ஆளும் தரப்பிற்கும் சரி, எதிரணிக்கும் சரி இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையிலேயே வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். தோற்கின்ற வேட்பாளரின் எதிர்காலம் சூனியமாகும் என்பது வாக்குரிமை கிடைக்காத சிறுவனுக்கும் தெரிந்த விடயம்.

இதற்குப் புறம்பான பின்விளைவுகளை பட்டியலிட்டு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, தமது முழுமையான தந்திரோபாயங்கள், பலம், அதிகாரம் எல்லாவற்றையும் பிரயோகித்தேனும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே இரு பிரதான வேட்பாளர்களும் பிரயத்தனப்படுகின்றனர்.

யார் எந்தக் கட்­சிக்கு தாவப்­போ­கின்­றாரோ என்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே ஒவ்­வொரு பொழுதும் விடி­கின்­றது. ஒவ்­வொரு முறை கைய­டக்க தொலை­பே­சிக்கு குறுந்­த­கவல் கிடைக்கப் பெறும்­போதும் எந்த எம்.பி.பல்டி அடித்­து­விட்­டாரோ என்ற அவா­வு­டன்தான் மனசு அந்த தக­வலை பார்க்­கின்­றது.

மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களும் நம்­பிக்­கை­களும் எப்­போ­துமே நிறை­வேறும் என்று கூறி­விட முடி­யாது. மக்கள் – வெற்று வாக்­கு­று­தி­களை வழங்கும் அரசியல்­வா­தி­க­ளுக்கு வாக்­க­ளித்துக் கொண்­டி­ருக்கும் வரைக்கும், தொடர்ச்­சி­யாக பிழை செய்­கின்ற எம்.பி. க்களையும் தலை­வர்­க­ளையும் மீண்டும் மீண்டும் தெரிவு செய்து, அவர்கள் இன்­னு­மின்னும் தவ­றி­ழைப்­ப­தற்கு வழி­வ­குத்துக் கொண்­டி­ருக்கும் கால­மெல்லாம் மக்­களின் விருப்­பப்­ப­டி­யான ஆட்சி என்­பது பகற்­கால சொப்­பனம் மட்­டுமே.

நமது நிகழ்­கா­லமும் அவ்­வா­றுதான் இருக்­கின்­றது. ஜன­வ­ரியில் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்தலில் மக்கள் எதையோ எதிர்­பார்க்­கின்­றனர். இந்த எண்ணம் ஆளுக்காள் வேறு­ப­டு­கின்­றது என்­ற­போ­திலும் நாட்டு மக்­க­ளிடம் பொது­வா­ன­தொரு அபி­லாஷை இருக்­கவே செய்­கின்­றது.

இங்கு ஒரு விட­யத்தை கவ­னிக்க வேண்டும். யார் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வர­வேண்டும் என மக்கள் நினைக்­கின்­றார்கள் என்­பதும் நிஜத்தில் தேர்தல் முடிவுகள் எப்­படி இருக்கும் என்­பதும் இரு முக்­கிய விட­யங்­க­ளாகும்.

இந்த எதிர்­பார்ப்பும் முடி­வு­களும் எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஒன்­றாக இருக்கும் எனக் கூற­வி­ய­லாது. ஏனென்றால் நமது அர­சியல் கலா­சாரம் நமக்குத் தந்­தி­ருக்­கின்ற அனு­பவம் அப்­பேற்­பட்­டது.

மாற்­ற­ம­டைந்த எதிர்­பார்ப்பு

ஜனா­தி­பதித் தேர்தலுக்­கான அறி­விப்பு வெளியாகும் வரைக்கும் தேர்தல் பற்றி மக்­க­ளி­ட­மி­ருந்த எதிர்­பார்ப்பு, கடந்த 20ஆம் திகதி தேர்தல் அறி­விப்பு வெளியான பிற்­பாடு சற்று மாற்­ற­ம­டைந்­தது.

அதி­லி­ருந்து 26 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் அதா­வது 21 ஆம் திகதி பொது வேட்­பாளர் அறி­விக்­கப்­பட்­டதும் இந்த எதிர்­பார்ப்பு என்­று­மில்­லா­த­வாறு புதியதொரு பரி­ணா­மத்தை எடுத்­துள்­ளதை மறுக்க முடி­யாது.

புலி­களை தோற்­க­டித்­தமை, போருக்குப் பின்­ன­ரான அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டமை என இன்­றைய ஜனா­தி­பதி தனது பத­விக்­கா­லத்தில் அசூர காரியங்­களை செய்து காட்­டி­யுள்ளார். அவ­ரது ஆட்­சிக்­காலம் வர­லாற்றில் பதி­யப்­பட்­டுள்­ளது.

குடும்ப ஆட்­சியும் இன­வா­தி­களின் கைகள் மேலோங்­கிய நிலை­மையும் பர­வ­லாக விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்த போதும் அசைக்க முடி­யாத ஒரு ஜனா­தி­ப­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ கரு­தப்­பட்டார்.

பிர­தான எதிர்க்­கட்­சியின் வங்­கு­ரோத்து நிலையும் பொது வேட்­பாளர் ஒரு­வரைக் கூட நிறுத்த முடி­யாத அள­வுக்கு எதிர்க்­கட்­சி­களின் கூட்­டணி இருந்­த­மையும் நடப்பு ஜனா­தி­ப­தியின் வெற்­றியை உறு­திப்­ப­டுத்திக் கொண்டே இருந்­தன.

ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்று நடை­பெற்றால் சிறு­சிறு வாக்­குச்­ச­ரி­வுடன் அல்­லது அது­வு­மின்றி மஹிந்த ராஜ­ப­க் ஷவே மீண்டும் வெற்றி பெறுவார் என்­பதை கள­நி­லவ­ரங்கள் உறு­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தன.

ஆனால், ஐக்­கிய தேசியக் கட்சி உத்­தே­சித்­தி­ருந்த மற்றும் மக்­க­ளுக்கு தெரிவித்துக் கொண்­டி­ருந்த பொது வேட்­பா­ளர்­களை நிறுத்­தாமல் திடீ­ரென மைத்திரிபால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­ட­மையால் முதன்­மு­த­லாக அர­சாங்கம் சவால்­மிக்க தேர்தல் கள­மொன்றை எதிர்­கொண்டுள்ளது.

சுதந்­திரக் கட்­சியில் 47 வரு­டங்­க­ளாக உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரா­கவும் இருக்­கின்ற ஒரு­வரை எதிரணிப்பக்கம் இழுத்­து­வந்து பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யமை நல்­ல­தொரு வியூக­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆனால் கடைசி தரு­ணத்­தி­லேயே புல­னாய்வுப் பிரி­வினர் ஊடா­கவோ அல்­லது மைத்­தி­ரியின் நட­வ­டிக்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டோ மைத்திரியின் நகர்­வு­களில் ஜனா­தி­பதி கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றார். இருப்­பினும் கடை­சி­வ­ரைக்கும் இதனை தடுத்து நிறுத்த முடி­ய­வில்லை என்­பது மிகப் பெரிய கைசே­த­மாகும்.

இந்த திட்டம் பல மாதங்­க­ளுக்கு முன்­னரே தீட்­டப்­பட்­டி­ருந்­த­தா­கவும் போக்குக் காட்­டு­வ­தற்­கா­கவே வேறு­வேறு நபர்­களின் பெயர்கள் அறி­விக்கப்பட்டதாகவும் சில ஊர்­ஜி­த­மற்ற தக­வல்கள் வெளியா­கி­யி­ருக்­கின்­றன.

அது உண்­மை­யென்றால் மைத்­தி­ரிக்கு பிர­தமர் பத­வியை அர­சாங்கம் காட்­டிக்­காட்டி மறைக்கத் தொடங்­கிய காலத்­தி­லி­ருந்தே மாற்று வழிகள் குறித்து மைத்­திரி சிந்­தித்­தி­ருக்கக் கூடும் என்ற முடி­வுக்கு வரலாம்.

எது எவ்­வா­றா­யினும் எதிர்க்­கட்சித் தலைவர், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க போன்ற பல­ரது மூளைகள் இந்த வியூகத்­திற்கு பின்னால் நிறைய வேலை செய்­தி­ருப்­பதை உய்த்­த­றியக் கூடி­ய­தாக இருக்­கின்­றது.

தேர்தல் என்ற அர­சியல் நாட­கத்தின் கதைக்குள் ரசி­கர்கள் எதிர்­பா­ராத ஒரு கிளைமேக்ஸ் கட்டம் போல, மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பிர­வேசம் அமைந்திருந்­தது. இதனால் ஒரு­வித ஊக்­க­ம­ருந்து கிடைத்­தது போல எதிர்க்­கட்­சிகள் புதுத்­தெம்பு பெற்­றி­ருக்­கின்­றன. மறு­பு­றத்தில் ஆளுந்­த­ரப்பில் பாத­க­மான ஒரு அதிர்வும் அடி­மட்ட உறுப்­பி­னர்­க­ளி­டையே இனம்­பு­ரி­யாத பீதியும் ஏற்­பட்­டி­ருப்­ப­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

இழுத்­தெ­டுக்கும் முயற்சி

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அவ­ருடன் வேறு­சி­லரும் அணி­தி­ரண்டு கள­மி­றங்­கி­யது பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யது மட்­டு­மின்றி மேலும் பலரும் ஆளும்­கட்­சிப்­பக்கம் இருந்து அடுத்­த­டுத்து எதி­ர­ணிப்­பக்கம் பல்டி அடிப்­பார்கள் போன்று தோன்­றி­யது.

ஆனால் ஓரிரு எம்.பி.க்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் தவிர கடந்த ஒரு­வா­ரத்தில் சொல்லிக் கொள்­ளும்­ப­டி­யான கட்­சித்­தா­வல்கள் இடம்­பெ­ற­வில்லை. இதற்கு கார­ணங்கள் நமக்குத் தெரிந்­த­வைதான்.

பொது எதி­ரணி தமது பக்கம் ஆட்­களை வளைத்­தெ­டுப்­ப­தற்கு கடு­மை­யாக உழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அந்த வகையில் இவ்­வ­ணியில் இன்னும் பலர் இணைந்து கொள்ள நல்­ல­நேரம் பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளுக்கு இருக்­கின்ற பிரச்­சினை நிச்­ச­ய­மாக மைத்­திரி வெற்றி பெறு­வாரா என்­பதும் ஒரு­வேளை அவர் தோல்­வி­யுற்றால் நம்­மு­டைய அர­சியல் எதிர்­காலம் என்­ன­வாகும் என்ற பயமும் ஆகும்.

அதே­வேளை, எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்­கின்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் இரண்டும் கெட்டான் நிலையில் ஆளும் கட்­சியில் சங்­க­ம­மாகி இருக்­கின்ற சிறு­பான்மை கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் சில­ரு­டனும் ஆளுந்­த­ரப்பு பேரம்­பே­சல்களை ஆரம்­பித்­து­விட்­டது.

ஆளும் கட்­சியில் இருந்து யார் யார் விலக முற்­ப­டு­கின்­றார்கள் என்­பதை கண்­கா­ணிப்­ப­தற்­கான எல்லா ஏற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. யாரா­வது ஒரு உறுப்­பினர் எதி­ர­ணிக்கு போக முற்­பட்டால் கூட உட­ன­டி­யாக அவ­ரது தொலை­பே­சிக்கு அழைப்­பொன்று வரும் என்ற அள­வுக்கு இந்த வலைப்­பின்னல் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக விட­ய­ம­றிந்­த­வர்கள் கூறு­கின்­றனர்.

இன்னும் 40 நாட்­க­ளுக்குப் பிறகு நடக்கப் போகின்ற தேர்தலில் யார் வெற்­றி­பெ­றுவார் என்­பதை இப்­போது அறு­தி­யிட்டுச் சொல்ல முடி­யாது. ஆயினும் கட்டாற்று வெள்ளத்தில் அடி­பட்டுச் செல்­ப­வ­னுக்கு சிறு­புல்லும் ஒரு துடுப்­பு­போல தோன்­று­வது மாதிரி அர­சியல் சுழிக்குள் சிக்­குண்­டுள்ள எந்த வேட்பாளரிற்கும் வாக்­குப்­ப­ல­மற்ற மக்கள் பிர­தி­நி­தி­களும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வர்­க­ளாக தென்­ப­டு­கின்­றனர்.

இந்­நி­லையில், நிலை­மைகள் மிகவும் சவால்­மிக்­க­தாக ஆகி­யி­ருப்­பதால் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவும் யாரையும் எதிர்­கட்­சிக்கு செல்­வதற்கு விட­மாட்டார் என்­பதே யதார்த்­த­மாகும். அத­னா­லேயே பைல்கள் பற்­றிய கதை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஏனைய எதி­ரணிக் கட்­சி­களும் எதிர்க்­கட்­சியில் இருந்து யாரை இழுத்­தெ­டுக்­கலாம்? யார் அர­சாங்­கத்­துடன் மனம் உடைந்து இருக்­கின்­றனர்? என்­பதை ரக­சி­ய­மாக வேவு­பார்த்து அவர்­க­ளுடன் பேச்சு நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான ஒரு பெரிய பட்­டி­யலை மைத்­தி­ரி­பால கொண்டு வந்­தி­ருக்­கவும் கூடும். ஆனால், வேட்­பு­மனு தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தாலும் வாக்க­ளிப்­புக்கு அதிக நாட்கள் இருப்­ப­தாலும் நாளை என்ன நடக்கும் என்று கூற முடி­யாத நிலையில் பல அர­சி­யல்­வா­திகள் இன்னும் முடி­வு­களை எடுக்காமல் இருக்­கின்­றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்­யப்­பட்ட பின்னர் கட்­சித்­தா­வல்கள் இதை­விட வேக­மாக இருக்கும் என எதிர்­பார்க்க முடியும். பொது வேட்­பா­ளரும் எதி­ர­ணியும் பலம் பொருந்­திய சக்­தி­யாக ஏறு­மு­கத்தில் செல்­லு­மாயின் நிறை­யப்பேர் ஆளும் தரப்பில் இருந்து எதி­ர­ணிக்கு தாவு­வ­தற்­கான சாத்­தியம் இருக்­கின்­றது.

அதேபோல், எதி­ர­ணியின் அலை ஓய்­வ­டைந்து செல்லும் ஒரு நிலைமை ஏற்­ப­டு­மாயின் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் ஆளும் கட்­சி­யுடன் இணைந்து கொள்­வார்கள். இப்­போது மஹிந்த ராஜ­ப­க் ஷவுக்கு அல்­லது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வாக நிற்­ப­தற்கு முடி­வெ­டுத்­தி­ருக்­கின்ற அர­சியல் வாதிகளும் கூட டிசம்பர் மாத பிற்­ப­கு­தியில் தமது ஆத­ரவை வாபஸ் பெற்றுக் கொண்டு, மாற்று முடிவை எடுக்­கக்­கூடும் என்று ஊகிக்­கப்­ப­டு­கின்­றது.

ஆளும் தரப்­பிற்கும் சரி, எதி­ர­ணிக்கும் சரி இந்த ஜனா­தி­பதித் தேர்தல் உண்­மை­யி­லேயே வாழ்வா சாவா போராட்­ட­மா­கவே இருக்கும். தோற்­கின்ற வேட்பா­ளரின் எதிர்­காலம் சூனி­ய­மாகும் என்­பது வாக்­கு­ரிமை கிடைக்­காத சிறு­வ­னுக்கும் தெரிந்த விடயம்.

இதற்குப் புறம்­பான பின்­வி­ளை­வு­களை பட்­டி­ய­லிட்டு சொல்ல வேண்­டி­ய­தில்லை. ஆகவே, தமது முழு­மை­யான தந்­தி­ரோ­பா­யங்கள், பலம், அதி­காரம் எல்­லா­வற்­றையும் பிர­யோ­கித்­தேனும் தேர்தலில் வெற்றி பெறு­வ­தற்கே இரு பிர­தான வேட்­பா­ளர்­களும் பிர­யத்­த­னப்­ப­டு­கின்­றனர்.

வாழ்வா சாவா போராட்டம்

ஆளும் கட்சி பல வழி­களில் மக்­க­ளையும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளையும் தமது கட்­டுக்குள் வைத்துக் கொள்ளப் பார்க்­கின்­றது. ஒரு மக்கள் பிர­தி­நிதி அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எதனை எதிர்­பார்க்­கின்­றாரோ அவ­ருக்கு எதனை கொடுத்தால் சமா­ளிக்க முடி­யுமோ அதனை கொடுத்து அவரை கட்­டிப்­போ­டு­வ­தற்கு ஆளும் தரப்பு பின்­னிற்கப் போவ­தில்லை.

அதே­மா­திரி நிவா­ர­ணங்கள், ஊதி­யங்கள், கொடுப்­ப­ன­வுகள் என்று அரச பொறி­மு­றையின் ஊடாக கொடுக்­கப்­ப­டு­கின்ற கிட்­டத்­தட்ட எல்லா வெகு­ம­தி­களும் மக்­களின் தேர்தல்கால மனப்­ப­திவில் நிச்­சயம் செல்­வாக்குச் செலுத்தப் போகின்­றன.

பொது வேட்­பாளர் என்­பது வெளிநாட்டு சதித் திட்டம், மீண்டும் நாட்டை சுடு­கா­டாக்க சில சக்­திகள் முயற்­சிக்­கின்­றன போன்ற பரப்­புரை சிங்­கள மக்­களைப் பொறுத்­த­மட்டில் அர­சாங்­கத்­திற்கு கைகொ­டுக்கும். போதாக்­கு­றைக்கு யுத்­த­வெற்­றியும் புலிப்­பயம் காட்­டலும் அர­சாங்­கத்தின் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்கு குறை நிரப்புச் செய்யும்.

ஆனால், எதிர்க்­கட்­சிகள் இது எத­னையும் செய்ய முடி­யாது. கட்சி தாவு­கின்ற எம்.பி.க்களுக்கு ஏதா­வது சந்­தோ­சத்தை கொடுக்க முடிந்தால் கூட, வாக்குறுதி­க­ளாலும் கொள்­கை­க­ளா­லுமே மக்­க­ளது மனங்­களை நிரப்ப வேண்­டி­யி­ருக்­கின்­றது.

எனவே பொது எதி­ரணி நிறைய அர்ப்­ப­ணிப்­புடன் பாடு­பட வேண்டும். வெறும் கிளு­கி­ளுப்­புக்­களும் சிலிர்ப்­பூட்­டல்­களும் வாக்குப் பெட்­டி­களை நிரப்­பாது என்­பதை கவ­னத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்­ப­டையில் நோக்­கு­கின்ற போது, பொது எதி­ரணி உள்­ளுக்குள் சில பல­வீ­னங்­களை கொண்­டி­ருக்­கின்­றதோ என்ற சந்­தே­கமும் எழு­கின்­றது.

ரணில் பிர­த­ம­ராக அறி­விக்­கப்­பட்­டதை சிலர் விரும்­ப­வில்லை. தாம் மைத்­தி­ரி­யையும் சந்­தி­ரி­கா­வையும் நம்­பியே எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்க முன்­வருகின்றோம்.

ஆனால் ரணில் பிர­த­ம­ராகி அவ­ரிடம் அதி­கா­ரங்கள் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை நாம் விரும்­ப­வில்லை என்ற தோர­ணையில் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். உண்­மைதான் சந்­தி­ரிகா மற்றும் மைத்­தி­ரி­யா­லேயே இந்த அலை எழுந்­தி­ருக்­கின்­றது. ரணிலால் இந்த அலை எழுந்­தது என்றால் இதற்கு முன்­னமே அது நடந்­தி­ருக்க வேண்டும்.

இருப்­பினும் ஐ.தே.க.ஆத­ர­வா­ளர்­களை இலக்­காகக் கொண்டு மைத்­திரி வெளியிட்ட அறி­விப்பு ஏனைய தரப்­பி­னரை நின்று நிதா­னிக்கச் செய்­தி­ருக்­கின்­றது.

அதேபோல் பொது வேட்­பா­ள­ராக தன்னை பிர­க­ட­னப்­ப­டுத்­திய மைத்­தி­ரியின் பிர­க­ட­னங்கள் தர்க்­க­வியல் ரீதி­யாக நோக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது – இரண்டுமுறை நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக் ஷ மீண்டும் அப்­ப­த­வியில் அமர விரும்­பு­கின்றார் என்றால், ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று 100 நாட்­க­ளுக்குள் மைத்­திரி அதனை விட்டுத் தரு­வாரா? கொஞ்சக் கால­மேனும் நிறை­வேற்­ற­தி­கா­ரத்தை சுகிக்க மைத்­திரி விரும்­ப­மாட்டார் என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை.

அத்­துடன் ரணிலை அதி­கா­ர­முள்ள பிர­த­ம­ராக ஆக்­கி­விட்டு பெய­ர­ளவில் (நிறை­வேற்று அதி­கா­ர­மற்ற) ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தற்­கா­கவா மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ளவு பாடு­ப­டு­கின்றார்? போன்ற தர்க்­க­வியல் வினாக்­களும் இத­ன­டிப்­ப­டையில் எழு­கின்­றன.

இந்த நாட்டை 9 வரு­டங்­க­ளாக ஆட்சி செய்த மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இன்­னு­மொரு தடவை மக்கள் ஆணையை வேண்டிநிற்கின்­றது. மஹிந்த ராஜ­பக் ஷ இன்­னு­மொரு தடவை தமக்கு வாக்­க­ளிக்­கு­மாறு மக்­க­ளிடம் கேட்­கின்றார்.

மறு­பு­றத்தில், நெடுங்­கா­ல­மாக தோல்­வியே விதி­யென இருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஏனைய எதிர்க்­கட்­சி­களும் சேர்ந்து ஒரு சுதந்­திரக் கட்சிக் காரரை பொது­வேட்­பா­ள­ராக நிலை நிறுத்­தி­யி­ருக்­கின்­றன. இந்தப் பின்­ன­ணியில் யார் எந்­தப்­பக்கம் பல்டி அடிப்­பார்கள் என்­பதை விடவும் சிறு­பான்மை மக்கள் எவ்வாறு நடந்து கொள்­வார்கள் என்­பதே கவ­னிப்­பிற்­கு­ரி­யது.

சிறு­பான்மை மக்­களின் நிலை

சிறு­பான்மை மக்கள் பொது­வா­கவும் முஸ்­லிம்கள் குறிப்­பா­கவும் வெறுப்­ப­டைந்து போயி­ருக்­கின்ற விடயம் – இன­வாத சக்­தி­களின் மேலா­திக்­க­மாகும். கடந்த 3 வரு­டங்­க­ளாக பொது பல­சே­னாவும் அதன் தோழமை இயக்­கங்­களும் முஸ்லிம், கிறிஸ்­தவ சமய அழிப்பு கைங்­க­ரி­யங்­களில் ஈடு­பட்­டன. அளுத்­க­ம­யிலும் பேரு­வ­ளை­யிலும் சிறி­ய­தொரு இனச்­சுத்­தி­க­ரிப்பே நடந்­தே­றி­விட்­டது.

ஆனால், கல­வ­ரத்­துக்கு கார­ண­மா­ன­வர்கள் இன்னும் பகி­ரங்­க­மாக உல­வித்­தி­ரி­கின்­றனர். முஸ்­லிம்கள் ஆறுதல் கொள்ளும் அள­வுக்கு அர­சாங்கம் நடவடிக்கை எடுக்­க­வில்லை என்ற வர­லாற்றுக் கவலை முஸ்லிம் மக்கள் மத்­தியில் இருக்­கின்­றது.

இவ்­வா­றான ஒரு நிலைமை ஏற்­ப­டு­வதை அர­சாங்கம் தடுத்­தி­ருந்தால் சிறு­பான்மை மக்­களின் மனங்­களில் மைத்­தி­ரி­பால தாக்கம் செலுத்­தி­யி­ருக்­க­மாட்டார் என்­பதே நிதர்­சனம்.

தமி­ழர்­களைப் பொறுத்­த­மட்டில், விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்டு விட்டால் கூட அவர்­க­ளது உரி­மைசார் உணர்வு இன்னும் அப்­ப­டி­யேதான் இருக்கின்­றது என்று சொல்ல வேண்டும்.

எத்­தனை பரி­சு­களை அவர்­க­ளுக்கு கொடுத்­தாலும் கொள்­கையில் இருந்து இறங்கி வர­மாட்­டார்கள் என்­ப­தற்கு வட மாகாண சபையின் தேர்தல் முடி­வுகள் நல்ல சான்று.

இருப்­பினும், சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த ஒருவர் இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வர­மு­டி­யாது என்ற அடிப்­ப­டையில், எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தலில் தமிழ் கட்­சிகள் பிர­தான வேட்­பா­ளர்­களுள் இரு­வரில் ஒரு­வ­ருக்கே ஆத­ரவு வழங்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஒரு­வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யிட்­டி­ருந்தால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு போன்ற கட்­சிகள் அவ­ருக்கு ஆத­ர­வ­ளித்­தி­ருக்கும். முன்­னைய ஜனா­தி­பதித் தேர்தலில் வாக்­க­ளிப்பில் இருந்து வில­கி­யி­ருந்­த­மைக்­கா­கவும், போர் நிறுத்த உடன்­ப­டிக்­கையை கொண்டு வந்­தவர் என்ற நல்லெண்ணத்திலும் அந்த முடிவை த.தே.கூட்­ட­மைப்பு எடுத்­தி­ருக்கும்.

ஆனால் மைத்­தி­ரி­பால நிறுத்­தப்­பட்­டுள்­ள­மையால் கடு­மை­யான கலந்­தா­லோ­ச­னை­களை நடத்தி வரு­கின்ற பின்­ன­ணியில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு பொது வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் முடிவை எடுக்கும் அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன.

ஆளும் கட்சி சார்பில் இணைப்­பா­ளர்­க­ளாக பல தமி­ழர்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­மையால் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தலில் குறிப்­பிட்­ட­ள­வான தமி­ழர்­களின் வாக்­குகள் மஹிந்த ராஜ­ப­க் ஷவுக்கு கிடைக்கும் சாத்­தி­ய­மி­ருந்­தாலும், இலட்­சக்­க­ணக்­கான தமி­ழர்கள் த.தே.கூட்­ட­மைப்பின் முடி­வுக்கு அமை­வா­கவே வாக்­க­ளிப்­பார்கள் என்­பது அர­சாங்­கத்­திற்­கே தெரியும். அத­னால்தான் தமி­ழர்­களின் ஆத­ரவை அர­சாங்கம் பெரிதாக நம்­பி­யி­ருக்­கவும் இல்லை.

இதே­வேளை, ஆளும் கட்­சியில் அங்கம் வகிக்­கின்ற முஸ்லிம் கட்­சி­களில் தேசிய காங்­கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை இன்னும் அறி­விக்­க­வில்லை.

சமூ­கத்தின் எதிர்­கால நலன்கள் பற்­றிய அக்­கறை அல்­லாமல், பைல்கள் (கோப்­புகள்) பற்­றிய பயமே அதிகம் எல்­லோ­ரையும் ஆட்­கொண்­டுள்­ளது. அத்­துடன் தமது அர­சியல் எதிர்­காலம் பற்­றியும் அவர்கள் அச்சம் கொண்­டுள்­ளனர். உண்­மையில் பைல்கள் பற்­றிய பீதியை ஜனா­தி­பதி கிளப்­பி­விட்டது மைத்­தி­ரி­பா­ல­வுக்­காக மட்­டுமின்றி, அர­சாங்­கத்தில் உள்ள ஏனைய உறுப்­பி­னர்­களை அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வ­தற்கும் என்றால் மிகை­யில்லை.

எல்லா எம்.பி.க்களையும் போல முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க ளுக்கும் ஜனா­தி­ப­தி­யிடம் பைல்கள் இருக்­கின்­றன.

நல்­லது கெட்­ட­துகள் அதில் இருக்கும். ரவூப் ஹக்­கீமோ, ரிஷாத் பதி­யு­தீனோ, அதா­வுல்­லாவோ ஆளும் தரப்பில் இருக்கும் வரைக்கும் எல்லாம் சுப­மா­கவே இருக்கும். ஆனால், ஒரு­வேளை தமக்கு எதி­ரான நிலைப்­பாட்டை இவர்கள் எடுத்தால் இந்த பைல்­களில் இருக்­கின்ற கெட்­ட­துகள் வெளிக்­கொ­ண­ரப்­படும், பெருப்­பித்து காண்­பிக்­கப்­படும்.

இதுதான் பல தசாப்­தங்­க­ளாக நமது அர­சியல் கலா­சா­ர­மா­கவும் இருக்­கின்­றது. இப்­ப­டி­யான நிலை­யிலும் துணிந்து ஒரு முடிவை எடுப்­பது என்றால் தமது கைகள் சுத்­த­மாக இருக்க வேண்டும். அல்­லது எதிர்த்து நின்று போராடும் திராணி இருக்க வேண்டும்.

ஆனால், ஆளும் தரப்­புடன் இரவில் பேச்­சு­வார்த்தை நடத்­து­ப­வர்­க­ளாலும், கொந்­த­ராத்­துக்­களில் கொள்ளை அடிப்­ப­வர்­க­ளாலும், அபி­வி­ருத்தி என்ற போர்வையில் தமது கஜ­னாக்­களை நிரப்­பு­கின்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாலும் துணிந்து முடி­வெ­டுப்­பது என்­பது இய­லாத காரியம்.

எது எவ்­வா­றி­ருப்­பினும் யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூம் தொடர்ந்து கலந்தாலோசித்து வருகின்றன.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னரே இறுதி முடிவை அறிவிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஹுனைஸ் பாறூக் எம்.பி.யை இழந்துவிட்ட மக்கள் காங்கிரஸ் கட்சி எந்த முடிவுக்கும் வர முடியாதவாறு தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

இனவாத இயக்கங்களின் நிலைப்பாடு சிறுபான்மை கட்சிகளின் முடிவில் நிச்சயம் தாக்கத்தை செலுத்தும். குறிப்பாக பொதுபலசேனா இணையும் பக்கத்திற்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்க முன்வரமாட் டார்கள்.

இந்நிலையில் பொது பலசேனா ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆனால் பொது பலசேனாவை தம்பக்கம் வைத்துக்கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களிடம் வாக்குக் கேட் பது மிகவும் சிக்கலான ஒரு நிலைமையாகும்.

அதுபோலவே முஸ்லிம் கட்சிகளும் அரசாங் கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் மற் றும் பிரதியமைச்சர்களும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு முஸ்லிம்களிடம் வாக்குக் கேட்க வருவார்கள்?

மைத்திரிபால அணியினருக்கு இது நல்லதொரு பிளஸ் பொயின்டாக அமையும். இதனை  தமது பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக பொது எதிரணி பயன்படுத்தும்.

ஆனால், சம்பிக்க ரணவக்க போன்றோர் அங்கம் வகிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதையும் மறந்து விடலாகாது. இரு பக்கங்களிலும் இனவாதத்தின் தாக்கம் சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கின்றது.

எனவே சிறுபான்மை மக்களின் வாக்கு தேவையானவர்கள் இனவாத சக்திகளை ஒதுக்க வேண்டியிருக்கும். அது நடைபெறாத பட்சத்தில், குறைந்த இனவாத சிந்தனையுள்ள தரப்பினர் ஆதரவளிக்கும் வேட்பாளரை ஆதரிக்கும் முடிவையே பெரும்பாலான சிறுபான்மை மக்கள் எடுப்பர்.

மக்களின் கையில் மூக்கணாங்கயிறு இருக்கின்றது. அவர்கள் ஒரு முடிவில் இருக்கின்றார்கள். தலைவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் மக்கள் அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. உங்களது அரசியல் பற்றி அவர்களுக்கு தெரியும். இனியும் ஒருமுறை அவர்கள் ஏமாறப் போவதில்லை.

–ஏ.எல்.நிப்றாஸ்–

Share.
Leave A Reply