சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை வந்திருந்த போது, அவருக் குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவு விநியோக போர்க்கப்பல் ஒன்றும், அதிநவீன நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்ததாகக் கூறப்படும் விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
சீன ஜனாதிபதி கொழும்பு வரமுன்னரே, இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன ஜனாதிபதி கொழும்பை விட்டுப் புறப்பட்ட பின்னர் தான், இவையும் கிளம்பிச் சென்றனவாம். சீன ஜனாதிபதி வந்திருந்த போதே, இந்த நீர்மூழ்கியின் வருகை குறித்து இணைய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், அதனை இலங்கைக் கடற்படை உறுதிப்படுத்தவில்லை. எனினும், கொழும்புத் துறைமுகத்தில் சீனாவினால் கட்டப்பட்ட கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த இரண்டு போர்க்கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
அதுபற்றிய ஒளிப்படங்களும் கூட வெளியாகியுள்ளன. எனினும், கொழும்புக்கோ, திருகோணமலைக்கோ வரும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் பற்றிய பதிவுகளை மறைக்காமல் உடனுக்குடன் வெளியிட்டு வரும் இலங்கைக் கடற்படை, சீனாவின் முக்கியமான நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் விநியோக போர்க்கப்பல் ஆகியவற்றின் வருகை தொடர்பில் எதுவும் கூறவில்லை.
சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேரும் வரை அதுபற்றிய தகவல்கள் இலங்கைக் கடற்படைக்குக் கூடத் தெரியாது என்றும் கூறப்பட்டது.
இது எந்தளவுக்கு உண்மை என்ற கேள்வி இருந்தாலும், சீன ஜனாதிபதிக்கான பாதுகாப்புத் திட்டங்களை இலங்கையும் கூட முழுமையாக அறிந்திருக்காது என்பதில் சந்தேகமில்லை. முக்கியமான தலைவர்களுக்கு வெளிநாடுகளில், வெளியில் தெரியாத பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமே.
எனினும், கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி தரித்து நின்ற விவகாரம் அதற்கு அப்பாற்பட்டதாக பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர், 500 மில்லியன் டொலர் செலவில் கொழும் புத் துறைமுகத்தில் சீனா கட்டிக் கொடுத்த கொள்கலன் இறங்குதுறை, சீனப் போர்க்கப்பல்கள் தரித்திருப்பதற்கு வசதியாகி விட்டது.
இந்த கொள்கலன் இறங்குதுறையின் 85சத வீத உரிமை சீனாவுக்கே உள்ளது, எஞ்சிய 15 சத வீதம் மட்டுமே இலங்கைக்குச் சொந்தம்.
எனவே இந்த இறங்குதுறையில் சீனப் போர்க்கப்பல்களால் எந்தச் சிக்கலுமின்றி, தரித்து நிற்க முடியும். இங்குமட்டுமல்ல, ஹம்பாந்தோட்டையிலும் இதே கதிதான்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் எக்சிம் வங்கியின் 808 மில்லியன் டொலர் கடனுதவியில் இரண்டாவது கட்ட கொள்கலன் முனையம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில், ஏழு இறங்குதுறை மேடைகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில், நான்கு இறங்குதுறை மேடைகள் 35 ஆண்டுகளுக்கு சீனாவின் வசமே இருக்கப் போகிறது.
இதன் வருமானத்தில், 53 சத வீதம், சீனாவுக்கும், 47 சத வீதம் இலங்கைக்கும் பகிரப்படும். சீன ஜனாதிபதியின் வருகையின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு இது.
கொழும்பில் அமைக்கப்படவுள்ள துறைமுக நகரத்திலும் கூட 20 ஹெக்ரெயர் நிலம் முற்றிலும் சீனாவுக்கே சொந்தமாகப் போகிறது. மேலும், 88 ஹெக்ரெயர் நிலம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது.
இவையெல்லாமே, சீனாவின் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வசதியான விடயங்கள்.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா அமைத்த போது, அதில் எந்தப் பாதுகாப்பு நலனும் கிடையாது என்றும், முற்றிலும் வர்த்தக நோக்கம் கொண்டது என்றும் சீனாவும் இலங்கை அரசும் கூறின.
அதுபோலவே, கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையக் கட்டுமானத்தின் போதும் கூறப்பட்டது. ஆனால், கொழும்புத் துறைமுக கொள்கலன் முனையத்தில், சீனப் போர்க்கப்பல்கள் வந்து தரித்து நின்று விட்டுச் சென்ற விவகாரத்தில் இருநாடுகளுமே வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை.
அதாவது, இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லையென்றால், பகிரங்கமாகவே இரு நாட்டு அரசாங்கங்களினாலும் கூறியிருக்க முடியும்.
இந்த விவகாரம் சர்ச்சையாக எழுந்த பின்னர், தான் சீனா வாய் திறந்தது.
அதுவும், கடந்த 25ஆம் திகதி பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மூத்த கேர்ணல். ஜெங்யன்செங்கிடம், செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய பின்னரே, சீன நீர் மூழ்கி கொழும்புத் துறைமுகம் சென்றது என்பதை சீனா ஒப்புக்கொண்டது.
ஆனால், இலங்கை இன்னமும் இதனை ஒப்புக் கொள்ளவில்லை.
சீன ஜனாதிபதி கொழும்பு வருவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே கடந்த 7ஆம் திகதி கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்துக்கு வந்து சேர்ந்து விட்ட, சீன கடற்படையின், 861ஆம் இலக்க போர்க்கப்பலும், 329ஆவது இலக்க நீர்மூழ்கியும், கடந்த 13ஆம் திகதியே இங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.
சீன ஜனாதிபதியின் பயணத்துடன் இவற்றின் கொழும்புக்கான பயணம் முடிந்து விடப் போவதில்லை.
இந்த சீனப் போர்க்கப்பல்கள் மீண்டும் வரும் ஒக்ரோபர் மாதமும், நவம்பர் மாதமும் கொழும்பு வரவுள்ளதாகவும், அதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கொழும்புக்கு வந்தது, சீனக் கடற்படையின் சாங்செங்-2 (Changzheng 2), என்ற 091 ரக ஹன் வகை அணுசக்தி நீர் மூழ்கியே (Type 091 Han- class nuclear -powered submarine) என்று இணையத்தளம் ஒன்று படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது.
சீனக் கடற்படையின் வடகடல் கப்பல் பிரிவைச் சேர்ந்த சாங்செங்-2 நீர்மூழ்கி C-801 ரகத்தைச் சேர்ந்த கப்பல்களுக்கு எதிரான ஏவுகணை தாங்கியது என்பதும், 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த நீர்மூழ்கி சீனக் கடற்படையால் அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று சீன செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. உண்மையில் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது, சொங் (song) வகையைச் சேர்ந்த 039 வகையைச் சேர்ந்த மரபுசார் நீர்மூழ்கியே என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
இதனுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த போர்க்கப்பல், வடக்கு கப்பல் படையிலுள்ள நீர்மூழ்கி மீட்புக் கப்பலான சங்சிங்டாவோ (Changxingdao) தான் என்றும் அந்த தகவல் கூறுகிறது.
அதுமட்டுமன்றி, இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடு ஒன்றுக்கு, சீன நீர்மூழ்கி ஒன்று வெளிப்படையான பயணத்தை மேற்கொண்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும் என்கிறது, வெளிநாட்டில் இருந்து சீனர்களால் இயக்கப்படும் டோவெய் நியூஸ் என்ற இணையத்தளம்.
கொழும்புக்கு வந்த நீர்மூழ்கியின் முழுப் பெயர் பெருஞ்சுவர் இல.329 (Great Wall No.329) ஆகும். இவை நேட்டோ நாடுகளால், சொங் வகை (Song” class) என்று அழைக்கப்படுகின்றன. சீனாவின் இரண்டாந்தலைமுறை மரபுசார் நீர் மூழ்கியான இவை, சீனாவினால் சொந்தமாக வடிவமைத்துக் கட்டப்பட்டது.
இந்த நீர்மூழ்கி 74.90 மீற்றர் நீளத்தையும், டீசல் இலத்திரனியல் இயந்திரத்தையும். 60 கடற்படையினர் இதில் பணியாற்றுகின்றனர்.
கிலோ வகையை (Kilo- class) சேர்ந்த 039ஏ (type- 039A) வகை மற்றும் 039பி வகை (type- 039B) மரபுசார் நீர்மூழ்கிகளை அண்மைய ஆண்டுகளில் சீனக் கடற்படை, பெற்றுள்ள போதிலும், 039 வகை நீர் மூழ்கிகளே இன்னமும், சீன நீர்மூழ்கிப் படையின் முக்கியமான அங்கமாக இருந்து வருகிறது.
இது தெற்காசியா வில் ஆயுதப் போட்டியை அதிகரிப்பதற்கான சீனாவின் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டுத் திரும்பிய சீன அதிபர் ஷி ஜின்பிங், பிராந்தியப் போரை எதிர்கொள்ள சீனப்படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று எச்ச ரிக்கையை விடுத்திருக்கிறார்.
அதற்கு முன்னர் தான், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது. இதன்மூலம், இலங்கையில் சீன ஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக இந்தியா கவலை கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் மட்டுமன்றி, பங்களாதேஷையும் மாலைதீவையும் கூட, வளைத்துப் போட்டுள்ளது சீனா.
பங்களாதேஷில் சிட்டகொங் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனைத் தன் கைக்குள் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனா, எல்லை மோதலைக் கொண்டிராத பங்களாதேஷுக்கு சொங் வகையைச் சேர்ந்த நான்கு நீர்மூழ்கிகளை வழங்கப் போகிறது.
சீனா நீர்மூழ்கிகளின் பலத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது. சீனாவிடம் 8 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள், 51 மரபுசார் தாக்குதல் நீர்மூழ்கிகள். 6 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிகள் இருக்கின்றன.
இந்தியாவிடமோ, ஒரேயொரு அணுசக்தி நீர்மூழ்கி உள்ளிட்ட 14 நீர்மூழ்கிகள் தான் இருக்கின்றன. எனவே, இந்தியா தனது நீண்ட கடற்பகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, ரஷ்யாவிடம் இருந்து நீர்மூழ்கிகளை அவசரமாக பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
ஆனால், இது தாமதமான முடிவாகவே தெரிகிறது. ஏனென்றால், இதற்கு முன்னர், சீன நீர்மூழ்கிகள் இந்தியப் பெருங்கடலில் வெளிப்படையாக நடமாடவில்லை. இந்தியாவுக்கு அருகே சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாகவும், இலங்கையும் அதற்கு ஒத்துழைப்பதாகவும் முன்னர் இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தது.
இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. சீன நீர்மூழ்கிகள் அதிகாரபூர்வமாகவே இந்தியப் பெருங்கடலில் மட்டுமன்றி, இலங்கையிலும் சஞ்சாரம் செய்யத் துவங்கியுள்ளன. இது இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்க விரிவாக்கம் என்ற குற்றச்சாட்டை சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மூத்த கேணல் ஜெங் யன்செங் நிராகரித்திருக்கிறார்.
சீன நீர்மூழ்கி, கொழும்பு சென்றது உண்மை தான், அது ஏடன் வளைகுடா வில் சோமாலியா அருகே, கடற் கொ ள்ளையர்களிடம் இருந்து கப்பல்களு க்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட் டுள்ளது. விநியோகத் தேவைக்காக கொழும்பு சென்றது.
இவ்வாறான தேவைக்காக அருகி லுள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்வது வழக்கமே என்று அவர் நியா யப்படுத்தினார். சீன நிர்மூழ்கிகள், விநியோகத் தேவை க்காகவே கொழும்பு வந்தது உண்மை யென்றால், ஏன் அதை மறைக்க வேண்டும்?
ஏனைய நாட்டுப் போர்க்கப்பல்கள் கொழும்பு வரும்போதெல்லாம், பெரும் வரவேற்பு அளிக்கப்படுவது போலவே, வெளிப்படையான வரவேற்பை அளித் திருக்கலாம். அது தான் வெளிப்படை யான அணுகுமுறை. ஆனால், சீனா தனது நோக்கத்தை மறைப்பதற்கு சோமாலிய கடற்கொள்ளையர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது இந்தி யாவுக்கு எழுந்துள்ள மிகப் பெரிய பாது காப்புச் சவால்.
மோடி அரசாங்கம் ஒருபுறத்தில் சீனா வுடன் கைகுலுக்கிக் கொண்டாலும், இந்தியாவை சுற்றிவளைப்பதில் சீனா குறியோடு இருக்கிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.