புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டுடனான உறவுகளைத் துண்டித்து விடுங்கள் என்று இரா.சம்பந்தனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியதாக, சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் சந்தித்துப் பேசிய பின்னரே, அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
முன்னரைப் போல, சுப்பிரமணியன் சுவாமி கூறிய அந்தச் செய்தி பெரும்பாலும் தமிழ் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.
ஆனால், இலங்கையில் உள்ள சிங்கள, ஆங்கில ஊடகங்கள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.
நினைத்த நேரத்தில் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியப் பிரதமரை சந்தித்து விட முடியாது என்றும், இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தால் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவர்களைச் சந்திப்பார் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் வைத்து கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு கூறிய இரண்டு நாட்களிலேயே, மோடியைச் சந்திக்க புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்.
இவ்வாறு கூறப் போய், இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையிலுள்ள தூரம் – இடைவெளி எவ்வளவு என்பதை தானாகவே வெளிக்காட்டியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இதற்குப் பின்னர் தான் சுவாமியின் உயரம் எவ்வளவு என்பதை பல்வேறு ஊடகங்களும் புரிந்து கொண்டன என்பது மிகையல்ல.
அதற்கு முன்னதாக, மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கொழும்பில் வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே செய்தன.
ஆனால், கூட்டமைப்பின் புதுடில்லிப் பயணத்துடன், சுப்பிரமணியன் சுவாமி பற்றி இலங்கை ஊடகங்களில் நிலவிய ஒரு மிகையான மாயையும் உடைந்து போனது.
புலம்பெயர் தமிழர்களுடனான தொடர்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்த கருத்து எந்தளவுக்கு உண்மையானது என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
ஏனென்றால், புலம்பெயர் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா மென்போக்கை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவே கருதத் தோன்றுகிறது.
அதற்குத் தெளிவானதொரு ஆதாரமாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திராவுக்கு இந்தியா விசா வழங்கியதைக் குறிப்பிடலாம்.
உலகத் தமிழர் பேரவை, விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகவே இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இதுவும் இடம்பெற்றுள்ளது.
அதுபோலவே தீவிரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தடைப்பட்டியலில், சுரேன் சுரேந்திராவும் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், உலகத் தமிழர் பேரவையை பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களின் தரப்பில் பேசும் தரப்பாகவே கருதி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னரும் கூட பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் ஹியூகோ சுவையர், உலகத் தமிழர் பேரவையின் ஒரு அங்கமான பிரித்தானிய தமிழர் பேரவை பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அதுமட்டுமன்றி அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, இந்த அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து இரகசியப் பேச்சு நடத்தியதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகிறது.
உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா அண்மையில், சென்னைக்கு பயணம் மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் விசா வழங்கியதை, இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியுடன் தான் கவனித்துள்ளது.
ஏனென்றால், முன்னர், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. எஸ்.ஜே.இம்மானுவல் அடிகளார் இந்தியாவுக்கு செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
அப்போது காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. இப்போது பா.ஜ.க. அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது.
சுரேன் சுரேந்திராவுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்த விவகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு செய்திகளைக் கூறியுள்ளது.
அதில் முக்கியமான விடயம், இலங்கை அரசாங்கத்தின் எல்லா நகர்வுகள், நடவடிக்கைகளையும் இந்தியா ஆதரிக்காது, என்பதேயாகும்.
ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கை அரசாங்கம் நிராகரித்த பின்னணியில், அந்தக் குழுவுக்கு இந்தியாவும் அனுமதி மறுத்து விட்டதாக இலங்கை அரசாங்கமே ஒரு செய்தியைப் பரப்பியது.
எனினும், ஐ.நா. குழு இந்தியாவிடம் வீசாவுக்கு விண்ணப்பிக்கவேயில்லை என்று முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறிய பின்னர் தான் அந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டது.
இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தடைப்பட்டியலை இந்தியா செயற்படுத்தும் என்றே இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது.
இந்தியா மட்டுமன்றி எல்லா நாடுகளுமே இந்த தடைப்பட்டியலை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்த்தே இலங்கை அரசு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
ஆனால், ஏற்கனவே கனடா இதனை ஏற்கப் போவதில்லை என்று கூறிவிட்டது.
பிரித்தானியாவும் அதற்கு ஆதரவளிக்கவில்லை, தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைப்புகளுடன் அந்த நாடும் பேச்சு நடத்துகிறது.
அமெரிக்காவும் கிட்டத்தட்ட இதே பிரதிபலிப்பையே வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளும், இப்போது இலங்கை அரசுடன் நெருக்கமாக ஒட்டி உறவாடும் அவுஸ்ரேலியாவும் கூட, இந்த தடைப்பட்டியலை ஏற்கத் தயாராக இல்லை.
இந்தியா இந்த விடயத்தில் இதுவரையில் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமலேயே இருந்து வந்தது.
இலங்கை அரசு இந்த தடைப்பட்டியல் விவகாரத்தில் கூடுதலாக நம்பியிருந்தது, இந்தியாவைத்தான்.
அதனால், சுரேன் சுரேந்திராவுக்கு இந்தியா கதவைத் திறந்துவிட்டது, இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கும்.
இந்தியாவின் இந்த நகர்வுக்குப் பல்வேறு காரணங்களும் ஊகிக்கப்படுகின்றன. சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு கொழும்பில் இடமளிக்கப்பட்டதற்கான இந்தியாவின் பதிலடியே இது என்றும் சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மையானது என்பது கேள்விக்குரியது.
ஆனால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும், புலம்பெயர் தமிழர்கள் விவகாரத்தில் ஒருவித அச்சம் இருக்கவே செய்கிறது.
கிளிநொச்சியில், ஈழத்தைப் புலம்பெயர் தமிழர்கள் கைவிட்டால், தாமும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிக்கத் தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.
அதுபோலவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், புலம்பெயர் தமிழர்கள் பிரிவினையைக் கைவிட்டு, அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.
இலங்கையில் பிரிவினைக் கோரிக்கையை இந்திய அரசாங்கம் ஆதரிக்கவில்லை. அதற்கு புலம்பெயர் தமிழர்கள் பின்னிற்பதையும், இந்தியா விரும்பவில்லை. அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தோற்றம்பெறும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறும் நொண்டிச்சாட்டையும் இந்தியா ஏற்கவில்லை.
அண்மையில், கொழும்பு வந்திருந்த பா.ஜ.க.வின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், வெளிநாட்டு விவகாரங்களுக்கான பூகோள அமைப்பாளருமான விஜய் ஜோலி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவெடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக தெரிவித்திருந்தார்.
எனவே, புலம்பெயர் தமிழர்களை தமது பக்கம் கொண்டு வந்து அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஒத்துழைக்கச் செய்வதற்கு இந்தியா விரும்புவதாகத் தெரிகிறது.
புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு தவறானதல்ல என்றும், விஜய் ஜோலி குறிப்பிட்டிருந்தார்.
பா.ஜ..க. அரசாங்கம், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்திய வம்சாவளியினருடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருக்கிறது.
அதுபோலத் தான், புலம்பெயர் தமிழர்களுக்கும், இலங்கை அரசியலில் கவனம் செலுத்துவதற்கும் உறவுகளை வைத்திருப்பதற்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால், இது இலங்கை அரசாங்கத்துக்கு ஒருபோதும் இனிப்பான செய்தியாக இருக்காது.
ஏனென்றால், இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, புலம்பெயர் தமிழர்களைப் புலியாக்குவதிலேயே அரசாங்கம் முனைப்புடன் உள்ளது.
புலம்பெயர் தமிழர்களுடன் இந்தியா உறவுகளை ஏற்படுத்தும் வெளிப்படையான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாத போதிலும், புலம்பெயர் தமிழர்களுக்குத் தனது நாட்டில் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க இந்தியா விரும்பவில்லை.
இது புலம்பெயர் தமிழர்களை முற்றிலும் புலியாகவே பார்க்கின்ற- பிரிவினைவாதிகளாகவே நோக்குகின்ற இந்தியாவின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே கருதலாம்.
இந்தியாவின் இந்த மாற்றத்துக்கு சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தை காரணமாக கூறுவதில் அர்த்தமில்லை.
இலங்கையின் எல்லா தாளத்துக்கும் இந்தியா ஆடாது என்ற இறுக்கமான போக்கின் வெளிப்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் தடை செய்த பட்டியலில் உள்ள புலம்பெயர் தமிழர்களை இந்தியா அனுமதிக்க எடுத்த முடிவு, நிச்சயம் இலங்கை அரசாங்கத்தை அதிகம் யோசிக்கவே வைத்திருக்கும்.
ஏனென்றால், இந்தியாவே இதனைச் செயற்படுத்த முன்வராத போது, ஏனைய நாடுகள் இதற்கு எவ்வாறு மதிப்புக் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆக, புலம்பெயர் தமிழர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்துக் கொண்டு நகர்வை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்துக்கு இந்த தடைப்பட்டியல் இப்போது புதிய பொறியொன்றை தான் உருவாக்கி விட்டுள்ளது.
இது இலங்கை அரசாங்கம் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட பொறியே தவிர. வேறெவரும் தேடிப் போய் வைக்கவில்லை.
-என்.கண்ணன்-
ஜனாதிபதி தேர்தலும் விடுதலைப் புலிகள் பற்றிய பேச்சுக்களும் -அ.நிக்ஸன்