சென்னை: சென்னையில் இன்று நடந்த அதிமுகவினர் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை சொல்லி அனைவரையும் குஷிப்படுத்தினார்.
எதையும் எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படிப்பட்ட பக்குவம் வந்து விட்டால் தடைகளைத் தாண்டி, இலக்கைத் தாண்டி நாம் பயணம் செய்ய வழி கிடைக்கும் என்று தனது கதையின் நீதியாக முதல்வர் கூறினார். முதல்வரின் பேச்சிலிருந்து….
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்க்கையில் முன்னேறும் போது பல தடைகள் வரலாம். தடைகள் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம். தடைகளைக் கண்டதும் மலைத்துப் போய் மனம் தளர்ந்து விடுபவர்களால் வெற்றியை அடைய முடியாது. தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய மனப்பாங்கினை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்பமும் துன்பமும்
இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் இரு பக்கங்கள். வாழ்க்கை என்றால் அதில் தொல்லை இருக்கும்; கவலை இருக்கும்; இவற்றிக்கு இடையே இன்பமும் இருக்கும். அப்படி இருந்தால் தான், அந்த வாழ்க்கை முழுமையானதாக, சுவையானதாக, பயனுள்ளதாக இருக்கும்.
தோல்வி காணாதவன் முழு மனிதன் அல்ல
தோல்வி காணாத மனிதன் முழு மனிதன் அல்ல என்றார் அறிஞர் அறிஸ்டோட்டில். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும், துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள்.
கடவுள் மீதும், உங்கள் திறமையின் மீதும் முழு நம்பிக்கை வைத்தால் துன்பங்களை முறியடித்து வெற்றியை எட்டுவது நிச்சயம். ‘எல்லாம் நன்மைக்கே’ என்று எடுத்துக் கொள்ளும் பக்குவம் ஏற்பட்டால், தடைகளைத் தாண்டி, இலக்கை நோக்கி பயணம் செய்ய அது வழி வகுக்கும். நிச்சயம் நன்மையைப் பெறலாம்.
முன்னொரு காலத்தில்…
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர், தனது அமைச்சரையும், சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மன்னரின் கூரிய போர்வாள், அவருடைய கையின் கட்டை விரலை துண்டித்தது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இருந்த மன்னர், தன் விதியை நொந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த அமைச்சர் “எல்லாம் நன்மைக்கே” என்றார்.
முன்னொரு காலத்தில்…
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவர், தனது அமைச்சரையும், சில வீரர்களையும் அழைத்துக் கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக மன்னரின் கூரிய போர்வாள், அவருடைய கையின் கட்டை விரலை துண்டித்தது. மிகுந்த வலியுடனும், வேதனையுடனும் இருந்த மன்னர், தன் விதியை நொந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த அமைச்சர் “எல்லாம் நன்மைக்கே” என்றார்.
கோபமான மன்னர்
அமைச்சரின் இந்த வார்த்தையைக் கேட்ட உடன் மன்னருக்கு கோபம் வந்தது. தன்னுடைய வீரர்களை அழைத்து, “அமைச்சரை கைது செய்யுங்கள்! விடியும் வரை சிறையில் அவரை, தலைகீழாக தொங்க விடுங்கள்! பின்னர் நாளை காலை தூக்கில் இடுங்கள்!” என்று கட்டளையிட்டார். அமைச்சரை வீரர்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
மன்னர் தனியே மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில், காட்டுவாசிகள் சிலர் தெய்வத்திற்கு நரபலியிட வேண்டி, ஒரு மனிதனை தேடினர். அவர்கள் கண்ணில் மன்னர் அகப்பட்டார். அவர்கள் மன்னரை சிறைபிடித்து காட்டுக்குள் அழைத்துச் சென்றனர். நரபலியிடத் தயாராகும் நேரத்தில், மன்னரின் கை கட்டை விரல், துண்டிக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். அடிபட்ட ஒருவரை அங்கஹீனம் உள்ள ஒருவரை நரபலியிடுவது முறையல்ல என்று கூறி மன்னரை விடுவித்தனர்.
எல்லாம் நன்மைக்கே…
உடனே மன்னருக்கு ‘எல்லாம் நன்மைக்கே’, என்ற அமைச்சரின் வார்த்தை நினைவிற்கு வந்தது. தன்னுடைய கை கட்டை விரல் துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், தான் உயிருடன் இருந்து இருக்க முடியாது, என்பதை உணர்ந்தார் மன்னர். அமைச்சருக்கு தவறுதலாக தண்டனை அளித்ததை எண்ணி மனம் வருந்திக் கொண்டே, சிறைச்சாலைக்குள் சென்று அமைச்சரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
மறுபடியும்
எல்லாம் நன்மைக்கே உடனே அமைச்சர், மன்னரைப் பார்த்து ‘எல்லாம் நன்மைக்கே’ என்றார். மன்னர் அமைச்சரைப் பார்த்து, உங்களை ஒரு நாள் சிறையில் அடைத்து, மரண தண்டனை விதித்தேன்.
இதில் என்ன நன்மை இருக்கிறது?” என்று வினவினார். அதற்கு அமைச்சர் சிரித்துக் கொண்டே, “மன்னா ஒரு வேளை நீங்கள் என்னை சிறையில் அடைக்காமல், உங்களுடனேயே அழைத்துச் சென்றிருந்தால், அந்த காட்டுவாசிகள் விரல் இழந்த காரணத்தால் உங்களை விடுவித்து என்னை நரபலி கொடுத்து இருப்பார்கள்! அதனால் தான் எல்லாம் நன்மைக்கே என்றேன்” என்றார்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்…
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சில நேரங்களில் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு தடங்கல்கள், பிரச்னைகள் நமக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிய சுமையாக தெரியும். அதனை அப்படி நினைக்காமல், எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அடுத்த பணியை தொடர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும்.
எழுந்து நடந்தால் இமயமும் வழி கொடுக்கும்
எழுந்து நடந்தால் இமய மலையும் நமக்கு வழி கொடுக்கும். உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும் என்பதை உணர்ந்து; அதற்கேற்றப்படி தன்னம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
இன்னொரு கதை…
ஏழை சிறுவன் ஒருவன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த காரை, வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட காரின் உரிமையாளர், அந்த சிறுவனை காரில் உட்கார வைத்து கொஞ்ச தூரம் காரை ஓட்டிக் காட்டினார். அப்போது அந்தச் சிறுவன், “வாகனம் மிகவும் அருமையாக இருக்கிறது. என்ன விலை?” என்று கேட்டான். அதற்கு காரின் உரிமையாளர், “தெரியவில்லை. இது எனது சகோதரர் எனக்கு பரிசாக கொடுத்தது” என்று கூறினார். அதற்கு அந்த சிறுவன், “உங்கள் சகோதரர் மிகவும் நல்லவர்” என்றான்.
நீ என்ன நினைக்கிறாய்
உடனே காரின் உரிமையாளர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். உனக்கும் என் சகோதரனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று நினைக்கிறாய் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அந்த ஏழைச் சிறுவன், “இல்லை. நான் உங்களின் சகோதரனைப் போல் இருக்க வேண்டும், என்று நினைக்கிறேன்” என்றான்.
கொடுக்கக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும்
அதாவது வாங்கக் கூடிய இடத்தில் இல்லாமல், கொடுக்கக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும் என்ற தன் உள்ளக்கிடக்கையை தெரிவித்தான். இந்தச் சிறுவனிடம் இருக்கும் தன்னம்பிக்கை உங்களிடம் இருந்தால் உங்கள் வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்றார் முதல்வர்.