25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்ட சபையில் வரலாறு காணாத ஒரு அமளி ஏற்பட்ட போது கலைந்த தலைமுடி கிழிந்த முந்தானை வழியும் கண்ணீருடன் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா சட்ட சபைக்கு வெளியே ஓடி வருகிறார்.
அன்று தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப் பெரிய திருப்புமுனை ஒன்று ஏற்பட்டது.
சென்னையில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 60 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த நாள் ஒரு குடோன் சுவர் சரிந்து விழுந்ததில் 11 பேர் இறந்துள்ளனர். இரண்டும் கவலைக்குரிய சம்பவங்கள்.
ஆகவே இது பற்றித் தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருகின்றன. சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக்கேட்கின்றன. சபாநாயகர் அனுமதி தரவில்லை.
விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே சபையில் விவாதிக்க விதிகளில் இடமில்லை என்கிறார். கோஷம் போட்டுக் கொண்டு தே.மு.தி.க.வும் தி.மு.க.வும் வெளியேறுகின்றன. ஓடுகாலிகள் வெளியே போய்விட்டார்கள் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் அறிவிக்கிறார்.
மறுநாள் சபைக்கு வந்த தே.மு.தி.க உறுப்பினர்களும் தி.மு.க உறுப்பினர்களும் அமைச்சர் சொன்ன ‘ஓடுகாலிகள்’ என்ற வார்த்தையை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.
அந்த வார்த்தை அப்படியொன்றும் சபையில் பேசக்கூடாத வார்த்தை அல்ல என்கிறார் சபாநாயகர். தி.மு.க.வினர் கேட்பதாக இல்லை. கோஷம் போடுகின்றனர்.
சபாநாயகர் ஆணைப்படி அவர்களைக் காவலர்கள் வெளியேற்றுகின்றனர். தே.மு.தி.க. வினரும் பின்தொடர்ந்து செல்கிறார்கள். வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது துரைமுருகன் கண் கலங்கியபடி…
வெளிநடப்புச் செய்வது ஜனநாயக மரபு அதைப் பின்பற்றிய எங்களை ஓடுகாலி என்கிறார் அமைச்சர். இது அமைச்சருக்கு அழகல்ல. இந்தச் சபையின் மரபுக்கு உகந்தது அல்ல.
உறுப்பினர்களுக்கு மாண்பு, மரியாதை இருக்கிறது. அதைப்பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு. ஆனால், அதைச்சுட்டிக் காட்டியதற்காக எங்களை வெளியேற்றி விட்டார் என்கிறார்.
துரைமுருகன் நீண்ட கால உறுப்பினர். அனுபவம் மிகுந்த முன்னாள் அமைச்சர் அவர் கூறுவது உண்மை. ‘ஓடுகாலி’ என்ற சொல்லை அமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டாம்.
சம்பந்தப்பட்டவர்கள் முறையிட்டதும் சபாநாயகரும் அதைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கலாம். இதனால் ஆளும் கட்சிக்குத் தோல்வி என்றோ தி.மு.க.வுக்கு வெற்றி என்றோ எவரும் கருதப்போவதில்லை.
ஆனால் துரைமுருகன் இந்தச்சபையின் மரபு பற்றியும் உறுப்பினர்களின் மாண்பு பற்றியும் ஆதங்கத்துடன் பேசும்போது வேறொரு சம்பவமும் நினைவுக்கு வந்து திரும்பிப்பார்க்க வைக்கிறது.
இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னால் இதே சபையில் நடந்த சம்பவம் அது. வரலாறு காணாத அமளி ஏற்பட்டுக் கலைந்த தலைமுடி, கிழிந்த முந்தானை வழியும் கண்ணீருடன் ஒரு பெண்மணி சபைக்கு வெளியே ஓடி வருகிறார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சம்பவம்தான் அது.
முதலமைச்சர் கருணாநிதி தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்ட கருணாநிதிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் அருகதை கிடையாது என்று எதிர்க்குரல் எழுப்புகிறார் ஜெயலலிதா.
சபையின் அன்றைய எதிர்க்கட்சித்தலைவர் அவர். அவருக்குப் பின்னால் 26 அ.தி.மு.க எம். எல். ஏக்கள் இருந்தார்கள். ஆளும் தி.மு.க. வரிசையில் 150 பேர் அமர்ந்திருந்தார்கள். பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் கருணாநிதியைத் தடுத்து நிறுத்த அ.தி.மு.க எம்.எல். ஏக்கள் தொடர்ந்து முயன்றனர்.
கைநீட்டும் தூரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் மூழ்கியபோது இரு தரப்பிலும் கோஷங்களின் தரம் குறையத் தொடங்கியது.
தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தாண்டிக் குதித்து முன் வரிசைக்குப் பாய்ந்தனர். கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. ஜெயலலிதா இருக்கையில் தள்ளப்பட்டார்.
அவரை நோக்கி பாய்ந்தவர்களில் ஒருவர் புடவையைப்பிடித்து இழுத்தார். மோசமான சூழ்நிலையில் சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசு பாப்பா சுந்தரம் ஆகியோர் ஜெயலலிதாவைப் பாதுகாப்பாகச் சூழ்ந்து கொண்டு வெளியே அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளின் பின் சட்ட சபைத் தேர்தல் வந்தது. கருணாநிதியைத் துரியோதனனாகவும், துரைமுருகனைத் துச்சாதனனாகவும் சித்திரித்து திரெளபதி பாணியில் மக்களிடம் ஜெயலலிதா நீதி கேட்டார்.
தி.மு.க.வோ ஜெயலலிதாவை ஒரு பொருட்டாகவே கருத வேண்டாம் என்ற முடிவுடன் அவர் பெயரைக்கூட உச்சரிக்காமல் பிரசாரம் செய்தது. ஆனால் அ.தி.மு.க.வோ அமோக வெற்றி பெற்றது.
முதல் ஆட்சியில் பல தவறுகள் நடந்தன. ரத்த சொந்தங்களுடன் தொடர்பைத் தவிர்த்த முதல்வர் இடையில் வந்த தோழமையின் ஆதிக்கத்துக்கு எப்படி இடம் கொடுத்தார் என்ற ஆச்சரியம் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டது.
தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி மக்களின் நல்லெண்ணத்தையும் இழந்ததால் அடுத்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது.
மோசமான நெருக்கடிகளை முதல் முறையாக எதிர்கொள்ள நேர்ந்தது. அதில் பல பாடங்களை அவர் கற்றுக்கொண்டார் என்பது 2001இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் புலப்பட்டது.
கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் ஜெயலலிதா கொண்டிருக்கும் இரும்புப்பிடி அசாதாரணமானது. சுதேசா கிருபளானி, நந்தினி சத்பதி தொடங்கி இன்றைய மம்தா, மாயாவதி, வசுந்தரா ராஜேவரை இந்த நாடு சந்தித்த எந்தப்பெண்முதல்வரும் கற்பனை செய்யாத ஆண் முதல்வர்களும் எட்ட முடியாத ஆதிக்க நிலை அது.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அணுகு முறை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே தவிர கட்சியிலும் ஆட்சியிலும் முணுமுணுப்புக்கூட இல்லை. பழைய தவறுகளின் விளைவாக அவர் சந்திக்கும் வழக்குகளும் அவர் விரும்பும் முடிவை நோக்கி விரைவதாகவே தோன்றுகிறது.
இந்தச் சூழலில் தமிழக அரசியலை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு தாராளமாக இடம் கொடுங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும் நல்ல விஷயங்கள் தென்பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள் அல்லவை என்றால் மறந்து விடுங்கள்.
வீணான சிந்தனைகள் தாமாகவே விரைவில் காலாவதி ஆகும். எடுத்துப்போட்டு புரட்டி அடிக்கத்தேவையே இல்லை. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது அறிவியல் மேதையின் மூன்றாவது விதி. அரசியலும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பது தமிழகத்தின் தலைவிதி அல்ல.
‘லெஸ் லக்கேஜ் மோர் கம்போர்ட்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பெட்டிகளில் சிறு எழுத்துக்களில் ஒரு வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் சுமைகளைக்குறைத்துக் கொண்டே போனால் எத்தனை நெடிய பயணமும் சுகமாக அமையும் என்பது அதன் அர்த்தம்.
ரயில் பயணத்துக்கு மட்டுமல்ல. வாழ்க்கைப் பயணத்துக்கும் இது சாலப்பொருந்தும். பழைய நினைவுகள் பழைய எதிரிகள் பழைய கணக்குகள் என்றும் சுமைதான். அழித்துவிட்டு புது சிலேட்டில் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக் கட்டும் இனி நடப்பவைகள் நல்லவையாகவே இருக்கட்டும். மன்னிக்கும் மனப்பான்மையுடை யவனே மனிதன்!