பொது­பல சேனாவின் திடீர் வளர்ச்சி எல்­லோ­ராலும் ஆச்­ச­ரி­ய­மா­கவே பார்க்­கப்­பட்­டாலும், அது அர­சாங்­கத்­துக்குக் கூட ஆபத்­தா­னது என்­பதை இப்­போது ஓர­ள­வுக்­கேனும் உண­ரத்­தக்­க­தாக உள்­ளது. ஏனென்றால், இப்­போது அமைச்சர்கள் மீது நேர­டி­யா­கவே மோது­கின்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது பொது­பல சேனா.

அது மட்­டு­மன்றி, துள்ளிக் குதிக்கும் அமைச்­சர்­களை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அடக்­காது விட்டால், நாமே அடக்க வேண்டி வரு­மென்று, எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கி­றது பொது­பல சேனா.

இது எதனை உணர்த்­து­கி­றது என்றால், ஒரு கட்­டத்­துக்கு மேல் அர­சாங்­கத்­தினால் கூட அடக்க முடி­யாத- ஒரு அசுர வளர்ச்சி பெற்ற அமைப்­பாக பொது­பல சேனா மாறி வரு­கி­றது என்­ப­தையே ஆகும்.

ராவண பலய, சிஹல ராவய போன்ற வேறும் சில சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் அண்­மைக்­கா­லத் தில் முளைத்­தி­ருந்­தாலும், பொது பல சேனாவின் வளர்ச்சி தான் அப­ரி­மி­த­மா­னது, ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­யது.

குறு­கிய காலத்­துக்குள், இலங்கை முழு­வதும் பிர­பலம் பெற்ற அமைப்­பாக மாறி­விட்­டது பொது­பல சேனா. இன்று பொது­பல சேனா­வையோ அதன் பொதுச்­செ­யலர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேர­ரையோ அறி­யா­த­வர்கள் யாரும் இலங்­கையில் இருப்­பார்கள் என்று தோன்­ற­வில்லை.

சில ஆண்­டு­க­ளுக்குள், உல­க­ளா­விய ரீதி­யாக பொது­பல சேனா பிர­பலம் பெற்­றி­ருக்­கி­றது, என்றால், அதற்கு அதன் நட­வ­டிக்­கைகள் தான் காரணம்.

ஓர் அர­சியல் கட்­சி­யாக இல்­லாமல், இதனைச் சாதித்­துள்­ளது அந்த அமைப்பு.

பெரிய பெரிய அர­சியல் கட்­சிகள் கூடத் தம்மை மக்கள் மத்­தியில் கொண்டு செல்­வ­தற்கு, தம்மைப் பற்­றிய செய்­தி கள் ஊட­கங்­களில் வெளி­யா­வ­தற்கு வழி தெரி­யாமல் திணறிக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், பொது­பல சேனா என்ற அமைப்பு, மிக இல­கு­வாக மக்­களைச் சென்­ற­டைந்து விட்­டது.

முன்னர் ஊட­கங்­களைத் தேடு­கின்ற நிலை பொது­பல சேனா­வுக்கு இருந்­தா லும் இப்­போது, ஊட­கங்­களே அதனைத் தேடு­கின்ற அள­வுக்கு நிலைமை மாறி­யி­ ருக்­கி­றது.

இப்­போது இலங்­கையில் இருந்து வெளி­யா­கின்ற ஊட­கங்­களில், ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பற்­றிய செய்தி வரு­கி­றதோ இல்­லையோ பொது­பல சேனாவின் செய்தி வந்­து­வி­டு­கி­றது.

முன்னர், விடு­தலைப் புலிகள் அல்­லது எல்.ரீ.ரீ.ஈ. என்ற சொல் ஊட­கங்­களில் எப்­படி தினமும் இடம்­பி­டித்­ததோ, அது­போல, இப்­போது பொது­பல சேனா என்ற சொல் ஊட­கங்­களில் தினமும் இடம்­பி­டிக்­கி­றது.

மிகப் பெரிய ஆளணி வளம் கொண்ட ஓர் அமைப்­பாக இல்லாவிட்­டாலும், இதன் வளர்ச்­சியை, இல­கு­வாக எடுத்துக் கொள்­ளவோ- குறைத்து மதிப்­பிட்டு விடவோ முடி­யாது.

இவ்­வாறு திடீ­ரென உப்பிப் பெருத்த பொது­பல சேனா அமைப்­புக்கு அர­சாங்­கத்தின் பின்­புல ஆசீர்­வாதம் இருப்­ப­தாக பொது­வான சந்­தே­கங்கள் உள்­ளன.

பல சம­யங்­களில், அர­சாங்­கத்தின் தேவை­களை இல­கு­வாக நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான ஒரு கரு­வி­யாக பொது­பல சேனா பயன்­பட்­டுள்­ளதே, இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்குக் காரணம்.

எனினும், அண்­மையில் அளுத்­கம, பேரு­வளை பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளு க்கு எதி­ரான வன்­மு­றை­களின் பின்­ன­ணியில் பொது­பல சேனா இருந்­த­தான குற்றச்­சாட்டு, அரச தரப்பு அமைச்­சர்கள் சில­ருக்கும், பொது­பல சேனா­வுக்கும் இடையில் நேர­டி­யான முரண்­பா­டு­க ளைத் தோற்­று ­வித்­துள்­ளது.

குறிப்­பாக, அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, பொதுபல சேனா மீது குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்த, பதி­லுக்கு பொது­பல சேனாவும் குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்த இந்த மோதல் விரி­வ­டைந்­துள்­ளது.

இதன் எதி­ரொ­லி­யாகத் தான் துள்ளிக் குதிக்கும் அமைச்­சர்­களை அடக்­காது போனால், நாமே அடக்­குவோம் என்று பொதுபல சேனாவின் பொதுச்­செ­யலர் ஞான­சார தேரர், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கே எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல முகங்­களைக் கொண்ட ஓர் அர­சாங்­க­மாகும். அதில், கடும் போக்­கா­ளர்­களும் இருக்­கி­றார்கள். மென்­போக்­கா­ளர்­களும் இருக்­கி­றார்கள் – இரண்­டுக்கும் இடைப்­பட்­ட­வர்­களும் இருக்­கி­றார்கள்.

பொது­பல சேனாவின் செயற்­பா­டுகள், அர­ச­த­ரப்பில் உள்ள இட­து­சாரிப் போக்­கு­டைய – மென்­போக்கு அர­சி­யல்­வா­திகள், அமைச்­சர்­க­ளி­டையே, கடு­மை­யான விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, கடும்­போக்கு அமைச்­சர்­களும், அர­சி­யல்­வா­தி­களும், இதனைத் தமது அர­சி­ய­லுக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்த எண்­ணு­கின்­றனர்.

ஆரம்­பத்தில் இது பெரி­ய­ளவில் பிரச்­சி­னை­யாக உரு­வா­காது போனாலும், அண்­மைக்­கா­ல­மாக, பொது­பல சேனாவின் விமர்­ச­னங்­களும், கண்­ட­னங்­களும், தாக்­கு­தல்­களும், அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்தத் தொடங்கி விட்­டன.

அதற்கும் அப்பால், பொது­பல சேனாவின் இப்­போ­தைய எச்­ச­ரிக்­கை­களும், மிரட்­டல்­களும், அர­சாங்­கத்­தை யும் கலக்கம் கொள்ள வைத்­தி­ருக்­கலாம்.

ஏனென்றால், பொது­பல சேனா இப்­போது சாதா­ர­ண­மா­ன­தொரு அமைப்பு அல்ல. அதற்கு சிங்­கள,பௌத்த மக்கள் மத்­தியில் கணி­ச­மான செல்­வாக்கு உள்­ளது. அதன் தீவிர மத­வா­தமும், இன­வா­தமும், சிங்­கள, பௌத்த மக்­க­ளி­டையே கடு­மை­யான தாக்­கங்­களை உரு­வாக்கி விட்­டுள்­ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடி­வுக்கு வந்த பின்னர், சிங்­கள, பௌத்த தேசி­ய­வா­தத்தின் தலை­மைத்­துவம் தானே என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது குடும்­பத்­தி­னரும் உரு­வ­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனால், பொது­பல சேனாவின் வளர்ச்சி அதற்குச் சவா­லாக மாறி வரு­கி­றது.

இளைய தலை­மு­றை­யிடம், சிங்­கள, பௌத்த பேரி­ன­வாத எழுச்­சியை உரு­வாக்­கு­வதில் பொது­பல சேனா கணி­ச­மான பங்கை ஆற்­றி­யி­ருக்­கி­றது.

தொடர்ந்தும் அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கி­றது.

இதனால், சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தத்தின் தலைமைத்துவத்தை பொதுபல சேனா தட்டிப் பறித்துச் சென்று விடும் நிலை உருவாகியுள்ளது.

இதனை, அரசாங்கம் ஒருபோதும் விரும்பவோ, நெடுங்காலத்துக்குச் சகித்துக் கொண்டிருக்கவோ போவதில்லை.

அவ்வாறு பொதுபல சேனாவின் வளர்ச்சியை அரசாங்கம் சகித்துக் கொள்ளும் நிலை ஒன்று இருக்குமேயானால், அது அரசாங்கத்தின் பலவீனமாகவே கருதப்படும்.

ஏனென்றால், பொதுபல சேனா பெற்று வரும் அசுர வளர்ச்சி, ஒரு கட்டத்தில் அரசாங்கத்தையே விழுங்கும் நிலையை ஏற்படுத்தும்.

அதற்கு முன்னதாக, அரசாங்கம் விழித்துக் கொள்ளாவிடின், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகத் தான் முடியும்.

Share.
Leave A Reply