செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனி சிறப்பு முகாமில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வங்காள தேசத்தை சேர்ந்த 6 பேர், நைஜீரியர்கள் 6 பேர், 22 இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட 34 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையை சேர்ந்த கிருஷ்ணலிங்கம்(வயது 35). என்பவரும் உள்ளார். கடந்த 2009–ம் ஆண்டு 5 வழக்குகளில் செங்கல்பட்டு தனி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு தற்போது செய்யாறு தனி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணலிங்கம், இலங்கையில் உள்ள அவருடைய மாமன் மோகனவேல் என்பவரின் மகள் வசந்தமலர் (32) என்பவரை காதலித்து வந்தார்.
இவர்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். வசந்தமலரை திருமணம் செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழக அரசிடம் கிருஷ்ணலிங்கம் மனு செய்திருந்தார். இதற்கு அரசு அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து வசந்தமலர் மற்றும் உறவினர்கள் இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்து சென்னையில் தங்கினார். நேற்றுசெய்யாறு தனி சிறப்பு முகாமில் உள்ள கிருஷ்ணலிங்கத்தை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அங்கு வசந்தமலர் மணக்கோலத்தில் காத்திருந்தார். கிருஷ்ணலிங்கம் வந்ததும் உறவினர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
வசந்தமலர் கழுத்தில், கிருஷ்ணலிங்கம் உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டினார். சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
2 மணிநேரத்தில் மீண்டும் கிருஷ்ணலிங்கம் தனி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். மணமகள் மற்றும் உறவினர்கள் சென்னை பல்லாவரத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
தாலிகட்டியவுடன் பிரிந்தாலும் காதலில் வென்ற மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க தம்பதி பிரிந்து சென்ற காட்சி உருக்கமாக இருந்தது.