இ ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்வார் என்று வெளியான ஊகங்களுக்கு, இந்தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்ஹா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விரைவில் பயணம் செய்வார் என்றாலும், உடனடியாக அத்தகைய பயணத்துக்கு வாய்ப்பில்லை என்று அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கூடிய விரைவில் கொழும்புக்கு அழைப்பதற்கு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டிருந்தது.
ஆனால், நரேந்திர மோடி பதவியேற்று, கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முடிந்து விட்ட பின்னரும், அயல் நாடுகளில் இருந்து ஐ.நா. வரையிலும் அவர் சென்று வந்து விட்ட போதிலும், கொழும்பை மட்டும் அவர் எட்டிப் பார்க்கவில்லை.
நரேந்திர மோடியை கொழும்புக்கு வரவழைப்பதில், இலங்கை அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், எந்தவொரு இந்தியப் பிரதமருமே, கொழும்புக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக இந்த இறுக்க நிலை நீடிக்கிறது. ராஜீவ்காந்திக்குப் பின்னர், வி.பி.சிங், சந்திரசேகர், தேவகௌடா, நரசிம்ம ராவ், இந்தர் குமார் குஜ்ரால், அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங், என்று இந்தியாவில் ஏழு பிரதமர்கள் வந்து போய் விட்டனர்.
இப்போது எட்டாவது பிரதமராக ஆட்சியில் இருக்கிறார் நரேந்திர மோடி. இவர்களில், அடல் பிகாரி வாஜ்பாய் 1998ஆம் ஆண்டும், மன்மோகன்சிங் 2008ஆம் ஆண்டும் சார்க் மாநாடுகளில் பங்கேற்பதற்காக மட்டும், கொழும்புக்கு வந்தனர். அது அரசுமுறைப் பயணமாக அமைந்திருக்கவில்லை. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பயணமாக இருக்கவில்லை.
ராஜீவ்காந்திக்குப் பின்னர் எந்தவொரு இந்தியப் பிரதமரும், இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளாதது இலங்கை அரசாங்கத்துக்குப் பெரியதொரு அழுத்தமாகவே இருந்து வருகிறது.
மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, கூறியிருந்தார். ஆனால், அந்தப் பயணம், நடக்கவேயில்லை.
அவர் பதவியிலிருந்த காலத்தில், இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்கவும், மஹிந்தராஜபக் ஷவும், அழைப்பு விடுத்த போதெல்லாம், அந்த அழைப்புகளை ஏற்றுக் கொண்டார். ஆனால் கடைசி வரையில், அவர் இலங்கைக்குப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.
2008ஆம் ஆண்டு சார்க் மாநாட்டுக்காக கொழும்பு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் கொழும்பு வருவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
கொழும்பில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் அவர் பங்கேற்க வேண்டிய நிலையில் இருந்தார்.
ஆனால், தமிழ்நாட்டின் அழுத்தங்களால், அவர் கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளவில்லை. இவ்வாறாக, அயல்நாடுகளாக இருந்தும், 27 ஆண்டுகளாக, கொழும்புக்கு ஒரு இந்தியப் பிரதமர் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளாத ஒருவித தேக்க நிலை இன்று வரை நீடித்து வருகிறது.
இதுபோன்று தான் இந்தியாவின் எல்லை நாடுகளில் ஒன்றான நேபாளத்துக்கும் 17 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர்கள் எவரும் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.
ஆனால், அந்த தேக்க நிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் அண்மையில் நீக்கி வைத்தார். 2005ஆம் ஆண்டு புதுடில்லியில் இலங்கைத் தூதுவராக இருந்த மங்கள முனசிங்க, 1998ஆம் ஆண்டில் இருந்து இந்தியப் பிரதமரை கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
இன்னமும் அந்தப் பயணம் கைகூடவில்லை என்று, 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கூறியிருந்தார். அதே நிலை கருத்தைக் திரும்பத் திரும்ப பல தூதுவர்கள் கூறுகின்ற நிலை தான் இன்னமும் நீடிக்கிறது. இந்த இடைப்பட்ட 27 ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளிலும் பல்வேறு தலைவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விட்டார்கள்.
கட்சிகள், ஆட்சிகள் மாறிய போதும், புதிய தலைவர்கள் வந்த போதும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற எவருமே, கொழும்புக்கு வரவில்லை. இதனால் தான் நரேந்திர மோடியையாவது எப்படியும் கொழும்புக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது.
எதற்காக நீடிக்கிறது இந்த பனித் திரை என்று தெரியாமலேயே 27 ஆண்டுகளாக நீடிக்கும், தேக்க நிலைக்கு நரேந்திர மோடி முடிவு கட்டுவார் என்று தான் முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.
நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் கொழும்புக்கானதாகவே இருக்கும் என்று இலங்கை அரசாங்கம் வலுவாகவே எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதற்குப் பின்னர், அவர் நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், ஜப்பான், பிரேஸில், அமெரிக்கா என்று பல நாடுகளுக்குச் சென்று வந்து விட்டார்.
ஆனாலும், கொழும்புக்கான பயணம் மட்டும் இன்னமும் உறுதியாகவில்லை. கடந்த செப்டெம்பர் மாதம், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொழும்புக்கு வந்திருந்த பின்னணியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், விரைவிலேயே கொழும்புக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அண்மையில், பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூட, டுவிட்டரில் விரைவிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக பதிவிட்டிருந்தார்.
என்றாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம், இப்போதைக்கு இல்லையென்றாகி விட்டது. இலங்கைக்கான பயணத் திட்டம் என்பது இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் உள்ள போதிலும், அது எப்போது என்று தீர்மானிக்கப்படுவதில் தான் சிக்கல் உள்ளது.
அடுத்த மாதம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கொழும்பு வருவார் என்றும், அதன் பின்னர், டிசம்பரிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ இந்தியப் பிரதமரின் பயணம் இடம்பெறும் என்றும் எதிர்வு கூறப்பட்டது.
ஆனால், சீன ஜனாதிபதியின் பயணத்துக்குப் போட்டியாக, கொழும்பு செல்வதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால், அது இந்தியாவின் பெறுமானத்தைக் குறைத்து விடும் என்று புதுடில்லி கருதுகிறது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவின் நெருக்கம் மிகவும் வலுவடைந்துள்ள சூழலில், இந்த நெருக்கத்தை இந்தியாவினால், இனிமேல் குறைக்க முடியாது என்பதை புதுடில்லி உணர்ந்துள்ளது.
இத்தகைய நிலையில், சீன ஜனாதிபதிக்குப் போட்டியாக, இந்தியப் பிரதமர் கொழும்பில் போய் இறங்குவது, இலங்கையின் காலில் வீழ்வது போலாகி விடும் என்று புதுடில்லி கருதுகிறது.
எனவே, சீன ஜனாதிபதியின் கொழும்புப் பயணத்துக்குப் போட்டியாக எதையும் செய்வதற்கு புதுடில்லி முனையவும் இல்லை, அதற்கு முயற்சிக்கப் போவதுமில்லை. இந்தியப் பிரதமரின் பயணத் திட்டத்தில், கொழும்பு முக்கியமான இடத்தில் இருந்தாலும், அதுபற்றிய உடனடியாகப் பரிசீலிக்க இந்தியப் பிரதமர் தயாராக இல்லை.
கடந்த மே மாதம் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவையடுத்து அவரைச் சந்தித்த போதும், கடந்த மாதம் நியூயோர்க்கில் அவரைச் சந்தித்த போதும், இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
அந்த அழைப்புகளின் பேரில் கொழும்பு வரும் நோக்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்தாலும், தற்போதைய சூழலில், அவரைக் கொழும்புக்கு அழைத்து வருவதென்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தயாரிப்புகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இத்தகைய சூழலில், தாம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வதை நரேந்திர மோடி விரும்பவில்லை.
இந்தியப் பிரதமரின் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்தி விடக் கூடும் என்பது இந்தியாவின் ஒரு கவலை ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பொறுத்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம் என்பது இன்னொரு காரணம்.
அதைவிட, இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நிறைவேற்றவும் இல்லை, நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கவும் இல்லை.இத்தகைய கட்டத்தில், கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்வது, இந்தியா குறித்து, இலங்கை குறைத்து மதிப்பிடவே உதவும்.
எனவே தான், ஜனவரிக்குப் பின்னரே இந்தி யப் பிரதமரின் பயணம் என்று புதுடில்லி தீர்மா னித்துள்ளது. எவ்வாறாயினும், ராஜீவ் காந்திக்குப் பின்னர், இந்தியப் பிரதமராக இருப்போரின் இலங்கைக்கான பயணம் எதனாலோ தடைப்பட்டு வருகிறது.
இந்த தடைக்கு, இரு நாடுகள் மட்டுமன்றி, இலங்கைப் பிரச்சினை விவகாரத்தில் இரு நாடுக ளுக்கும் உள்ள பொறுப்பு நிறைவேற்றப்படாததும் ஒரு காரணம் தான் என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
இப்போதைய நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் உடனடியாக இந்தியப் பிரத மரை அழைத்து வந்து தேர்தல் பூச்சாண்டிக்குப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியாக விட்டது.
எனவே தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அதற்கான முயற்சியில் அவரால் மீண்டும் இறங்க முடியும்.
ஹரிகரன்