அண்மையில் ஸ்கொட்லாந்தில் நடந்த பொதுவாக்கெடுப்புடன் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தொடர்புபடுத்தி பல் வேறு கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்டது போன்றதொரு பொதுவாக்கெடுப்பு, வடக்கு கிழக்கிலும் நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழர்களுக்குத் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு சாரார் வலியுறுத்துகின்றனர்.
இன்னொரு தரப்பினர், உச்சபட்சமான அதிகாரப்பகிர்வு பிரிவினையைத் தடுக்கும் என்பதால், அத்தகைய அதிகாரப் பகிர்வை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
வெளிப்படையாகச் சொல்வதானால், தனிநாட்டுக் கோரிக்கை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது முதற்சாராரின் கோரிக்கை.
நாடு பிரிவதைத் தடுப்பதற்கு அதிகாரப்பகிர்வு அவசியம் என்பது இரண்டாவது சாராரின் கோரிக்கை. இந்த இரண்டு சாராரும், தமது நிலைப்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் விதத்தில் ஸ்கொட்லாந்தின் பொது வாக்கெடுப்பு பற்றிய விவகாரத் தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஸ்கொட்லாந்தில், வலுப்பெற்று வந்த தனிநாட்டுக் கோரிக்கையை அங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்த பொதுவாக்கெடுப்பின் மூலம் நிராகரித்துள்ளனர்.
அதுபோலவே, இலங்கையில் உள்ள தமிழர்களும், தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கமாட்டார்கள் என்றும், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அவர்கள் பிரிவினைக்கு எதிராகவே வாக்களிப்பர் என்றும் பி.பி.சிக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இலங்கை அரசாங்கம் இதுபற்றிப் பெரிதான எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. அவ்வாறு கருத்து முன்வைக்கப்படுவது தனக்கு ஆபத்தாகிவிடும் என்று உணர்ந்து கொண்டு இந்த விவகாரத்தில் அடக்கி வாசிக்கிறது.
இதுவே வேறொரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால், ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினைக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை மிகப்பெரிய பிரசாரமாக மாற்றியிருக்கும் அரசாங்கம்.
ஆனால், அவ்வாறானதொரு கருத்தை முன்வைக்கப் போனால், ஸ்கொட்லாந்து மக்களுக்கு அளிக்கப்பட்டது போன்று, தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் வாய்ப்பை இலங்கை அரசும் வழங்கலாமே என்ற கருத்தும் வாதமும் முன்வைக்கப்படும்.
எனவே தான், அத்தகைய சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளாமல் அரசாங்கம் தவிர்த்துக் கொண்டது. ஆனாலும், ஸ்கொட்லாந்து பொதுவாக்கெடுப்புக்கு முன்ன தாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் ெகமரூன், ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தால், அது வலிமிக்க முடிவாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
அதுகுறித்து அமைச்சர் டலஸ் அழகப் பெரும குறிப்பிடுகையில், டேவிட் கெம ரூன் இலங்கையில் பிரிவினைக்கு ஆதரவு அளித்தவர் என்றும், அப்போது நமக்கு ஏற்பட்ட வலியை இப்போது அவர் உணர்ந்து கொள்வார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானியாவும் சரி, இலங்கையும் சரி, பிரிவினைக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் கூட, ஸ்கொட்லாந் தும், இலங்கையில் தமிழர் பகுதிகளும் வரலாற்று ரீதியாக ஒன்றாக இணைந்திருந்தவையல்ல.
இரண்டுமே தனியாட்சி இடம்பெற்ற பகுதிகள் என்பதும், பிரித்தானியாவினால் ஒன்றிணைக்கப்பட்டவை என்பதும், முக்கியமானது. ஸ்கொட்லாந்து மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்தால், அவர்கள் பிரிவினையை ஆதரிக்கமாட்டார்கள் என்று ராஜவிசுவாசத்துடன் கூறியிருக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஆனால், ஸ்கொட்லாந்து மக்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு, ஒருபோதும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வழங்கப்படப் போவதில்லை என்பது தான் உண்மை.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்து தமிழ்நாட்டில் வலுப்பெற்றுள்ளது.
அதுதொடர்பாக தமிழ்நாடு சட்டசபை யில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. இன்னமும் கூட, தனிநாடு தான் தீர்வு என்ற நிலையில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் கூட, இந்தப் பொதுவாக்கெடுப்பு பற்றிய கருத்து நிலையில் தான் இருக்கின்றனர்.
எனினும், ஸ்கொட்லாந்து போன்று தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை அரசாங்கம் ஒருபோதும், ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் பிரிவினையை ஆதரிக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகின்ற அளவுக்கு, அரசாங்கத்தில் உள்ள எவரும், அவ்வாறு நம்பப் போவதில்லை.
தமிழர்கள் பிரிவினையை ஆதரிக்கமாட்டார்கள் என்று அரசாங்கம் நூறு வீதம் உறுதியாக நம்பினால் கூட, பொதுவாக்கெடுப்புக்கு இணங்காது.
ஏனென்றால், அவ்வாறு ஒரு பொதுவாக்கெடுப்பை நடத்துவது, தமிழர்களின் சுயநிர்ணய உரி மையை சர்வதேச அளவில் ஏற்றுக்கொண்டதாகி விடும். அதாவது தமிழர்கள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள் என்பது உலகறி யச் செய்யப்பட்டு விடும்.
வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் அதை வைத்தே, அவர்கள் தனியான படையை உருவாக்கி, தனிநாட்டை அமைத்து விடுவார்கள் என்று போலியான நியாயம் கற்பிக் கும் அரசாங்கம், எவ்வாறு தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த முன்வரும்? என்று சிந்திக்க வேண்டும்.
மாகாணசபை ஒன்றுக்கான அதிகாரங்களையே பகிர்ந்து கொடுக்க மனமில்லாது – இல்லாத காரணங்களைக் கூறி அதிகாரப்பகிர்வை நிராகரித்து வருகின்ற அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வழங்குவதற்கு மட்டும் முன்வரும் என்று எதிர்பார்ப்பது மடமை.
பிரித்தானியா, பிரிவினையை விரும்பாத போதும், ஸ்கொட்லாந்து விடயத்தில் கனவானாக நடந்து கொண்டது என்பது உண்மை. அதற்கு நீண்ட போராட்டங்களை ஸ்கொட்லாந்து முன்னெடுத்தது என்பது வேறு விடயம்.
அதுபோலவே, இலங்கையிலும் தமிழர்கள் பிரிந்து போவதை, அரசாங்கம் விரும்பினாலும் சரி, விரும்பாது போனாலும் சரி, பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தும் அளவுக்கு சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் இறங்கிவரப் போவதில்லை.
சர்வதேச தலையீடு ஒன்றில்லாமல், இலங்கை அரசாங்கமாக இத்தகையதொரு பொதுவாக்கெடுப்பை நடத்தும் முடிவை எடுக்கின்ற சூழ்நிலை ஏற்படுமாக இருந் தால், அது நிச்சயம் இலங்கையில் புதிய அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தான் அர்த்தம்.
கொழும்பின் தற்போதைய அரசியல் போக்கு, ஒருபோதும் பொதுவாக்கெடுப்புக்குச் சாதகமானதாக இருக்காது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூட, பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகையதொரு பொதுவாக்கெடுப்பை முன்னரே நடத்தியிருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதி மிக்க சொத்துக்களையும் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கருத்தில் உண்மை இருந்தாலும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் மறுத்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்பதே முக்கியமானது.
இப்போதும் கூட, தமிழர்களுக்கு தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை தான் முக்கியமானதே தவிர, அவர்களுக்கான தீர்வு என்ன என்பது அல்ல.
சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு விட்டால், அவர்கள் பிரிந்து போவதா- இணைந்து வாழ்வதா என்பதை தீர்மானித்துக் கொள்ளும் உரிமை தானாகவே வந்து விடும். ஆனால், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளும் மனோநிலை கொழும்பு ஆட்சியாளர்களிடம் ஒருபோதும் வரப்போவதில்லை. இந்தக் கட்டத்தில், இன்னொரு விடயமும் நடந்திருக்கிறது.
தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொதுச்செயலாளரான, மாவை சேனாதிராசா, உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசி ஒன்றில், தனிநாட்டுக் கோரிக்கையை தாம் வலியுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள், தனிநாட்டுக் கோரிகையை வலியுறுத்துவதாக தொடரப்பட்ட ஒரு வழக்கிலேயே, அவர் இந்த சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சிமுறையையே வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதே கருத்தை அண்மையில் சென்னையிலும் வலியுறுத்தியிருந்தார். அப்போது புலம்பெயர் தமிழர்களில் சிலர், தமிழீழத்தைக் கைவிட்டு விட்டதாக சம்பந்தன் கூறியதைக் கண்டித்திருந்தனர்.
அதுபோலவே, மாவை சேனாதிராசாவின் இப்போதைய சத்தியக்கடதாசிக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பலாம்.
ஆனால், உள்ளூரில் நின்று அரசியல் செய்யும் எவராலும், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க முடியாது என்ற யாதார்த்தத்தைக் கூட பலரும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.
தனிநாட்டுக் கோரிக்கை எந்தளவுக்கு உலகளவில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளாமல் செயற்பட்டால், நிலையானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு சாத்தியப்படாது.
ஏனென்றால், பொதுவாக்கெடுப்பு ஒன்றின் ஊடாக தமிழர்கள் தமது விருப்பத்தை வெளியிடும் உரிமையைக் கூட இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
இலங்கை பிரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நாட்டைக் கூட விரல் விட்டுச் சுட்டிக்காட்ட முடியாது.
இரா.சம்பந்தன் குறிப்பிட்டதைப் போல, அதிகபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டால், மக்கள் பிரிவினையை நிராகரிப்பார்கள் என்ற கருத்துக்கு வலுவூட்டப்படும் போது, அதிகாரப்பகிர்வுக்கான ஆதரவு அதிகரிக்கலாம்.
ஸ்கொட்லாந்து மக்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் தான், அவர்கள் பிரிந்து செல்ல விரும்பவில்லை.
அதுபோலவே தமிழர்களும் பிரிந்து செல்வதை தடுக்க வேண்டும் என்றால், அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து சிங்கள மக்களிடத்தில் வலுவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அங்கிருந்து இத்தகைய கருத்தும் நம்பிக்கையும் கட்டியழுப்பப்பட்டால் தான், இலங்கை அரசாங்கத்தை அதிகாரப்பகிர்வை நோக்கி நகர வைக்க முடியும். அதேவேளை, குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட விட்டுத் தராத ஒரு அரசாங்கம் இருக்கும் வரை, எத்தனை சத்தியக்கடதாசிகளை சமர்ப்பித்தாலும், தமிழர்களிடத்தில் இருந்து பிரிவினைச் சிந்தனை முற்றாக நீங்கி விடும் என்று கூறமுடியாது.
ஏனென்றால், பிரிவினைக்கான உந்துதல், அதிகாரப்பகிர்வு மறுப்பில் இருந்து தான் தொடங்குகிறது, அடக்கப்படுவதில் இருந்தே ஆரம்பிக்கிறது. இந்த உண்மை தெற்கில் உணரப்படாதவரை, இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது வரப்போவதேயில்லை.
எஸ்.கண்ணன்