ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்திலும்,கால் நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.கா பொது செயளாலருமான ஆறுமுகன் தொண்டமான் இறம்பொடை வெவென்டன் தமிழ் வித்தியாலயத்திலும் தனது வாக்கினை அளித்தனர்.
கள்ளவாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும்: மஹிந்த தேசப்பிரிய
08-01-2014

வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதான என்று ஊடாகவியாளர் வினவினார்.
ஆகக்குறைந்த பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது தேவையானது அவசியமான அதிகாரமேயாகும். கள்ளவோட்டு போடுவதற்கு வருகின்றவர்களின் முழங்காலுக்கு கீழ் சுடவதனால் எந்த பிரயோசனமும் இல்லை.
முழங்காலுக்கு கீழ் சுட வேண்டிய அவசியமில்லை. கள்ளவாக்கு போட்டுவதற்கு வந்தால் அல்லது குழப்பங்களை விளைவிக்க முயற்சித்தால் அவ்வாறானவர்களின் தலையில் சுட வேண்டும் என்றார்.











