ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெற்று வெற்றியீட்டியதன் மூலம் மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பள்ளேவத்தே கமரால லாகே மைத்திரிபால யாபா சிறிசேன எனும் முழுப் பெயரைக் கொண்ட இவர் 1951ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 3ஆம் திகதி பௌத்த சமயத்தைப் பின்பற்றும் மத்திய தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஜயந்தி புஷபகுமாரி என்பவருடன் திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்ட இவருக்கு இரு மகள்மாரும் ஒரு மகனும் உள்ளனர்.
கல்வி:
1955 இல் பொலன்னறுவ லக் ஷ உயன பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பொலன்னறுவை தப்போவௌ மகா வித்தியாலயம், பொலன்னறுவை றோயல் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வியைத் தொடர்ந்தார்.
குண்டசாலை இலங்கை விவசாயக் கல்லூரியில் இணைந்து விவசாயத் துறையில் டிப்ளோமா பட்டத்தைப் பெற்ற இவர் ரஷ்யாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கூடத்தில் அரசறிவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
1974 இல் தனது முதலாவது தொழிலாக பொலன்னறுவையில் கூட்டுறவு கொள்வனவு உத்தியோகத்தராக பதவியேற்றார். 1976 இல் கிராம உத்தியோகத்தராக கடமையேற்று, நாளாந்த நிர்வாக விடயங்களில் அயல் கிராமங்களுக்கும் சேவையாற்றினார். 1978 இல் தனது தொழிலை இராஜினாமாச் செய்து முழுநேர அரசியலில் களமிறங்கினார்.
1967இல் பொலன்னறுவை றோயல் மத்திய கல்லூரியில் ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை பூர்த்தி செய்த காலப்பகுதியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் அங்கத்தவராகவும், அதன் பொலன்னறுவைத் தொகுதிக்கான செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இவர் 1970 இல் ஒரு மாணவராக இருக்கும் போதே சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் ஊக்கத்துடன் பங்கேற்றார்.
1977 இல் தீவிர அரசியலில் கால் பதித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினது மத்திய குழுவின் பொலன்னறுவைத் தேர்தல் தொகுதி செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1977 தேர்தலில் இவர் முக்கிய பங்கு வகித்ததுடன், தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகள் காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டார். அதேவருடம் கியூபாவில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார்.
1979 இல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொலன்னறுவை மாவட்ட செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். 1980 இல் மாவட்ட மட்டத்தில் சுதந்திரக் கட்சியை வழிநடத்துவதற்காக அதன் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1981 இல் அகில இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் ஸ்தாபனத்தின் பொருளாளராக மைத்திரி மாறினார். அதன் மூலம் கட்சியின் உயர்மட்ட தீர்மானங்களை எடுக்கும் அமைப்பான மத்திய குழுவின் அங்கத்தவராகும் வாய்ப்பை அவர் பெற்றார்.
1989 ஆம் ஆண்டு பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்தார். அக்காலம் தொடக்கம் 1994 வரை பல அமைச்சுப் பதவிகளை வகித்தார்.
1989இல் முதற்தடவையாக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 1989ஆம் ஆண்டு மாசி மாதம் 15ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, நீர்ப்பாசனப் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1997 இல் இவருக்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் என்ற அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதுடன் சுதந்திரக் கட்சியின் உதவிச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதவிசாளராக தெரிவானார்.
2001 இல் 12 ஆவது பாராளுமன்றத்திற்குத் தெரிவானதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
2004 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இதன் மூலமே கூட்டணி அரசாங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவானது.
இலங்கையின் 13ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகி, அமைச்சரவை அந்தஸ்துடைய மகாவலி, ஆற்றுப்படுக்கை மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவர் பாராளுமன்ற சபை முதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.
2005ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இலங்கை அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. சுற்றாடல், நீர்ப்பாசன, மகாவலி அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராகவும் சுற்றாடல் மற்றும் இயற்கை வள அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் அப்போதைய தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுடன் கைச்சாத்திட்டார். இது சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பது தொடர்பான உடன்படிக்கையாகும்.
2007இல் இவர் விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றினார்.
2007ஆம் ஆண்டு தை 25ஆம் திகதி மகாவலி பிரதான திட்டத்தின் கீழ் மொரகஹகந்த – களுகங்கை கருத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
2010ஆம் ஆண்டு மைத்திரிபால மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி, ஐ.ம.சு.மு. அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014 நவம்பர் 20 ஆம் திகதி வரை இப் பதவியை அவர் தொடர்ந்து வகித்தார்.
சுகாதார அமைச்சராக பதவி வகித்த சமயம் புகைத்தலை தடுப்பதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக ‘உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம்’ என்ற விருதை வென்றார். இலங்கையர் ஒருவருக்கு இந்த விருது கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொதுச் சுகாதார ஹார்வாட் கல்லூரி மற்றும் கென்னடி அரச கல்லூரியின் ‘சுகாதாரத்துறை சார்ந்த அமைச்சு மட்ட ஹார்வாட் விருதைப்’ பெற்றார்.
இந்த விருது இலங்கையின் சுகாதார அமைச்சராக புதுமைமிக்க தலைமைத்துவத்தில் கொண்டிருந்த திடசங்கற்பத்திற்காக வழங்கப்பட்டது.
இத்தகைய விருதின் மூலம் இலங்கையர் ஒருவர் கௌரவிக்கப்படுவது இதுவே முதற்தடவையாகும்.
2013ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதாரக் கூட்டத்தில் ஜீ-15 நாடுகளுக்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சுகாதார விவகாரங்கள் தொடர்பான ஜீ-15 அறிக்கையை வாசித்தார். 2014ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உலக சுகாதார கூட்டத்தில் நான்கு உபதலைவர்களுள் ஒருவராகத் தெரிவானார்.
புலிகளின் கொலை முயற்சிகள்
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெலிகந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சியில் இருந்து இவர் உயிர் தப்பினார்.
பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தாக்குதலுடன் தொடர்புடைய விடுதலைப் புலி அங்கத்தவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சயனைட் குப்பியை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி புலிகள் இயக்கத்தால் இவர் இலக்கு வைக்கப்பட்டார். பண்டாரகம பிரதேசத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு திரும்பிய சமயம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மைத்திரிபால சிறிசேன மயிரிழையில் உயிர் தப்பினார். இத் தாக்குதலில் நால்வர் பலியாகியதுடன் 15 பேர் காயமடைந்தனர்.
சிறை வாழ்க்கை
1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் இந்தக் கிளர்ச்சியில் இவருக்கு தொடர்பேதுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து இவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் குடியுரிமைகள் பறிக்கப்பட்டதை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றமைக்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பதில் பாதுகாப்பு அமைச்சர்
2009 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்த சமயம், மைத்திரிபால சிறிசேன ஐந்து தடவைகள் இலங்கையின் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். போரின் இறுதி நாட்களிலும் பாதுகாப்பு அமைச்சரான ஜனா திபதி நாட்டில் இல்லாத நிலையில் இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றினார்.
நல்லாட்சிக்கான பயணம்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நல்லாட்சியை தோற் றுவிக்கும் நோக்கில் தனது அமைச்சுப் பதவியைத் துறந்து பொது எதிரணி சார்பில் களமிறங்கினார்.
இதற்கமைய நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 6,217,162 ( 51.28 வீதம்) வாக்குகளைப் பெற்று நாட்டின் ஏழா வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு விவ சாயியின் மகனாக பிறந்த இவர் இன்று இல ங்கை ஜனநாயகக் குடியரசின் அதி மேதகு ஜனாதிபதியாக வாழ்வில் உயர்வு பெற்றி ருக்கிறார்.
– எம்.பி.எம்.பைறூஸ் –