புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசிதரூர், சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி அவரது 3வது மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்யவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று கடந்த 6ம் தேதி தகவல்கள் வெளியாகின.
அணுக்கதிர் பிரிப்புக்கு பயன்படும் சயனைடை விட வீரியமுள்ள மருந்து மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து சுனந்தாவின் குடல் மற்றும் பல்வேறு உடல் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சசிதரூரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இறந்து போன சுனந்தா புஷ்கரின் வாழ்க்கை வரலாற்றை சிறிது திரும்பி பார்ப்போம். காஷ்மீர் மாநிலத்தில் செல்வாக்குமிக்க பண்டிட் குடும்பத்தில் ராணுவ லெப்டினன்ட் கர்னல் புஷ்கர்நாத் தாஸ் மற்றும் ஜெயா தாஸ் ஆகியோருக்கு 1964ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி சுனந்தா புஷ்கர் பிறந்தார்.
இவருக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். ஒருவர் ராணுவத்திலும், மற்றொருவர் வங்கி அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளனர்.
சுனந்தாவின் தந்தை புஷ்கர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதும், இவரது குடும்பத்தினர் ஜம்முவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு சுனந்தா அரசு கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தார்.
அப்போது அவருடன் படித்த சஞ்சய் ரெய்னா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் இடையே 1988ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றனர்.
அதன்பின்னர் சுனந்தா 1989ம் ஆண்டு துபாய்க்கு சென்றார். அங்கு துபாய் நிதி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றினார்.
இந்தியாவில் விளையாட்டு தொடர்பான நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். துபாயில் சுஜித் மேமன் என்பவரை 1991ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அதன்பிறகு நிதி நெருக்கடியால் சுஜித் மேமன் இறந்தார்.
இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு கோடீஸ்வரர் சன்னி வர்க்கி என்பவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது கனடா மனைவி கிறிஸ்டா கில்ஸுடன் வந்திருந்த சசிதரூரை சுனந்தா சந்தித்து பேசினார். பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 2010ம் ஆண்டு கேரளாவில் சசிதரூரின் பாரம்பரிய இல்லத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே இது 3வது திருமணமாகும்.இந்தியாவில் பிறந்து கனடாவின் பிரஜையான சுனந்தா புஷ்கர், ஆரம்பத்தில் ஸ்ரீநகரில் நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்தார்.
பின்னர் துபாய் சென்று, இந்திய திரையுலக நட்சத்திரங்களை வைத்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த புகழ்மிக்க மாடல் அழகிகளை வைத்தும் பேஷன் ஷோக்களை நடத்தி வந்தார். இதன்மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருவாய் அதிகரித்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், அப்போதைய மத்திய அமைச்சர் சசிதரூரின் உதவியுடன் கொச்சி அணியை வாங்க சில நிறுவனங்களுக்கு உதவி செய்தார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் கமிஷன் தரப்பட்டது.
பின்னர் இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் அமைச்சர் பதவியிலிருந்து சசிதரூர் விலகினார்.இந்நிலையில், சசிதரூர்-சுனந்தாவின் வாழ்க்கை பயணத்தில் கடந்த 2013ம் ஆண்டு பாகிஸ்தானிய பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் புயலாக நுழைந்தார்.
அவரும் மத்திய அமைச்சராக இருந்த சசிதரூரும் அடிக்கடி வெளிநாடுகளில் சந்தித்து கொண்டனர். அத்துடன் இணையதளம் மூலமாக தங்களது காதலை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இத்தகவல் சுனந்தாவுக்கு தெரியவந்ததும் சசிதரூரிடம் பொங்கி எழுந்தார். மேலும், பாகிஸ்தானிய பெண் பத்திரிகையாளரை இணையதளம் மூலம் காய்ச்சி எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சசிதரூருக்கும் சுனந்தாவுக்கும் மோதல் முற்றியது. டெல்லியில் சசிதரூரின் அரண்மனை போன்ற அரசு வீடு இருந்தாலும், சுனந்தா அடிக்கடி டெல்லி நட்சத்திர ஓட்டல்களில் தங்க ஆரம்பித்தார்.
அதன்பின், தனது குடும்பத்தில் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்தார்.
கடந்த ஆண்டு ஐ.மு. கூட்டணி ஆட்சியில் சசிதரூர் அமைச்சராக இருந்த சமயத்தில், சுனந்தாவின் மரணம் தற்கொலை என்று கூறப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் அது தற்கொலை அல்ல, கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று டெல்லி போலீஸ் கூறியிருப்பது சசிதரூரை மேலும் சிக்கலில் ஆழ்த்திஉள்ளது.