எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு தகுந்த பாதுகாப்பும் , வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தங்களுடைய சொந்த காணிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றவுடன் நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு சுமுகநிலை ஏற்பட்டவுடன் இனப்பிரச்சினைத் தீர்வுகுறித்து அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்வியில் தெரிவித்தார்.
அவரது செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகிறது.
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது என எடுக்கப்பட்ட முடிவு ஏகோபித்த முடிவா? இவருக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னர் அவருடன் ஒப்பந்தம் ஏதேனும் செய்து கொள்ளப்பட்டுள்ளதா?
பதில்: கூட்டமைப்பின் முடிவு ஏகமனதான முடிவாகும். நாம் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளவில்லை.
கேள்வி: ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை என்றால் எவ்வாறு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்தீர்கள். தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்து ஆரதவளிக்கத் தீர்மானித்தீர்களா?
பதில்: தேர்தல் விஞ்ஞாபனத்தை மட்டும் பார்க்கவில்லை. அவரின் பிரதான நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பார்த்தோம்.
இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாமல் போயுள்ளது, ஏகாதிபத்தியம் தலைவிரித்து ஆடுகின்றது, ஊடக சுதந்திரம் இல்லாமல் ஒழிக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கின்றது. எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இவையனைத்தையும் மீள முறையாக இயங்கச் செய்ய உறுதி பூண்டுள்ளார்.
இவை அனைத்தையும் மாற்றி அமைப்பதற்கு முதலாவதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்.
18ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்து 17ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும். தேர்தல் முறை பரீசீலிக்கப்பட வேண்டும். இந்த மூன்று விடயங்களையும் முதல் நூறு நாட்களில் நிறைவேற்றுவது இவரின் பிரதான இலக்காகவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2005ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதை ஒழிக்கவில்லை. 2010ஆம் ஆண்டு அதன் அதிகாரங்களைக் குறைப்பேன் என்று கூறினார். ஆனால் குறைக்கவில்லை. மாறாக 18ஆம் திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை அதிகரித்திருக்கின்றார்.
அவர் வாக்குறுதி அளித்தபடி எதுவும் செய்யவில்லை. இம்முறை அப்படிச் செய்வேன் என்று கூடச் கூறவில்லை. ஆகையால் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரின் நிலைப்பாட்டிலும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது.
நாட்டில் ஒரு ஜனநாயக சூழல் உருவாக வேண்டுமாக இருந்தால் நாடு தற்போது செல்லும் திசையிலிருந்து தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது எதிர்த் திசைக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி செய்வேன் என்று கூறி இருக்கும் ஒரே வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மட்டுமே.
கேள்வி : கடந்த சில நாட்களின் முன்னர் சந்திரிகா அம்மையார், ரணில் விக்கிரமசிங்க மற்றும் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. இது எந்தளவு உண்மையானது?
பதில்: எந்தவிதமான உண்மையும் இல்லை. அவ்வாறு நாங்கள் எந்தவிதமான சந்திப்பையும் நடத்தவில்லை.
கேள்வி: கூட்டமைப்பினருக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்குமிடையில் இதுவரை பேச்சுவார்த்ததை நடத்தப்படவில்லையா? நாங்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் இதுதொடர்பாகவும் ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து கொள்வீர்களா எனவும் வினவினோம். அவர் இல்லை என்று பதிலளித்தார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்: அவரே கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரண்டு தடவைகள் பகிரங்கமாகப் பேசியிருப்பதாக கூறியிருக்கிறார்.
ஆனால் நாங்கள் எந்தவிதமான ஒப்பந்தங்களும் செய்து கொள்ளவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். பேச்சுவார்த்தையின் அடிப்படை என்னவென்று கூறினால் நாங்கள் இனப்பிரச்சினை தீர்வு குறித்து தகுந்த சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பத்து வருடங்களாகப் பேசியிருக்கின்றோம். அதுமட்டுமல்ல விசேடமாக கடந்த ஐந்து வருடங்களாக இது தொடர்பில் பேசியிருந்தோம்.
ஆனால் செய்வதாக உறுதியளித்த எந்த விடயத்தையும் அவர் செய்யவில்லை. மாறாக எங்களுக்கு எதிரான திட்டங்களை வகுத்து அதை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறார். அது நிறுத்தப்பட வேண்டும்.
அவரின் கைகளிலும் அவரின் குடும்பத்தின் கைகளிலும் முழுமையான அரச அதிகாரம் இருப்பதன் காரணத்தினால் எமக்கொரு ஜனநாயக இடைவெளி கூட இல்லாமல் போய்விட்டது.
அதனால் அதை மீண்டும் பெறவேண்டியது தான் முதலாவது படி. தீர்வுகளைப் பற்றிப் பேசுவதற்கு முதலில் எமது நாடு ஒரு ஜனநாயக நாடாக இருக்கப் போகின்றதா இல்லையா? என்பது தான் இன்று எம் நாட்டை எதிர் நோக்கியுள்ள முதல் கேள்வி.
ஆகையால் எல்லாவற்றிற்கும் முதலில் ஏகாதிபத்தியத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் நாட்டை திசை திருப்பி மீண்டும் ஜனநாயகம் கொண்ட நாடாக உருவாக்குவதுதான் எங்களின் முதற் கடமை.
கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞான சார தேரர் ஆகியோர் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரில் 50 சதவீதமானோரை வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூட்டமைப்பினருடன் இரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பிரசார கூட்டங்களில் கூறிவருகின்றனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் : எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு தகுந்த பாதுகாப்பும், வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
தங்களுடைய சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: இக்கருத்து உங்களுடனான பேச்சுவார்த்தையில் சொல்லப்பட்டதா? அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுகின்றதா?
பதில் : அவருடைய நூறுநாள் வேலைத்திட்டத்தில் இவை அனைத்தும் கூறப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் புலனாய்வுப் பிரிவினரின் தலையீட்டை இல்லாமல் செய்வேன் என்றும் கூறப்பட்டுள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் சிவில் ஆட்சி முறையை மீளக்கொண்டு வருவேன் என்றும் கூறியுள்ளார். இராணுவம் இராணுவத்திற்குரிய செயலில் மட்டும் தான் ஈடுபடும் அதைத் தவிர்த்து வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறார்.
இவை அனைத்தும் முற்போக்கான விடயங்கள். எமது மக்களுக்கு இவற்றைச் செய்வாராக இருந்தால், இன்று மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நிவாரணம் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
கேள்வி: முதல் படியாக இந்த நாட்டில் ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டும். அதன் பிறகு தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கின்றீர்களா?
பதில்: முதலாவதாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். அதன் பிறகு கொண்டுவரப்போகும் தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டிற்கொரு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க ஒரு உறுதி மொழியை வழங்கியிருக்கின்றார்.
இப்படியான ஒரு ஜனநாயக சூழல் கிடைக்குமாக இருந்தால் அப்போது நாங்கள் நீண்ட கால இனப்பிரச்சினைக்கான தீர்வை அந்த புதிய அரசியலமைப்பு திட்டத்தின் மூலம் உருவாக்குவதற்கு எங்களால் முடிந்தவற்றை அந்த வேளையில் செய்வதுடன் எமது நிலைப்பாட்டையும் தெரிவிப்போம்.
கேள்வி: நூறு நாள் திட்டத்தின் பின் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்குமா?
பதில் : அது குறித்து நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. நாங்கள் பொது எதிர்க் கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.
தற்போது தான் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென தீர்மானித்திருக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கும் காரணத்தினால் அவருடன் மேடையில் ஏறி பிரசாரம் செய்வது தொடர்பாகவும் இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர் ஏற்படும் முன்னேற்றத்தின்படி நாங்கள் அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அத்தோடு நாங்கள் பின் கதவால் போய் இரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ள வில்லை.
அப்படிச் செய்யும் எண்ணமும் எமக்கில்லை. ஏனெனில் இந்த பிரச்சினை தீரவேண்டுமாக இருந்தால் அது முறைப்படியும் வெளிப்படைத் தன்மையோடும் எல்லா நாட்டு மக்களுக்கும் தெரிந்த வகையில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் தீர்வுதான் நிலைத்து நிற்கும்.
அதேநேரத்தில் அரசாட்சி அதிகாரங்களில் சகல மக்களுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் காரணத்தினால் அதை அடைய முடியாமல் சில மக்களும், எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருப்பதால் தங்களின் கைகளில் மட்டும் அதை வைத்துக் கொள்ள நினைக்கும் மக்களும் இருக்க முடியாது. ஆகையால் நியாயமான ஒரு நிலைப்பாடு என்பதை பெரும்பான்மையின மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே அப்படியான ஒரு சூழலில் எங்களை நாங்கள் அர்ப்பணித்து இருக்கின்றோம்.