இலங்­கையில் சீனாவின் இரா­ணுவப் பிர­சன்னம் ஏதும் இல்லை என்று இந்­தி­யா­விடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்­தியம் செய்ய வேண்­டிய நிலை இலங்­கைக்கு உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

சீன ஜனா­தி­பதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பய­ணத்­துக்கு முன்­ன­தாக, கொழும்புத் துறை­மு­கத்தில் சீனக் கடற்­ப­டையின் நீர் மூழ்கிக் கப்­ப­லொன்று தரித்து நின்ற விவ­காரம் தான், இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான காரணம்.

சீன நீர்­மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்த விப­ரத்தை இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தாமல் மறைத்துக் கொண்­டதால் தான் இந்தச் சிக்கல் இந்­த­ள­வுக்குப் பூதா­கர வடி­வெ­டுத்­தது.

கடந்­த­வாரம், இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ஜயந்த பெரேரா புது­டில்­லிக்குச் சென்­றி­ருந்தார்.

அவர் புது­டில்­லியில் இந்­தியப் பாது­காப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஆர்.கே.டோவன் ஆகி­யோரைச் சந்­தித்த பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது சீன நீர்­மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வந்­தி­ருந்­ததை ஒப்புக் கொண்டார்.

சீன கடற்­ப­டையின் நீர்­மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறை­முகம் வந்­ததை இலங்கை அர­சாங்­கத்தின் சார்­பாக முதல் முறை­யாக ஒப்­புக்­கொண்­டவர் அவர்தான்.

கடந்த செப்­டெம்பர் 7ஆம் திகதி தொடக்கம், 14ஆம் திகதி வரை சீனக் கடற்­ப­டையின் சொங் -039 வகை நீர்­மூழ்கி கொழும்புத் துறை­மு­கத் தின் கொள்­கலன் முனை­யத்தில் தரித்து நின்­றி­ருந்­தது.

 hambantota_portஅந்த நீர்­மூழ்­கியின் வருகை குறித்து இலங் கைக் கடற்­ப­டையோ அர­சாங்­கமோ ஊட­கங்­க­ளுக்கும் எதையும் கூற­வில்லை. இந்­தி­யா­வுக் கும் கூறி­ய­தாகத் தகவல் இல்லை.

ஆனால், அந்த நீர்­மூழ்கி கொழும்­பி­லி­ருந்து புறப்­படும் நேரத்தில் தான், உள்ளூர் ஊட­கங்கள் அந்தச் செய்­தியை வெளி­யிட்­டன.

ஆனால், அதற்­கான ஆதா­ரங்கள் சரி­யாக வெளி­யா­க­வில்லை. பின்னர், சீன நீர்­மூழ்கி மற்றும் அதற்குத் துணை­யாகப் பய­ணிக்கும் விநி­யோக கப்பல் ஆகி­யவை கொழும்பில் தரித்து நிற்கும் படங்கள் வெளி­யா­கின.

இந்தச் சர்ச்சை உரு­வாகி கிட்­டத்­தட்ட ஒன்­றரை மாதங்கள் கழித்து இலங்கை அர­சாங்­கத்தின் தரப்பில் இருந்து, சீன நீர்­மூழ்கி கொழும்­புக்கு வந்­தது உண்­மைதான் என்ற தகவல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால், இந்த விவ­காரம் சூடு­பி­டித்த போது, கடந்த செப்­டெம்பர் 25ஆம் திகதி பீஜிங்கில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய சீன பாது­காப்பு அமைச்சின் பேச்­சாளர் கேர்ணல் ஜெங் யன்ஷெங், கொழும்புத் துறை­மு­கத்தில் சீன நீர்­மூழ்கி தரித்து நின்­றது உண்­மையே என்றும், அது சோமா­லியா செல்லும் வழியில், விநி­யோகத் தேவை­க­ளுக்­காக கொழும்புத் துறை­மு­கத்தை நாடி­ய­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இதற்கு நீண்­டநாள் கழித்தே கடந்­த­மாதம் 27ஆம் திகதி தான் புது­டில்­லியில் இலங்கைக் கடற்­படைத் தள­பதி இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

கொழும்­புக்கு வந்­தது அணு­வா­யுத நீர் மூழ்­கி­யல்ல. அது சாதா­ர­ண­மான டீசலில் இயங்கும் நீர் மூழ்­கிதான். இந்­தி­யா­வுடன் நாம் நல்ல ஒத்­து­ழைப்பை பேணி வரு­கிறோம். இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு விட­யத்தில் நாம் சம­ரசம் செய்து கொள்­ள­மாட்டோம். இந்­தி­யாவின் பாது­காப்பு எமது பாது­காப்பு. சீனர்கள் மட்­டு­மல்ல, ரஷ்­யர்கள் மற்றும் ஏனைய நாடு­க­ளு­டனும் நாம் உற­வு­களை வைத்­துள்ளோம். எமது நாடு அணி­சேரா நாடு.

அவர்கள் நல்­லெண்ணப் பய­ண­மா­கவே வரு­கி­றார்கள். நீங்கள் கூறு­வது போல சீன இரா­ணுவத் தலை­யீடு எதுவும் அங்கு இல்லை. அவர்கள் வர்த்­தக நலன் மீதே ஆர்வம் கொண்­டுள்­ளனர் ” என்று – இந்­தியக் கடற்­படைத் தள­ப­தியை அருகில் வைத்துக் கொண்டே கூறி­யி­ருந்தார் வைஸ் அட்­மிரல் ஜயந்த பெரேரா.

சீன நீர்­மூழ்கி விவ­காரம் சர்ச்­சை­யாக உரு­வெ­டுத்த பின்னர் இந்­தியப் பாது­காப்பு செயலர் ஆர்.கே.மாத்தூர் தலை­மை­யி­லான குழு கொழும்பு வந்­தது.

பாது­காப்புச் செயலாளர் கோத்­தா­பாய ராஜபக் ஷவும், கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ஜயந்த பெரே­ராவும் அடுத்­த­டுத்து புது­டில்­லிக்கு அழைக்­கப்­பட்­டனர்.

இதன்­போது, சீன நீர்­மூழ்கிக் கப்­பலில் வருகை குறித்து இந்­தியா தனது அதி­ருப்­தி­யையும், கவ­லை­யையும் வெளி­யிட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இருந்­தாலும், இந்­தி­யாவின் இந்தக் கவ­லையை இலங்கை எந்­த­ள­வுக்குப் புரிந்து கொண்­டுள்­ளது? என்­பது கேள்வி.

ஏனென்றால், இலங்கைக் கடற்­படைத் தள­பதி புது­டில்­லியில் இது­பற்றிப் பேசும் போது, சீன நீர்­மூழ்கி பற்றி எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு மிகச் ­சா­தா­ர­ண­மா­கவே அது அணு­வா­யுத நீர்­மூழ்­கி­யல்ல சாதா­ரண நீர்­மூழ்கி தான் என்று மிக அலட்­சி­ய­மாகப் பதில் கொடுத்­தி­ருக்­கிறார்.

அணு­வா­யுத நீர்­மூழ்­கியா?- சாதா­ரண நீர்­மூழ்­கியா? கொழும்பு வந்­தது என்­பது பிரச்­சி­னை­யல்ல.வந்­தது சீன நீர்­மூழ்கி தான் என்­பதே பிரச்­சினை. அதைப்­பற்றி வெளிப்­ப­டை­யாகக் கூறாமல் மறைத்­த­துதான் பிரச்­சினை.

கடந்த ஆண்டு செம்ரெம்பர் மாதம் ஈரா­னியக் கடற்­ப­டையின் நீர்­மூழ்கி ஒன்று கொழும் புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்­றது.

அந்த நீர்­மூழ்கி ஈரா­னி­லி­ருந்து புறப்­பட முன்­னரே அது கொழும்­புக்கும் செல்லும் என்று ஈரான் அறி­வித்து விட்­டது.      அதனால் அதன் வருகை குறித்து எந்த நாடும் கேள்வி எழுப்­ப­வில்லை. சந்­தே­கத்­தையோ சர்ச்­சை­யையோ கிளப்­ப­வில்லை.

ஆனால், அது­போன்ற வெளிப்­ப­டைத்­தன்­மை­யுடன் சீன நீர்­மூழ்கி கொழும்பு வந்­தி­ருக்­க­வில்லை.

அதன் வருகை உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளையும் சீனா மட்­டு­மல்ல இலங்­கையும் கூட ஒளித்து மறைத்துப் பாது­காத்­தது. இதுதான், இந்­தி­யா­வுக்கு தனது பாது­காப்புக் குறித்த சந்­தேகம் எழுந்­த­தற்குக் காரணம்.

இந்­தி­யாவின் பாது­காப்பு எமது பாது­காப்பு என்றும், இந்­தி­யாவின் பாது­காப்பு விட­யத்தில் சம­ரசம் செய்து கொள்­ள­மாட்டோம் என்றும் இப்­போது கூறும் இலங்கைக் கடற்­படைத் தள­பதி, சீன நீர்­மூழ்­கியின் வரு­கையின் போது மட்டும் அதனை மறந்து போயி­ருந்தார்.

இந்­தியப் பெருங்­க­டலில் சீன நீர்­மூழ்­கி­களின் நட­மாட்­டத்தை இந்­தியா எச்­ச­ரிக்­கை­யுடன் பார்க்­கி­றது என்­பதை தெரிந்­து­கொண்டே அவற்றில் ஒன்று கொழும்பு வந்­ததை மறைத்­தி­ருந்­தது அர­சாங்கம்.

தெற்­கா­சியத் துறை­முகம் ஒன்றில் சீன நீர்­மூழ்கி ஒன்று தரித்துச் சென்­ற­துதான் விவ­கா­ரமே தவிர, அது எந்த வகையை சேர்ந்­தது என்­ப­தல்ல பிரச்­சினை.

மீண்டும் மீண்டும் இலங்கை அரசு பொருந்­தாத நியா­யங்­களின் மூலம், இந்த விவ­கா­ரத்தில் தனது தவறைத் தட்­டிக்­க­ழிக்­கவே முனை­கி­றது.

கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ஜயந்த பெரேரா இந்­தியப் பய­ணத்தில் இருந்த போது, கடந்த 29ம் திகதி கொழும்பில் பாது­காப்பு அமைச்சு நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போதும் சீன நீர்­மூழ்­கி­களின் வருகை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அதற்குப் பதி­ல­ளித்­தி­ருந்த, கடற்­படைப் பேச்­சாளர் கொமாண்டர் கோசல வர்­ண­கு­ல­சூ­ரிய,

“இந்­தியப் பெருங்­க­டலின் மத்­தியில் இலங்கை அமைந்­துள்­ளதால், பூகோள ரீதியில் கேந்­திர முக்­கி­யத்­து­வத்தைப் பெற்­றுள்­ளது. இதனால் பல்­வேறு நாடு­களின் கடற்­படை கப்­பல்­களும் நீர்­மூழ்கி கப்­பல்­களும் நல்­லெண்ண அடிப்­ப­டையில் வந்து செல்­கின்­றன. இது பொது­வான ஒரு விடயம்.

குறித்த நாடொன்றின் கப்­பல்கள் மட்டும் இங்கு வர­வில்லை. நாடு எது என்­பதை விட நாடு­க­ளுக்கு இடை­யி­லான நல்­லெண்ண உற­வு­களை பலப்­ப­டுத்­து­வது தொடர்­பி­லேயே கவனம் செலுத்­தப்­படும்.

2010ஆம் ஆண்­டுக்குப் பின்னர், இன்­று­வரை 206 வெளி­நாட்டுப் போர்க்­கப்­பல்கள் மற்றும் நீர்­மூழ்கி கப்­பல்கள் இங்கு வந்து சென்­றுள்­ளன.

இந்­தியா, பாகிஸ்தான், அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா, ரஷ்யா, ஜப்பான், ஸ்பெய்ன், பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­ஷியா, தாய்­லாந்து, துருக்கி, மலே­ஷியா, தென்­கொ­ரியா, புருணை, மாலை­தீவு, இத்­தாலி, பிரான்ஸ், ஈரான், சீனா, ஐக்­கிய அரபு இராச்­சியம், ஓமான், சீஷெல்ஸ் மற்றும் நைஜீ­ரியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்தே இந்த 206 கப்­பல்­களும் வந்து சென்­றுள்­ளன.

2010ஆம் ஆண்டில் 36 கப்­பல்­களும், 2011ஆம் ஆண்டில் 49 கப்­பல்­களும், 2012 இல் 34 கப்­பல்­களும், 2013 இல் 48 கப்­பல்­களும், 2014ஆம் ஆண்டு இது­வரை 39 கப்­பல்­களும் வந்து சென்­றுள்­ளன.” என்று விளக்கம் கூறி­யி­ருந்தார்.

அதா­வது, வந்­தது சீன நீர்­மூழ்கி என்­ப­தற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­காமல், கடந்த ஐந்து ஆண்­டு­களில் கொழும்­புக்கு வந்த 206 போர்க்­கப்­பல்­களில் ஒன்­றா­கவே இத­னையும் பார்க்க வேண்டும் என்று அவர் விவ­கா­ரத்தை திசை திருப்ப முயன்றார்.

ஆனால், இந்­தியா அப்­படிப் பார்க்­க­வில்லை.தனது செல்­வாக்­கிற்கு உட்­பட்ட பகு­திக்குள், இது­வ­ரை­யில்­லாத வகையில் சீன நீர்­மூழ்கி வந்து சென்­றதை அச்­சு­றுத்­த­லாகப் பார்க்­கி­றது.இந்­தி­யாவின் இடத்தில் இலங்கை இருந்­தி­ருந்தால், இதை­யேதான் செய்­தி­ருக்கும்.

ஒரு­பக்­கத்தில், சீன நீர்­மூழ்­கி­க­ளுக்கு இடம்­கொ­டுக்கும் விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் கவ­லையைப் புரிந்து கொள்­வது போலத் தலை­யாட்­டி­னாலும், இன்­னொரு பக்­கத்தில், அதனை நியா­யப்­ப­டுத்தும் வகை­யிலும், இலங்கை அர­சாங்கம் நடந்து கொள்­கி­றது.

சீனாவின் இரா­ணுவப் பிர­சன்னம் ஏதும் இலங்­கையில் கிடை­யாது என்றும், இலங்­கையில் வெறும் ஐந்து சீனப்­ப­டை­யினர் தான் உள்­ளனர் என்றும் அவர்கள் கொத்­த­லா­வல பாது­காப்புக் கல்­லூ­ரியில் கல்வி கற்­கின்­றனர் என்றும், சாமர்த்­தி­ய­தாக பதி­ல­ளித்­தி­ருக்­கிறார் பிரி­கே­டியர் ருவன் வணி­க­சூ­ரிய.

இலங்­கையில் சீனாவின் இரா­ணுவத் தலை­யீ­டு­களும், பொரு­ளா­தாரத் தலை­யீ­டு­களும் அதி­க­ரித்­து­விட்­டன என்ற இந்­தி­யாவின் கவ­லையை இலங்கை சரி­யாகப் புரிந்து கொள்­ள­வில்லை என்றே தெரி­கி­றது.

ஏற்­க­னவே, சீனக்­கு­டாவில், சீன விமான நிறு­வ­னத்­துக்கு, விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை அமைக்க இடம்­கொ­டுக்க முயன்ற விவ­கா­ரத்­திலும், இலங்­கையை இந்­தியா கண்­டித்­தி­ருந்­தது.

இதை­ய­டுத்து, இந்­தி­யாவின் பாது­காப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்தக் காரி­யத்­தையும் செய்­ய­மாட்டோம் என்று வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார் வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிஸ்.  கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ஜயந்த பெரேரா புது­டெல்­லியில் எதனைக் கூறி­னாரோ அப்­ப­டியே பீரிஸும் கூறி­யி­ருந்தார்.

இந்­தி­யாவின் எதிர்ப்­பை­ய­டுத்து, சீனக்­கு­டாவில் அமைக்­கப்­ப­ட­வி­ருந்த விமானப் பரா­ம­ரிப்பு நிலை­யத்தை ஹிங்குராக்கொடவுக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆனால் சீனா அதற்கு இணங்கிவிட்டதாக எந்த தகவலும் இல்லை.

அந்த விவகாரம் ஓய்ந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே நீர்மூழ்கி விவகாரத்தில் இந்தியாவுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது.

ஒருபக்கத்தில் இந்தியாவை நட்பு நாடு என்று கூறிக் கொண்டாலும், அதன் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்க இடமளியோம் என்று கூறிக் கொண்டாலும், மறுபக்கத்தில் சீனா விடயத்தில் இலங்கை ஒளித்து விளையாடுகிறது என்பதே உண்மை.

புதுடில்லியில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீனா விடயத்தில் இலங்கை இரண்டாவது முறையாகவும் இந்தியாவின் கிடுக்கிப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது.

சீனா விடயத்தில், இந்தியாவுடன் வெளிப்படைத்தன்மையான உறவை கடைப்பிடிக்கத் தவறினால், இதுபோன்ற நெருக்கடிகளுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதையே இவை எடுத்துக் காட்டியுள்ளன.

Share.
Leave A Reply