இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நேற்று வியாழக்கிழமையுடன் (30ஆம் திகதி) முடிவுக்கு வந்துள்ளது.
சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா. விசாரணைக்குழு, மார்டி அதிசாரி தலைமையிலான ஆலோசனைக்குழுவுடன் இணைந்து, இந்த சாட்சியங்களை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொண்டு, அடுத்த சுமார் 3 மாதங்களுக்குள் அறிக்கை தயாரிக்கப்போகிறது.
இந்த அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நிகழவுள்ள மாற்றங்கள், இலங்கைக்கு கூடுதல் சாதகமாக அமையலாமென்ற நிலையேற்பட்டுள்ளது.
ஏனென்றால், கடந்த 21ஆம் திகதி நியூயோர்க்கில் நடந்த ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 15 புதிய உறுப்பு நாடுகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமாகப்போகிறது.
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பு நாடுகளின் பதவிக்காலம், டிசெம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே இப்புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது.
15 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறவுள்ளமையும் புதிதாக 15 நாடுகள் உள்ளே வரவுள்ளமையும் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டில் தாக்கங்களை ஏற்படுத்துமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
ஏனென்றால், கடந்த 3 வருடங்களாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் முக்கியமானதொரு விவாதப்பொருளாக இருந்துவருகிறது.
இந்த 3 வருடங்களிலும் குறைந்தது 23 நாடுகள், கூடியது 25 நாடுகள் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாக்களித்திருந்தன.
கடந்த மார்ச் மாதம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால், போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அல்பேனியா, பொலிவியா, பொட்ஸ்வானா, பங்களாதேஷ், கொங்கோ, எல்சால்வடோர், கானா, லத்வியா, நெதர்லாந்து, பராகுவே, போர்த்துக்கல், இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, கட்டார் ஆகிய 15 நாடுகளும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக தெரிவானவை.
இவற்றில், பொட்ஸ்வானா, கொங்கோ, இந்தியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளும் இவ்வருடத்துடன் உறுப்புரிமைக்காலம் நிறைவடைந்தவை. அவை மீண்டும் பேரவைக்கு தெரிவாகியுள்ளன.
பங்களாதேஷ், கட்டார், நைஜீரியா ஆகிய நாடுகளும் ஏற்கெனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகித்தவையே. பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டும் கட்டாரின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டும் நிறைவடைந்தன.
சிறியதொரு இடைவெளியின் பின்னர் இந்த நாடுகள் மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் நுழைகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகளே உறுப்புரிமை பெறமுடியும். ஆனால், ஒரு நாடு தொடர்ந்து 2 பதவிக்காலங்களே உறுப்புரிமையில் இருக்கமுடியும். பின்னர், ஓராண்டு இடைவெளி விட்டு மீண்டும் போட்டியிட்டுத் தெரிவாகலாம்.
இவ்வருட இறுதியுடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறும் 15 நாடுகள், உள்ளே நுழையப்போகும் 15 நாடுகள் தொடர்பில் இலங்கை கரிசனை கொள்ளாமலிருக்கமுடியாது. ஏனென்றால், கடந்த பல வருடங்களாகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு தலைவலியை கொடுக்கின்றதொரு களமாக இருந்துவருகிறது.
கடந்த 3 வருடங்களாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசாங்கத்தை பெரிதும் சினமடைய வைத்திருந்தன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அரசியல் காழ்ப்புணர்வுடன் செயற்படுவதாகவும் பக்கச்சார்பாகவும் பழிவாங்கும் உணர்வுடனும் செயற்படுவதாகவும் இலங்கை அரசாங்கம் விமர்சித்திருந்தது. அந்தளவுக்கு இலங்கை அரசுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குமிடையில் மோதல் உருவாக காரணமாக அமைந்திருந்தவை இந்தத் தீர்மானங்கள்.
இவை மட்டுமன்றி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மேற்குலகின் கைப்பாவையாக செயற்படுவதாகவும் கூட அரசாங்கம் விமர்சித்திருந்ததை மறக்கமுடியாது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளே இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவந்து, அரசாங்கத்தை திணறடித்திருந்தன. இதன் விளைவாகவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தோன்றியது.
இத்தகையதொரு பின்னணியில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏற்படும் மாற்றங்களை சாதாரணமாக கருதமுடியாது. அதாவது, இப்போது நடக்கின்ற விசாரணைகளுடன் இலங்கை விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ அல்லது மேற்குலக நாடுகளோ கைவிட்டு விடுமென்று கருதுவதற்கில்லை.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் கை ஓங்கியிருக்கும்வரை, இலங்கை அரசாங்கம் அதையிட்டுக் கவலையடையவேண்டியது தவிர்க்கமுடியாதது.
இந்நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஏற்படப்போகின்ற மாற்றங்கள், இலங்கைக்கு எந்தளவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துமென்று பார்க்கலாம்.
கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த கட்டத்தில், இலங்கைக்கு ஆதரவாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு எதிராகவும் 22 நாடுகள் ஒப்பமிட்டு கூட்டறிக்கையொன்றை வெளியிட்டது.
ஐ.நா. வின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கிகாரத்தை பெறாத ஐ.நா. நிபுணர்குழு தயாரிக்கும் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக்கூட, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடாதென்று அந்த அறிக்கை ஐ.நா. பொதுச்செயலர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத்தலைவர் ஆகியோரை கேட்டுக்கொண்டிருந்தது.
அதை வைத்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 22 நாடுகள், இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக அரசாங்கம் கூறியது. ஜெனீவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலுவலகம், செப்டெம்பர் 25ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறே கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்த அறிக்கையில் ஒப்பமிட்ட 22 நாடுகளில், 8 நாடுகள் மட்டுமே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடுகளாகும். சீனா, ரஸ்யா, பாகிஷ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, மாலைதீவு, கியூபா ஆகிய நாடுகளே அவை.
இவற்றில் பிலிப்பைன்ஸ் தவிர்ந்த மற்றெல்லா நாடுகளுமே, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவை. பிலிப்பைன்ஸ் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அடுத்து, அந்த 22 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருந்தது.
இந்த அறிக்கையில், இந்தியா கூட ஒப்பமிடவில்லை. ஆனால், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும் விசாரணையை இந்தியா ஆதரிக்கவில்லை.
இது பற்றிய வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. என்றாலும், இலங்கைக்கு ஆதரவான கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திடவில்லை. இது பற்றி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதம் வரும்போது பார்த்துக்கொள்ளலாமென்று இந்தியா கூறிவிட்டதாகத் தகவல்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 8 நாடுகளின் ஆதரவையே, இப்போது இலங்கையால் தக்கவைக்க முடிந்துள்ளதாக கலாநிதி தயான் ஜெயதிலகவும் விமர்சித்திருந்தார்.
இந்தியா குறிப்பிட்டதுபோல, எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் ஐ.நா. விசாரணைக்குழுவின் அறிக்கை விவாதத்துக்கோ அல்லது வாக்கெடுப்புக்கோ வருமானால், மீண்டும் 2 தரப்புகளும் தமக்கு ஆதரவான நாடுகளை தேடிப்பிடிக்க வேண்டியிருக்கும். அவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டால், அது இலங்கைக்கு மட்டுமன்றி, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும் கூட அது சிக்கலானதே.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த 23 நாடுகளில், 9 நாடுகளின் பதவிக்காலம் இவ்வருட இறுதியுடன் முடிவடைகிறது.
ஒஸ்ரியா, பெனின், பொட்ஸ்வானா, சிலி, கோஸ்ராரிக்கா, செக்குடியரசு, இத்தாலி, பெரு, ருமேனியா ஆகிய நாடுகளே அவையாகும். இவற்றில் பொட்ஸ்வானா மட்டும், மீண்டும் உறுப்பு நாடாக தெரிவாகியுள்ளது. இது முதலிரு தீர்மானங்களின்போதும் நடுநிலை வகித்துவிட்டு, சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை ஆதரித்திருந்தது.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 23 நாடுகளில், 8 நாடுகள் வெளியே செல்வதால், அதன் பலம் அடுத்த வருடம் 15ஆக குறைந்துவிடும். அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 12 நாடுகளில், ஒரேயொரு நாடான கொங்கோ மட்டுமே இவ்வருடத்துடன்; ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறுகிறது.
ஆனால், இலங்கைக்கு எதிரான 3 தீர்மானங்களையும் எதிர்த்து வாக்களித்த கொங்கோ, மீண்டும் அடுத்த பதவிக்காலத்துக்கும் தெரிவாகியுள்ளது. எனவே, இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் எண்ணிக்கையில் எந்த உறுதியான மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
அதேவேளை, கடந்த மார்ச் மாத தீர்மானத்தின்போது வாக்கெடுப்பில் பங்கேற்காத 12 நாடுகளில், புர்கினோ பாசோ, இந்தியா, இந்தோனேசியா, குவைத், பிலிப்பைன்ஸ் ஆகிய 5 நாடுகளும் இவ்வருடத்துடன்; உறுப்புரிமையை இழக்கின்றன.
இவற்றில், இந்தியாவும் இந்தோனேசியாவும் மீண்டும் உறுப்பு நாடுகளாக தெரிவாகியுள்ளன. எனவே, இந்த நாடுகள் மீண்டும் நடுநிலை வகிக்குமென்று எடுத்துக்கொண்டால், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 9ஆக குறைந்துவிடும்.
இதில், இந்தியா முதல் 2 தீர்மானங்களையும் ஆதரித்துவிட்டு, கடந்த மார்ச் மாத தீர்மானத்தின்போது, நடுநிலை வகித்திருந்தது. இந்தோனேசியா அதற்கு நேர்மாறாக, முதலிரு தீர்மானங்களையும் எதிர்த்துவிட்டு, கடந்தமுறை நடுநிலை வகித்திருந்தது.
அடுத்து, புதிதாக உள்ளே வரப்போகும் பங்களாதேஷ், கட்டார், நைஜீரியா ஆகிய 3 நாடுகளும் முக்கியமானவை. இவற்றில், பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகியன 2012ஆம் ஆண்டும் கட்டார் 2013ஆம் ஆண்டும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்புரிமையிலிருந்து வெளியேறியவை.
பங்களாதேஷ் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடு. மீண்டும் அந்த நாடு உள்ளே வரும்போது, இலங்கைக்கு ஆதரவாகவே நிற்கும். அதுபோல, கட்டார் 2 தடவைகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடு. அதுவும், இலங்கையின் பக்கமே ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளன.
2012ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நைஜீரியாவும் 2 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பேரவைக்குள் வரப்போகிறது. ஆனால், இந்த நாட்டின் நிலைப்பாடு, முன்னைய நிலையில் இருக்குமா என்பதே முக்கிய சந்தேகம்.
முன்னர் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், இப்போது இலங்கையுடன் நெருக்கமான உறவை வைத்திருக்கிறது நைஜீரியா. போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் தமது படைகளுக்கு இலங்கைப் படையினரிடமிருந்து ஆலோசனைகள், உதவிகளை பெறுகின்ற நாடாக நைஜீரியா மாறியிருக்கிறது.
இப்படியான நிலையில், நைஜீரியாவும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கவே வாய்ப்புக்கள் அதிகம். அதில் சிக்கல்களை எதிர்கொண்டால், குறைந்தபட்சம் நடுநிலை வகிக்கலாமே தவிர, இலங்கைக்கு எதிராக ஒருபோதும் நிற்காது. இந்நிலையில், இலங்கைக்கு ஆதரவான நாடுகள், எதிரான நாடுகளென்று பார்த்தால், சமநிலையிலேயே இருக்கும்.
இத்தகைய நிலையில், புதிதாக உள்ளே வரப்போகும் ஏனைய நாடுகளான அல்பேனியா, பொலிவியா, எல்சல்வடோர், கானா, லத்வியா, நெதர்லாந்து, பராகுவே, போர்த்துக்கல் ஆகிய 8 நாடுகளுமே, முக்கியமானவையாக மாறும். இவற்றில், இந்த 8 நாடுகளுமே, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளாகும். இந்த நாடுகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு இலங்கைக்கு மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் கூட மிக முக்கியமானது.
இந்த 8 நாடுகளில் அல்பேனியா, லத்வியா, நெதர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய 4 நாடுகளும் ஐரோப்பிய நாடுகளாகும். இவை ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பவையென்ற வகையில், இலங்கைக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதாவது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் அங்கம் வகிப்பதால், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு துணை நிற்கும்.
அதேவேளை, புதிதாக நுழையும் ஆபிரிக்க நாடான கானா அணிசேரா அமைப்பின் ஓர் ஆரம்பகால உறுப்பு நாடு. இலங்கையுடன் கானா பாதுகாப்பு உறவுகளை பேணி வருகின்றபோதிலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு துணை நிற்குமா என்ற கேள்வி உள்ளது.
அதேவேளை, புதிதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் நுழையப்போகும் பொலிவியா, எல்சால்வடோர், பராகுவே ஆகிய 3 இலத்தீன் அமெரிக்க நாடுகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்னவாக இருக்குமென்ற கேள்வியும் உள்ளது.
இவற்றில் பொலிவியா, இலங்கையின் பக்கத்தில் நிற்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஏனென்றால், கடந்த செப்டெம்பர் மாதம், 22 நாடுகள் இணைந்து வெளியிட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு எதிரான அறிக்கையில், பொலிவியாவும் ஒப்பமிட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் ஜி 77 மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிவியா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டு ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே பொலிவியா, இலங்கை அரசுக்கு தோள் கொடுக்குமென்றே நம்பலாம்.
எல்சால்வடோர் மற்றும் பராகுவேயுடன் கூட, இலங்கை அரசாங்கம் கடந்த ஒரு சில வருடங்களுக்குள்; இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை கருத்திற்;கொண்டே இந்த உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நாடுகள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன என்பது, வரும் நாட்களில் முக்கிய விடயமாக மாறும். இந்தச் சூழ்நிலையை கருத்திற்கொண்டு பார்க்கும்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையா – அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமா என்ற இழுபறி யுத்தம் மீண்டும் உருவாவதற்கே வாய்ப்புக்கள் தென்படுகின்றன.