”சமூக வலைதளங்களில், எனது பெயரில், புதிது புதிதாக வலைப் பக்கங்கள் போலியாக துவங்கப்பட்டு, அதில் பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஸ்டாலினின் இந்த திடீர் அறிவிப்பு ஏன் என்பதற்கு ஒரு பின்னணி உள்ளது.

இன்றைய அரசியல் தலைவர்களில் பலரும் சமூக வலைத்தளங்களில் கணக்குத் தொடங்கி தங்கள் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைப்பக்கங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள் வேகமாகப் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல கட்சிகள் சமூக வலைத்தளங்களைத் தங்கள் பிரசார ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே, பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களை தீவிரமாகப் பயன்படுத்தினார். அதன் மூலம் அவரது எண்ணங்களும், கருத்துகளும் மக்களிடம் வேகமாகப் பரவின.

இதேபோல, காங்கிரஸ் தலைவர்கள் சில சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்கள் கருத்துகளைப் பரப்பியதோடு, எதிர்க்கட்சியினருக்கு பதிலடியும் கொடுத்தனர்.

தமிழகத்தில் மதிமுக பெயரிலும், அதன் பொதுச் செயலாளர் வைகோ பெயரிலும் சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டு கட்சியின் கொள்கைகள் அதில் பரப்பப்பட்டு வந்தன. இதன் மூலம் படித்தவர்கள் மத்தியில் மதிமுகவுக்கு செல்வாக்குக் கூடியது.

அதேபோல, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் வலைத்தளம் தொடங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தனது நண்பரும், திமுக இளைஞரணி துணைத் தலைவருமான ஜின்னாவிடம் கூற, அவர், ஸ்டாலின் பெயரில், ‘வெப்சைட்’ ஒன்றைத் துவங்கினார். கூடவே, முகநூல் கணக்கு ஒன்றையும் துவக்கி, அதில் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட செய்திகளையும், கருத்துகளையும் பதிவு செய்தார். இதனால், ஸ்டாலின் கருத்துகள் திமுகவினர் மத்தியில் வேகமாகப் பரவியது.

கருணாநிதியும் தனது பங்குக்கு வலைத்தளம் தொடங்கி தனது கருத்துகளைப் பதிவு செய்தார். ஆனால், கருணாநிதிக்கு எதிராக பலரும் தங்கள் குமுறல்களைப் பதிவு செய்ததால் தொடங்கிய சில நாட்களிலேயே அவரது வலைப்பக்கம் மூடப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், அழகிரி .ஆதரவாளர்கள் சிலர், ஸ்டாலினுக்கு எதிராக வலைப்பக்கங்களில் கருத்துகளைப் பரப்பி வருவதாக ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ‘ஸ்டாலின் 2016′ என்ற பெயரில் புதிதாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து, அதன்மூலம், பலருக்கும் ஸ்டாலின் ஆதவராளர்கள் பதிலடி கொடுத்தனர். அதில், ஸ்டாலின்தான், திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று அதில் பதிவிட்டிருந்தனர். இதுதவிர, ஸ்டாலினை வாழ்த்தியும், அழகிரி, கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்தும் கருத்துப் பதிவிட்டிருந்தனர்.

இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பிரசாரம் செய்து ஆதரவைத் திரட்டும் வகையில் ஸ்டாலினின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஸ்டாலின் ஆதரவு வலைப்பதிவர்களின் கூட்டத்தை சென்னையில் கூட்டியிருந்தார்.

கூட்டம் தொடங்கியபோது ஸ்டாலினின் மகன் உதயநிதி திடீரென அங்கு வந்துள்ளார்.

அந்த நேரத்தில் பலரும் ஸ்டாலினை ஆதரித்துப் பேசியதோடு, கருணாநிதியை கடுமையாக விமர்சித்தனர்.

இதனால், எரிச்சலடைந்த உதயநிதி, “எனது தாத்தாவை எக்காரணம் கொண்டும் விமர்சிக்கக் கூடாது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகத் தெரிகிறது. இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, ஸ்டாலின் ஆதரவு வலைப்பதிவர்களின் கூட்டத்தில் பேசிய பேச்சின் விவரம் திமுக தலைவர் கருணாநிதியின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதனால், கருணாநிதி, ஸ்டாலின் மீது கடும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தனது அதிருப்தியை, ஸ்டாலினை அழைத்துச் சொல்லாமல், அவருக்கு வேண்டியவர்கள் மூலமாக கருணாநிதி சொல்லி அனுப்பினார்.

இந்நிலையில்தான், ஸ்டாலின், தனது பெயரில் போலியாக வலைப்பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு, கருத்து பரிமாறப்படுபவதாக அறிவித்தார். அந்த வலைப் பக்கங்களில் வரும் கருத்துகள் மற்றும் சென்னையில் நடந்த வலைப்பதிவர்களின் கூட்டத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.

ஆனால், வலைப்பதிவர்களின் கூட்டத்தை கூட்டிய உறவினர் யார்? அவர் யார் தூண்டுதலின் பேரில் கூட்டத்தைக் கூட்டினார்? அந்தக் கூட்டத்துக்கு உதயநிதி வந்து சேர்ந்தது எப்படி? என்ற விபரங்களை கருணாநிதி தெரிந்துகொண்டதாகத் தெரிகிறது.

இதனால், ஏற்கனவே ஸ்டாலின் மீது கோபத்தில் உள்ள கருணாநிதிக்கு கோபம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். அழகிரி பிரச்னை உட்பட இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக கருணாநிதி மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஸ்டாலின் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி, அதில் திமுக தலைமைக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதை முறைப்படுத்த கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கிறது. இதற்காக, கட்சியில் இளைஞரணி, மகளிர் அணியைப் போல இணையதள அணி, உருவாக்க வேண்டும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உருவாக்கப்படும் இணையதள அணிக்கு, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் குறித்து, விரைவில், கருணாநிதி அறிவிக்கவுள்ளார்.

மேலும், திமுக ஆட்சியின் சாதனைகள், கடந்த காலங்களில் மத்திய அரசிடம் வாதாடி, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள், ஆளுங்கட்சியின் குறைகளை ஆதாரத்தோடு வெளியிடுவது, உள்ளூர் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, கட்சியினர் நடத்தும் போராட்டங்களை இணையதளத்தில் வெளியிடுவது உள்ளிட்ட பல பணிகளை இணையதளம் மூலமாக இணையதள அணியினர் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி உருவாக்கப்படும் இணையதள அணி, கட்சியின் எந்த கோஷ்டியையும் சார்ந்து செயல்படாமல், யாருக்கும் ஆதரவான கருத்துகளைத் தெரிவிக்காமல் நடுநிலையோடு செயல்படும் என்று கூறப்படுகிறது. அப்படியே நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Share.
Leave A Reply