அல்லாஹ் சோதிப்பான்
(நூல்: புஹாரி 5645)
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?
(குர்ஆன் 29:02)
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள் மற்றும் கனிகளின் விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் நபியே பொறுமையுடையோருக்கு நற்செய்தி கூறுவீராக. (குர் ஆன் 2: 155)
இறை நம்பிக்கையுடைய ஆண் பெண் தமது விஷயத்திலும் தமது பிள்ளைகள் விஷயத்திலும் தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.
(நூல்: அஹ்மத்:7521 திர்மிதி: 2323)
ஒரு மனிதனுக்கு மறுமையில் நன்மை செய்ய நபியினால் இவ்வுலகிலேயே அவனுக்கு தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான்.
(நூல்: திர்மிதி 2319)
மற்றும் ஒரு மனிதனுக்கு எத்தகைய துன்பங்கள் நேர்ந்தாலும் அவனது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
(நூல்: புஹாரி 5641)
மரணத்துக்காக துஆ செய்வதும் தடையாகும்
நபி (ஸல்) அவர்கள் பின்வரும் சந்தர்ப்பத்திலேயே மரணத்துக்காக துஆ கேட்க முடியும் என கூறியுள்ளார்கள்.
தான் வாழும் வாழ்க்கை சிறந்ததாக அமைந்தால் என்னை வாழவை. தான் வாழும் வாழ்க்கை கெடுதியாக அமையப் போகுமானால் என்னை மரணிக்க செய்திடுவாயாக.
(நூல்: புஹாரி 5671)
இன்றைய நிலைமைகளும் தீர்வுகளும்
இன்று தற்கொலை ஆண், பெண், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று பாராது நாட்டுக்கு நாடு நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில் எமது இளையோர் சமுதாயம் முகப்புத்தகம், காதல் தடை பகிடிவதை, பரீட்சையில் தோல்வி மற்றும் பெற்றோர்களின் கண்டிப்பு காரணமாக உடல் உள ரீதியாக தாக்கமுற்று தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அதேபோல் பெரியோர்களும் கடன் தொல்லை, பொருளாதார நட்டம் லீஸிங் கம்பனிகள், ஏஜென்டுகளின் பண மோசடிகள் மற்றும் வறுமை காரணமாக, தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அதேபோன்றே பெண் சமுதாயமும் குடும்பவியல் பிரச்சினைகள் கணவன் – மனைவி தகராறு கணவன் மாற்றாளுடன் தொடர்பு, பாலியல் துஷ்பிரயோகம், குடி போதை, சித்திரவதை, வரதட்சணை கொடுமை போன்ற காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மற்றும் முதியோர்கள் தாங்க முடியாத உடல் வலி, தீராத கொடூரமான நோய்கள் காரணமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
எனவே, தற்கொலை எண்ணங்களை களைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அவற்றைக் களைய வேண்டுமாயின் ஆன்மீக சிந்தனைகளை வளர்ப்பதுடன் குடும்பவியல் ஆலோசனை நிலையங்கள், உளவளத்துணை ஆலோசனை நிலையங்கள், இளைஞர் வலுவூட்டல் திட்டங்கள், தொழில் வழிகாட்டல் நிலையங்கள், பொருளாதார காப்புகளும் உத்தரவாதங் களும் போன்றவற்றை அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் கிராமம் கிராம மாக ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவற்றை நடைமுறைப்படுத்த சிவில் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள், நகர பிரதேச செயலகங்கள், பெண்கள் சிறுவர் அமைப்புக்கள் மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
ஆர்.எம். அர்ஸாத்,
ஏறாவூர்.