எல்லாள மன்னனுடன் போரி ட்டு வெற்றிபெற்ற துட்டகைமுனு அப்போதிருந்த போர் விதி முறைகளைப் பின்பற்றி எல்லாளனுக்கு நினைவுத் தூபி எழுப்பியுள்ளான்.
ஆனால் அந்தப் போர் தர்மநெறி இப்பொழுது எங்களிடமிருந்து எவ்வளவோ தூரம் சென்றுவிட்டதென யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியரும் உயர் பட்டப் படிப்புக்கள் பீட பீடாதிபதியுமான சத்தியசீலன் தெரிவித்தார்.
யாழ். நகரில் எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மன்னர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றபோது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வரலாற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம் வருமாறு:
ஒருமனித சமுதாயத்திற்கு அடையாளமும் இருப்பும் மிகவும் முக்கியமானவை. அடையாளமும் இருப்பும் ஆபத்திற்கு உள்ளாகின்ற போது அந்த மனித சமுதாயம், தனது இனம், மொழி, சமயம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்துவது இயல்பானது. இதனாலேயே மனித வாழ்விற்கு அடையாளமான இருப்பும் முக்கியமானதாக இருக்கின்றது.
அந்த வகையில் எவருமே சிந்திக்காத விடயத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீண்டகால தொலைநோக்கின் அடிப்படையில் மூன்று மன்னர்களுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை அமைத்துள்ளார்.
எல்லாள மன்னன் இலங்கை மன்னன் எனவும் பரராஜசேகர மன்னன் பேராச்சியத்தின் மன்னன் என்று கூறக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால், பண்டாரவன்னியன் வன்னியை ஆண்டவர் என்று வருகின்றபோது முன்னவர்களுடன் ஒப்பிடுகையில் மன்னர் என்பதை விட குறுகிய அரசர் என்பதே பொருத்தமானதாக அமையும்.
இந்த நிகழ்வின் அடிநாதம் இதுவாகவே உள்ளது. கோட்டையில் புதிய பாராளுமன்றக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டபோது மறைந்த தலைவர் அ.அமிர்தலிங்கம் உரையாற்றுகையில், இலங்கை வரலாற்றையும் யாழ்ப்பாண மற்றும் அப்போது இலங்கையிலிருந்த மூன்று அரசுகளின்வரலாற்றையும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் இவ்விடயம் முக்கியமானதாகவே அமைகின்றது.
யாழ்ப்பாணத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ள மூன்று மன்னர்களில் எல்லாளன் என்ற மன்னன் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் இலங்கை முழுவதையும் ஏறத்தாழ 44 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான்.
பரராஜசேகரன் என்ற மன்னன் யாழ்ப்பாண இராச்சியத்தின் 18 மன்னர்களில் 12ஆவது மன்னனாக கி.பி. 1478இல் இருந்து 1519வரை ஆட்சி செய்து வன்னிப்பிரதேசம் உட்பட தமது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண இராச்சியத்தினதும் கண்டி இராச்சியத்தினதும் அதிகாரங்கள் வலுப் பெற்றிருந்த காலத்தில் வன்னி சிற்றரசுகள் இம்மன்னர்களுக்கு அடங்கி வரி செலுத்துபவையாக இருந்துள்ளன. ஒல்லாந்தருக்கும் கண்டி இராச்சியத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டபொழுது யாழ்ப்பாண அரசர்களுக்கு தோள் கொடுத்து செயற்பட்டன.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இலங்கை அரசர்களின் தோற்றம் பற்றி நாம் அவதானிப்போமாயின் நாக அரசர்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் இலங்கையின் வடபகுதியில் ஆட்சி அதிகாரங்களைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
இந்த வகையில் புத்தருடைய வருகை கூட மகோதர, சூலோதர என்ற இரண்டு அரசர்களுக்கிடையிலான சிம்மாசனப் போட்டியைத் தீர்க்கும் வகையிலானதாகவே அமைகின்றது.
இது விஜயனின் வரவிற்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. இலங்கையில் ஆரியக் குடியேற்றத்திற்கு முன்பு நாக அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கினைத் தீர்க்கும் வகையில் சமாதானத்தை இத் தீவில் ஏற்படுத்துவதற்காக புத்தருடைய வருகை அமைந்ததாகவே குறிப்பிடப்படுகின்றது.
இந்த வகையில் நாம் இக்காலப்பகுதிக்கு முன்னர் சென்று பார்க்கின்ற போது கி.மு. 10ஆம் நூற்றாண்டளவில் இற்றைக்கு சுமார் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு ஒரு வளர்ச்சியடைந்த நாகரிகம் இருந்திருக்கிறது என்பதை அறியமுடிகின்றது. ஆனைக்கோட்டை, சாட்டி, பூநகரி, இரணைமடு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் இதனைக் காட்டுகின்றன.
எனவே 3ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட பிரதேசமாக இப்பிரதேசம் காணப்படுகின்றமையே இங்கு முக்கியமான விடயமாக உள்ளது. இத்துறையில் கலாநிதிகளான பொ.ரகுபதி, பேராசிரியர். செ.கிருஸ்ணராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், பேராசிரியர் ப.புஷ்பரத்தினம் போன்றோர் இத்துறையில் தமது பணிகளை ஆற்றியுள்ளார்கள்.
அதேபோல் இன்று இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்களும் பாராட்டப்படக்கூடியவர்களாகவே உள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு சங்கிலியன் சிலை விஷமிகளால் சேதமாக்கப்பட்ட பொழுதும் புனரமைத்துத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்விலும் நாம் கலந்துகொண்டோம்.
அச்சிலையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாலேயே திறந்து வைக்கப்பட்டுள்ளது. எவர் இச் செயலைச் செய்தாலும் பாராட்டப்பட வேண்டியதாகும். இவ்விடயத்தில் அவர்களுக்கு அரசியலுக்கு அப்பால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் அச்சுறுத்தல் ஏற்பட்ட காலப்பகுதிகளில் தமது பண்டைக்கால வரலாற்றை எடுத்துக்காட்டுகின்ற முயற்சிகள்எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு நாம் இலங்கை வரலாற்றில் பல உதாரணங்களைக் கூறக் கூடியதாகவுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம், சத்தியாக்கிரக போராட்ட வடிவங்கள், திருமலை பாத யாத்திரை போன்றவற்றுடன் நல்லூரில் கொடியேற்றி தமது பண்டைய வரலாற்று நிகழ்வுகளை ஞாபகமூட்டியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வகையில் யாழ்ப்பாண தொல்பொருள் கழகம் 1973இல் பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் வி.சிவச்சாமி, யாழ்ப்பாண தொல்பொருள் ஆணையாளர் செல்வரட்ணம் போன்றோரால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படை நோக்கம் தமிழரின் இருப்பை தொல்லியல் ஆய்வுகளின் மூலம் வெளிக்காட்டுவதாக அமைந்தது.
நல்லூர் வரலாற்றுக்கழகம் கலாநிதி குணராஜாவினால் உதவி அரச அதிபராக நல்லூரில் இருந்த போது முன்னெடுக்கப்பட்டது. அதற்கு அப்பொழுது யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய அரச அதிபர்கள் க.சண்முகநாதன், செ. பத்மநாதனும் உறுதுணையாக இருந்தனர்.
இத்தகைய செயற்பாடுகளுக்கு அரசின் பூரண ஆதரவு கிடைக்காமையால் இவற்றை எம்மால் முன்னெடுக்க முடியவில்லை. ஏனெனில், தொல்லியல் ஆய்வு என்று வருகின்ற பொழுது கொழும்பினுடைய அனுமதியைப் பெற்றே இவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.
யாழில் யமுனா ஏரி அமைந்த இடமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் யாழ்ப்பாண இராச்சியத்தை நினைவூட்டுகின்ற பல தொல்லியல் அடையாளப் பகுதிகள் உள்ளன.
இவைகளைப் பேணவும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழர்கள் உணர்வோடு அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆனால் அவை அரசின் பூரண ஆதரவு கிடைக்காமையால் பூரணப்படுத்த முடியவில்லை.
நல்லூர் புனித நகரம் என்னும் திட்டத்தினையும் கருத்திலெடுத்து ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டும்.
இன்று சிலை அமைக்கப்பட்டுள்ள எல்லாள மன்னனுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற மன்னன் துட்டகைமுனு சிங்கள மக்கள் மத்தியில் தனித் தலைவனாக, தேசிய தலைவனாக கருதப்படுகின்றான். அந்த அளவிற்கு சமபலம் கொண்டவர்களாக இருவருமே விளங்கியுள்ளனர்.
இருப்பினும் அப்போதைய இருந்த போர் விதிமுறைகளுக்கு துட்டகைமுனு மன்னன் மதிப்பளித்து எல்லாள மன்னனுக்கு ஒரு நினைவுத் தூபி எழுப்பியிருந்தார்.
பிரித்தானியருடைய ஆட்சி வரை இந்த நினைவுத் தூபிக்கு சிங்கள மக்கள் மதிப்பளித்துள்ளனர். அந்தப் போர் தர்மநெறி இப்போது எங்களிடமிருந்து எவ்வளவோ தூரம் சென்றுவிட்டது. அந்த வகையில் தெமல மகா சேத்திய என்று அழைக்கப்படுகின்ற கட்டடம் இந்த அடையாளமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. கலாநிதி ஜேம்ஸ் ரி.இரத்தினம் எழுதிய எல்லாளனின் நினைவிடம் கட்டுரையில் இதனை மிகவும் சிறப்பாக எடுத்து காட்டுகின்றார்.
இந்த வகையில் பரராஜசேகரனின் யாழ்ப்பாண இராச்சியமானது 1619வரை நிலைத்திருந்துள்ளது. இதில் ஏறத்தாழ 18 மன்னர்கள் பரம்பரை பரம்பரையாக ஆட்சிபுரிந்துள்ளனர். பரராஜசேகரன், செ.கஜராஜசேகரன் ஆகிய இரண்டு பெயர்களும் மன்னர்களுடைய பெயர்கள் அன்று. அவை சிம்மாசனத்திற்குரிய பட்டப் பெயர்கள் ஆகும்.
1478 தொடக்கம் 1519 வரையான காலப்பகுதியில் ஆட்சி செய்த மன்னனாக இருக்கின்ற பரராஜசேகரனின் மகனாக 1519 இல் மன்னான முதலாவது சங்கிலிய மன்னன் கூறப்படுகின்றான்.
யாழ்ப்பாண வரலாற்றைக் கூறுகின்ற நூல்களான கைலாயமாலை, வையா பாடல், யாழ்ப்பாண வைபவமாலை ஆகிய நூல்களால் பல்வேறு குழறுபடிகளும் தெளிவற்ற நிலைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பரராஜசேகரன் குறித்தும் ஒரு மயக்க நிலை காணப்படுகின்றது.
இதேவேளை இந்தப் பரராஜசேகரின் காலப்பகுதியில் இலங்கையில் முக்கியமாக இரண்டு மாற்றங்கள் இடம்பெறுகின்றன. கோட்டையில் 6ஆம் பராக்கிரமபாகுவின் ஆட்சி நிலைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அங்கிருந்து செண்பகப்பெருமாள் இந்தப் பகுதியை கைப்பற்றி 1450 இலிருந்து 1467 வரையான 17 வருடங்கள் ஆட்சிசெய்துள்ளான். இந்த செகராச சேகர மன்னன் நாட்டை விட்டு இந்தியாவிற்கு ஓடி 17 வருடங்களின் பின்னர் மீண்டும் திரும்பி வந்து சோழ இராச்சியத்தின் உதவியுடன் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றியுள்ளதாக வரலாறு தொடர்கிறது.
தென்னிந்தியா அண்மையில் இருப்பதால் அதுவும் சுமார் 18மைல் தொலைவிலிருந்து எமக்குக் கிடைத்தது சாபமா அல்லது துன்பமா என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் பரராஜசேகரன் என்னும் பட்டப்பெயரைச் சூடியிருந்த பிற்கால மன்னன் ஒருவனைக் குறிப்பிட்டு சில தடுமாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
அடுத்ததாக குறுநில மன்னனான பண்டாரவன்னியன் 1742 தொடக்கம் 1811வரை ஆட்சிசெய்துள்ளார். கண்டி இராச்சியம் 1815ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது. பண்டாரவன்னியன் 1811இல் இறந்து விட்டான். கால அடிப்படைகளை சரியாக விளங்கிக் கொண்டால் பல குழப்பங்கள் தீரும்.
1968இல் பண்டாரவன்னியன் என்னும் கழகம் அப்பொழுது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரி.சிவசிதம்பரத்தினால் ஆரம்பிக்கப்பட்டது. 1982இல் பண்டாரவன்னியன் ஒரு தேசிய வீரனாக பிரகடனப்படுத்தப்பட்டான். அதே ஆண்டில் அதன் பின்னர் வவுனியா செயலகத்தில் பண்டாரவன்னியனுக்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண எல்லைப்பரப்பில் பூநகரி, கரிப்பட்டமூலை, குமிளமுனை, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பல பிரதேசங்கள் வன்னி இராச்சியத்தில் சேர்ந்ததாக கூறப்படுகின்றன. இது நுவர கலா வாவியுடன் தொடர்புபட்டிருந்தது. நுவர கலா வாவி கண்டி இராச்சியத்தின் கீழ் ஆளுகையில் இருந்தது. இதில் புத்தளமும் அடங்கியிருந்தது.
அம்பாறை, மட்டக்களப்பு, பாணமை போன்ற பகுதிகள் அடங்கலாகவும் இது இருந்துள்ளது. தமிழ் வன்னிபங்கள், சிங்கள வன்னிபங்கள் எனவும் இவை இருந்துள்ளன. புத்தளம், திருகோணமலை, கரிப்பட்டமூலை, முல்லைத்தீவு, தண்ணீரூற்று போன்ற பகுதிகள் அடங்கலாக பண்டாரவன்னியன் அதிகாரம் பரவியிருந்தது.
பண்டாரவன்னியனைப் பொறுத்த வரையில் ஒல்லாந்தருக்கு எதிராக யாழ்ப்பாண அரசர்களுடன் இணைந்தும் போரிட்டுள்ளான். ஏழு தடவைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாண ஆட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளான்.
அவரது பெயர் நினைவுத் தூண் ஒன்றில் பண்டாரவன்னிமையன் என்றே கூறப்பட்டுள்ளது. இவனது நடுகல் கற்சிலைமடுவில் காணப்படுகின்றது. இந்த நடு கல்லை பண்டாரவன்னியன் இறந்தவுடன் நடப்படவில்லை.
ஏறக்குறைய 94 வருடங்களின் பின்பே லூவாஸ் தனது மனுவல் ஒப் வன்னி என்ற நூலில் இந்நடுகல் நாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றார். இக் கல்லும் அண்மையில் உடைக்கப்பட்டு தற்போது திருத்தப்பட்டுள்ளது.
ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகிய அந்நியரை எதிர்த்த ஒருவனாக பண்டாரவன்னியன் காணப்படுகின்றான். இவனை 1803இல் தோற்கடிக்கப்பட்டிருந்ததாக வும் பெரிய காயத்திற்குள்ளாகிய இவன் அங்கிருந்த தப்பிச்சென்று பிரித்தானிய ஆதிக்கத்திற்கெதிராக போராடி 1811இல் இறந்து போகின்றான்.
இவன் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த வகையில் இன்று யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள மூன்று சிலைகளும் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. இதேபோல் யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறை அறிவதற்கான அகழ்வாராய்ச்சிக்குரிய அனுமதியைப்பெற்றுத் தர வேண்டுமெனவும் நல்லூர் பிரதே சத்தைப் புனிதப் பிரதேசமாக பிரகட னப்படுத்தப்படவேண்டுமெனவும் நாம் கோரி நிற்கின்றோம் என்றார்.
யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியசீலன் (ந.லோகதயாளன்)