விடுதலைப் புலிகள் அணுகுண்டு தயாரிப்பதற்காக வைத்திருந்த சிவப்பு பாதரசம் என பொய் சொல்லி அலுமினிய உருளையை ரூ.150 கோடிக்கு விற்க முயன்ற மூவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெங்களூரு குற்றப்பிரிவு துணை ஆணையர் அபிஷேக் கோயல் கூறியதாவது:
பெங்களூருவில் ஒரு கும்பல் அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் சிவப்பு பாதரசத்தை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயல்வதாக குற்றப்பிரிவு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் மாறு வேடத்தில் மோசடி கும்பலிடம் வாடிக்கையாளர்களைப் போல பேசினர்.
அப்போது ஓசூரைச் சேர்ந்த மணிகண்டன், முகமது ஹனீப் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த நாகராஜா ஆகியோர், “விடுதலை புலிகள் அணுகுண்டு தயாரிப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து, ‘சிவப்பு பாதரசம்’ என்ற மூலப்பொருளை பல நூறு கோடிக்கு வாங்கினர்.
அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதால் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் அதை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். தற்போது அந்த சிவப்பு பாதரசத்தின் மதிப்பு ரூ.150 கோடி என்றனர்.
மேலும் அதைக் காட்ட வேண்டு மென்றால், ரூ.5 இலட்சம் முன்பணமாக தர வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பொலிஸார் ரூ.5 இலட்சத்தை கொடுத்தனர்.
முன்பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் ஒரு சிலிண்டருக்குள் உருளையாக செய்யப்பட்ட அலுமினியத்தை, அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் சிவப்பு பாதரசம் என காட்டியுள்ளனர்.
இதற்காக அமெரிக்க ஆய்வகம் அளித்தது போன்ற போலி சான்றிதழையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.
இதையடுத்து குற்றப்பிரிவு பொலிஸார் மணிகண்டன், முகமது ஹனீப், நாகராஜா ஆகிய மூவரையும் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
மேலும் இந்த திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜெய் சிங்கை பொலிஸார் தேடி வருகின்றனர். கைதான மூவரிடமும் இந்த நூதன மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.
விடுதலைப் புலிகள் பெயரில் சிவப்பு பாதரசம் என பொய் சொல்லி ரூ.150 கோடி மோசடி செய்ய முயன்ற வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகி இருப்பது, கர்நாடக தமிழர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(தி ஹிந்து)