சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு “சத்தானிக் வெர்ஸஸ்” எனும் நூலே காரணம்.
அதற்காகவே ஈரானின் கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இன்றுவரை அரசுகளின் தயவிலும், வெளிப்படையாக உலவ முடியாமலும் இருந்து வருகிறார்.
அப்படி என்ன தான் எழுதிவிட்டார் அவர் அந்த நூலில்? இந்தியா உட்பட பல நாடுகள் அந்நூலுக்கு தடை விதித்திருப்பதால் அந்நூலில் என்ன எழுதப்பட்டிருந்தது என வெளியங்கமாக தெரியவில்லை என்றாலும் பூடகமாக பல தகவல்கள் உலவுகின்றன.
குரானில் முகம்மது சாத்தான் கூறிய வசனங்களையும் சேர்த்து விட்டார் என்பது தான் அந்த நூலின் மையக் கருத்து என்கிறார்கள். அதேநேரம் குரானில் சாத்தானின் வசனங்கள் கலந்திருக்கின்றன எனும் கருத்து முகம்மதின் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.
சாத்தானின் வசனங்கள் எனும் கருத்துக்கு அடிக்கல் நாட்டிய வசனங்கள் இவை தான்,
நீங்கள் லாத்தையும் உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான மனாத்தையும், உங்களுக்கு ஆண்சந்ததியும் அவனுக்கு பெண் சந்ததியுமா? அப்படியானால் அது மிக்க அநீதியான பங்கீடாகும்.
இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை, நீங்களும் உங்கள் மூததையர்களும் வைத்துக் கொண்ட பெயர்கள். இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும் தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின்பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.
குரான் அத்தியாயம் நஜ்ம்53: வசனங்கள் 19-23
இந்த வசனங்களின் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், இன்னும் சற்று விபரம் தேவைப்படும். அல்லா என்பது முஸ்லீம்களின் கடவுளாக பொதுவாக அறியப்பட்டாலும், அல்லா எனும் அரபுச் சொல்லுக்கு கடவுள் என்று மட்டுமே பொருள்.
அதாவது தமிழில் உள்ள கடவுள், இறைவன், ஆண்டவன் என்பதைப் போல பொதுவான சொல் தான் அல்லா என்பது. முகம்மது அல்லா எனும் பெயரில் தனியாக ஒரு கடவுளை உருவாக்குவதற்கு முன்புவரை அல்லா என்பதற்கு பொதுவான கடவுள் என்பது தான் பொருளாக இருந்தது.
அதேநேரம் தனிப்பட்ட கடவுளர்கள் பலரும் அன்றைய அரேபியாவில் இருந்தனர். அவ்வாறான தனிப்பட்ட கடவுளர்களில் மூன்று தான் லாத், உஸ்ஸா, மனா என்பவை. மூன்றும் பெண்பாற் கடவுள்கள்.
அன்றைய அரேபியாவில் காஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த முன்னூற்றுக்கும் அதிகமான கடவுற் சிலைகளில் மேற்கூறப்பட்ட மூன்று பெண்பாற்கடவுளர்கள் அடக்கம் யாவும் மெய்யான தெய்வங்களல்ல, அவைகளெல்லாம் நீங்கள் உங்கள் முன்னோர்களும் பொய்யாக புனைந்த பெயர்களேயன்றி வேறில்லை.
இது குறித்து என்னிடமிருந்து(முஸ்லீம்களின் அல்லா) அவர்களுக்கு நேரான வழி(அவைகளெல்லாம் மெய்யான தெய்வங்களல்ல என்று) வந்திருந்தும், மீண்டும் தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றி அவைகளை தெய்வமாக்கிக் கொண்டார்கள். இது தான் அந்த வசனங்களின் பொருள்.
இப்போது ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.
நபி அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லீம்களும், இணை வைப்பவர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். புஹாரி 1071
இந்த ஹதீஸின் விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன் சஜ்தா என்றால் என்ன? சஜ்தா வசனங்கள் என்றால் என்ன? என்பனவற்றை அறிந்திருத்தல் அவசியம். சஜ்தா என்பது வணக்கம் செலுத்தும் ஒரு முறை. உடலின் ஏழு இடங்கள் இரண்டு உள்ளங்கைகள், இரண்டு கால்முட்டுகள், இரண்டு கால் பெருவிரல்கள், நெற்றி ஆகியவை நிலத்தில் படும்படி வணங்குவது சஜ்தா.
குரானில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட சில வசனங்களை ஓதும் போதோ அல்லது ஓதுவதை கேட்கும் போதோ சஜ்தா செய்ய வேண்டும் என்பது முகம்மதின் கட்டளை. அப்படி அவர் சஜ்தா செய்யுமாறு பணித்த வசனங்கள் சஜ்தா வசனங்கள் எனப்படுகின்றன.
இந்த சஜ்தா வசனங்கள் குரானில் இடம்பெற்றிருக்கும் இடங்கள் நான்கிலிருந்து பதினைந்து வரை அவரவர் இருக்கும் குழுக்களுக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடுகிறது. அது எத்தனை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படியான சஜ்தா வசனங்களில் ஒன்று தான் மேற்கண்ட நஜ்மு அத்தியாய வசனங்கள்.
இப்போது அந்த ஹதீஸுக்கு திரும்புவோம். மக்காவில் மக்கள் மத்தியில் அமர்ந்திருக்கும் முகம்மது நஜ்மு அத்தியாயத்தின் வசனங்களை ஓதி சஜ்தா செய்கிறார், அவருடன் இருந்த முஸ்லீம்களும் சஜ்தா செய்கின்றனர். இதுவரை பிரச்சனை ஒன்றுமில்லை.
ஆனால் அந்த ஹதீஸ் முகம்மதும் முஸ்லீம்களும் மட்டுமல்ல, இணை வைப்பவர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தா செய்தனர் என்று குறிப்பிடுகிறது.
ஏன்? முஸ்லீம்களைத் தவிர ஏனையோர் சஜ்தாச் செய்வதற்கு அந்த வசனங்களில் என்ன இருக்கிறது? முஸ்லீம்களைத் தவிர ஏனையோரை அந்த வசனங்கள் கண்டிக்கிறது, விமர்சிக்கிறது. தங்களைக் கண்டிக்கும் விமர்சிக்கும் வசனங்களுக்கு ஏன் அந்த மக்கள் சஜ்தா செய்தனர்? இது முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்விக்கு விடை கிடைக்க வேண்டுமானால் அந்த வசனத்தின் பின்னணியை நாம் அறிந்தாக வேண்டும்.
மக்காவில் முகம்மது தன்னுடைய கொள்கைகளை பரப்புரை செய்கிறார். அவருக்கு சொற்பமான ஆதரவும் பலமான எதிர்ப்பும் நிலவுகிறது. இதனால் மக்களை தன்னுடைய கொள்கையின்பால் ஈர்ப்பதற்கு சில உத்திகளைக் கையாள்கிறார்.
அவர்களது நம்பிக்கைக்கு இசைவான சிலவற்றை தம்முடைய கொள்கையில் ஏற்றுக் கொள்ளும் போது அவர்கள் புதுக் கொள்கையை ஏற்றுக் கொள்வார்கள் எனும் எண்ணத்தில் சிலவற்றை ஏற்றுக் கொள்தல்.
இந்தியாவில் பார்ப்பனிய இந்து மதம் பௌத்த சார்வாக மதங்களை இந்த முறையில் உண்டு செரித்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதே அடிப்படையில் தான் அந்த நஜ்ம் அத்தியாய வசனங்கள் கூறப்பட்டன.
நீங்கள் லாத்தையும் உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான மனாத்தையும், அவை பரிசுத்தமான வெண்மை நிறப் பறவைகள். அவைகளின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
என்று தான் முதலில் அந்த வசனங்கள் இருந்திருக்கின்றன. இந்த விபரங்கள் புஹாரி, முஸ்லிம் போன்றவற்றை உள்ளடக்கிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தொகுதிகள் எனப்படும் ‘ஸ்ஹீஹ் சித்தா’ எனும் ஆறு நூல்களைவிட காலத்தால் முந்திய இப்னு இஸாக், அல் தபரி போன்ற முகம்மதின் வரலாற்றை விவரிக்கும் நூல்களில் காணக் கிடைக்கின்றன.
இதனால் தான் அந்த வசனங்கள் வெளிப்பட்டு சஜ்தா செய்தவுடன் இணை வைப்பவர்களும்கூட தம்முடைய தெய்வங்களை முகம்மதின் கொள்கை ஏற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் அந்த வசனங்களுக்கு அவர்களும் மண்ணில் விழுந்து சஜ்தா செய்திருக்கிறார்கள்.
இதன் பிறகு மக்காவின் ஒரு பிரிவினர் முகம்மதை ஏற்றுக் கொண்டனர் எனும் செய்தி பரவுகிறது. இதனால் மக்காவினர் தாக்கக் கூடும் எனும் அச்சத்தில் தூர இடங்களுக்கு பெயர்ந்து சென்றிருந்த முகம்மதியர்கள் திரும்பி வர எத்தனிக்கிறார்கள்.
ஆனால் மக்காவாசிகள் முழுமையாக முகம்மதின் கொள்கையை ஏற்றுக் கொண்டார்களா? அதில் ஏதும் சிக்கல் ஏற்பட்டதா? மீண்டும் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பிவிட்டார்களா? போன்ற விரங்கள் விரிவாக இல்லை. இதன் பிறகு தான் முகம்மது அந்த வசனத்தை இப்போதிருப்பது போல் அவர்களுக்கு ஆண் சந்ததியும் எனக்கு பெண் சந்ததியுமா? என மாற்றுகிறார்.
இது குரானில் இடம்பெற்றிருக்கும் ஒரேயொரு தனிச் சிறப்பான சம்பவம் அல்ல. இது போன்று வேறொரு நிகழ்சியும் நடந்திருக்கிறது. முஸ்லீம்கள் இன்று அவர்கள் உலகின் எங்கு இருந்தாலும் காஅபா எனும் ஆலயத்தை நோக்கி தொழுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் தொடக்கத்தில் அவர்கள் நோக்கித் தொழுத இடம் ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித்தான். இதன் மூலம் யூதர்கள் பெருமளவில் தன்னுடைய கொள்கையை நோக்கி கவரப்படுவார்கள் என்று முகம்மது எண்ணியிருந்தார்.
ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறாததால் திசையை மாற்றி இன்றிருப்பது போல் காஅபா ஆலயத்தை நோக்கி திருப்பினார். இந்த விபரங்கள் குரான் வசனங்களிலேயே (2:142,143,144) இருக்கிறது.
இப்படி முகம்மது கால, சூழல் வர்த்தமானங்களுக்கு ஏற்ப தான் கூறிய வசனங்களை பின்னர் தானே மாற்றியதைத்தான், சைத்தான் முதலில் முகம்மதிடம் தவறான வசனங்களைப் போட்டு பின்னர் அதை அல்லா திருத்தியதாக கதை கட்டி விட்டனர்.
ஏனைய ஆப்ரஹாமிய மதத்தவர்கள் இஸ்லாத்தை தாக்குவதற்காக இந்த வசனங்களைப் பயன்படுத்திக் கொண்டாலும்; குரான் என்பது முகம்மது தன்னுடைய தேவைகளை ஒட்டி தானே அமைத்துக் கொண்டது தான் என்பதற்கு இந்த வசனங்கள் தூலமான சான்றுகளாக இருக்கின்றன.