மலையகமே உன் கதி இது தானா என்ற நெஞ்சம் கனத்த வாசகத்தை இலங்கை வாழ் ஒரு சமூகம் உச்சரித்து நொந்து புழுங்கிக்கொண்டிருக்க மறுபுறத்திலே மலையகமே உன்விதி இதுதான் என்ற ரீதியில் கொஸ்லந்தை மீரியபெத்த பேரவலத்தின் மூலம் படைத்தவன் பறைசாற்றி விட்டான் போலும்.
மாண்டவர் மீள்வதில்லை எனும் போதிலும் மண்ணுக்குள் புதையுண்டு இன்னுயிர்களை தியாகம் செய்த மீரியபெத்தையைச் சேர்ந்த மலையகத்தின் மைந்தர்களால் ஒட்டு மொத்த மலையகத்துக்குமே மீட்சியையும் விடியலையும் பெற்றுக்கொடுக்க தம்மையே விதைத்துக் கொண்டுள்ளனர்.
சர்வத்துக்கும் இறைவனானவனின் திரு விளையாடலுக்கு மீரியபெத்த மலைப்பிரதேசம்தான் கிடைத்திருக்கின்றது என்பதுதான் அவனாலேயே வரையப்பட்டிருக்கின்ற விதியாகவும் இருக்கின்றது.
அந்த விதிதான் சூரசம்ஹார தினத்தன்று நிறைவேறியிருக்கிறது. மலையகத்தின் கதிக்குள் சிக்குண்டுள்ள மலையகத்தாரின் விதியை மாற்றியமைப்பதற்காய் இது நிகழ்ந்திருக்கிறதா? என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. எப்படி இருப்பினும் இழப்புக்களின் வலியும் அதனாலுண்டான வேதனையும் வடுவாய் உறையுமே தவிர அது மாயமாய் மறைந்து விடாது.
உலகத்தின் படைப்பு குறித்து கீதாசாரம் இப்படித்தான் கூறுகிறது.
எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது
நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை
எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்
எதை நீ கொண்டு வந்தாய்
அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய்
அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது…
மற்றொரு நாள் அது
வேறொருவருடையதாகிறது
இதுவே உலக நியதியும்
எனது படைப்பின்
சாராம்சமும் என்று
பரமாத்மா ஸ்ரீ
கிருஷ்ணபகவான் அருளியுள்ளார்
இறைவனின் நியதி எதுவாக இருந்தாலும் மானிடராய் பிறந்தவனுக்கு ஏற்படும் இழப்பின் வலி வெளிப்படுத்தப்படும் போது இறைவன் இருக்கின்றானா என்று வினாவெழுப்பும் மனோநிலையும் உருவாவதில் தவறில்லை.
ஆறுதல் கூறுவதும் அறிவுரைகளை அடுக்கிச் செல்வதும் அத்துடன் உலக நியதிகளை எடுத்துச் சொல்வதும் சொல்வோருக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். அதனை உள்வாங்குவோரின் நிலை கவலைக்குரியது.
எது எப்படி இருப்பினும் இனிவரும் காலம் மலையக சமூகத்தின் விடிவுக்காய் விடிய வேண்டும் என்பது தான் அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
மலையக சமூகத்தின் 200 வருட கால லயன் குடியிருப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்பது மாத்திரமே இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
இந்த எதிர்பார்ப்பானது மீரியபெத்தையில் இழக்கப்பட்ட உயிர்களாலும் சிந்தப்பட்டுள்ள இரத்தத்தாலும் சொரியப்பட்டுக் கொண்டிருக்கும் இரத்தக் கண்ணீராகவும் உண்டாகியிருக்கின்றது என்பதை அனைவரும் உணர வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி நிற்கின்றது.
மீரியபெத்த பேரவலமானது இன்று அரசியல் வாதிகளினதும் அநியாயவாதிகளினதும் களியாட்டத்துக்கான மேடையாக அமைந்து விட்டமைதான் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகியிருக்கிறது.
இழப்புக்களை சந்தித்திருக்கின்ற சிறார்கள் சிசுக்கள் உள்ளிட்ட சகல தரப்பினர் தொடர்பிலும் இங்கு யாவரும் சிந்திக்கவும் செயலாற்றவும் கடமைப்பட்டிருக்கின்றனர்.
மண்ணில் புதைந்த ஆத்மாக்களே எங்கள் விடுதலைக்காய் உங்களது உயிர்களை விதைத்தார்களா? என்ற வாசகம் அடங்கிய பதாகையைத் தாங்கி நிற்கும் மேற்படி சிறுமியின் ஊடாக மலையகமும் மலையக மண்ணும் மலையக சமூகமும் அதனுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளி என்ற உறவுகளும் தங்களது எதிர்பார்ப்பு என்ன என்பதை படம்பிடித்துக் காட்டி கோரிக்கையொன்றையும் வேண்டுதலாய் முன்வைத்திருப்பதை காண முடிகின்றது.
போதுமடா சாமி என்ற ரீதியில் மலையக தோட்டத்தொழிலாளர் வர்க்கம் இன்று சூடான பெரு மூச்சொன்றை விட்டிருப்பது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எட்ட வேண்டும்.
நல்மனம் படைத்தோரால் சுட்டிக்காட்டப்படுகின்ற வகையில் பிரித்தானியரின் குதிரைக் கொட்டகைகளாக அமைக்கப்பட்ட எட்டடி லயன் என வர்ணிக்கப்படுகின்றதான அந்த குடியிருப்புகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை உணரப்படாத நிலையாகவே 200 வருடங்கள் கழிந்தோடி மறைந்திருக்கின்றன.
ஆயிரம் ஆயிரம் கதைகள் கூறப்பட்டாலும் சாக்குப் போக்கான காரணங்கள் அடுக்கப்பட்டாலும் தோட்டத் தொழிலாளர்கள் தீண்டத்தகாத சமூகத்தினர் என்ற ரீதியிலேயே இதுவரையிலும் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றனர்.
பிரித்தானியரின் சுகபோகத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் பலியாக்கப்பட்ட மலையக சமூகம் இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் பிரித்தாளுகை எனும் பதத்துக்குள் தள்ளிவிடப்பட்டு விட்டது.
தோட்டத்தொழிலாளிகளை நம்புகின்றவன் சுகபோகம் அனுபவிக்கின்ற நிலையில் நம்பிக்கைக்குரியவனாய் திகழ்கின்ற தோட்டத் தொழிலாளி மட்டும் இன்றைய நிலையிலும் ஏமாற்றப்படுகின்றவனாகவே இருக்கிறான். கடந்த கால கசப்பான வரலாறுகள் இனியும் தொடரக் கூடாது என்பதை ஓரிடத்தில் புள்ளியிட்டு நிறுத்தும் வகையிலான செயற்பாடுகளே எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
மலையகத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள் ளும் பிரதேசங்களாகவே இருக்கின்றன.
வெள்ளம் , மண்சரிவு, அபாயங்கள் இன்னுமே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
இதில் பிரதேசங்களை குறிப்பிட்டுக் காட்டுவதைவிட கட்டட அகழ்வுப் பணி அகழ் வாராய்ச்சி அதிகாரிகள் ஒட்டுமொத்த மலைய கத்தையும் அதாவது மக்கள் குடியிருப்பு பிரதேசம் அனைத்தையுமே ஆய்வுக்கு உட் படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
ஆகவே, மீரியபெத்தை சம்பவத்தின் முன்னிலை பின்னிலை குறித்து குறை தேடிக் கொண்டிருப்பதை விடுத்து இன்றைய தினத்தின் வரையில் உயிர் பிழைத்திருக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் திட்டமே அவசியம்.
மதிப்பிட முடியாத மனிதப் பிறவிகளையும் அதனுள் உறைந்திருக்கும் உயிரையும் மதிக்கும் மனப்பான்மை பிறக்க வேண்டும். மனிதாபிமான ரீதியில் நோக்கினால் தோட்டத் தொழிலாளரின் லயன் குடியிருப்பு வாழ்வதற்கும் பொருத்தமில்லாதற்கும் அடிப்படை சுகாதார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எட்டடி லயன் குடியிருப்பு முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அதுவே விடியலாகும். அதற்காகவே மீரியபெத்தையில் தோட்டத்தொழிலாளர்கள் விதைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை, கணவன், மனைவியை, தாய், தந்தையரை, சகோதரன் சகோதரியை என எல்லாவகை உறவுகளையும் பிரிவதற்கும் வேதனையில் துவழ்வதற்கும் காரணமாய் அமைந்து விட்ட சம்பவத்துக்கு சிறந்ததோர் பரிகாரம் காணப்பட வேண்டுமானால் இனிவரும் காலம் இதய சுத்தியுடையதாக இருக்க வேண்டும்.
மலையகத்தின் விடியலுக்காய் மண்ணுக்குள் விதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள் நித்திய இளைப்பாற்றியை அடைய வேண்டுமானால் அவர்களது இழப்புக்கும் இறப்புக்கும் அர்த்தம் இருக்க வேண்டும். அந்த வகையான அர்த்தம் உறுதிப்படுத்தப்படாவிடின் அவர்களது முத்தியடையாத ஆன்மாக்கள் நிச்சயமாய் சாபமிட்டு பழிவாங்குவது உறுதியாகும்.
ஆன்மாக்களின் பழிவாங்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமேயானால் அரசியல் பேதங்கள் இன,மொழிப்பிளவுகள் வீணான இலாபங்கள் பொறாமைக்குணங்கள் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.அதிகாரத்தில் உள்ளவர்களே இதில் அக்கறை செலுத்த வேண்டியவர்கள்.
எனினும் சமூகத்தின் நலன்கருதியவர்களாய் இனிவரும் காலங்களில் எவரும் இலாபம் தேட முற்படக்கூடாது என்பதே இங்குள்ள பிரதான வலியுறுத்தலாக உள்ளது.
தனது சமூகத்திடம் இருந்து அரசியல் செய்வதை மட்டுமே கருத்திற்கொள்ளாது மலையக சமூகத்தின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் இயற்கையிடம் இருந்து அவர்களைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கான நிரந்தரமானதும் பாதுகாப்பு நிறைந்ததுமான குடியிருப்புக்களை பெற்றுக்கொடுப்பதிலேனும் அரசியல்வாதிகள் ஒரு மனம் படைத்தவர்களாக தமது நல்மனங்களை வெளிக்காட்ட வேண்டும்.
தோட்டத் தொழிலாளரை வைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்தும் பாங்கு கைவிடப்பட வேண்டும் என்பதுடன் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு இணையானவர்களாக அந்த சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம் சமூகம் பெருமையடையும் அதேபோன்று மலையகத்தலைமைகளும் பெருமையடையும்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பேதங்களுக்கு மத்தியில் மலையகத்தை இந்த நாற்றிசையாளருமே புறக்கணித்தே வந்துள்ளனர் என்பது இனித்தான் சொல்லிப்புரிய வைக்க வேண்டும் என்பதற்கில்லை. ஆகவேதான் மலையக சமூகம் ஒன்றுபட வேண்டும்.
நல்லது கெட்டதில்தான் நாலு பேரும் கூடுவர் என்பது நாட்டுப்புறத்தாரின் ஒரு வழக்காகும். ஆகவே, நடந்து முடிந்திருக்கும் துயரத்தை கவனத்திற் கொண்டு முதற்பணியாக ஒட்டுமொத்த மலையக சமூகத்துக்கும் சுகாதாரத்துடனும் பாதுகாப்புடன் கூடியதுமான குடியிருப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும்.
மிக விரைவாகவே ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை இந்நாடு எதிர்கொள்ளவிருக்கின்ற நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளைக் குறி வைத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
எனினும் இத்தகைய திட்டங்கள் நிலைபெறுவதற்காய் அணி திரண்டு உண்மையாய் உழைப்பார்களேயானால் அது எதிர்காலத்திற்கான சிறப்பாக அமையும் என்பதுடன் புண்ணியம் தேடிக்கொண்டவர்களாகவும் அமைந்து விடுவர்.
மேலும் கொஸ்லந்தை விவகாரம் இன்று வியாபாரமாக்கப்பட்டிருப்பதும் கேலிக்கூத்தாக ஆக்கப்படுவதும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக இருக்கின்றது.
மலையகமே இன்று இரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கையில் மீரியபெத்தை மக்களுக்காக நிதி திரட்டல்களும் பொருள் திரட்டல்களும் இடம்பெற்று வருவதோடு மோசடிகளும் தலைவிரித்தாடுகின்றன. சேகரிக்கப்படுகின்ற பொருட்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாததால் அவை விற்பனை நிலையங்களில் சங்கமமாகி விடுகின்றன.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஸ்திர நிலைமை ஒன்று உருவாகும் வரையில் உதவும் கரங்கள் பொறுத்திருப்பது சிறந்ததாகும். ஏனெனில் சூட்டோடு சூடாக உதவி செய்வதற்கு முன்வருவோர் சிறிது நாளில் மீரியபெத்தையை மறப்பதற்கும் சந்தர்ப்பம் உண்டு.
அத்துடன் மீரியபெத்தை சம்பவத்தை அரசியலாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை இல்லாது செய்து விடுவதற்கு அரசியல்வாதிகள் எவரும் முற்படாதிருந்தாலே போதுமானதாகும்.
மீரியபெத்தையில் இடம்பெற்றிருப்பது மனித பேரவலம் என்பதை இன்று உலகமே திரும்பிப்பார்த்து விட்டது. அறியப்பட்ட நாடுகள் அமைப்புக்கள் எல்லாமே இதனையே பேசுகின்றன.
இப்படியிருக்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் இவ்விடயத்தை முன்னிலைப்படுத்தி முரண்பட்டு அரசியல் களமொன்றினை உருவாக்கி விடுவார்களோ என்ற அச்சம் ஒன்றும் தொற்றிக்கொண்டுள்ளது.
மீரியபெத்தை மனித பேரவலத்தை பார்வையிடுவதற்கும் அந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அங்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற சில மணி நேரங்களில் இருந்தே மலையகக் கட்சிகளும் சம்பவ தினத்திலிருந்து தம்மால் ஆன பணிகளை இன்று வரையிலும் மேற்கொண்டு வருகின்றன.
இப்படி இருக்கையில் இருதரப்பு கருத்தாடல்கள் முரண்பாட்டு அரசியலுக்கு வழிவகுத்துள்ளது.
மீரியபெத்தைக்கு சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் தற்போது பனிப்போர் இடம்பெற்று வருகிறது.
தமிழர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நிற்பதாலும் அரசியலால் பிரிந்து நிற்பதாலும் வரட்டுக் கௌரவங்களை பாதுகாக்க துடிப்பதாலும் சாதாரண மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமாக இருந்து நோக்கினால் இங்கு இணக்க அரசியலுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாடு நிலை பெறுகின்றது.அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் தமது முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருவதானது அரசியல் களத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் முகம் சுளிக்கும் செயற்பாடாகவே அமைந்து விட்டது.
மேலும், கொழும்பிலிருந்து சொகுசு வாகனங்களில் அல்லாது விட்டால் உலங்கு வானூர்திகளில் சென்று அந்த மக்களின் நிலைமைகளை பார்த்து விட்டு மலையக அரசியல்வாதிகள் ஒன்றுமே அவர்களுக்கு செய்யவில்லை என்று ஊடகங்களில் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறான கதைகளைக் கூறுவதற்கு முன்னர் அவர்கள் சிந்திக்க தவறியவர்கள் என்பதை தாமே சுட்டிக்காட்டிக் கொள்கின்றனர்.
ஆகவே, மீரியபெத்தையில் மனித உயிரிழப்புக் களையும் அழிவுகளையும் மலையகத்தின் இரத்தக் கண்ணீரையும் அரசியல் மேடைகளில் போட்டு பந்தாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டியே வலியுறுத்தப்படுகின்றது.